அறிமுகம்
எளிய அழகிய மொழியில் விடியலைத் தேடியபடி ஆரம்பமாகிறது, ‘கடல் முற்றம்’. சென்னை மோக்லி பதிப்பக வெளியீடாய் கிண்ணியா எஸ். பாயிஸா அலியின் 50 கவிதைகளின் தொகுப்பாய் 2017 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. கவிஞர் அனாரின் கனதியான முன்னுரையுடன் வெளிவந்த இந்நூலை முஹம்மத் முஸ்டீன் – ஷாமிலா ஷெரீஃப் முஸ்டீன் தம்பதியர் தமது ஷெய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்தத் தயாரிப்பகத்தின் (SIM Production) மூலம் கொழும்பில் மிகவும் விமரிசையாக வெளியிட்டு வைத்தார்கள். ஃபாயிஸா அலி பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியை, கவிதாயினி, சிறுவர் இலக்கியப் படைப்பாளி, இலக்கிய விமர்சகி எனப் பல்பரிமாணம் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்திற்கான (தங்க மீன் குஞ்சுகள்) தமிழியல் விருதினையும், கவிதைத் தொகுதிக்காக (ஃபாயிஸா அலி கவிதைகள்) 2013 ஆம் ஆண்டில் அரச சாகித்திய விருதினையும், கிழக்கு மாகாண சாகித்திய விருதினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வார்க்கப்பட்ட பாலின அடையாளங்களுக்கு அப்பால்…
ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினர் ஒருங்கிணைந்ததே சமுதாயமாகும். அவர்களுக்கு இடையிலான உறவுநிலைகள், ஊடாட்டங்களின் வழியே ஒரு சமுதாயத்தின் இயங்கியல் நிர்ணயிக்கப்படுகின்றது. கலையும் இலக்கியமும் அவ்வியங்கியலின் வெளிப்பாடுகளாய் அமைகின்றன. “சமுதாய உறவினின்றும் பிறப்பெடுக்கும் கவிதை, அவ்வுறவுகளின் பிரதிபலிப்பாகவும் அமைகிறது. இயற்கையோடும் வாழ்க்கையோடும் நெருங்கிய தொடர்பு கொண்டது கலை என்பது நன்கு விளங்கும். அதனால் கலையானது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் பகுதி பகுதியாகவோ முழுமையாகவோ எடுத்தாள வேண்டியதாக – பிரதிபலிக்க வேண்டியதாக – படம் பிடிக்க வேண்டியதாக உள்ளது.” (ஒரு சில விதி செய்வோம் – கவிதைச் சிந்தனைகள், 1972:35) என்னும் இ. முருகையனின் கூற்று இதனுடன் தொடர்புறுத்தி நோக்கத்தக்க ஒன்றாகும். ”ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே” என்ற பாரதியின் விடுதலை முழக்கம் என்றோ பிறந்துவிட்ட நிலையிலும், சமூகத்தில் சரிபாதியினரான பெண்களின் சமகால நிலையென்ன, அவள் குறித்த கலையிலக்கிய வெளிப்பாடுகள் எவ்விதம் அமைந்துள்ளன என்ற கேள்விகள் மிக முக்கியமானவை.
எந்தவொரு சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே, பெண் என்பவள் யார், அவள் எப்படி இருப்பாள், எப்படிச் செயற்படுவாள் என்ற கற்பிதங்கள் ஆண்மையவாதச் சமூக மனங்களால் காலங் காலமாய்க் கற்பனிக்கப்பட்டன. அவை கருத்துக்களாய், கவிதையாய், கதையாய், காவியமாய் எனக் கட்டமைக்கப்பட்டு காலப்போக்கில் கருத்தியல்களாக வடிவமைக்கப்பட்டு ‘கல்பு’(மனசு)கள் தோறும் திணிக்கப்பட்டமை வரலாறு. அதன் விளைவாகப் பெண் என்பவள் இரண்டாந்தர உயிரியாய் ஆக்கப்பட்டாள். பல்வேறு தருணங்களில் அவள் ஓர் உயிரி என்பதே மறக்கடிக்கப்பட்ட நிலையில் ஓர் உடைமையாய், போகப் பொருளாய் அஃறிணை போலும் நடத்தப்பட்டாள். ஆண்மையவாதச் சிந்தனை ஆண் – பெண் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் மனித மனங்களில் மிக ஆழமாக வேரூன்றிப் படர்ந்து கருத்தியல் தளத்திலும் செயற்பாட்டுத் தளத்திலும் பல்வேறு முகங்களோடு வெளிப்பட்டுத் தோன்றியது.
உண்மையில், பெண் பால்மை என்பது பிறப்பினால் கிட்டும் ஒரு வரந்தான். எனினும், உடை, நடை, பாவனை, மொழி, விருப்பு வெறுப்பு இவை அனைத்துமே இன்னின்ன விதமாய் அமைதல் வேண்டுமென ஆண்டாண்டு காலமாய்க் கட்டமைத்து வார்க்கப்பட்ட பாலின அடையாளங்களுக்குள் மொத்தமாய் அமிழ்த்தித் தன் சுய அடையாள அழிப்பினை நிகழ்த்துமாறு பெண் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்ப்பந்திக்கப்பட்டாள். இந்நிலையில், பால்நிலைச் சமத்துவம் குறித்த பிரக்ஞை உணர்வுள்ள பெண்கள் பலர் தம் சுயத்தை இழக்க விரும்பாமல், தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சகல விதமான ஒடுக்குதல்களுக்கும் எதிராகத் தமது குரல்களைப் பதிவுசெய்து வந்தனர். அவ்விதம், தன் சுயத்தையும் சுயாதீனத்தையும் இழக்க விரும்பாமல் ஆர்த்தெழ விழையும் பெண்குரலின் மெல்லிய இழையினைப் பற்றித் தனது கவிதா வரிகள் தோறும் பரவ விட்டிருக்கிறார் ஃபாயிஸா அலி எனும் இக்கவிதை சொல்லி.
