வாசகனின் வாழ்வனுபவமே உலகில் எழுதப்படும் பெரும்பாலான கவிதைகளும் கதைகளும் அவனுக்கான அணுக்கத்தைத் தந்துவிடுகின்றன. அவனுக்கான ஏக்க நினைவுகளைக் கிளர்த்திவிடுகின்றன. எப்போதோ நடந்து மறக்கப்பட்டவற்றை மீட்டெடுத்துத் தரும் சில நொடிகள் அல்லாடவைக்கின்றன. அவை பல சமயம் கண்ணீரையும் வரவழைத்துவிடுகின்றன. காதல் மொட்டுக்களை மீண்டும் மலரவிட்டு நம்மை அலையவிடுகின்றன. நமக்குள் மகிழ்ச்சியான நினைவலைகளை மிதக்கவிடுகின்றன. தொப்புள்கொடி உறவுகளின் நிபந்தனையற்ற பாசத்தில், அன்பால் வாசகனைத் திளைக்கவிடுகின்றன. நிகர் வாழ்க்கை அனுபவிக்கும் அரிய தருணங்களையும் நல்ல கவிதைகள் நமக்கு தகவமைத்துத் தருகின்றன. இன்பாவின் கவிதைகள் வேறொரு உருவம் பூண்டு வாசகனைப் படிம அலைக்குள் தள்ளி நீந்த வைக்கின்றன. பெரும்பாலான கவிதைகள் சிறிய கதைக்குரிய வடிவத்துக்கு அண்மையில் இருப்பதை நான் அவதானித்தேன். ‘கடல் நாகங்கள் பொன்னி’ என்ற அவருடைய சமீபத்திய தொகுப்பின் வழி சராசரி வாசகன் அடையும் அதே அனுபவ நீட்சியை நானும் அடைந்தேன்.
அந்நிய தேசத்துக்குப் புலம் பெயர்கிறவர்கள் அடையும் இன்னல்களைப் பல கவிதைகளில் அவர் பதிவு செய்கின்றார். அவர்களின் வாழ்வனுபவம் கவிதையாக வடிவெடுக்கும்போது துன்பியல் நேர்த்தியாக வாசக மனதுக்குள் இடம் பெயர்ந்துவிடுகின்றது.
நாங்கள் ஊர்க்காரர்கள் என்ற சொல் அந்நிய தேசத்தவன் என்ற பொருளையே வலியுறுத்துகிறது. அச்சொல் மனிதர்க்கிடையே எவ்வளவு தூர இடைவெளியைப் பிளந்து காட்டுகிறது என்பதை ஒரு வாசகனால் உய்த்துணரமுடியும். நீ வேறு, நான் வேறு; நீ என்னைவிட மேலானவன் இல்லை. நீயிருக்கும் இந்நிலம் உனக்குரியதல்ல! எங்களுடையது. அதனால் உன்னை எந்நேரத்திலும் இங்கிருந்து நீக்கிவிட நேரும். நீ அப்புறப்படுத்த வேண்டியவன் என்ற அர்த்தத்தையே தருகிறது ஊர்க்காரன் என்ற சொல். நாங்கள் ஊர்க்காரர்கள் என்ற தலைப்பிலான கவிதையின் இறுதி வரிகளில் வேறொரு துயரையும் நமக்குக் கடத்திவிடுகிறது.
