சொல்லால் முகிழ்க்கும் பித்து
உனக்கும் எனக்கும் இடையில்
கண்ணே
எந்தத் தருணத்தில்
எப்படி நிகழும்
அது மார்க்கமில்லாதது அபாதா
அது வரம்பில்லாதது அனந்தகோரா
அது நிறமில்லாதது தயாபரா
யாருடையது இந்த எதிர்க்குரல்
எங்கிருந்து வருகிறது அது
என்னைச் சுற்றி எல்லாம்
ஆவியாகிக்கொண்டிருக்கிறது
என் பகற்கனவுகள்
என் கற்பனைகள்
என்னுள் பிளவுபட்ட ஆளுமைகள்
என் உறவுகள்
என் நட்புகள்
எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன
நான் அவளையே நம்பியிருக்கிறேன்
நான் அவளை நோக்கி எழுப்பும் கேள்விகளுக்கு
நீ இடைமறித்து இறைவனை இழுக்காதே
என் ஒவ்வொரு காலடியையும்
புதை மணல் உள்ளே இழுக்கிறது
என் மன முறிவின் சப்தத்தில்
கொன்றை தன் அத்தனை
மலர்களையும் தரையில் கொட்டிவிட்டது
நீர் ஏந்திய மேகங்கள்
தங்கள் சுழுமுனைத் திறக்காமல்
தன் போக்கில் கடந்து செல்கின்றன
நான் எவ்வளவு தனியாக
இருக்கிறேன் தெரியுமா
அது கனிவதில்லை அகோரா
அது உதிர்வதில்லை ஈஸ்வரா
அது உனை விட்டுப்போவதுமில்லை சர்வேஸ்வரா
இந்த எதிர்க்குரல் என்னை நிம்மதியாக
இருக்க விடப்போவதில்லை
இதை மீறித்தான் நான் அவளோடு பேசவேண்டும்
வைகாசியின் மாம்பூக்களை
கருவண்டுகள் துளைக்கின்றன
இந்த வருட வைகாசியில்
இரண்டு பௌர்ணமிகள்
இரண்டாம் முறை கடலைலைகள் பித்தேறி
மன உயரம் தொட்டு
அந்தரத்தில் நிற்கும் தருணத்தை
நான் நழுவவிடலாகாது
ஆனால் எனக்குத் தெரியும்
சொற்கள் என்னை முதல் முறை
கைவிட்டது போலவே இப்போதும்
குழி பறித்துவிடும்
என்னை ஆட்கொண்டது தாப அமைதி
என்று சொன்னால் யார் நம்புவார்கள்
அவளொரு எலுமிச்சை மரம் போல இருந்தாள்
கனத்த சாறு நிரம்பிய இலைகள்
கவனமாகப் பேணப்பட்ட முட்கள்
தளிரிலைகளில் படந்திருக்கும் மென்சிவப்பு
பழங்களில் மஞ்சளின் பொன் விகாசம்
நான் நழுவவிட்ட தருணத்தில்
நான் சொல்ல நினைத்ததெல்லாம்
மஞ்சள் என் பித்தின் நிறம்
நீயொரு எலுமிச்சை என்பதுதான்
தயங்கித் தயங்கி நின்றிருந்தேன்
சொற்கள் நுனி நாக்கு வரை
வந்து வாயினுள்ளேயே நின்றன
அவள் புருவங்கள் உயர்த்திப்
புன்னகைத்துப் போய்விட்டாள்
அது நிறமில்லாதது தயாபரா
அது உதிர்வதில்லை ஈஸ்வரா
அது கரைந்துவிடுவது காலரூபா
நான் இந்தக் குரலை கவனிக்கப்போவதில்லை
நான் சித்தம் குலைந்தவனில்லை
எனக்குத் தெரியும்
எனக்கு நன்றாகத் தெரியும்
கோடானுகோடி மூலகத் துணுக்குகளால்
ஆனது ஒரு தருணம்
கூடியபின் கலைந்தால் மீண்டும்
அதே போலக் கூடுவது துர்லபம், அபூர்வம்
இல்லை நடக்கவே நடக்காதது
இந்த இரண்டாவது வைகாசி முழு மதியில்
விசாக நட்சத்திரம் கூடவில்லை
இம்மி பிசகாத மறு தருணம்
மீண்டும் வாய்ப்பதில்லை
ஆனால் நான் மூச்சுவிடுவது போல
என்னால் எந்நேரமும் பித்தின்
சொற்களைக் கூட்டமுடியும்
ஆகையால் கைநழுவிப்போவது
என்பதுதான் என்ன
தேன் துளி ஒன்று வீணாகிவிட்டது
என்பது தவிர
அடுத்தத் தருணம் புதிதாய்க்கூடும்
என் எதிர்க்குரல் தாண்டி
கேளிக்கையாளர்கள் தாண்டி
நான் சொல்ல வேண்டியதை
சொல்லிவிடுவேன்
உள்ளங்கையளவு நீரில்
நிலவைத் தாங்கிப் பிடிப்பது போல
அவள் மீண்டும் எலுமிச்சை மரமாய்
இருக்கப் போவதில்லை
அவள் அன்னபட்சியாய் வருவாள்
அப்போது நானொரு வேலையில்
மும்முரமாய் இருப்பேன்
என் இமைகள் நடுங்கும்
தோள்களில் மெலிதான நடுக்கம் வரும்
நான் தலைமுடியை நன்றாகத்
தேங்காய் எண்ணெய் போட்டு வாரியிருப்பேன்
என் எதிர்க்குரல் கூட நானொரு
நல்ல பணியிலிருப்பவன் நாலு காசு
சம்பாதிப்பவன் எனச் சொல்லிவிடும்
கிரணக்கற்றைகளால்
நீர் நிலைகளெல்லாம் கிழிபடும்
யாரும் தங்கள் கைப்பைகளை
வாகனங்களில் மறந்துவிட்டுப் போகமாட்டார்கள்
ஒளியை சுவாசிக்கப் பழகியிருப்பார்கள்
எனக்குள் பலகுரல்கள் கேட்காது
நான் என் முழுக்கை சட்டையை
கால்சராய்க்குள் ஒழுங்காகத் திணித்திருப்பேன்
என் சட்டையின் கைப் பொத்தான்களை
அணிந்திருப்பேன்
பேசும்போது கண்களை உருட்டி உருட்டி
பேசமாட்டேன் எனக்குள்ளாகவே
உள்ளோடியிருக்க மாட்டேன்
என் கையில் அந்தத் தாளை வைத்திருக்க
வேண்டுமா வேண்டாமா என்று தெரியவில்லை
அதைப் பார்க்கமலேயே நான் சொல்லிவிடுவேன்
அது மார்க்கமுடையது அபாதா
அது வரம்புடையது அனந்தகோரா
அது நிறமுடையது தயாபரா
அன்னபட்சி உன் சிறகு
மிக மிக மென்மையானது
அதுவே
சொல்லால்
முகிழ்க்கும் பித்தாகிய
என் தருணம்