“உடுப்பவை மட்டுமல்ல
எனக்கான எதையுமே
தீர்மானிக்க வேண்டியதும் தெரிவதும்…
அவர்களுமல்ல இவர்களுமல்ல
நான்
நான் மட்டும்.” (ஹிஜாப்) என்ற வரிகள் தற்தீர்மானத்தின் உறுதியை முன்மொழிகின்றன. இவ்விடத்தில், ”ஒரு பெண் தன் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பது உடல். தன் உடலை மீள்வாசிப்புச் செய்வது அதன் முதல் கட்டம். இம்முயற்சியில் இறங்கும்போதுதான் மீள்வாசிப்புச் செய்வதற்கு உடலை மீட்டெடுப்பது அவசியம் என்று தெரிகின்றது. மீட்டெடுப்பது சாதாரண வேலையில்லை. காரணம் முள் படுக்கையில் கிடத்தி முட்களால் போர்த்திய உடல், பண்பாட்டு முட்கள், மொழி முட்கள், இலக்கண முட்கள், சம்பிரதாய முட்கள், சடங்கு முட்கள், அரசியல் முட்கள், வேலி என்று நினைத்துத் துளைக்க விட்ட முட்கள், அரண் என்று நினைத்து அரவணைக்கவிட்ட முட்கள் என்று ஓராயிரம் முட்கள். உடலுக்கு உரிமை கொண்டாடும்போதே தொடங்கிவிடுகிறது கீறல்களும் காயங்களும்” (நிவேதினி, இதழ் – 10, 11/2005:VI) எனும் செல்வி திருச்சந்திரன் மற்றும் அம்பை இருவரும் இணைந்து வெளியிட்ட கூற்று நினைவுகூறத்தக்கது.
ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகி வா தியாங்கோ குறிப்பிடும்போது, “ஒவ்வோர் எழுத்தாளரையும் அவர் பிறந்து வளர்ந்த சூழமைவு, வாழ்க்கை குறித்த அவரது முழுமையான அனுபவம், அதில் எதிர்கொண்ட போராட்டங்கள் முதலானவையே வார்த்தெடுக்கின்றன” என்பார். ஃபாயிஸாவின் கவிதைகளில் அவரது வாழ்வனுபவத்தின் தரிசனங்களைத் தனக்கே உரிய வித்தியாசமானதும் தனித்துவமானதுமான மொழிநடையில் முன்வைத்திருப்பதைக் காணலாம். வாழ்வனுபவம் எனும்போது, அது அவரவர் சொந்த வாழ்வனுபவமாகத்தான் இருத்தல் வேண்டும் எனும் அபத்தக் கற்பிதம் பெண்ணெழுத்துக்களைப் பொருத்துமட்டும் மேலெழுந்து விடுவதை அழுத்தமாகக் கடக்கத் தெரிந்த பெண்களாலேயே சமூகத் தளத்தில் ‘வாழ்தல்’ குறித்த, ‘சமூகம்’ குறித்த, சக பெண்கள் குறித்த தமது தரிசனங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்க்கின்றது எனலாம். இதனையே, “பெண்ணுடைய நுண்திறன், பரந்த சிந்தனை, கல்வி, தொழில் ரீதியான அனுபவங்கள், இயலாமைகளின் அழுத்தங்களால் எழும் கோபம், உயிர்வாழும் காலம் முழுவதிலும் பெண் தனக்கு வழங்கக்கூடிய முக்கியத்துவம், தன்னுடைய வாழ்வை சரியென்று எண்ணும் நியாயத்துடன் எதிர்கொள்ள அவளுக்குள்ள உரிமை அனைத்தையும் சேர்த்துப் படையாகத்திரட்டி போர்புரியத் தொடங்குகிறாள். முதற்கட்டமாகத் தனக்குள்ளே…. அடுத்த கட்டமாகத் தனக்கு வெளியே…. சொற்களைக் கூர்மையாக்கி இரும்புப் பாளமாய் சமூகம் எழுப்பியுள்ள அகன்ற தூண்களை அகற்றப் போராடுகிறாள்” என கவிஞர் அனார் இந்நூலுக்கான முன்னுரையில் சொல்லிச் சென்றுள்ளார். அவ்வகையில்,
“உன்னைப்போலவே
சிந்திக்கவும்…
கவிதைபாடவும்…
வான் கடல் நிலமென
உன்பாதந்தொடும்
எல்லாச் சந்து பொந்துகளிலும்
தொய்வேதுமின்றியே…
உனக்கு
சமனும் சமாந்தரமுமாய்
பயணப்படவுங்கூட என்னால் முடியும்.
ஆனாலும்
உல்லாசமும் சுதந்திரமும் உனக்குமட்டுமே என்றான
இப்பயணங்களை விட்டும்…
விஷமப்பார்வையொன்றே
எனைத்தூரமாக்கி விடுவதெல்லாம்
எனது அறையிலும்……
நமது அறையிலும்….
ஒருபொறியின் தொடர்ச்சியான இயங்குகை
உனக்கவசியம் என்பதனாலா
இல்லை
நான் பெண்ணென்பதனாலா?” (சமனும் சமாந்தரமுமாய்,ப.38) எனும் வரிகளினூடே மூடுண்டதும் கட்டிறுக்கமானதுமான சூழமைவின் அழுத்தங்களை, ஒடுக்கப்படுதலின் வலிகளைக் கிளர்த்தி ஒரு வினாவை எழுப்புகின்றார், கவிதைசொல்லி. மேலும்,
”ஆடியில் தற்செயலாய் ஒட்டிப் பிரிந்த
பெருவிரலின்
பெருப்பிக்கப்பட்ட நகவிடுக்கினில்
அப்பிக் கிடந்த அழுக்கின் கருமை
விழிகளை சட்டென உலுக்கிட
தொப்பென வீழ்கையில்…
நடுக்கங்களோடுதான் ஞாபகங்கொள்கிறேன்
அவசர அவசரமாய்
சமைக்கக்கழுவிய கறிச்சட்டியை…
இது வானமல்ல என்பதை…
கூடவே…
நான் யாரென்பதை.” (கருமை, ப.44 ) என்ற வரிகள் அனைத்துவிதமான அடையாளங்களையும் மீறி, பெண்ணின் பாலினம் அவளுடைய சுயத்திற்குள்ளேயே துருத்திக் கொண்டு வெளிநோக்கி நீள்வதன் அவஸ்தையினை உணர்த்துகின்றன.
