சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் மொழிக் கவிதைகளைக் கவிதை ஆர்வலர்களுக்கிடையே அறிமுகம் செய்து சிங்கப்பூர்க் கவிதைகளை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாண்டு சிங்கப்பூர்க் கவிதை விழா கவிதைசார் நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்விழா ஜூலை 26 முதல் 28 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. பன்மொழிக் கவிஞர்களுடன் தொடர் கவிதை வாசிப்பு, புதிதாக வெளியீடு கண்ட நூல்கள் அறிமுகம், பிற மொழிக் கவிஞர்களின் நூல்கள் விற்பனை, இளையர்களுடன் கவிதை வாசிப்பு மற்றும் கவிதைப் போட்டிகள் என பல்வேறு நிகழ்வுகளின் வழி பன் மொழிக் கவிதைகள் கொண்டாடப்படுகின்றன. அதோடு சிங்கப்பூர்க் கவிதைகளை அறிமுகப்படுத்தி பிறமொழிக் கவிஞர்களுடனான பிணைப்பை ஏற்படுத்தியும் வருகிறது. . இதில் ஒரு அங்கமாகக் கவிமாலை அமைப்பு பங்கேற்று சீனர்களின் மூத்த கலை படைப்பாகக் கருதப்படும் கலிகிராபி ஓவியங்களுக்கு கவிமாலைக் கவிஞர்கள் தமிழ்க் கவிதைகளை வாசித்தனர்.
தேசிய கல்விக் கழக இணைப் பேராசிரியர் டான் சீ லே – Assoc Prof. Tan Chee Lay வரைந்த சீன எழுத்து ஓவியங்கள் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கலிகிராபி ஓவியங்களுக்குக் கவிஞர்கள் தமிழ், ஆங்கிலம் சீனக் கவிதைகளை வாசித்தனர். பொதுவாக ஓவியங்கள் வழி உணர்ச்சிகளைத் தூண்டுவதும் அதனை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதும் எந்தவொரு கலை படைப்புக்கும் உரிய அடையாளத்தைப் பெற்றுத்தரும். அந்த வகையில் சீ லேயின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு ஓவியத்துக்கும் எழுதப்பட்ட கவிதைகளை கவிஞர்கள் வாசிக்க அதனுடைய பின்னனி பற்றியும் அதிலுள்ள நுட்பங்கள் பற்றியும் சீலே விவரித்துச் சொன்னதோடு அரங்கில் இருந்த மற்றவரின் பார்வையையும் கேட்டறிந்துகொண்டார். ஓவியரின் கண்ணோட்டமும் கவிஞர்களின் பார்வையும் ஒத்தும் மாறுமட்டும் வெவ்வேறு கோணங்களில் இருந்தாலும் கலைகளின் வழி சிந்தனையைத் தூண்டும் விதமாக ஒவ்வொரு படைப்பும் அமைந்தது. ஓவியங்களுக்கான தமிழ்க் கவிதைகளோடு சீன மொழியிலும் கவிதைகள் வாசிக்கப்பட்டன. சீலேயின் மகள்கள் சீனத்திலும் ஆங்கிலத்திலும் அவர்களுடைய பார்வையில் ஓவியம் ஏற்படுத்திய தாக்கத்தைக் கவிதையாக்கிப் படைத்தனர்.
ஜோசப் சேவியர் கீழ்க்கண்ட ஓவியத்தைப் பற்றிய கவிதையை எழுதியிருந்தார். பனிமலைப் பகுதியில் நிற்கும் மரங்கள் ஒரு புறம் செழிப்பாகவும் மறுபுறம் பட்டுப்போனவை தொற்றுக்காலத்தில் இழந்தவற்றை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது. இம்மாதிரியாக இடைவெளி விட்டு வரையப்படும் ஓவியங்கள் அதற்குள் உணர்வுகளை கடத்தும் விதவாக இருப்பது வழக்கமானது என்று சீலே குறிப்பிட்டார்.
பனிமலை போர்த்தியிருக்கும்
பைன் மரங்களில்
ஒரு புறம் பட்டுப் போனவை
பெருந்தொற்றொன்று
அள்ளிச்சென்ற
ஆன்மாக்களின் படிமங்கள்.
தொடுதல்கள் தொலைந்து போய்
சுவாசத்துடன் சொற்களையும்
முகக் கவசங்களுக்குள் சிறையிட்டு
தனிமைச் சுவர்களுக்குள் நம்மைத்
தாழிட்டுக்கொண்ட தினங்கள் அவை.
அந்த ஆழிப்பேரலையிலும்
தனிமையெனும் கிளையைப் பற்றி
மிதந்து கடந்த பொழுதுகளில்
கனத்த மௌனங்களைக்
கடத்தலென்பது மட்டும்
அத்தனை எளிதாக இருந்ததில்லை.
