இலங்கைப் பெண்களின் கவிதைகள் என்றால் அதில் தனியே தமிழ்க் கவிதைகளை மட்டும் கொள்ள முடியாது. சிங்களக் கவிதைளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் எடுத்துப் பேசும்போதுதான் இலங்கைப் பெண்களின் கவிதைகளைப் பற்றிய சித்திரம் கிடைக்கும். இரண்டு மொழிச் சூழல்களிலும் உள்ள சமூக, அரசியல், பண்பாட்டு நிலைமைகள் புலப்படும். இரண்டிலும் நிறைய வேறுபாட்டம்சங்கள் உண்டு. ஏன் தமிழில் கூட நிறைய வேறுபடுதல்கள் உள்ளன. முஸ்லிம் பெண்களின் கவிதைகள் வேறொன்றாகத் தனித்து நிற்கும். அதைப்போல மலையகப் பெண் கவிதைகள் இன்னொரு அகத்தையும் முகத்தையும் கொள்வன. அவ்வாறே தமிழ்ப் பெண்களுடைய கவிதைகள் தனிக் குரலுடையது. இதில் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பல திசைகளிலும் வாழும் பெண்களின் கவிக்குரல் அது. இத்தகைய அடிப்படைகளைக் கொண்டிருக்கும் சூழலில் இங்கே இலங்கையிலுள்ள தமிழ்க் கவிதைகளை – தமிழில் அனைத்துத் தரப்புப் பெண்களும் எழுதிய கவிதைகளைக் குறித்து ஒரு சிறிய அறிமுகக் குறிப்பு, வரலாற்றுப் பின்புலத்தில் முன்வைக்கப்படுகிறது.
இலங்கையில் தமிழில் பெண்கள் கவிதைகளை அங்கங்கே எழுதி வந்தாலும் அவற்றைப் பெண் கவிக்குரலாகத் தனித்து அடையாளம் காணக்கூடியதாக அமைந்தது “சொல்லாத சேதிகள்” என்ற தொகுப்பு வந்தபோதே. பெண் எழுத்து என்ற பிரக்ஞையோடு எழுதப்பட்ட பத்துப் பெண்களின் 24 கவிதைகள் இதிலே உள்ளடக்கப்பட்டன. அ.சங்கரி. சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமினி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகியோருடைய கவிதைகள். “ஈழத்துச் சிந்தனைப் பரப்பில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய சொல்லாத சேதிகள் பெண்களின் சமூகப் பார்வையிலும் சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்கள் தமது சிந்தனைகளையும் உணர்வுகளையும் ஒளிவுமறைவின்றிச் சுதந்திரமாக வெளிக்கொணரவும் அவர்களது சிந்தனைகளைத் தூண்டக்கூடிய அல்லது புடம் போடக்கூடிய தகுந்த முன் மாதிரிகளை அடையாளங் காட்டவும்” இத்தொகுப்பு முக்கிய பங்காற்றியது.