”பொன் மஞ்சள் ஒளியினிலே” எனும் கவிதையில், இருவேறு குவியங்களில் மாறி மாறி ஒருங்கும் பெண் அனுபவத்தை வெற்றுப் புலம்பலாக விமர்சித்து நகரும் மேதமைகள் உணர்வதே இல்லை, பெண்ணின் நுண்ணுணர்வின் தளங்களை ஊடுருவிச் செல்லும் சாத்தியமேயற்ற தமது போதாமைகளை என்பதை அழுத்தந்திருத்தமாக உணர்த்துமாப்போல் அமைந்துள்ளன, பின்வரும் வரிகள்:
”இப்போதென் நாற்காலிக்குள் நீ வந்தமர்கிறாய்
மெல்லக்குறுகி
ஒளிநாடி வளருமொரு தொட்டிச் செடியாகிறேன்
சாதனங்களும்…துணைச்சாதனங்களும்..
இன்னும் பலவுமென
எல்லாமும் நீயேயாகி
நிகழ்த்தப்படும் முன்வைத்தல்களில்
என் தீப்பெட்டியறை விரிந்து
பெருஞ் சூரியகாந்திக்காடாகி
பரவும்
பொன்மஞ்சள் ஒளியினிலே
நசிந்து மூச்சுத்திணறும்.” (பக்.40-41)
பெரும்பாலும் பெண்ணின் அனுபவ வெளி என்பது பல்வேறு நெருக்கடிகளும், சிக்கல்களும் மூச்சுத் திணறல்களும் புதுமைகளும் புதிர்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததுதான். உள்ளும் புறமுமாய் தனக்கான வாழ்தல் என்பதே அற்றுப்போய், யார் யாரின் பொருட்டோ எவரெவரோ வகுத்துவைத்த விதிமுறைகளுக்கு அமைவாக, எவரெவரையோ திருப்திப் படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட ‘பெண் விம்பமே’ நம்மைச் சுற்றிலும் ஊடாடித் திரிகின்றது. சுயமாகச் சிந்தித்து, எதிர்த்துக் கேள்விகளை எழுப்பாத வரை, தனது மாற்றுக் கருத்துக்களை முன்வைக்காதவரை, தனது விருப்பு வெறுப்புகள் சார்ந்து வெளிப்படைத் தன்மையோடு இயங்க முற்படாதவரை அவள் ‘நல்ல பெண்’ணாக வலம் வரலாம். இல்லாத பட்சத்தில் அவளுக்கெனப் பிரத்தியேகமான எத்தனையோ எதிர்மறைப் பட்டங்கள் பட்டியலாய் நீளும்.
பெண் மௌனித்து இருத்தலை அவாவும், அவளது சுயாதீனச் செயற்பாடுகள் முற்றுப்புள்ளியின் திசைநோக்கித் திரும்பி ஸ்தம்பித்தலை மறைமுகமாய் வற்புறுத்தும் வன்மமானது, ”உணர்பரப்பெங்கிலும் சதாவும் வன்னமிலமொன்றையே பெய்தபடித் தொடரும் நெடுமௌனமாக” நீளவும்கூடும் என்பதைச் சொல்லிச் செல்கிறது, ”முற்றுப்புள்ளியின் திசை” (ப.50). அவ்வாறே, ” இனியும் பொழியேன்” கவிதையில்,
பகலவன் வெம்மையில்
படியிறக்கங் காணுமொரு பொலித்தீனாய்
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு
உன் தொடர் புறக்கணிப்புகளால்
இன்னமும் எத்தனை தடவைகள்தான்
தன்மானத்தைப் பிணை தருவது?” (ப.64) என்ற கேள்வியினூடே முன்வைக்கப்படுகிறது.
ஆக, வன்மம் என்பதும் வன்முறை என்பதும் எப்போதும் பௌதீக உடல்சார்ந்த தாக்குதலாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக, அது புறக்கணிப்பினூடான, கொடுமௌனத்தினூடான, எள்ளலின் வழியான உளவியல்சார் எதிர்ச்செயற்பாடாகக்கூட அமையலாம் என்பதையும் தெளிவுறுத்தி நிற்கும் இதுபோன்ற பல வரிகளைக் கவிதைசொல்லி பதிவுசெய்துள்ளார். இத்தொகுதியில் உள்ள, ”தகனம்” (ப. 15) எனும் கவிதை, தன் படைப்புக்களை ஒன்றுதிரட்டிக் கொளுத்திப்போடுவதன் மூலம் தன்னையே எரியூட்டிக் கொள்ளும் ஓர் ஆன்மாவின் விசும்பலை வரிகளுக்குள் வசப்படுத்தித் தருகிறது. இத்தகைய சுயசிருஷ்டி எரிப்பினை அல்லது தன்னுணர்வுத் தகனத்தினை சிருஷ்டித் திறனுள்ள எத்தனையோ பெண்கள் கடந்துதான் இருப்பர். உண்மையில், தகனம் என்ற பிரயோகம் பிணத்தினை எரிப்பதற்குப் பயன்படுவதுதான். எனினும், இங்கே அது உணர்வுகள் காவுகொடுக்கப்பட்டதால், செத்துப்போன ஓர் இதயத்தின் எரிப்பினைச் சுட்டப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
”மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லர். அவர்கள் அதிகாரத்தால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள். அதிகாரத்தின் உரையாடல் அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது” (மேற்கோள்: சுரேஷ்,எம்.ஜி.,2009:93) என்ற ஃபூக்கோவின் கருத்து இங்கே ஒப்புநோக்கத்தக்கது. அதிகாரத்தின் உரையாடல் என்பது உண்மையில் பரஸ்பரமானதல்ல. மற்ற தரப்பின் எதிர்வினைக்கான வெளி என்பது அங்கே நிலவுவதில்லை. எனவே, அது பெரும்பாலும் ஒருவழிப் பாதையானதாகவே இருக்கும். அவ்வகையில், கட்டளைக்கு எத்தகைய எதிர்ப்பும் மறுப்பும் இன்றிக் கீழ்படிதலையே அது பதிலாக எதிர்பார்க்கும். இது எல்லா வகையான அதிகாரங்களுக்கும் பொருந்திப் போகும் பொது இயல்பாகும்.