தனிமைப்படுத்தப் படுதலின்
துயரத்தை தந்தை சிந்திய
ஒற்றைக் கண்ணீர்த்துளியால்
துடைத்து மீண்டெழுந்த தேசமிது.
வெற்றுத் தொற்றுகள் எம்மாத்திரமென
நாம் இன்று மீண்டெழுந்து நிற்கிறோம்
-ஜோசப் சேவியர்
சிங்கப்பூரில் எங்கும் எதற்கும் வரிசையில் நிற்பது வழக்கமாகிப் போய் அனைவரும் பழகிவிட்டனர். மத்திய சிங்கைப் பகுதியில் மதிய உணவுக்காக வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வரிசையின் அருமை நன்றாகவே தெரியும். இந்த ஓவியமும் நீள் வரிசையில் நின்று காபியை வாங்கிச் செல்ல காத்திருப்பதைப் போன்ற கற்பனையில் நான் எனது கவிதையைப் படைத்தேன். இந்த ஓவியத்தை வரிசையாக நிற்கும் மரங்கள் என்றும் முன்னும் பின்னுமாக அடர்ந்த மரங்கள் தூரத்திலிருந்து பார்க்கும்போது வரிசையில் நிற்பதுபோன்ற காட்சியைத் தருவதாக சீலே குறிப்பிட்டார்.
வண்ணங்கள் ஏதுமற்ற
கறுப்பு வெள்ளைத் தூரிகையில்
நறுமணத்தைச் சுவைத்தபடி
ஒரு கோப்பை காபிக்காக
கால்கடுக்க நிற்கிறது நீள்வரிசை
காபி கறுப்பின் காதலி
கசப்பின் சகோதரி
அதிகாலையைச் சூடேற்றும்
தேனிற தேவதை
கொதிக்கின்ற பாலோடு கலக்கும்
தாமிரப் புறா
மூக்கிற்கு அருகில்
கோப்பை சென்றதும்
நடனமாட வைக்கும் மோகினி
உள்ளுக்குள் இறங்கியதும்
உடலுக்குள் சதிராடும் காளி
விண்டோஸ் செயலிழந்ததுபோல்
காபி கடைகள் செயலிழந்தால்
பூமிப் பந்து
பூட்ஸ்கால்களால் உதைபடும்.
என்றாலும்
காரில்லாத ஞாயிறு போல்
நாளை காபி இல்லாத நாளென்பதைப்போல்
காலைப் புயலில் காபியின் சூட்டுக்காக
ஒரு கோப்பை காபியைத் தேடி
வரிசைப்பிடித்து நிற்கும்
காபி பைத்தியங்கள் இவை.
– இன்பா
வெட்டப்பட்ட மூங்கில் புல்லாங்குழல்கள், பின் கட்டப்பட்ட பியானோவின் கறுப்பு வெள்ளை விசைகள் சிதறிக் கிடப்பது போன்ற கற்பனை ரசிக்கும்படியிருந்தது. கட்டற்ற கலைஞனின் தாகம் போல் அடங்க மறுக்கும் பசி இறுதியில் மூங்கில் பிரியாணியை நினைவூட்டுவதாக பிரகாசின் கவிதை நகைச்சுவையாக இருந்தது.
அடங்க மறு
நன்றி ஓவியரே,
ரசிகனின் கற்பனைக்கும்
உங்கள் ஓவியத்தில்
கொஞ்சம்
இடம் கொடுத்தமைக்கு.
உங்கள் ஓவியத்தின்
மொத்தம் 17 மூங்கில்களில்
ஒ௫ குட்டிக் கு௫த்து
ஒளிந்தி௫ப்பதை
முதலில் கண்டுபிடித்தேன்.
பின்னர்
கறுப்பு வெள்ளை
பியானோவின் விசைகள்
காற்றால்
இசைப்பதைக் கேட்டேன்.
மேலும்
மேகத்தை நோக்கி
நீளும் சாப்ஸ்டிக் என
தொட்டு விரிந்தது
என் கற்பனை.
மன்னிக்கவும் ஓவியரே,
இப்பொழுது
லிட்டில் இந்தியா சந்தர் ரோட்டின்
மூங்கில் பிரியாணி
ஞாபகம் வந்துவிட்டது.
என்ன செய்ய ?
கட்டற்ற கலைஞனின்
தாகம் போல
அடங்க மறுக்கிறது பசி.
ஓவியத்தின் மூங்கிலோடு ஐம்புலன்களும்
இந்தக் கவிதையில்
ஊடாடுவதை கவனித்தி௫ந்தால்
இன்றிலி௫ந்து
கவிதையின் சிறந்த வாசகன்
நீங்கள்.
