உயிரற்ற பொருள்களிடம் கருணைகொண்ட கடவுள்
உயிர்ப்பைத் தந்து விரும்பும் வரத்தையும் தருவதாய்
அவ்வவற்றின் விருப்பத்தைக் கேட்டார்
மொத்தக் குரலும்
தம் ஆதியிடம் செல்வதையே அழுத்தமாய் சொல்லின
ஆகட்டும் என ஆண்டவன் அருள
அடுத்த கணம்
மனிதன் அகழ்ந்தெடுத்த உலோகங்கள் அனைத்தும்
பூமியின் ஆழத்துக்குள் சென்று புதைந்தன
வெட்டப்பட்ட கிரைனைட்
உடைக்கப்பட்ட ஜல்லிகள் மலைகளைச் சென்று சேர்ந்தன
அள்ளப்பட்ட எல்லா மணலும் ஆறுகளுக்குத் திரும்பின
மரப்பொருள் மொத்தமும் அடர்வனம் அடைந்தன
ஆடை முதலான துணிமணியெல்லாம்
அவ்வவ ஆரம்பத்துக்கு அணிவகுத்தன
நூலக ஏடுகள் கானகம் புகுந்தன
சிறு நவதான்யங்கள் வயல்வெளி திரும்பி புதைந்தன
நிலக்கரி பெட்ரோல் தாதுக்கள் அனைத்தும்
பூமியுள் புகுந்து பூர்விகம் திரும்பின
மெய்யணிகலன்கள்
மதிப்புக்கூட்டி லாக்கரில் பூட்டிய
உலோக மணிகள் சுரங்கங்களை நிரப்பின
முந்நீரனைத்தும் வானத்துக்கேகின
வறண்டு முழு நிறைவடைந்து
தீக்குழம்பாய் கனன்ற பூமியுருண்டை
சூரியக் குடும்பத்துடன்
பால்வீதி வழியே பல மண்டலங்களோடு
புறப்பட்டுச்சென்று பாழில் கரைந்தது
ஆங்கே பேரமைதிச் சூழ்ந்தது
பின்னும்
சூன்யப் பாழிருள் பெருவெளியிருந்து
படைப்பவன் நகைப்பொலி மெல்ல எழுந்தது.
Leave a comment