அதிகாரத்தின் ஒடுக்குதலையும் அது ஏற்படுத்தும் தாக்கங்களையும் பல்வேறு கவிதை வரிகளில் பதிவு செய்திருக்கும் கவிதைசொல்லி, பிரபஞ்சவெளியில் கட்டுகளற்றுச் சஞ்சரிக்கும் அவாவினையும் சுயத்தின் வேட்கையினையும் தன் கவிதை வரிகளில் தவழவிடவும் தவறவில்லை. உதாரணமாக, ”கிரகங்கள் தனித்தியங்கத் தொடங்கு முன்பான ஆதிக்கனலில் இழை திரித்து சிறகு முடித்தே காலத்தைச் சுருட்டிக் கைப்பைக்குள் புதைத்தபடி ஏழுபூமி, ஏழுவானம் தாண்டியும் பெயர்கிற” முனைப்பினைச் சுட்டி நிற்கிறது, ”சிறுமீனாய்” (ப.54) எனும் கவிதை. இதனூடே, சுயாதீனத்தின் மீதான வேட்கையே எல்லா உயிர்களினதும் உயிர்ப்பின் சூட்சுமம் என்பதைத் தனது கவிதை வரிகளில் அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளார், ஃபாயிஸா அலி.
சிறுபான்மைக் கதையாடல்
சமுதாயம் என்பது எப்போதும் ஒரேமாதிரியானதாக நிலைபெற்று நிற்கும் ஒன்றல்ல; மேடுகளையும் பள்ளங்களையும் பல்வகை நிலங்களையும் தாண்டிச் சுழித்தோடும் நதியினைப் போல மாறிக்கொண்டே இருப்பது. இம்மாற்றம் காலமாற்றத்திற்கேற்ப நிகழ்ந்தபடியே இருக்கும். அது அவ்வக்கால இலக்கியப் பிரதிகளில் பிரதிபலிக்கவே செய்யும். இதனையே, “காலத்துக்குக் காலம் சமுதாயத்திலே தோன்றும் அரசியல், பொருளியல், சமூக, கலாசார, ஆன்மீக இயக்கங்கள் இலக்கிய ஆதிக்கத்தைப் பாதிக்கின்றன” என்கிறார், க. கைலாசபதி (அணிந்துரை, ஆக்க இலக்கியமும் அழகியலும், 1977:III). அவ்வகையில், ‘இலக்கியம் என்பது உயர்ந்தோர் மாட்டே; செல்வமும் ஆட்சி அதிகாரமும் கொண்டவர்களே அவ்வுயர்ந்தோர்’ என்ற நிலைப்பாடு உண்மையான ஒன்றாக நம்ப வைக்கப்பட்டு, அவர்களின் களிப்பினதும் துய்ப்பினதும் பொருட்டு இலக்கியம் படைக்கப்பட்ட நிலமானிய நோக்குநிலை காலப்போக்கில் மாறிவிட்டது. பல்வேறு நுண்ணடுக்குகளைக் கொண்டதாகக் கட்டமைக்கப்பட்டு இருக்கும் சமுதாயத்திலே மையத்தில் இருந்து விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அவரவர் நிலையில் நின்று கூர்ந்து நோக்கும் போக்கினைப் பின்னவீனத்துவ இலக்கிய விமர்சனம் ஆழ அகலப்படுத்தி உள்ளது.
இந்நிலையில்தான் சிறுபான்மைக் கதையாடல் பெரும் கவனக்குவிப்பினைக் கோரி நிற்கின்றது. ”பெருங்கதையாடல்கள் என்பது பேரடையாளத்துடனான ஒருமிப்பை வலியுறுத்தும் போது, சிறுகதையாடல் வித்தியாசத்தை முதன்மைப்படுத்துகிறது. மற்றதாக இருக்கும் உரிமை என்பது ஒரு தன்னிலை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை அல்ல; மாறாக மற்றது மற்றதாக வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை, நியதியிலிருந்து விலகும் உரிமை” (பின்நவீனத்துவம் – இலக்கியம் – அரசியல், 1996:67) என்கிறார் அ. மார்க்ஸ். இக்கூற்று, சாராம்சப்படுத்தப்பட்ட ஒருபடித்தான நிலை செயற்கையானது என்பதையும், பன்முகத்தன்மையே இயற்கையானது என்பதையும் வலியுறுத்துவதோடு, மற்றமையை அப்பன்முகத் தன்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் சுட்டிக் காட்டுகின்றது.