– மு.செ.பிரகாஷ்
சுரங்கம் போன்ற தோற்றமளிக்கும் இந்த ஓவியத்திற்கு ராஜூ ரமேசின் கவிதையில் வானுயரக் கட்டடங்கள் உயர்ந்து விரிந்தாலும் இறுதியில் ஆதியந்தமற்ற சோதியைத் தேடுவதே இலட்சியமாக இருக்கிறது, ஒவ்வொரு சுரங்கமும் உழைப்பின் நவீன ஓவியம்தான் என்று படைத்தார்.
காலங் காலமாய் மலர்ந்து விரிகிறது
கடலின் மீதொரு
சிற்றகலாய்ச் சுடரும்
சிறு மலர்
கையளவு வேர்நிலந்தான்
நகக்கணுவளவு வளந்தான்
ஆயினும் அதன்
கட்டற்ற வண்ணமும் வாசமும்
கடலளவு
தேனருந்த அதன் திசை ஏகும்
எத்தனை எத்தனை
எண்திசைத் தேனீக்கள்!
எத்தகைய புயலையும் தாங்கும்
இச்சிறு வனம்
வலசைப் பறவைகளின்
கலங்கரை
கற்பகத்தரு
கழனி செழிப்புற
மண்புழு குடைவதாய்
நிலம் குடைந்தோடும்
ஊதா மஞ்சள் நீலம் பழுப்பென
வண்ணமிகு நாள மண்டலம்
ஊடறுத்தால் விரியும்
விருட்சத்தின் வளையங்களாய்
இம்மண்ணை அகழ்ந்து செல்லும்
உழைப்பின் ரேகைகள்
விழிவிரி மயிற்பீலியாய்
வானுயர் கட்டடங்களின்
பரம்பொருளின் ஆதியைத் தேடும்
பிரம்மப் பிரயத்தனம்
ஒருபுறம்
அந்தத்தை தேடும் வராக வரமாய்
விரிவின் வேர்கள்
மறுபுறம்
ஆதியந்தமற்ற சோதியாய் எழுந்த
மானுடமே இங்கு இலட்சியத் தேடல்
வளர்ச்சி என்பது
புறத்தே மட்டுமல்ல
அகத்தேயும் என்பதே
இச்சுரங்கப் பாதைகளின் சூட்சமம்
இங்கே நீளும் குகைகளில்
ஆதிமனிதர் வாழ்வியல் பேசும்
குகையோவியங்கள் கிடையாது
ஆனால்
ஒவ்வொரு சுரங்கமும்
உழைப்பின் நவீன ஓவியம்தான்
அதனுள் ஓயாது துடிக்கும்
நிலத்தின் இதயம்
இவ்வபூர்வ மலர்வனத்தின்
வேர்கள்
மண்ணில் மட்டுமல்ல
எம் மனத்துள்ளும்
ஆழப்பதிந்தவை
காலத்தை ஊடுருவி
நீளப்புதைந்தவை
– ராஜூ ரமேஷ்
சங்கீதா சந்திரசேகர் இந்த ஓவியம் நெருப்பின் கங்குகளைப் பிரதிபளிக்கிறது. அழுக்காறு, அகங்காரம், பேராசை தன்னையே பொசுக்குவதை உணர மறுப்பதைச் சுட்டிக்காட்டி கவிதையைப் படைத்தார்.
எரிதழலின் எச்சம்
கொழுந்து விட்டு ஆடியது என்ன
தீக் கங்குகளை சுழற்றி
விழுங்கியது எத்தனை?
என்ன பேராசை உனக்கு
அத்தனையும் புசித்து
ஆங்காரமாய் செரித்து
எஞ்சியது சாம்பலும் பேரமைதியும்
மனிதனும் உன் போல் பறக்கிறான்
சின்ன வாழ்க்கையில் சிதறுகிறான்
அழுக்காறு, அகங்காரம், பேராசை
தன்னையே பொசுக்க போவதை
உணர மறுக்கிறான்
நாட்களை வீணே கழிக்கிறான்
எஞ்சிய நாட்களை முழுதாய் வாழ்வோம்
நகை கூடி பகை ஒழித்து களிப்போம்
– சங்கீதா சந்திரசேகர்
லலிதா கவிதையில் இயலாமையை எதிர்க்க துணிவின்றி கனலாய் உறைந்து கிடக்கும் கோபத்தை அழிக்கும் மறதி தூரிகையென கவிதைப் படைத்தார்.
சில நேரம் அழுகை
சில நேரம் உதட்டோரம்
சிறு முறுவல்
சில நேரம் இயலாமை
எண்ணி குமுறல்
ரெளத்திரம் பழக
துணிவின்றி கனலாய்
உறைந்துக் கிடக்கும் கோபம்
படிமங்களாய் உறைந்து
கிடக்கும்
நினைவு அடுக்குகளில்…
எழுதியதை சரிசெய்யும்
அழிப்பான்போல்
நடந்ததை மறைக்கும்
மறதி தூரிகை
வரமே…..