அது இலங்கைத் தமிழ்ப்பரப்பில் ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்த (1970, 80) சூழலாகும். அதேவேளை அந்தக் காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வந்த பெண்ணியச் சிந்தனை ஈழத்திலும் தூண்டல்களை ஏற்படுத்தியது. ஐக்கியநாடுகள் சபை 1975ஆம் ஆண்டை மகளிர் ஆண்டாக அறிவித்ததையும் 1975 தொடங்கி 1985 வரையான பத்து ஆண்டுகளை சர்வதேச மகளிர் ஆண்டாகக் கொண்டாடத் தீர்மானித்திருந்தமை இதற்கு மேலும் தூண்டலாக அமைந்தது. “இதனையடுத்துப் பெண்களுக்கான, பெண்களை மையமிட்ட, பெண் பிரச்சனைகளை வெளிக்கொணரும் எழுத்துக்களின் தேவை பெண் எழுத்தாளர்களாலும் சிறு சஞ்சிகையாளர்களாலும் உணரப்பட்டன. பெண்ணடிமை, பெண்ணடிமப்படுத்தல் ஆகியவற்றின் பரிணாமங்களை விளக்கும் பொருட்டு பலரும் எழுதத் தொடங்கினர். சமூக மதிப்பில் இழிந்த நிலை, சமய தத்துவநோக்கில் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலை, கல்வி உரிமை மறுக்கப்பட்ட நிலை, அறியாமை மூடத்தனத்திலும் அமிழ்ந்தநிலை, பெண்சிசுக் கொலை, பால்யவிவாகம், பெண் தனிமையாக்கப்படல், ஆண்களின் பலதாரத்திருமணம், தேவதாசித் திருமணம் (பொட்டுக்கட்டல்), கைம்பெண் மறுமணமறுப்பு, உடன்கட்டைஏறல், பெண்உரிமை மறுப்பு எனப் பிரச்சனைகள் பலவற்றை உள்வாங்கிப் பெண் எழுத்துகள் உருவாகின. அநுபவச் சூட்டில் மிளிரும் உணர்வுகளை ஆத்ம சுத்தியுடன் உரத்த குரலாக வெளிப்படுத்தக் கவிதையே முக்கிய ஊடகமாகப் பெண்களால் கையாளப்பட்டது.
பெண்ணின் நுண்ணுணர்வுத் தளத்தில் கட்டுருவாக்கம் பெறும் அன்பு, கருணை, வேட்கை, வலி, கனவு போன்ற அகநிகழ்வுகள், கவிதை அழகியல் பெண் மொழியூடாக வெளிப்பட்டது. நவீனக் கவிதை பெண்ணுக்கேயான பிரத்தியேக படிமங்களோடும் தனியடையாளம் காட்டிய அகக் காட்சிகளோடும் பிறந்தது. பெண்களின் நுட்பமான அந்தரங்க வெளிப்பாடுகளை வாசகருக்கு எடுத்துரைக்கும் ஈழத்துப் பெண் கவிதைகள் 1980களுக்குப் பின், அமைப்பாலும் அனுபவ வெளிப்பாட்டாலும் மொழி நடையாலும் மாற்றம் கண்டன. இம்மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களாக ஆயுதப் போராட்டம், தமிழ்த்தேசியவாதத்தின் எழுச்சி, பெண்நிலைவாதச் சிந்தனைக்கூடாக ஏற்பட்ட விழிப்புணர்வு, ஊடக சுதந்திரம், கல்வித் தகைமைக்கூடான தொழில்சார் நிலையின் உருவாக்கம் போன்றன இருந்தன. இக்காலத்தில் வெளிவந்த பெண் விடுதலை, தாகம், தோழி, விளக்கு, செந்தழல், சுதந்திரப் பறவைகள், நங்கை, மருதாணி, நிவேதினி, பெண் போன்ற ஈழத்துப் பெண் சஞ்சிகைகளும், நமது குரல் (ஜேர்மனி), கண் (பிரான்ஸ்), சக்தி (நோர்வே) போன்ற புகலிடப் பெண்நிலைவாதச் சஞ்சிகைகளும் பெண்ணியக் கருத்துகளை உள்வாங்கி வெளிவந்ததுடன் பெண் கவிதை வெளிப்பாட்டுக்கான சாத்தியங்களையும் அளித்தன.
இதேவேளை ஆயுதப்போராட்டம் பெண்களின் பங்கேற்பையும் கோரியது. ஆயுதப்போராட்ட அரசியலை முன்னெடுத்தோர் இளைய தலைமுறையினர். அதனால் அது புதிய உலகத்தை நோக்கி, புதிய விரிவுகளைக் கொண்டதாக இருந்தது. பொதுவாக இளைய தலைமுறையிடம் புதியதை, புதுமையை அவாவும் இயல்பு உண்டு. உலகளாவிய போராட்ட அனுபவங்களையும் அறிதலையும் கொள்ளத் துடித்த இந்தப் போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பும் அதையொட்டிய ஈடுபாடுகளும் அவசியம் – வேண்டும் – என உணரப்பட்டது. இதனால் அதுவரையும் இல்லாத ஓரம்சமாக பெண்களின் விடுதலை பற்றிய கரிசனை உண்டாகியது. பெண் விடுதலை என்ற அரசியலுணர்வு பெண் பிரக்ஞையாக வெளிப்பட்டது. இது பெண்களின் குரலைத் தனித்து அடையாளம் காட்டியது.
