அமெரிக்கக் குடியிருப்பொன்றின்
ஆளரவமற்ற தெரு
மௌனத்தை மென்று
உமிழ்ந்து துப்பிய
எச்சில் தெறிப்பில்
எப்போதும் சாத்தியே கிடக்கும்
எதிரெதிர் வீட்டுக் கதவுகள்.
சாளரத் திரைகளைத்
திறக்க முயன்று தோற்று
முகம் சிவந்த சூரியன்
மேற்கே நகரும் சந்தடியற்ற
அந்திப் பொழுதொன்றில்
மனித சஞ்சாரம்
குறித்த சந்தேகத்துடன்
மனம் எட்டியெட்டிப்
பார்த்துக் கொண்டிருக்கையில்
வாலை ஆட்டிக் கொண்டு
வந்த நம்பிக்கை
செல்லக் குலைப்புடன்
நகர்ந்து போனது
உடன் வந்த
மனிதன் போன்ற
ஒன்றுடன்.
– ராஜி வாஞ்சி
டெக்சாஸ், அமெரிக்கா.


