சோளக்காடுகளுக்கு
குருவிகள் வரத் தொடங்கிவிட்டன.
விளைச்சலில்
நமது பங்கை எடுக்க வேண்டுமென்று
ஊரே
பொம்மைகள் செய்யத் தொடங்கியது
எல்லாம் ஆண் பொம்மைகள்
கண்கள் பெரிதாக, முறுக்கிய மீசையுடன்
தொப்பிப் போட்ட பொம்மைகள்.
காலங்காலமாக கதிர்களுக்கு நடுவே
ஆண் பொம்மைகள் நிற்பதைப்
பார்த்துப் பழகிய குருவிகள்
அஞ்சி அஞ்சி தானியங்களைத் தீண்டுவதையும்
வானில் வட்டமிட்டமிடுவதையும்
நான் விரும்பவில்லை.
நான் மட்டும் பெண் பொம்மை செய்தேன்.
சாயம் போகாத சிவப்புச் சேலை ;
நீலப்பூ பூத்த வெள்ளை ரவிக்கை ;
தொடைவரை சவுரி முடி !
கொத்தாக வைத்த ஆவாரம்பூ;
பாலாடையில் கோலியை வைத்து
சுண்ணாம்பால் பாவை பூசிய கண்கள்;
கள்ளிப்பழத்தால் நிறம் கூட்டிய வாய்;
மற்ற காடுகளில் நிற்கும்
முழுக்கைச் சட்டைப் போட்ட
ஆண் பொம்மைகள் எல்லாம்
ஆசையாய் வெறிக்குமளவுக்கு
மூக்கும் முழுயுமான
அழகான காட்டுச் சிறுக்கியாய் செய்தேன்.
குருவிகள் நெருங்கி வந்தன
கதிர்களில் அமர்ந்து ஆடின
தானியங்களைக் கொத்தின
ஒருநாள்
இளம் வெயில் பொழுதொன்றில்
அழகான காட்சி கண்டேன்
பறந்து பறந்து பறந்து
பொம்மையின் மூக்கில் தானியம் வைத்தது
ஒரு குருவி
மஞ்சள் வண்ண சோளம் ஒன்று
மூக்கில் ஏறியதும்
உயிர் கொண்ட பெண்ணாய்
ஒளிர்ந்தது பொம்மை.
சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
அன்று இரவு நான் காட்டில் தங்கினேன்.
அந்தப் பொம்மையைத் தழுவினேன்;
அணைத்தேன்; காமுற்றேன்.
மறுநாள் காலையில் கண்டேன்
காட்டில் அமைந்த பரணில்
சங்குப் பூக்கள் உதிர்ந்திருந்தன.
Leave a comment