பெண் பிரக்ஞை வழி உருவாகிய கவிதைகள் விடுதலைப் போராட்ட அரங்குகளில் ஒலித்தன. அந்தச் சூழலில் அப்போது வெளிவந்த இதழ்களில் எழுதப்பட்டன. இவற்றைத் தொகுத்துத் தனித்து அடையாளம் காணக் கூடியவாறு பெண்கள் ஆய்வு வட்டம் சொல்லாத சேதிகள் என்ற முதல் கவிதைத் தொகுதியை வெளிக்கொண்டு வந்தது. 1986 இல் இந்தத் தொகுப்பு வந்தது. இந்தக் கவிதைகள் இலங்கைத் தமிழ்ப்பரப்பில் மட்டுமல்ல, தமிழகச் சூழலிலும் அதிர்வை உண்டாக்கியது. இதைப்பற்றி தமிழகத்தில் உள்ள பல பெண் கவிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அதிர்வு இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது இங்கே கவனத்திற்குரிய ஒன்றாகும்.
“சொல்லாத சேதிகள்” அதுவரையிலும் சொல்லப்படாத, சொல்லத் தயங்கிய விசயங்களைப் பேச முற்பட்டது, பேசியது. பெண்ணுள்ளத்தே நெருப்பாகத் தகித்துக் கொண்டிருந்த கொதிப்பையும் குமுறல்களையும் வெளிப்படுத்துவதற்கான புதிய திறப்புகளைச் செய்தது. எடுத்துக் காட்டாக –
அவர்கள் பார்வையில்
எனக்கு-
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்-
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன
சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைக்ள் ஆகும்
-கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம்
கடக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்.
-அ.சங்கரி
என்றொரு கவிதை. இது, சமூகம், பண்பாடு என்ற தடித்த சட்டகங்களை உடைத்துக் கொண்டு புதிய குரல்கள் (பெண்குரல்) வரும் என்ற அறிவிப்பு பலரையும் திடுக்கிடச் செய்தது. இதேவேளை இந்தப் புதிய குரல்களுக்கான வரவேற்பும் இருந்தது.
சொல்லாத சேதிகளிலும் அதற்கு அப்பால் எழுதப்பட்ட பிற பெண்களின் கவிதைகளிலும் பெண் பிரக்ஞை வழியான பெண் விடுதலையோடு, சமூக, அரசியல் விடுதலையைக் குறித்த தொனியும் வெளிப்பட்டது. குறிப்பாக அன்று நிலவிய அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் குரலாகப் பல கவிதைகள் ஒலித்தன. இந்தப் போக்கு அடுத்த கட்டத்துக்கு வளர்ச்சியடைந்து தமிழ்ச் சமூகத்துக்குள் நிலவிய ஜனநாயக மறுப்புகளையும் பேசத்தொடங்கியது. குறிப்பாக ஆயுதப்போராட்டத்தில் நிகழத் தொடங்கிய உட்படுகொலைகள், சகோதரப் படுகொலைகளை எதிர்த்தது, விமர்சித்தது. உதாரணமாக –
வீடு திரும்பிய என் மகன்
இதயத்தை இருப்பாக்கி
மூளையைத் துவக்காக்கி
நண்பனைப் பகைவனாக்கி
என்னிடம் திரும்பினான்
இராணுவ வீரனாய் என் முன் நின்றான்
என் மகன்
ஊட்டி வளர்த்த அன்பும் நேசமும்
ஆழப் புதைய
ஆடித்தான் போனேன்.
