’காவிரியம்’ நெடுங்காவியத்திலிருந்து மனோக்கிய நாதர் கவிதை
1.
உங்கள் மூதாதை யாரேனும்
போயிருந்தால்
நீங்களும்
கட்டாயம் போவீர்கள்
அதுவரை
உங்கள் மனம்நோக்கிப்
பார்த்தபடி
அமர்ந்திருப்பார் நாதர்
நீங்கள் போகத் தேவையில்லை
அவரே பிடித்திழுப்பார்
நீங்கள் போகும்போது
வரவேற்கும் அர்ச்சகர் சொல்வார்
நீங்கள் வருவீர்கள்
என்று தெரியும்
அதுவரை நீங்கள் வந்தது
உங்கள் காலின் திசை
அங்கோ உங்கள் கண்முன்
மனதின் திசை
2.
நாதர்
அவர் யார்
சிவனா பெருமாளா
புத்தரா தீர்த்தங்கரரா
கேட்கவில்லை
ஆனால்
அதுமுதல் இடையறாமல்
ஒரு பார்வை
– ஒருவேளை ஏற்கெனவே இருந்திருக்கலாம் –
என் மனம் நோக்கி
வெறித்துக் கொண்டிருப்பதை
உணர்ந்தேன்
வெறித்த அந்தப் பார்வையின்
வடம் பிடித்துக்
கண்ணை மூடிக்கொண்டு
மனதை நம்பிச் சென்றால்
நாதர் கோயில் வாசல்
நம் பாதம் நிற்கும் போல
ஆனால்
மூடிய கண்ணுக்குள்
விழிக்கும் மனதுக்கு
360° உருண்டைப் பார்வை
அண்டம் முழுக்க
அதை நோக்கி
சிம்மாசனம் போட்டு
வெறித்திருக்க
மனோக்கியநாதரின்
மெல்லிய வடம் எங்கு பிடிப்பேன்
3.
சற்று நிதானித்திரு
மனதே
மூதாதையரில்
முதலாமவர் தனக்கான
முன்விதி இன்றி
எப்படிப் போயிருப்பார்
கட்டக்கடையர்
எப்படிப் பின்விதி
துண்டிப்பார்
நாதரின்
நிபந்தனை குலைகிறதே
4.
இதோ
சொல்கிறேன் மனமே
நான்
வருகைதான்
மூதாதை
அது நிரந்தரமாய்
இருப்பது
புதிதாய் எழுபவர்
நாதர்
வருகைக்கு
முன்னும் பின்னும்
அவர் இல்லை
ஆகவே
முன்விதி
பின்விதி
இல்லை
ஒவ்வொரு வருகையும்
மூதாதை
உனக்கு நீயே
மூதாதை
இந்த விதிப்படி
நீயும் எழுப்பிடு
மனம்
நோக்கிய
நாதர்
– ஆசை
தொடர்புக்கு: asaidp@gmail.com
1 Comment
பூவிதழ் உமேஷ்
மூடிய கண்ணுக்குள்
விழிக்கும் மனதுக்கு
360° உருண்டைப் பார்வை
வருகைதான்
மூதாதை
உனக்கு நீயே
மூதாதை
போன்ற வரிகள்கள் தான் இதை நல்ல உரைநடைகவிதையாக மாற்றுகின்றன. ஆனால் கருத்துத் தொடர்ச்சியை கதைத் தொடர்ச்சியை எழுதும் போது அதைத் தவிர்க்க முடியாது தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் ஆசை.