– லலிதா சுந்தர்
சீன எழுத்தினைக் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியத்தைப் பற்றி வெண்ணிலா கவிதை படைத்தார். குளத்தில் இடமில்லாமல் கரையொதுங்கிய ஆர்க்கிட் மலரென குறியீடாக இருந்தது அவரது கவிதை.
சீன எழுத்துகளை மையமாக வரையப்படும் இப்படியான ஓவியங்கள் கவிதைச் சொற்களை ஓவியத்துக்குள் கொண்டுசெல்பவையாக இருக்கின்றன.
சீன எழுத்துக்களின்
சிக்கலான சோலையில்
நான் மட்டும்
ஆர்க்கிடாய் மலர்கிறேன்.
கரைந்த மையினால் எழுதும்
ஒவ்வொரு கோட்டிலும்,
அவளின் முகம்
தாமரையாய் மலர்கிறது.
புரியாத ஒவ்வொரு வளைவிலும்
காதலின் வெப்பம் இதமளிக்கிறது.
அத்தனை நீள கோடுகளும்
அவளின் வாசனை நினைவுகளை
நீட்டி விடுகிறது..
அன்று
தாமரைக் குளத்தில் இடமில்லாமல்
கரை ஒதுங்கிய ஆர்க்கிட்
அகலாத நினைவுகளை
கலிகிராஃபி ஓவியத்தில் ரசிக்கிறேன்
– வெண்ணிலா அசோகன்.
மரபுக் கவிதைகளில் சித்திரச் செய்யுள் வகைகள் இம்மாதிரியான வடிவங்களில் எழுதப்படுவதுண்டு. அமரர் வெண்பா சிற்பி இக்குவனம் அவர்களின் சித்திரக் கவிதைகளை இந்த ஓவியம் எனக்கு நினைவூட்டியது. இக்குவனம் அவர்கள் தனது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழையே சித்திரச் செய்யுளாக வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையிலிருந்து வழியும் நீராகவும், பூமியைப் பிளந்தோடும் வடிநீராகவும். பெரும்பறவை அதன இறகுகளை அகல விரித்து நிற்பது போலவும் என இந்த ஓவியத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்த்தனர். மலையிலிருந்து வழிந்தோடும் அன்பாக இருந்து பின் குடங்களில் நிறைத்து பருகுவதை விட வேறென்ன செய்யமுடியுமென சித்ராவின் கவிதை இருந்தது.
மலையிலிருந்து
பொழிந்து கொண்டிருந்தது அன்பு
அன்றொரு காலத்தில்
அதன் சிறுதுளிபடும் இடம் கூட
அழகாய்த் துளிர்த்தது.
ஆறாய்ப் பாயத் தொடங்கிய கணம்
சலசலத்து ஓடியது
அதன் இரு மருங்கிலும் இருக்கும்
பேரூர்களையும் சிற்றூர்களையும்
செழிக்கச் செய்தபடி
மடை மாற்றம் செய்யப்பட
குட்டையாகத் தேங்கியது.
தேங்கியகுட்டையிலிருந்து
குடத்தில் நிறைக்கப்பட்டது
ஆடாமல் அசையாமல்
சலசலப்பில்லாமல்
குடத்தினுள் இருக்கும் அதை
வேண்டுமளவிற்குக் குவளையில்
நிறைத்துப் பருகப் பழகுதல் தவிர
வேறு என்ன செய்ய முடியும்!
– சித்ரா தணிகைவேல்
ஒரு மொழியின் பாரம்பரியத்தையும் கலையையும் கடத்துவதற்கு ஓவியமும் ஒரு ஊடகமாக அமைந்திருக்கிறது. அப்படியான புகழ்பெற்ற ஓவியர்களுக்கும் விலைமதிக்கமுடியாத உலகறிந்த ஓவியங்களுக்கும் கொடுக்கப்படும் விலை அதீதமானது. அப்படியான ஓவியங்களுக்கு கவிதை எழுதுவது பெரும்பாலும் நடப்பதுண்டு. உள்ளூர் கலை படைப்புகளை ஊக்குவிக்கும் விதமாக கவிதைத் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தவை மேலும் கவனத்தை ஈர்த்தது. புரியாத மொழியின் பின்னனியில் வரையப்பட்ட சீனப் பாரம்பரிய ஓவியங்கள் மொழி வழியாக கடத்த முடியாத உணர்வுகளை ஓவியங்கள் வழியாக மொழிபெயர்த்ததோடு மொழியையும் சேர்த்தே கடத்திய உணர்வையும் ஏற்படுத்தியது.
– இன்பா
28.07.2024