நண்பனைச் சுட்டு விட்டு வந்து
வீரம் பேசினான்
தியாகம் பற்றி
வீரம் பற்றி
எல்லைப்புற மக்களைக் கொல்வதைப் பற்றி
நிறையப் பேசினான்.
இப்போது நான் மௌனமாக இருந்தேன்
மனிதர்கள் பற்றி
விடுதலை பற்றி
மறந்தே போனான்.
இப்போது நான்
தாயாக இருத்தல் முடியாது.
துரோகி என்று
என்னையே புதைப்பானோ
ஒரு நாள்
– ஔவை
ஆகவே பெண் கவிதைகள் எழுதப்பட்ட முதற்கட்டத்திலேயே அவற்றிற் பன்முகத்தன்மையும் ஜனநாயகப் பண்பும் மேலோங்கியிருந்தன. இது ஊன்றிக் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால், அழகியல் சார்ந்து நோக்குகையில் இந்தக் கவிதைகளில் பெரும்பாலும் எதையும் உரத்த தொனியில் பிரகடனஞ்செய்தல் என்ற அம்சமே மேலோங்கியிருந்தது. ஆனாலும் முதற்குரல்கள் என்ற அளவில் இவற்றுக்கான முக்கியத்துவம் இருப்பதை மறுக்க முடியாது.
இன்று ஈழப்பெண் கவிதை வெளி பல விதமாக மாறி அதன் பரப்பும் விரிந்துள்ளது. ஆணாதிக்கத்தினால் பெண்கள் எதிர்கொள்ள நேர்கின்ற நெருக்கடிகளோடு போர், இடப்பெயர்வு, புலப்பெயர்வு, புதிய களங்களில், புதிய பண்பாட்டுச் சூழலில் அமைந்துள்ள வாழ்க்கைத் தரிசனங்கள் எனப் பலவற்றையும் தன்னுள் கொண்டு விரிந்திருக்கிறது. கவிதை வெளிப்பாட்டிலும் பொருள் கொள்ளலிலும் பல்பரிமாண நிலை உருவாகியுள்ளது. மிகச் செழுமையடைந்த – கலைப் பெறுமானம் கூடிய பண்பட்ட கவிதைகள் பெருகிக் கிடக்கின்றன. ஈழப் பெண் கவிதை வெளி பல வண்ணங்கள் ஒளிரும் கலைக் கூடமாகியுள்ளது.
இதில் அனார், பஹீமா ஜஹான், ஸர்மிலா ஸெய்யித், ஆழியாள், தர்மினி, தில்லை, உருத்திரா, கற்பகம் யசோதர, றஞ்சினி, தான்யா, எஸ்தர், வினோதினி, பிரியாந்தி, மதுஷா மாதங்கி, மைதிலி, தாட்சாயினி, பெண்ணியா, பாய்ஸா அம்புலி, ஆதிலட்சுமி, மலரா, தமிழ்நதி, ஆகர்ஷியா, கலா, விஜயட்சுமி, றபீக்கா, யாழினி, லறீனா, ரேவதி, நிவேதா, ஜெ பெயரையும் குறிப்பிட முடியவில்லை. அவர்களுடைய முக்கியத்துவம் கவனத்திற் கொள்ளப்படுகிறது) இங்கே பங்களித்து வருகின்றனர்.
