சிங்கப்பூரின் மூத்த மரபுக் கவிஞர்களில் ஒருவர், தீவிர தூயதமிழ்ப் பற்றாளர், 11 நூல்களின் ஆசிரியர், IceCream என்பதற்குப் பனிக்கூழ் என்ற சொல்லை வழங்கியவருமான பாவலர் பாத்தேறல் இளமாறன் அவர்கள் நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தனது 80-ஆவது வயதில் சென்ற வியாழன் இரவு 27-மார்ச்-2025 அன்று இயற்கை எய்தினார்கள். அன்னாரது இறுதிச் சடங்கு மண்டாய் எரியூட்டு வளாகத்தில் நடைபெற்றது.
மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.க / MIC) கட்சியின் தேசியத் துணைத்தலைவரும், தாப்பா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான டத்தோ மு.சரவணன் அவர்கள், பாத்தேறல் அவர்களின் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகச் சனிக்கிழமை 28 மார்ச் நண்பகல் சிங்கப்பூர் வந்திருந்தார்.
பாசிர் ரிஸ்ஸில் இருக்கும் பாத்தேறல் அவர்கள் இல்லத்துக்குச் சென்று, அவரின் நல்லுடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவர் மகள் கண்ணகி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
கவிமாலை நிறுவனர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன், கவிமாலை முன்னாள் தலைவர் இறை.மதியழகன் ஆகியோர் டத்தோ சரவணன் அவர்களுடன் கூடவே இருந்தனர். சுமார் ஒருமணி நேரம் அங்கு அமர்ந்து பாத்தேறல் ஐயாவைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டார்கள். கவிமாலைக் கவிஞர்கள் கவிஞர் கி.கோவிந்தராசு , கவிஞர் கருணாகரசு, கவிஞர் கோ. இளங்கோ, கவிஞர் பனசை நடராசன் போன்ற பல கவிஞர்களும் இல்லத்துக்குச் சென்று பாவலருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
சிங்கப்பூர் கவிஞர் மறைவுக்கு டத்தோ சரவணன் அவர்கள் நேரில் வருகை புரிந்து ஆறுதல் கூறிச் சென்றது, சிங்கப்பூர் மலேசியத் தமிழ் நல்லுறவுக்கு நல்லுதாரணமாகவும், டத்தோ அவர்கள் நெஞ்சில் தமிழ் மீதும் தமிழ்ப் படைப்பாளர்கள் மீதும் உள்ள உண்மையான மதிப்பையும் அக்கறையையும் உணர்த்தும் விதமாகவும் அமைந்தது.
அவருக்கு ‘பாத்தேறல்’ என்ற பட்டத்தை 1989 ஆம் ஆண்டு வழங்கியவர் ம.இ.க முன்னாள் தேசியத் தலைவரும் சரவணன் அவர்களின் அரசியல் வழிகாட்டியுமான, முன்னாள் மலேசியப் பொதுப் பணித்துறை அமைச்சர் அமரர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்கள் என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தது மேலும் நெகிழ்ச்சியாக அமைந்தது.
மாலை 6:45 மணிக்கு மண்டாய் எரியூட்டு வளாகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு இரா.தினகரன். கொள்கை ஆய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் திரு அருண்.மகிழ்நன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, தமிழ்முரசு இணை ஆசிரியர் கனகலதா, எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் தமிழாசிரியர் திரு முத்துமாணிக்கம், மக்கள் கவிஞர் மன்றத்தின் சார்பாக கவிஞர் இராமசாமி, முனைவர் தேன்மொழி ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள். கவிஞர் புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள் நிகழ்வை வழிநடத்தி இரங்கல் உரையாற்றினார்கள்.
பாவலரின் மகள் கண்ணகி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தி தந்தையும் நினைவுகளை வருத்தத்தோடு பதிவு செய்து, ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி கூறினார்.
தலைப்பிள்ளையான அவர் ஒரு வயதில் இருந்தபோது, தந்தையார் தனக்காக எழுதிய கவிதையை கண்ணீர் மல்கப் பாடினார். அவருடன் ஐயாவின் மகள்கள் தமிழ்க்கோதை, கலைச்செல்வி, மகன் மணிமாறச் செல்வன் ஆகியோர் இணைந்து பாடியது அனைவரையும் நெகிழச்செய்ததோடு ஒரு தந்தைக்குத் தக்க நினைவஞ்சலியாகவும் அமைந்தது.
அதன் பின் சடங்கு நிகழ்வுக்குப் பின்னர் அன்னாரது உடல் எரியூட்டப் பட்டது.
கவிமாலையில் மரபுக் கவிதை எழுதுபவர்களை ஊக்கப்படுத்துவதற்காகத் தனித்தமிழில் எழுதுபவர்களுக்கு மாதந்தோறும் ரொக்கத் தொகையைப் பரிசாக வழங்கியவர். கவிமாலையின் 298ஆவது மார்ச் மாதச் சந்திப்பு 29.03.2025 மாலை 6 மணிக்கு சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. அதில் பாத்தேறலுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாத்தேறல் பற்றி கவிமாலை வெளியீடு செய்த வரலாறும் வரிகளும் குறும்படம் திரையிடப்பட்டது. கவிமாலைக் கவிஞர்கள் பாத்தேறலின் கவிதைகளை வாசித்து அவரது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது அவருக்கான புகழஞ்சலியாக அமைந்தது.
தமிழுக்கான சிந்தனை உழைப்பை வழங்கிய சிங்கப்பூர்ப் பாவலர்கள் வரிசையில் அவருக்கு நீங்கா இடம் உண்டு. பாத்தேறல் அவர்களின் படைப்புகள் அவரது புகழ் வாழ்வை உறுதிசெய்யும். வாழ்க பாத்தேறலின் புகழ்!
.
– கவிஞர் இறை மதியழகன்
30.03.2025.