இதன்போது, ஒரு சமூகமானது மைய நீரோட்டத்தில் இருந்து முற்றாக விலகிச் சென்று தனக்கென ஒரு கண்ணுக்குத் தெரியாத வேலியை அமைத்துக்கொண்டு குறுங்குழுவாத உணர்வோடு செயற்படுவதில் உள்ள எதிர்மறை விளைவுகள் ஒருபுறம் எனில், சுய அடையாள அழிப்பினை வலியுறுத்தும் வகையில் மையத்தோடு இரண்டறக் கலந்து விடுமாறு பிரயோகிக்கப்படும் அழுத்தங்களினால் தோன்றும் சிக்கல்கள் மறுபுறம் எனத் தாக்கங்கள் பன்முனைப்பட்டவையாக அமைந்து விடுகின்றன. அவ்வகையில், தமக்கான தனித்துவமான ஒரு பண்பாட்டைக் கொண்ட இலங்கையின் சிறுபான்மை இனங்களின், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு அக-புற நெருக்கடிகள், அரசியல் ரீதியான ஒடுக்குமுறைகள் குறித்த பதிவுகளை உள்ளடக்கிய ஏராளமான இலக்கியப் பிரதிகள் இலங்கையில் தோன்றியுள்ளன. என்றபோதிலும், அத்துறைசார்ந்து முஸ்லிம் பெண்களின் பதிவுகள் மிகக் குறைவானவையே. ஃபாயிஸா அலியின் கவிதைகள் இத்துறை சார்ந்தும் தனது கவனத்தைக் குவித்துள்ளமை நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
”தொழுகைத்தலங்கள் நொறுக்கப்படுகையில்…
சில காவிகளின் கோணல்சொண்டுகளால்
என்மேலாடை கிழிக்கப்படுகையில்
தரச்சான்றிதழ் இழுபறிக்குள்
பிடிச்சோறும் தொண்டைக் குழிக்குள் சிக்கித்திணறுகையில்
இன்னமும்…
கண்ணுக்குத்தெரியாத நுண்கயிறுகளால்
எம் குரல்வளைகள் நெறிக்கப்படுகையில்…” (மேலாடை கிழிக்கப் படுகையில்,ப.26) என, ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் நெருக்கடிகள், அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை அடையாளப்படுத்துகின்றன இக்கவிதை சொல்லியின் வரிகள். இலங்கையில் சுமார் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் இந்நாட்டில் வாழ்ந்த எல்லாச் சமூகங்களும் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள நேர்ந்தமை வரலாறு. எனின், முஸ்லிம்களைப் பொருத்தவரையில் அவர்கள் இரண்டு பெரும்பான்மைச் சமூகங்களினாலும் பல்வேறு ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட ஒரு சமூகமாகக் காணப்படுகின்றனர். இதனை ஃபாயிஸாவின் கவிதைகள் பதிவுசெய்யத் தவறவில்லை என்பதற்கு, ”வரியும் கப்பமுமாய்” (ப.28), ”கலிமாவிரல் பற்றி” (ப.62), ”தேசம்” (ப.70) ஆகிய கவிதைகளைச் சிறந்த உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
”கருத்து வேறுபாடுகளின் கருத்தொருமிப்பே சனநாயகமான ஒன்றிணைவாக இருக்க முடியும்” (பின்நவீனத்துவம் – இலக்கியம் – அரசியல், 1996:46) என்கிறார், அ.மார்க்ஸ். அவ்வகையில், பெருங்கதையாடல்களில் உடைப்பு நிகழ்கையில், ஏற்படக்கூடிய வெற்றிடத்தினை நிரப்பும் மாற்று நிலையாகவே சிறுகதையாடல்களை நாம் அடையாளப்படுத்தலாம். “எனவே சாராம்சப்படுத்தப்பட்ட குழு அடையாளங்களையும், மூடிய முரண் எதிர்வுகளையும், கட்டுடைப்பதே பின் நவீனத்துவத்தின் பணி. சாராம்சப்படுத்தப்பட்ட குழு அடையாளத்திற்குப் பதிலாகப் பன்முகத் தன்மையான, மாற்றிக் கொள்ளத்தக்க, புனைவுக் கூறுகளுடன் கூடிய அடையாளம் என்பதை வைப்பதன் மூலம் அடையாளத்தின் சுருக்க முடியாத்தன்மை வற்புறுத்தப்படுகிறது” (அ மார்க்ஸ், 2001:25) என்பதன் மூலம், ஒற்றைத்தன்மையான, சாராம்சப்படுத்தப்பட்ட அடையாளத் திணிப்பு என்பது சனநாயகபூர்வமானதல்ல என்பதையும், பெருங்கதையாடலின் வழி அத்திணிப்பு மேற்கொள்ளப்படுகையில் முரண்பாடுகள் கூர்மையடைந்து சனநாயக விழுமியங்கள் சிதைக்கப்படும் அபாயம் நேர்கின்றது என்பதையும் புரிந்துகொள்ளலாம். இலங்கையில் ஏற்பட்ட மூன்று தசாப்தகால யுத்தமும் அதன் பின்விளைவுகளும் கிளைத்து வளர்ந்ததன் பின்புலத்திலும் நாம் இதனை இலகுவாக இனங்கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது.
பொதுநிலையில் ஒரு படைப்பாளி சமூக அவலங்கள் குறித்துக் குரல்கொடுத்து வருவது இயல்பு. எனின், தான் சார்ந்த சமூகம் ஒடுக்கப்படுகையில் அதற்காகக் குரல் கொடுப்பது அப்படைப்பாளியின் தார்மீகக் கடமை ஆகின்றது. இன்னொரு வகையில் சொல்வதானால், ஒடுக்குமுறை தலைகாட்டும் இடங்களில் எல்லாம் தன்னடையாளத்தினை வெளிப்படுத்திக் கொள்கிறது சிறுகதையாடல். அவ்வகையில், சிறுகதையாடலானது சமூகம் சார்ந்தும், பொருளாதாரம், தொழில், குடும்பம், சமயம் முதலான சமூக நிறுவனங்கள் சார்ந்தும் மையநிலையில் இருந்து விளிம்புக்குத் தள்ளப்பட்ட சமூகத்தின் குரலாய்த் தன்னை வெளிக்காட்டிக் கொள்கின்றது. என். சண்முகரத்தினம் குறிப்பிடுகையில், ”ஒரு கலைஞனின் அக நிலையை – அவனது ஆற்றலை – மூன்று முக்கிய பண்புகள் நிர்ணயிக்கின்றன. அவை, அவன் காட்டமுற்படும் நிலைமைகளோடு அவனுக்குள்ள அனுபவமும் பங்குபற்றலும்; அவனது வர்க்க நிலைப்பாடு; அவனது அழகியல் ரசனையும் விழுமியங்களும் என்பனவாகும். அவற்றிற்கிடையே உணர்வு பூர்வமாக அவன் ஏற்படுத்தும் தாக்க எதிர்த்தாக்கம் அவனது தரத்தை நிர்ணயிக்கின்றன. அவன் கலை ஆக்கத்திலீடுபடும்போது தன் அகநிலையைச் சொற்களால் வெளிப்படுத்துகிறான். இக்கட்டத்தில் அவனது சிந்தனை ஒழுங்கும், மொழி ஆற்றலும் அவனது வெற்றிக்கு உதவுகின்றன. இவை அவனது ஆக்கத் திறனுக்குத் தேவையானவை” (ஆக்க இலக்கியமும் அழகியலும், 1977:125-126) என்கின்றார். அவ்வகையில், ஃபாயிஸா அலியின் கவிதைகள் விளிம்புக்குத் தள்ளப்பட்டு, ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுபான்மைச் சமூகத்தின் குரலை உரத்து ஒலிக்கச் செய்வதை அவதானிக்கலாம். இதற்கு,
