நம்மை உய்விக்க வந்ததாக நம்பப்பட்ட மார்க்சிய கருத்தியலோடு, நம்பிக்கைகளும் தோற்று ஒரு நிரந்தர வெயிலுக்குள் மானுடம் பயணிக்கத் தொடங்கியதை வலுவாக அறிவித்த கவிக்குரல் மலைச்சாமி. வெங்கரிசல் என்று சொல்லப்படக்கூடிய ஒரு நிலப்பரப்பின் பிரத்யேக உள்ளடக்கத்தையும், உணர்வுகளையும் சேர்த்து உலகளாவிய தன்மையை நோக்கி எழுந்த குரல். 1994-ல் ‘ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு’ கவிதைத் தொகுதிக்குப் பிறகு பெரிதாக எழுதவில்லை. அதே தொகுப்பிலுள்ள கவிதைகளுடன் கூடுதலாகச் சில கவிதைகளுடன் ‘விலக்கப்பட்ட திருடன்’ என்ற கவிதைத் தொகுதியாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவரது சில கவிதைகள் ‘திணைகள்’ இணைய இதழில் மறுபிரசுரம் பெறுகிறது.
வியூகம்
நெருஞ்சிச் செடிகளையும் கற்றாழைகளையும்
வேம்பின் நிழலையும்
அரிபுழுக்கள் மட்டுமே அப்பின பூவரசுகளையும்
தாண்டி நடந்தேன்
நிலவின் வெள்ளொளியும்
ஊதல்காற்றின் பேயிரைச்சலும்
இயைந்து பண்ணிசைத்தன
வதங்கிய பூமாலையின் அமைதியில்
வாழ்க்கை கிடந்து இயங்கியது
சூரியனை முதல் விழிப்புக்கு அழைத்து
ஆந்தைகள் அரற்றின
தொலைதூரத்து மலைமுகட்டுக் கானகத்திலும்
பேரிச்சலின் சுழல் பரிதவிக்கிறது
காலத்தின் ஒளி அல்லது இருள்சுவரில்
பட்சிகள் பலகாலக் கவிதையொன்றை
தங்கள் அலகுகளால் இழுத்துக் கிறுக்குகின்றன
இந்தப் பிரபஞ்சத்தின் அமைதியோ
தினவு நிரம்பியது
அமைதிச் சுடரே எல்லாவற்றிலும் நீயிருந்தும்
எங்கிருக்கிறாய்.
1988 மார்கழி
மழை பொய்த்ததெனக்
காற்று ஊளையிடும்
மண்ணுரித்த சுவரில்
எலும்புகள் துருத்த நிற்கிறது
என் கிராமம்
முன்னொரு காலத்தில்
பெய்த துளிகளில்
தளிர்ந்ததெனக் காட்டிப் பின்
பொசுங்கின புல்லினங்கள்
கடைவாயில் ஒழுகிய
எச்சில்நுரை உலர்ந்தது
பாதையோரத்தில்
தோட்டங்கள் தலைகவிழ்ந்தன
எங்கும்
புழுதி சிரித்தோடுகிறது
ஆயினும்
நம்பிக்கை சூறாவளியாய்ச்
சுழன்றலையும்
எப்பொழுதேனும்
தவறின காலங்களிலிருந்து
பொறுக்கிவிடலாம்
ஒருதுளி ஈரத்தை
நெற்கதிரும்
அதன் தண்மையான வாடையும்
சுகந்த மார்கழியும்
இன்னும் நாசியில் நிற்கக்
காத்திருக்கிறதென் கிராமம்.
இன்று
இப்பொழுது விடிந்துவிடும்
பறவைகளின் நுணுக்கமான கூவல்களும்
இரத்த வீச்சமும் என்னை எழுப்பின
உயிர்ப்பான மழுங்கடிக்கப்படாத
மரங்களின் மேல் விடிவு ஒளிர்கிறது
நூற்றாண்டுகளின் புழுக்கம்
என் பாட்டனைப் பாட்டியைத்
தந்தையைத் தாயைக் கொன்றது
வெள்ளிகள் சரியும் அபாந்திரமான
வானத்தின்கீழ்
அவர்களின் பிணங்கள்
எனக்குக் கதைசொல்லின
ராஜா செத்தான்
அன்றும் பின்னொரு நாளும்
பட்டத்து யானை பிச்சையெடுத்தது
அன்பு திருடப்பட்டது
தாழிகளிலிருந்து மீண்டெழுந்துவந்த
எலும்புக்கூடுகளால்
கடவுள் கொலைசெய்யப்பட்டான்
நான் வெகுநாட்களாய்த் திளைத்திருந்த
கற்பனைகளிலிருந்து தரையிறங்கியபொழுது
பனிவிலகிய ஆஸ்பத்திரியின்
கட்டிடங்கள் விடியலில் துலங்கின
உண்மையாகவே மிக உண்மையாகவே
கடைவீதியில் தொலைத்த என் தோழனை
இன்று கண்டுபிடித்தேன்.
வெயில்
எது நிறம்
வெயில் வெளுப்போ நெருப்போ
சொல்லழிந்த
மத்யானம்
வாழையடி வாழைத் தோப்பில்
நிழலும்
அடியும்
அகங்களித்து வளர்ந்த கீற்றுகளும்
எனக்
காட்சிரூபம் காணும் வேளை
முட்டிற்று
மோதிற்று
வெளியெங்கும் கோடிட்டுக்
கீறிற்று வெயில்
ஒருதலை பொருட்டாகுமா
பார்வையைப் பணிக்கையில்
பார்க்கும் பொருளெல்லாம்
பளிச்சென்று மறைகையில்
தூரம்தானோ
வயல்வெளியோ
படுகுழியோ
தாண்டி மேய்ந்தன செம்மறிகள்
யூகத்தில்
ஒரு யூகத்தில்தான்
பறந்தன பறவையினங்கள்
நீள்சதுரச் சுற்றுக்குள் நீர்த்தேக்கம்
நிகழுலகு காட்டுகளையில்
வெளுப்பில்
எரிப்பில்
அதன் முகமும்
நிர்மூலமாகுகையில்
மௌனம் அடையாது
அலைந்ததொரு குறை
பாலை
பயிரினம்
ஈரம்பாலித்த பாறை