தொழுவத்தில் கட்டப்பட்ட எருதுகளாய்
எப்போதும் பதற்றத்துடன்
புனைவு தேசத்தில் திரிகிறோம்
வேற்று நிலத்தில் பிழைப்பைத் தேடிச் சென்றவனுக்கு நினைவுகளே துயர் நிறைந்தவையாகத்தான் இருக்கும். வயிற்றுப் பிழைப்பைத் தேடி வந்தவன் பின்னாளில் தன் தொப்புள்கொடி நினைவுகள் வரும்போது தன்னைத் தொழுவத்தில் கயிற்றால் கட்டப்பட்ட எருதாகவே கருதிக்கொள்கிறான். கட்டப்பட்ட இடத்தைவிட்டு அவன் நகர்ந்துவிடமுடியாது. நமக்கு இங்கிருந்து விடுதலை எப்போது கிடைக்கும் என்றே ஏங்குகிறான். அவன் அந்த வாழ்க்கைமுறையிலிருந்து எளிதில் தப்பித்துவிட முடிவதில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
புனைவு தேசமான சிங்கப்பூருக்கு எப்படியாவது வேலைக்குப்போய்விடவேண்டும் என்ற எண்ணம் பெருங்கனவாகவே இருக்கிறது புலம்பெயரத் துடிப்பவர்களுக்கு. சிங்கப்பூர் தன்னளவில் சொர்க்கமாக இருக்கும் என்று புனைந்து கொள்கிறார்கள். அங்கே சென்றுவிட்டால் தங்களுடைய வாழ்க்கை ஒளிமயமாகிவிடும் என்ற கற்பனையில் மிதக்கிறார்கள். தன் எதிர்காலத்தை, குடும்பத்தைக் கரைசேர்த்துவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். அதனால்தான் சிங்கை புனைவு தேசமாகிவிடுகிறது அவர்களுக்கு. சிங்கை என்றில்லை பிழைப்பினைத் தேடிவருவோர்க்கான பிற நிலங்களும் இதற்குள் அடங்கும். உள்ளபடியே சிங்கை சொர்க்கமாக இருப்பதற்கு அதனுடைய வளர்ச்சிக்குக் கடல் கடந்து உழைப்பவர்கள்தான் பெரும்பங்காற்றுகிறார்கள், அதனைச் சொர்க்கமாக்கிக் கொண்டிருக்கிறான். ஆனால் தூர தேசத்திலிருந்து இங்கே வந்து உழைப்பவருக்கு அவரது நடைமுறை வாழ்வியல் சொர்க்கமாக இருப்பதில்லை. மூன்றாம் தர நாடுகளிலிருந்து முதல் தர நாடுகளின் வரிசைக்கு வந்து விட்ட சிங்கையும் ஒரு நகரம் தான் என்றாலும் அதைக் கனவு தேசமாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.
அறுபத்தேழாம் எண் பேருந்து
வீட்டைக் கடந்து போகும்போதெல்லாம்
லிட்டில் இந்தியா செல்லும்
ஆவல் வந்துவிடுகிறது அவளுக்கு
ஆசைகளையும் ஏற்றிச்செல்கின்றன பேருந்துகள்
‘புனைவு வீதிகள்’ என்ற தலைப்பிலான இக்கவிதை தாய்நிலத்துக்காக ஏக்கமுறும் ஓர் எளிய மனிதரைப் பாடுகிறது. அவன் தன் வீட்டிலிருந்து கையோடு கொண்டுவந்த ஒரு பொருள் போதும், அவனைத் துயராழத்தில் தள்ளிவிடுவதற்கு. ஒரு புகைப்படன், தங்கை வாங்கிக்கொடுத்த சட்டை, அப்பாவின் கைக்கடிகாரம், அம்மா கொடுத்தனுப்பிய ஊறுகாய் இவற்றையெல்லாம் அவன் நாள்தோறும் பார்க்கவேண்டிவரும். அவ்வாறு பார்க்கும் தருணங்கள் தோறும் வீட்டுக்கவலை உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும். கவலையைத் தீர்க்கவேண்டி வெளியே வருகிறான். பேருந்து ஒன்று அவனைக் கடந்து போகிறது. அந்தப் பேருந்து அவனைக் கடல் கடந்து தன் சொந்த மண்ணில், அந்த மண்ணில் இருக்கும் வீட்டிற்குக் கொண்டுபோகாதாவென நெக்குறுகிறான். மாறாக, அவன் கனவில் தவழும் ஆசைகளும் அதனோடு அடித்துச் சென்று விடுகிறது.