”தொடராய் கடற்தளத்திலிருந்து எனதூருக்கூடாய்
சம்பூர் வரைக்குமாய் ஏவப்பட்டதில்
வீட்டுச்சுவர்களையும் துளையிட்ட சில தீப்பொறிகளை
பிறிதொரு ரமழான் இரவில்
அநேகப் பெண்கள் நெஞ்சப் பரப்பெங்கிலும்
அச்சத்தைக் கீறிச் சென்றவனின் தனித்த காலடிகளையும்
அதைத்துரத்தி வந்த ஆத்திரக் கொந்தளிப்புகளையும்…” (கடல் முற்றம், ப.30)
எனும் வரிகளையும், 1990 ஆம் ஆண்டில் வடபுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டிலேயே ஆண்டுக்கணக்கில் அகதிகளாய் அலைந்து திரிந்துவிட்டு சொந்த ஊருக்குத் தீராத காதலோடு திரும்பும் மண்ணின் மைந்தர்களின் ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த,
”நெடுநாள் தாண்டி
கூடு திரும்பிய முதல் பண்டிகை
குறை தரத்திலேனும்
தொழுகைக்கொரு புத்தாடை
முதல் மஸ்கட் அச்சுப்பணியாரம் வட்டிலப்பமெனப்
பலகாரம் பண்ணுமளவு சுய வருவாய்
நெடுநாள் தாண்டி
கூடிக் கொண்டாடப் போகிறோம்
பட்டாசொலி மட்டுமே
கேட்குமொரு பெருநாள்” (மீளக்குடியமர்தல், ப.71)
எனும் கவிதையையும் உதாரணங்களாகக் குறிப்பிடலாம். முழுக்க முழுக்க ஓர் அகதிச் சமூகத்தின் வாழ்நாள் கனவை ஒருசில வரிகளுக்குள் பொதித்துத் தரும் இக்கவிதைக்குள் வேட்டுச் சத்தம் ஒலிக்காத, அமைதி நிறைந்த புத்துலகொன்றினைப் படைக்க விழையும் கவிமனதின் சாத்வீக எதிர்பார்ப்பும் எட்டிப்பார்க்கின்றது.
எம். ஜி. சுரேஷ், “அதிகாரம் என்பது பாதிக்கப்பட்ட விளிம்புநிலைவாதிகளை மட்டுமல்ல; ஆதிக்கம் செலுத்தும் மையவாதிகளையும் மறு உருவாக்கம் செய்கிறது. அதிகாரமும் அறிவும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. அறிவின் நீட்சியாக அதிகாரமும் அதிகாரத்தின் நீட்சியாக அறிவும் இருக்கின்றன.” (பின் நவீனத்துவம் என்றால் என்ன?, 2009:85) என்கிறார். அவ்வகையில், ஃபாயிஸா அலியின், ”தங்கை ரிசானாவிற்கு” (ப.76) எனும் கவிதை மிக முக்கியமானது. பணிப்பெண்ணாகச் சவூதி அரேபியாவுக்குச் சென்ற சிறுமி றிஸானா நஃபீக், அநியாயமாகக் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட கோரநிகழ்வினை மனம் பதறும் வகையில் சொல்லோவியமாய்த் தீட்டியுள்ளார் ஃபாயிஸா. றிஸானாவுக்கு நடந்த அநீதியின் போது, விதிவிலக்காக எழுந்த வெகுசில தனிநபர்களின் எதிர்ப்புக் குரல்களை விடுத்துப் பார்த்தால், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாகத் தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் சரி, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக ஆதிக்கம் தம்வசம் இருப்பதாகப் பம்மாத்துக் காட்டிக்கொண்ட இஸ்லாமிய இயக்கங்களின் தலைமைகளும் சரி, சவூதி அரசின் அராஜகம் தொடர்பில் மூச்சுவிடவில்லை. மாறாக, மார்க்கத்தின் பெயரால் பூசி மெழுகித் தம் பிழைப்புவாத மார்க்க அரசியலைக் கச்சிதமாக முன்கொண்டு சென்றார்கள். அவர்களின் மார்க்க அறிவு, நீதியை நிலைநாட்டுவதற்குப் பயன்படவில்லை. மாறாக, அதிகாரத்தின் அராஜக இருப்பினைப் பாதுகாக்கும் அரணாகவே தொழிற்பட்டது. அவ்வகையில், ”தங்கை ரிசானாவிற்கு” கவனங் கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு கவிதையாகும்.
ஆசிரியம் எனும் விழுமியம்
கவிதாயினியாகவும், இலக்கிய விமர்சகியாகவும், கட்டுரையாளராகவும் பன்முகம் காட்டும் ஃபாயிஸா அலி, தொழிற்றுறை சார்ந்து ஒரு பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியையும்கூட. அவ்வகையில், அவரது கவிதைகள் பாடசாலையை, வகுப்பறையை, மாணவர்களை, ஆசிரியர்களை மையப்படுத்தியும் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள், பின்தங்கிய, சிதைவுற்ற குடும்பங்களால் குழந்தைமை சிதைக்கப்பட்ட, பாலியல் சேஷ்டைகளால் சுரண்டலுக்கு உட்பட்ட மாணக்கரின் துயரங்களை மனம் வலிக்க வலிக்கப் பதிவு செய்துள்ள கவிதைகளும் அடங்கும். உதாரணமாக,
”மடியேந்தி மார்பூட்டுகையில்
அடுத்த மிடருக்காய் விரிந்த
பிஞ்சு உதடுகள் விலக்கி
வீசிவிட்டுப் போனாளாம்
விவாகரத்தான இவனன்னை
கதகதப்பான அரவணைப்பிற்கான தீரா ஏக்கந்தான்
அடிமனசில் அழுந்தியழுந்தி இவனை
அடாவடியாய் ஆக்கியிருக்குமோ…
மறுபடியும் கூச்சல்.. குழப்படி… சண்டை…
முறைப்பாடுகள்…
செவிப்பறை மென்சவ்வுகளில் குருதி கசியத்தொடங்கும்
பொறுக்கவியலாத இப்பொழுதினிலும்
ஓங்கிய பிரம்பை நழுவ விட்டு
இவன் உச்சந்தலை தொட்டு நகர்கிறேன்..
