மக்காச்சோளம் ஒடிப்பதை
நிறுத்திவிட்டு
காடைகள் ஓடி மறைவதைப்
பார்த்துக்கொண்டிருந்தாள்,
பால் கள்ளிக்குள் பதுங்கியவை
வெளியேறவில்லை.
சோளத் தோகைகள்
உடம்பை உரசும் ஒலி குறைத்து
மெதுவாய்
ஒரு காட்டுப்பூனையைப்போல்
காடைகள் பதுங்கிய வேலியை
நெருங்கினாள்.
“புகுபுகு புகுபுகு” என்றொரு குரல்.
கருஞ்சிவப்பு உதடுகளைக் குவித்து
பறவைகள் அஞ்சிடாத விசில் கொடுத்து
அவனை அழைத்தாள்.
ஒரு கைத்தடியைத் தூக்கிக்கொண்டு
மெல்ல
இன்னொரு பூனையைப்போல்
சோளத்தட்டைக்குள் நகர்ந்தான்
அவனுடைய உருமா கட்டையும்
பதுங்கி வந்த தோரணையையும்
கண்டவள்
தன் எள்ளுப்பூ மூக்கைச் சுருக்கி
சிணுங்கலாய்
ஒரு கவிச்சை வார்த்தையைச் சொன்னாள்.
காது வழியே
ஒரு கேலி மொழி போவதுபோல்
உணர்ந்தவன்
தலை தூக்கிக் கண்ணடித்தான்.
வாய்க்கு வெளியே சொல் வராதவாறு
“கட்டை எதற்கு” என்றாள்.
அவனும் அதுபோலவே
“காடை அடிக்கத்தான்”என்றான்.
கண்களை ஆந்தையைப்போல் சுழட்டியவள்
“மொவறக்கட்டை” என்றுவிட்டு
அதைப் போட்டுவிட்டு
அருகே வாவென்று அழைத்தாள்.
“சிறுக்கி மகளுக்கு
கிறுக்கு முத்திடுச்சி” என்று
வாய் நிறைய பொங்கிய சிரிப்போடு
மிசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்தான்.
“அட வாய்யா ” என்பது போல்
கிறங்கடிப்பதுபோல் பார்த்தவள்,
நெருங்கிச் சென்று முகர்ந்தவனை
நெஞ்சில் கை வைத்து
நெட்டினாள்.
பலமற்று விழுபவனைப்போல் விழுந்து
விழுந்த வேகத்தில் நிலத்தைக்
கூளம் நீக்கி சுத்தம் செய்தான்
அப்படியே அவன் முன்னால்
முழங்காலிட்டு அமர்ந்து
முந்தானையை கழுத்தில் போட்டு இழுத்து
நெற்றியோடு நெற்றிப் பதித்தவள்
இந்தக் கள்ளிப்புதருக்குள்
ஒரு கூடல் நடக்கிறது
கூடும் குரல் மட்டுமே கேட்கிறது
“புகுபுகு புகுபுகு”என்று
கொஞ்சம் நேரம் கூவ வேண்டும்போல் இருக்கிறது என்றாள்
சோளத்தட்டைகள் மெல்ல அசைந்தன
பிறகு
ஒடிந்துச் சாய்ந்தன.