ஒரு நாள் நான் தஞ்சைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறி திருச்சிக்குப் போகும் சாலையில் வாகனத்துக்காகக் காத்திருந்தேன். என்னைக் கடந்து சென்ற ஒரு மினி வண்டி, கிட்டதட்ட தள்ளுவண்டி போன்ற வடிவம் கொண்டது. ஆனால் இரு சக்கர வாகனம் போல் விரைந்து ஓடக்கூடிய எஞ்சினைக் கொண்டது. என்னைப் பார்த்ததும் தள்ளிப்போய் நின்றது. என்னை வரச்சொல்லிக் கையசைத்து அழைத்தார் அவ்வண்டி ஓட்டுநர். அவரோடு உரையாடிக்கொண்டே போகும்போது 3 ஆண்டுகள் அவர் கிள்ளானில்(மலேசியாவில்) கூலி வேலை செய்ததாகச் சொன்னார். மலாய்மொழியில் சில வார்த்தைகளைச் சொல்லி அதனை நிரூபித்தார். “இப்போ என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். நான் எங்கள் பரம்பரை நிலத்தில் உழைக்கிறேன். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன் என்றார். வெளிநாட்டுக்குப் போனால் கைநிறைய காசு பார்க்கலாம் என்று வண்ணக் கனவுகள் கண்டு ஏமாந்து திரும்பியவன் நான். இங்கே மனைவி குழந்தையோடு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார் சிகெரெட்டை ஊதிக்கொண்டே. அடிமைத்தளையிலிருந்து விடுபட்டதை அவரின் சொற்கள் நிரூபித்தன. அவர் முகத்தில் பூரிப்பும் மன நிறைவும் அவர் ஊதும் புகைச்சுருளில் மிதந்தன. வண்ண மயமான கனவுகளைச் சுமந்து வெளிநாடு போகிறவர்கள் பூர்வீகப் பொருளிழந்து, அலைக்கழித்து, நிம்மதி இழந்து, புத்தி வந்த பின்னரே சொந்த நாடு திரும்புகிறார்கள். இந்திய உணவுக் கடைகளில் போய்ச் சாப்பிடும்போதெல்லாம் நான் அந்நிய தேசத்தவர்கள் படும்பாட்டை மனச்சுமையோடு அவதானித்திருக்கிறேன்.
ஒருநாள் மாலை மூன்று மணியளவில் நான் ஒரு கடையில் சாப்பிட அமர்ந்தேன். பெரும் பசியோடு. உணவு பரிமாறுபவரிடம் “சாப்பிடீர்கள?” என்று சம்பிரதாயமாகத்தான் கேட்டேன். அப்போது அவர் கண்களில் ஈரம் கசிந்து உருவாவதைப் பார்த்தேன். “பசியோடு வேலையில் ஈடுபட்டிருக்கும் என்னைப் பார்த்து, சாப்பிட்டீங்களா என்று கரிசனத்தோடு கேட்கும் முதல் ஆள் நீங்கள் ” என்று உணர்ச்சிவசப்பட்டவர் எட்டிப்போய் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். எந்நேரமானாலும் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில்தான் அவர்களுக்கான உணவு நேரம். சொந்த ஊரில் எல்லாவற்றையும் இழந்து, வெளிநாடுகளில் தனியனாகத் தத்தளிப்பவர்கள் இரவில் அறையில் எவ்வளவு கண்ணீர் சொரிந்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கச் சொல்கிறது இன்பாவின் இக்கவிதை. அந்நிய தேசத்தவர்களின் இன்னல்கள் இம்சைகள் பற்றி எண்ணற்ற கவிதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன இந்த ‘கடல் நாகங்கள் பொன்னி’ என்ற கவிதை நூலில். அவரின் எழுத்தின் எளிமையும், மானுடத் துயரும் வாசகக் கரசனத்தைக் கோரி நிற்கின்றன.