விழியோரமாய் துளிக் கருணையினை வழிய விட்டு…” (வகுப்பறை, ப. 78)
எனும் வரிகளையும், உன்னதமான ஆசிரியப் பணியில் இருந்து கொண்டே மனதில் முளைத்தெழும் காமப் பிசாசின் கொடுங்கரங்களை அடக்கத் தெரியாமல் பிஞ்சுச் சிறார்கள் மீது நீட்டிச் சுரண்டும் காமுகக் கொடூரர்களின் முகமூடிகளை உரித்துக் காட்டும்,
”சொற்களால்… உடல்மொழியால்… விபரித்தவைகளை…
இன்னும் விசும்பல்களில்…
இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளுமளவிற்கு
நான் உணர்ந்தவைகளை…
எந்தத் தரவரிசை அளவிடைகளூடும்
இட்டுநிரப்ப மறுக்கிறது என் பேனா.
வேலியே பயிரை மேய்தலின்
அசிங்கங்களின் அருவருப்புகளை
ஈரமல்லிகையின் நறுமணங்களோடு
இணைத்துப் பதிவிட ஒருபோதும் என்னால் முடியாது” (வேலியே பயிரை மேய்தல், ப. 34) எனும் வரிகளையும் குறிப்பிடலாம். அவ்வாறே, ”துரோசீரா” (ப.35) எனும் கவிதை அனாதை விடுதிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் காவலரண்களிலும், விகாரைகளிலும் நசித்துச் சுரண்டப்படும் அப்பாவிச் சிறுவர்களின் துயரினை அறச்சீற்றத்தோடு முன்வைக்கின்றது. இவை யாவும் சின்னஞ்சிறார்களின் வலிகளின் வடுக்களையும் தாங்கி நிற்கும் ஆசிரியமும் ஒருவகைத் தாய்மைதான் என்ற உணர்வினை எமக்குத் தருகின்றன.
இவைதவிர, உரிய ஆய்வுகூட வசதிகளற்ற பாடசாலையில், போக்குவரத்து வசதிகள் கிடைக்கப்பெறாத கஷ்டப் பிரதேசங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் படும் அவலங்களையும், அவற்றைப் புரிந்து கொள்ளும் திறனற்ற மேலதிகாரிகளின் அலட்டல்களையும், அதனால் ஆசிரியர்கள் அடைகின்ற மன உளைச்சல்களையும் வெளிக்காட்டும் கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. ”கடல்கிழித்து விரையும் இயந்திரப் படகின்…” (ப.57), ”கருஞ்சுவரில் குழாய் வரைந்து…” (ப.74) ஆகிய கவிதைகள் அவற்றுக்கான சிறந்த உதாரணங்கள் எனலாம்.
மேலும், வலது குறைந்த சிறுவனைப் பற்றிய ”அவன் மட்டுந்தான் பேரழகு” (ப.24) மிக முக்கியமான மற்றொரு கவிதையாகும். வயது குறைந்த ஒரு குழந்தையின் தாய் குடும்பத்திலும், சமூகத்திலுமாய் எதிர்கொள்ள நேரும் இடர்களும் இகழ்ச்சிகளும், அதனால் அவளடையும் பரிதவிப்பும் கழிவிரக்கமும் எத்தனை கொடுமையானது என்பதை அச்சொட்டாய்ச் சித்திரிக்கும் அற்புதமான கவிதை அது.
இவை தவிர, ”விடியல்” (ப. 14), ”வெளுக்கும் கிழக்கு” (ப. 32), ”அபூர்வம் நீ” (ப. 68), ”அயல்வீட்டுப் பீர்க்கங்கொடி” (ப. 69), ”சூரியன்” (73) ஆகிய கவிதைகள் கவிதைசொல்லி சுற்றுச்சூழல் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த நேசத்தையும், இயற்கை மீதான இரசனை உணர்வினையும், தனது அழகியல் உணர்வினையும் பிரதிபலிக்கும் அற்புதமான வரிகளைக் கொண்ட கவிதைகள் எனலாம்.
அறிவியலும் அழகியலும் இரண்டறக் கலந்து…
எந்த ஒரு படைப்பும் வாசகரின் மனதை ஈர்ப்பதில் அதன் மொழிநடை முக்கிய பங்கு வகிக்கின்றது என்றால், அது மிகையல்ல. ஒரு பிரதியின் எழுத்து முறையை வைத்தே அது இன்னாருடைய படைப்பு எனச் சட்டென இனங்காணத்தக்கவாறு எழுதுவது ஒரு தனிக் கலைதான். இதனையே, ”ஒவ்வொரு எழுத்தாளனிடமும் அல்லது கவிஞனிடமும் காணப்படும் சில தனிப்பண்புகளே நடை என்று கருதப் படுகின்றது” (ஆக்க இலக்கியமும் நடையியலும், 1977:78) என்று மொழி ‘நடை’க்குரிய வரைவிலக்கணத்தினைக் குறிப்பிடும் எம். ஏ. நுஃமான், “நடை என்பது ஓர் ஆசிரியரின் தனித் தன்மையை வெளிப்படுத்தவல்லது. அவரை இனங்கண்டு கொள்ளும் வகையில் அவருக்கே உரியதாக இருக்கும் வெளிப்பாட்டு மொழிப்பாங்கே அது” (மேலது), எனும் முர்ரே என்பாரின் கருத்தையும் மேற்கோள் காட்டுகின்றார்.
