1.
கண்டடைய ஏதுமில்லை
தினம் ஒரு ராகத்தை எங்கிருந்து எடுக்கின்றன பறவைகள்
பாடல் மெருகேற மெருகேற
கீழ்வானம் சிவக்கிறது
வெட்கச் சிவப்பினை தின்கின்றன பறவைகள்.
2.
இரவிடம் தான் ஒப்படைத்துவிட்டு
பிரிந்தேன் சுமையை
இந்தப் புலர் பொழுதோ
சுமையோடே விடிகிறது
செல்லும் இடமெங்கும்
சுமை தாளவில்லை
சற்று இளைப்பாறலாம் எனில்
ஏந்திக்கொள்ள யாருமில்லை
தனிமையின் பாடலை
யார் கேட்பர்.
காற்றோ கேட்காமலே
அழைத்து வருகிறது மழையை.
மழையில் கரைக்கின்றன
சுமைகள்.
3.
ஊடலுடன்
உறங்குகிறாள் மகள்
புரண்டு புரண்டு படுக்கிறேன்
உறங்கும் மகளின் முகமோ
பூரண நிலவாய்ப் பொழிகிறது
சலனமற்ற முகத்தைப் பார்த்தபடியே
காலம் நகர்கிறது.
உறக்கத்தில்
நகைக்கிறாள் மகள்
கனவின் ஊடே
தொலைத்துவிட்டாள் போலும்
ஊடலை.
4.
ராஜநடை நடக்கிறது மைனா
விளிம்பு நிலையில் இருந்து
மத்திம சாலை வரை
செல்வதும் திரும்பவுதுமாய் இருக்கிறது
பறத்தலை ஒத்தி வைத்துவிட்டு
நடத்தல்
இன்னொரு பரிமாணம்
எதிலும் இழப்பில்லை
புதிய புதிய திறவுகள்
புதிய புதிய விடியல்கள்.
5.
கதவிடுக்கிலிருந்து
வெளியேறி
அங்குமிங்கும் ஓடிய கரப்பான்
மல்லாந்து கிடக்கிறது.
கரப்பான் கிடக்க
காலம் ஓடுகிறது.
ஓடுதல் மாற மாற
கரப்பானைச் சுமந்தபடி
கூட்டமாய் ஓடுகின்றன
எறும்புகள்.
🐾
6.
நிதர்சனமாக
அம்மாவின் புகைப்படம்
மேலிருந்து கத்துகிறது
வெள்ளைப் பல்லி.
வழக்கமான நாள்
இல்லையென்கிறது
அதன் குரல்
அம்மாவின் கண்களை
காணக் காண
அதில் தான் எத்தனை காருண்யம்
அந்தக் கண்களைப் போல்
இதுவரை சந்தித்ததில்லை
இந்த வெள்ளைப் பல்லியின்
கண்களோ
நிலைக்குத்தி நிற்கிறது
நேற்று
நடுநிசியின் விழிப்பில்
கொசு வலையில்
ஊர்ந்து சென்ற அதே கண்கள்
சட்டென நினைவுகளைக் கழற்றிவிடப் பழகிவிட்டது இக்காலம்.
எப்படி மறந்தேன் நேற்றை
நதிக்கரையில் நின்றபடி
உன் சாம்பலைத் தேடிய பொழுதுகள் எங்கு உள்ளன
உன் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்து விட்டு
வெள்ளைப் பல்லியைத் தேடுகிறேன்.
எங்கேயோ ஒளிந்து கொண்ட
கௌலியின் குரல்
காற்றோடு வருகிறது.
🐾
7.
திண்மப் பொருள்களுக்கும் உயிர்களுக்கும்
என்னவொரு பிணைப்பு.
திண்மப் பொருள்கள் எப்படி இலகுவாய்
உயிருக்குள் கலந்து விடுகின்றன
அப்பாவின் கைக்கடிகாரம்
அம்மாவின் பொட்டு
தமக்கையின் ரிப்பன்
தம்பியின் கையெழுத்து
காதலியின் ஒற்றை ரோசா
நண்பனின் சட்டையென
எப்படி அவைகள்
உயிர்ப்பூத்துக்
கிளம்பி விடுகின்றன.
