1.
கூவிக்கொண்டும்
அகவிக்கொண்டும்
உறுமிக்கொண்டும்
கீச்சிட்டும்
குரைத்தும்
இருந்தோம்
மொழிக்கு முன்பு
மொழி வந்தது
நாசமாய்ப் போனது
பேசிக்கொண்டு மட்டும்
இருக்கிறோம்
2
காலை
மாலையைப் போல
நடிக்கிறது
மாலையால்
இரவு போல்
நடிக்க முடிகிறது
இரவு நடிப்பதில்லை
அது அதன்
இயல்பில்
அல்லது
இரவின் வேறு வேறு வேஷங்களா பொழுதுகள்
அல்லாது
இரவின் கனவுகளா பொழுதுகள்
கனவு கலைந்து விழிப்பது
இரவாய் அல்லாது
பகலாகவே அமைவது
எவ்வளவு பெரிய
ஏமாற்று வேலை
3
நலமுடன் வரலாறு
வான் பார்த்தேன்
பறந்துகொண்டிருந்த
பறவைக் கூட்டத்துக்கு
பாரதப் பெயர்களிட்டேன்
சகுனி, குந்தி, கர்ணன்,அர்ஜுனன்…
பிறகு
குகன், ராமன், சீதை…
கண்ணகி, கோவலன்
மும்தாஜ், ஷாஜஹான்
கட்டபொம்மு, தேவராயர்
அம்பேத்கர், காரன்வாலிஸ்
ஒசாமா, ஒபாமா
காந்தி, ராஜராஜசோழன்
கணக்கு வழக்கின்றி
கலந்துவிட்ட கூட்டத்தில்
அம்பேத்கரும் ராமரும்
காந்தியும் ஹிட்லரும்
ஒசாமாவும் ராஜராஜனும்
ஒன்றாய்ப் பறக்கிறார்கள்
குழல் துப்பாக்கியை
எடுத்துக் குறிபார்த்தேன்
வைத்த குறி
பிசகாது
காலத்தைச் சுட்டு வீழ்த்தினேன்
4
இரண்டு பக்கமும்
கர்ஜிக்கும் சிங்கங்களுடன்
நினைவஞ்சலி போஸ்டர்
இறந்து இரண்டே மாதம்தான் ஆகிறது
வயது இருபது இருபத்தைந்து இருக்கலாம்
கொலையாக இருக்கலாம்
நெஞ்சு நிமிர்த்தி
மீசை முறுக்கி
முறைக்குமவனைப் பார்க்க
சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது
பாவி
அவன் கெட்டது போதாதென்று
சிங்கங்களையும்
சிரிப்பாக்கிவிட்டான்
5
எதிரொலிக்கிறது
மெளனத்தை
மனனம் செய்து
ஒப்பித்தபோது
மறந்துபோய்
பேசிவிட்ட வார்த்தை
-மதார்