மகரந்த விளக்குமாறு
சோகை இரத்தமும்
ரேகை உழைப்புமாய்
புது மண்ணைக் கிளறி
முன்னேறும் வாலிபன் நான்
தாகம் நிரம்பிய மனத்துடன்
மேகம் தாண்டி வந்த எனக்கு
எதிரில் கிடைக்கும் குப்பைகளை
எடுத்துப் போடும் வேலை
கரிந்து மெலிந்த என் கால்கள்
அழுக்கேறிய சப்பாத்துக்களைச் சுமக்கின்றன
நகரும் குப்பைகளோடு
நகராத குப்பைகள்
நகரமெங்கும் கிடக்கின்றன
பித்தனின் குப்பைகளும்
யேசுவின் கோப்பைகளும்
இங்கே குவிந்து கிடக்கின்றன
சில குப்பைகளைக் கூட்டும்போது குமட்டல் வருகிறது
நான் குப்பைகளை அரிக்கும்போது
என் மனமும் அரிக்கிறது
வெயில் சுருக்கிப் போடும்
சருகுகளில் இளையராஜாவும்
காற்று வீசியெறியும் இலைகளில்
இமானும் அமர்ந்துகொண்டு
சரசரவென நான் பெருக்கும்
சத்தங்களுக்கு இசையமைக்கிறார்கள்
விளக்குமாறுதான் எனக்கு மகரந்தம்
என் சொற்களைத் தடவிக்கொடுக்கிறது
என் மௌனங்களைச் சுமக்கிறது
என்னை மாபெரும் பொறுமைசாலி என்கிறது
அடுக்குமாடி முதுகுச் சன்னலிலிருந்து
குரல்களோடு குப்பைகளும்
விழுந்து நொறுங்குகின்றன
நான் குப்பைகளைக் கூட்டுகிறேன்
வீட்டில் அடுப்பு எரிகிறது.
இந்நூலில் சில இடங்களில் புனைவுதேசம் என்ற சொல் என்னை வெகுவாக ஈர்த்தது. காலனித்துவ ஆட்சியின் போது நம்முடைய மூதாதையர்களின் உழைப்பைப் பணமாக்கிக்கொள்ள காலனித்துவர்கள் அந்நிய நிலத்துக்கு வந்தால் உங்கள் வாழ்க்கை வெகுவாக முன்னேறிவிடும் என்று பொய்யுரைத்தே கோடிக்கணக்கானவர்களை நாடு கடத்தினர். சொந்த மண்ணில் பசியோடும் பட்டினியோடும் வாடிய எளிய மக்கள் அப்பொய் பிரச்சாரத்தை நம்பினர். ஆனால் பின்னர் நடந்தவையெல்லாம் துயர வரலாறாகப் பதிவாகியிருக்கிறது. பின்னர், தன் சொந்த நாட்டைவிட்டு அந்நிய நிலத்தில் குடியேறி பின் கொடுமைக்குள்ளாகிறோமென்று வாழ்நாள் முழுதும் வருத்தப்பட்டனர். எது அவர்களைத் தூரதேசம் ஈர்த்தது என்றால் அவர்களுக்குச் சுகவாழ்வு அங்கேயாவது கிடைக்கப்போகிறதே என்ற நம்பிக்கைதான். இன்பா அந்நிய நிலத்தின் ‘பச்சை’யைப் பார்த்து மயங்கிவருபவர்களைப் புனைவுதேசம் என்ற சொல்லால், அவர்கள் கண்ட கனவை அங்கதமாக்குகிறார்.
‘கடல் நாகங்கள் பொன்னி’ தலைப்பிலான இக்கவிதைத் தொகுப்பு கடல் கடந்து வந்து அவதியுறுபவர்களை மட்டுமே புனைந்து கொடுக்கவில்லை. பல்வேறு பாடுபொருளிலும் கவிதைகள் கலையமைதியோடும் கவித்துவத்தோடும் எழுதப்பட்டுள்ளன.
என்னுடைய இக்கட்டுரையின் நோக்கம் புனைவு தேசத்துக்குப் புலம்பெயர்ந்து வந்து புண்ணாகிப் போனவர்களைப் பற்றி இன்பா தொகுத்த சில கவிதைகளின் அழகைக் காட்டுவது மட்டுமே. பிற கவிதைகள் உங்கள் வாசிப்புக்காக திறந்தேயிருக்கிறது “கடல் நாகங்கள் பொன்னி’ கவிதைத்தொகுப்பு.
கடல் நாகங்கள் பொன்னி
இன்பா
வெளியீடு: சால்ட்
தொலைபேசி +65 91461400