மரபைக் கவிஞர்கள் கழட்டிவிட்டதன் காரணம். வெறும் மோஸ்தர் என்று பலரும் கருதுகிறார்கள். அன்று மட்டுமல்ல இன்றுமேகூட புதுக்கவிதையினர் மரபின் செய்யுள் தளைகளை அறுத்துக் நவீன கவிதை கண்டது மரபின் மீது கொண்ட வெறுப்பாலும் மரபு அறியாமையாலும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. மாறிவந்த காலச் சூழலும் அது மானுட மனங்களில் உருவாக்கிய சிந்தனைகளுமே மரபை நீக்கு புதுக் கவிதை காண ஊக்கமான சூழலை உருவாக்கியது.
குறிப்பாக, உலகம் முழுதுமே ஃப்ரீ வெர்ஸ் எனப்படும் தளையற்ற கவிதைகளின் காலம் அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பிறகே உருவானது. தொழிற்புரட்சி நகரமைய சூழலையும் முதளாளித்துவ உற்பத்தி முறைகளையும் உருவாக்கிய போது, கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கினார்கள். எத்தனை பேர் வந்தாலும் போதாது என்பதே நகரங்களின் இருந்த ஆலைகளின் பகாசுரப் பசியாய் இருந்தது.
ஏற்கெனவே, மனித மையவாதம் என்ற நவீன சிந்தனை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்தியல்களை மனிதர்களிடையே உருவாக்கி ஜனநாயக சமூகத்துக்கான விழுமியங்களை உருவாக்கியிருந்தது. நகரங்களில் குழுமும் மக்களின் பொழுதுபோக்காக கலைகள் இருந்தன. அச்சு இதழ்கள் உருவாகின. சிறுகதைகள், நாவல்கள் போன்ற புதிய உரைநடை வடிவங்கள் எளிய மக்களுக்கான கலைகளாக, ஜனநாயகப்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாகவே கவிதையும் ஜனநாயகத்தை அடைந்தது. ஃப்ரீ வெர்ஸ் உருவானது. இதழ்களில் கவிதைகள் அச்சாகின. பண்டிதர்களிடம் மட்டுமே இருந்த கவிதை மக்களிடம் இறங்கி நடக்கத் தொடங்கியது. புதிய காலத்துக்கான புதிய அழகியல்கள், புதிய உள்ளடக்கங்கள் உருவாகின.
புதுக் கவிதைகளில் கவித்துவம் என்பது, சந்தங்கள் அல்லது யாப்பு என்பதிடமிருந்து நீக்கப்பட்டு கவிஞனின் கைகளில் முழுமையாய் தரப்பட்டது. ரொமாண்டிசிசம் போன்ற கட்டற்ற உணர்வெழுச்சியைக் கவிதை என்று நம்பும் சிந்தனைகளால் ஆன அக்காலங்களில் கவிஞனுக்கு இந்த அபரிமிதமான சுதந்திரம் மிகப் பெரிய திறப்பாய் இருந்தது. முன்பு எப்போதும் எழுதப்படாத உணர்வெழுச்சியான கவிதைகளை எழுத முடிந்தது.
உரைநடைக்கும் (மரபு) கவிதைக்கும் இருக்கும் மிக முக்கியமான வித்தியாசம். வாசிப்பு அமைதி. உரைநடையை உரக்கப் படிக்கவும் முடியும். மெளனமாகவும் வாசிக்க முடியும். அந்நாட்களில் கவிதையோ உரக்கப் படிக்க வேண்டியது. இதற்குக் காரணம் பாடல் என்ற கலை வடிவத்தோடு கவிதைக்கு நெருக்கமான தொடர்பிருந்ததுதான். பாடல் என்பது மெளன வாசிப்புக்கு உரியது அல்ல. அது வாய்விட்டுப் படிக்க வேண்டியது. இசையோடு பாட வேண்டியது. மரபுக் கவிதையில் இருந்த இசைமையால் அதனையும் பாடிப் பாடியே படித்தனர் அதன் வாசகர்கள். அதனால் அவை செவி நுகர் கனிகளாய் இருந்தன. அதன் யாப்பில் இயங்கும் இசைமை சொற்களின் அபோதத்துடன் சேரும்போது உருவாவதே கவித்துவம் எனப்பட்டது.
ஆனால், நவீன கவிதைகள் கவிதையின் இயங்கு முறையை முற்றாக மாற்றியமைத்தன. அவை வாய்விட்டுப் படிக்கும்தோறும் புரியவியலாத நிலையையும், மெளனமாகப் படித்தபின் அசைபோட்டால் புதிய உணர்வுகளைக் கிளர்த்துவதையும் மையமாகக் கொண்டு இயங்கின. இது கவிதையை கேட்பதைவிடவும் பார்ப்பது வாசிப்பது என்ற செயல்பாட்டைக் கோரியது. யாப்பை உதறிவிட்டு புதுக்கவிதை எழுந்தபோது அது உரைநடையின் இந்த மெளன வாசிப்பு என்ற பண்பையும் சேர்த்துக்கொண்டே உருவானது. இசைமை மூலம் உருவாகும் செவியின்பம் தரும் கவித்துவத்தை இழந்த மரபார்ந்த வாசகர்கள் நவீன கவிதையை சாத்தான் என்றனர்.
கவிதை அதன் எல்லா அலங்காரங்களையும் கலைந்த பின் அதன் சொற்கள் உருவாக்கும் ஆதாரமான உணர்வெழுச்சியையும் அபோதத்தையுமே குறைந்தபட்ச அழகியலாகக் கொண்டவை நவீன கவிதைகள். இதனை பழங்கவிதை வாசகர்களால் இனங்காண இயலவில்லை.
தமிழில் மெளனி, புதுமைப்பித்தன், கல்கி போன்ற படைப்பாளிகளேகூட புதுக்கவிதையை தொடக்க காலத்தில் ஏற்கவில்லை. கோவேறு கழுதை, வெஜிடபிள் பிரியாணி என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள். பிச்சமூர்த்தி போன்றவர்களுக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது. எனவே, கவிதை என்று எதையோ கிறுக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். பிச்சமூர்த்தி பின்னாட்களில் மரபுக் கவிதையைக் கற்றுக்கொண்டார். க.நா.சு கடைசி வரை பிடிவாதமாகக் கற்றுக்கொள்ளவேயில்லை. அது இனி தேவையில்லை என்று கருதினார். தமிழ் நவீன கவிதை அல்லது புதுக்கவிதையின் முதல் தலைமுறையில் முக்கியமானவர்கள் இவ்விருவரை மட்டுமே நாம் சொல்ல முடியும்.
இன்னமும் பனிரெண்டு ஆண்டுகளில் தமிழ் புதுக் கவிதை இயக்கம் நூற்றாண்டு காணப்போகும் நிலையில் நமது புதுக்கவிதை உருவாக்கிய அழகியல்கள் பற்றி பொருட்படுத்தும்படியாய் மிகச் சில கட்டுரைகள்கூட இல்லை என்பதுதான் நம் காலத்தின் மிகப் பெரிய துயரம். இந்தப் பயணம் அதில் ஒரு சிறிய காலடி.
(தொடரும்)