”இது காட்டுப்பூனை… காட்டுப்பூனை”
சுற்றுலாவாக வந்திருக்கும் சீனன் கத்துகிறான்
புனுகுப்பூனைகளின் கூட்டத்தினூடே
தனது உடலைப் பயந்து பதுக்குகிறது காட்டுப்பூனை
சந்தனக்கடை முதலாளியின் காலுக்குக்கீழே
கம்பிகளால் வரிசையிட்ட சிறியதோர்
சதுரத்திற்குள் புனுகுப்பூனைகள் வசிக்கின்றன
‘நுகர்ந்து பார்’ எனும் சலுகையோடு
முதலாளி அல்லாப்பிச்சை நீட்டுகிற
அத்தர் மணக்கும் விரலின்
வாஞ்சையைப் புறக்கணித்து
சீனன் இன்னமும் கத்துகிறான்
அல்லாப்பிச்சை மந்திரிப்பார்
நாள்பட்ட வலியோடு வருபவர்களின்
நெற்றியில் அத்தர் கலந்த கருங்களிம்பை
மனதின் மெக்காவிலிருந்து
அவர் அள்ளிப் பூசும்பொழுது
சற்றே வலிமறந்த நோயுற்ற முகத்தின்
மஞ்சள் பற்கள் சிரிக்கின்றன
சீனன் கத்துகிறான்
“காட்டுப்பூனை… காட்டுப்பூனை…”
அல்லாப்பிச்சைக்குத் தெரியும்
பொய்க்கும் ஒரு உடல் உண்டு
கூசுகின்ற மனம் உண்டு .
தனக்குக் கீழே இருக்கும்
பூனைக் கூண்டின் கம்பிவரிசையை
பாதங்களால் மெல்லத் தட்டுகிறார்
இது ரமலான் மாதம்
சொர்க்கத்தின் கதவுகளை
ஏக இறைவன் திறந்தருளும் மாதம்
பரிதவித்து ஒடுங்கிய பூனையின் கண்களை
கால் விரல் நகங்கள்
“பரவாயில்லை, விடு” எனப் பார்க்கின்றன
தன்முன்னே குன்று குன்றாக
வைக்கப்பட்டிருக்கும் சந்தனப் பாளங்களை
அவரது உள்ளங்கை பிசைந்து
சிறுசிறு வில்லைகளாக ஆக்குகின்றது
கடைச்சிறுவன் கோழித்தீவன கம்பு தானியத்தை
மாவாக அரைத்து
மூட்டை கட்டி வருகிறான்
நிறமூட்டிகளும், மணமூட்டிகளும் தெளிக்கப்பட்ட
கம்பு மாவு
மணக்கின்ற சந்தனமாக வெளியே வருகிறது
தூரத்தில் சஹர் வேளைக்கான
பாங்கொலி எழுகிறது
சந்தனமெனப் பெயரிடப்பட்ட
வழிகின்ற நீருடன் இருக்கின்ற
மஞ்சள் பாளத்தை
மலமென ஒருமுறை கண்கள் பார்க்கின்றன
பன்னெடும் ஆண்டுகளாக
கண்கள் உணருகின்ற
அந்த ஒரு கண காட்சிப் பிறழ்வை
இன்றுவரை சரிசெய்யவியலாத
அல்லாப்பிச்சை பெருமூச்சுடன் குனிந்துகொள்கிறார்
வறண்டு இறுகிவிட்ட
தாவரத்தின் வேரைப்போன்ற
அந்த நோன்பிருக்க இயலாதவனின்
பாதத்தை
கம்பிக்கூண்டுக்குள்ளிருந்து
ஒரு ஈர நாவு மென்மையாகத் தடவுகிறது.
– பா. திருச்செந்தாழை