1980களுக்குப் பின் ஈழத்தின் பல்வேறு பெண் கவிஞர்களின் கவிதைகளைக் கொண்டு ‘சொல்லாத சேதிகள்’ (1986), ‘மறையாத மறுபாதி’ (1992), ‘கனல்’ (1997), ‘உயிர்வெளி’ (1999), ‘எழுதாத உன் கவிதை’ (2001), ‘வெளிப்படுத்தல்’ (2001), ‘பெயல் மணக்கும் பொழுது’ (2007), ‘மை’ (2007), ‘இசை பிழியப்பட்ட வீணை’ (2007), ‘ஒலிக்காத இளவேனில்’ (2009), பெயரிடாத நட்சத்திரங்கள் (2011) எனப் பல கூட்டுத் தொகுப்புகள் வந்துள்ளன. இதை விட தனித்தொகுதிகள் பல வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு கனடா இலக்கியத்தோட்டத்தின் விருதை ஆழியாள் கவிதைகளுக்காகப் பெறுகிறார். ஏற்கனவே இரண்டு மூன்று குறிப்பிடத்தக்க விருதுகளை அனார் கவிதைகளுக்கென்று பெற்றிருக்கிறார். அனாரின் கவிதைகள் ஆங்கிலத்தில் தனியொரு நூலாக வெளிவந்துள்ளது. இதை விடப் பலருடைய கவிதைகள் ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு கவிஞரிடத்திலும் ஒவ்வொரு தொகுப்பிலும் வெவ்வேறு விதமான அனுபவங்கள் உள்ளன. “எழுதாத உன் கவிதை” பெரும்பாலும் போராளிகளால் எழுதப்பட்ட, போர் சார்ந்த கவிதைகள். போரை எதிர்கொள்வதோடு, போருக்குள்ளிருந்து வாழ்வை எப்படித் தக்க வைத்துக்கொள்வது, மீட்டெடுப்பது என்பதையும் சொல்வது. இதைப்போல, ஒவ்வொன்றிலும் வெவ்வேறான அனுபவப் பிராந்தியங்களும் வெளிப்பாட்டு முறைமைகளும் உள்ளன.
இன்றைய பெண் கவிதைகள் பெரும்பாலும் உரத்த தொனியில் பேசுவதிலிருந்து நகர்ந்து உள்ளமைதி கொண்டு தமது தீவிரத்தை மொழிகின்றன. எடுத்துச் சொல்லும், உரத்த குரலில் வெளிப்படுத்தும் முறையைக் கை விட்டு அருகிருந்து உணர்த்தும் பகிரும் தன்மையைப் பெற்றுள்ளன. இது குறித்த விவாதங்கள் உண்டு. ஆனால் பெண்கள் தங்கள் வழிச் சுவட்டில் தங்கள் பயணத்தை நிகழ்த்துகின்றனர். புதிய கவிதைகள் புதிய நிறமுடையனவாகின்றன.
இதற்குச் சான்றாக தர்மினியின் கவிதை ஒன்று –
இருபுறக் காடுகள் ஊடாக
என்னைக் கொண்டோடுகிறது ரயில்
அந்நிய நாட்டின் வெறுமையை
இன்னும் இன்னும் உணரும் சலிப்பாக
இப்பயணம்
என் நீண்ட தனிமையில்
இடையிட்டு
சற்றுத் தள்ளி ஒருவன்
கதவருகில் நின்று
கடந்தோடும் மரங்களை பார்க்கிறான்.
இருக்கையின் சலிப்பில்
கதவருகே நானும் சென்றேன்
மரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன
நீங்க தமிழா? நான் கேட்க
இங்லீஷில் பேசினான்
கொல்கத்தா நகரிலிருந்து
கொம்பியூட்டர் வேலைக்கு வந்தானாம்
சில நிமிடங்களில்
பிராங்போர்ட் சென்றடைய
“இதோ இறங்குமிடம்
உன்னை முத்தமிட்டுப் பிரியலாமா?”
கேட்டான்
மறுப்பதற்கு
அவனோடு எனக்கென்ன கோபம்?
அவனது ஆடைகளின் நிறங் கூட ஞாபகத்திலில்லை
முகம் மறந்து விட்டது
பெயர் கேட்டறியவில்லை
இரு முத்தங்கள் மட்டும்
அத்தருணத்தின் நினைவாக
என்னோடு பயணிக்கின்றன