ஏதோவொரு பயணத்தில்
பேருந்தின்
பெயர்ப்பலகைக்கூட
நெருங்கிய உயிரின்
பிம்பமாய் எழுகிறது.
ஒரு நிமிடம்
நண்பனை என்னிடம் அழைத்து வர
அந்த ஊர்ப்பெயர் மட்டும் போதும்.
சில நேரம்
திண்மப் பொருட்கள்
மௌனத்திற்குள் அழைத்துச் சென்று விடுகின்றன.
மகள்
தூரத்திலிருந்து
ஏதோ சைகை செய்கிறாள்
அவள்
ஒரு பக்கக் காதின் சாதனமோ
என்னை முறைக்கிறது.
🐾
8.
கைக்குழந்தையோடு பிச்சை யாசிக்கும்
சிறுமி வாகன நெரிசலுக்கிடையே
நுழைந்து நுழைந்து மீள்கிறாள்.
சிக்னல் சிவப்பில்
ஒளிர்ந்ததும்
உள் நுழைகிறாள்
சிக்னல் பச்சையில்
ஒளிர்ந்ததும்
வெளியேறுகிறாள்
இரு வண்ணங்களுக்கிடையே சில சில்லறைகளைப் பெறுகிறாள்.
இடையே
சில முகங்கள் கைக்குழந்தையைப் பார்க்கின்றன
சில முகங்கள்
இவளைப் பார்க்கின்றன
சில பார்வைகளின் உக்கிரம் தாள முடியாது
அவளோ
சூரியனைப் பார்க்கிறாள்.
சூரியனும் முழுவீச்சில்
அவளைப் பார்க்கிறான்
அவள் விழிகளில்
சிவப்பும் பச்சையும்
மாறி மாறி விழுந்தபடியே இருக்கின்றன.
திடீரென
அவள் உடலும்
சிவப்புக்கான சிக்னல் தந்துவிட்டது.
சற்றே உணர்ந்தவள்
நெரிசலை விட்டு வெளியேற வழியின்றி பூமியை ஓங்கி உதைக்கிறாள்.
🐾
9.
உடல் ஒட்டினார் போல்
இரண்டு பனை மரங்கள்
நிற்பது அபூர்வம்.
சிறுவயதில்
பனை அருகில்
முனி இருப்பதாக உலவிய கதையை நம்பியதுண்டு.
பருவ வயதில் பழகிவிட்டது
பனையோடு தான் எங்கள் விளையாட்டு
கொழுத்தும் வெயிலில்
பனையடியில் தான் நிழலுக்காய் ஒதுங்குவோம்
காதலுக்குள் விழுந்த
மாரி அக்காவை
வெளியூர்க்காரனுடன் அங்குதான் கண்டிருக்கிறோம்.
பின்னர் அவனோடு சென்று விட்டதாய்
ஊர்க்கதை உண்டு
நாலு கழுதை வயதானபின் வெளியூர் வேலைக்குச் சென்று விட்டு
திரும்பிய ஒர் நாள்
மாலைக் கருக்கலில்
மாரி அக்காவைத்
தலைவிரிக் கோலமாய் பனை அருகில் கண்டேன்.
அவள்
முனிபோல் இருந்தாள்.
🐾
10.
மியாவ்..மியாவ்…
எனக் கத்திவிட்டு
பூனையாகிவிட்டேன்
என்கிறாள் மகள்
அவள் தோழியோ
கீ ..கீ…என்கிறாள்
அவளும் கிளியாகிவிட்டாள்
பவுடரை முகமெல்லாம்
அப்பிவிட்டு பேயாகிவிட்டேன்
என்கிறாள் ஒருத்தி
காணாத பேயைக்கண்டு
நானும் கிலி கொள்கிறேன்.
பதட்டம் தனிவதற்குள்
சிங்கத்தின் கர்ஜனை
யானையின் அம்பாரி
வண்ண மர எழுச்சியென
அதகளமாகிறது வீடு
இடையே
கிளியாய் ,பூனையாய் மாற நானும் விழைகிறேன்
குரலோ
என் சொல் கேள மறுக்கிறது
அயர்வில்
விலங்குகளோடு விலங்காய் கண் மூட
சப்தத்தை
விழுங்கிய வீட்டினுள்
கானகத்தின் அமைதி
- குமரேசன் கிருஷ்ணன்