இந்நிலையில், ஃபாயிஸா அலியின் கவிதைகளில் வெளிப்படும் அவரது மொழிநடை மிகவும் தனித்துவமானது. பயிற்றப்பட்ட அறிவியல் பாட ஆசிரியை என்பதாலோ என்னவோ அவரது மொழியில், அத்துறை சார்ந்த சொற்பிரயோகங்கள் உவமைகளாகவும் சம்பவ விவரணங்களாகவும் ஆங்காங்கே கவிதை வரிகளெங்கும் கொட்டிக் கிடக்கின்றன.
”படபடக்குஞ் சிறுவண்ணாத்திப் புலன்களுக்குள்
குவியமிலா நெடுங்கனவுச் சிதறுகை
கரைந்திடுங்க் கணங்களில்
வர்ணங்களின் பிசுபிசுப்பும் படபடப்பின் அமர்முடுகலும்” (விடுதலை, ப.16)
”அடர்வனங்களில்
நச்சுப் பூச்சுகளுக்காய் தம் நிறைசுரப்புகளோடு
நிமிர்ந்தெழலாம் துரோசீராக்கள்” (துரோசீரா, ப.35)
”வட்டவட்டக் குழிவாடிகளும்
மெல்லிய குண்டூசிகளுமாய்த் தொடங்கிற்று
ஒளியியல் தொடர்பான
அச்செயற்பாடு” (கருமை, ப. 44)
”மென்காந்தம் தூரிகையாகி எமை வரைந்திருக்குமோ?” (மெல்லப்பரவுது, ப.46)
”ஒரு குண்டுமுனைக் காந்தம்போலே” (மைதானம், ப.49)
”பச்சிலையின் விரல்நுனியின் உயிரணுக்களையெல்லாம்
மின்னணுக்களாய் மாற்றிவிட்டபடி
திசைமாறிப் பறக்கிறது வண்ணத்துப்பூச்சி” (இல்லாத ஒன்றுக்காய், ப.51)
”ஆய்ந்து முடித்ததுதான் நியுற்றன் விதியெனில்” (மின்வரிகள், ப. 53)
”தெளிந்தநீர் மேலே பொட்டுப் பொட்டாய் பச்சையங்கள்” (மாயை, ப.60)
முதலான வரிகளை அதற்கான உதாரணங்களாகச் சுட்டிக்காட்டலாம். அவ்வாறே, ”ஒளிநார் போன்ற ஞாபகங்கள்”, ”வசீகர மொழிக்காவி”, ”முற்றுப்புள்ளியின் திசை”, முதலான தலைப்புக்கள் கவித்துவ வீச்சோடு அமைந்துள்ளன எனலாம்.
முடிவுரை
எந்தவொரு படைப்புச் செயற்பாட்டிலும் அழகியலுணர்வோடு அரசியல் விழிப்புணர்வோடுகூடிய சமூகப் பிரக்ஞை உணர்வும் இரண்டறக் கலக்கும்போது அப்பிரதி மிகுந்த கனதி உடையதாகின்றது எனலாம். அவ்வகையில், ஃபாயிஸா அலி தான் ஒரு பெண் என்ற நிலையிலும், ஓர் ஆசிரியை என்ற நிலையிலும், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்ற நிலையிலும், ஒரு கவிதாயினி என்றவகையில் மானிடத்தின் அங்கத்தினள் என்ற நிலையிலும் தன் அகவெளி-புறவெளி இரண்டையும் இணைக்கும் ஒருபுள்ளியில் நின்றவாறு தனது கவிதைகளைப் படைத்தளித்துள்ளார். அதேவேளை, இக்கவிதை ஒவ்வொன்றும் எழுதப்பட்ட காலமும் நூலில் உள்ளடக்கப்பட்டு இருக்குமாயின் சிறப்பாக இருந்திருக்கும். ஒருசில கவிதைகள் இன்னும் சற்று செவ்வைப்படுத்தப்பட்ட பின் தொகுதியில் சேர்க்கப்பட்டு இருக்கலாமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை. ”லேபல்வழிபாடுகள்” (ப.59), ”காதோரமாய்” (ப.61) ஆகிய கவிதைகள் அத்தகையவையே.
எவ்வாறிருப்பினும், சமூகவியல், அரசியல், பெண்ணியம், சூழலியம் எனப் பன்முகமான தளங்களில் அக்கறை கொள்ளும் வகையில் ஃபாயிஸா அலியின் கவிதைகள் அமைந்துள்ளன. அவற்றைத் தனக்கே வாலாயமான தனித்துவமான மொழியாளுகை ஊடே கவித்துவத்தோடு மனதை ஈர்க்கும் வகையில் முன்வைத்துள்ளார் கவிதைசொல்லி. அவ்வகையில் இத்தொகுதியில் அடங்கியுள்ள கவிதைகள் முக்கியமானவையே என்பதில் ஐயமில்லை.
உசாத்துணை நூல்கள்:
சண்முகதாஸ், அ. (1977) ஆக்க இலக்கியமும் அறிவியலும், (பதிப்பு), யாழ்ப்பாணம்: யாழ்.பல்கலைக்கழகத் தமிழ்த்துறை.
சுரேஷ், எம்.ஜி. (2009) பின் நவீனத்துவம் என்றால் என்ன?, திருச்சி: அடையாளம் பதிப்பகம்.
மார்க்ஸ், அ. (1996) பின் நவீனத்துவம் – இலக்கியம் – அரசியல், கோவை: விடியல் பதிப்பகம்.
மார்க்ஸ், அ. (2001) கலாசாரத்தின் வன்முறை, புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
முருகையன், இ. (1972) ஒரு சில விதி செய்வோம்: கவிதைச் சிந்தனைகள், யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு.
நிவேதினி: பால்நிலை கற்கைநெறிச் சஞ்சிகை, இதழ் 10, கார்த்திகை 2005, கொழும்பு: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்.