1.
மொழிபுரியாத நகரின் விடுதியில்
சிறு காய்ச்சலோடு தனித்திருக்கிறேன்.
தலையணைகள், ஜன்னலோர புறாக்கள் தவிர
யாருமற்ற சிறு அறை.
கதகதப்பு தேடும்
மாத்திரைகளில் தேறாத
தனித்திருக்கும் உடல்
இளஞ்சூடுட்டு பாதங்களை
மெல்ல பிடித்துவிட்டபடி
வாஞ்சையோடு இருப்பதான உன்முகம்
நிழலாடுகிறது.
நீயோ இரண்டாயிரம் கிலோமீட்டர்
தொலைவில் இருக்கிறாய்.
சரி, எப்போதும் போல
அங்கிருந்தபடியே கைகளை நீட்டு,
ஒரு பறக்கும் முத்தத்தை போல
நானதை ஏந்திக் கொள்கிறேன்.
இன்றாவது வரட்டும்
உன் வருகையை அறிவித்தபடி வீழும்
வால்நட்சத்திர இரவு.
2
தான் விரும்பும் ஒருத்தியை
யமுனா என்று அழைக்கும்
நண்பனொருவனை எனக்குத் தெரியும்
அவன் தன் காதலை சொன்னதே
“நீ யமுனாவாக இருந்தால்
நான் பாபுவாக இருப்பேன்” என்றுதான்
போதும் பாபு,
நிராகரிகப்பட்ட காதலோடு
படித்து பண்டிதனாகி
பாடல் கற்று
பணம் சம்பாதித்து
குடும்பம் சகிதமாக
நீ சௌக்கியமாக இருக்கிறாய்.
சாதி வறுமை பருவம்
சுட்டெரிக்கும் காமமென
நீ வந்து காப்பாற்றும் வரை
யமுனாக்கள் மட்டும் துன்பத்தில் உழல வேண்டுமா?
யமுனாக்கள் என்றோ தெளிந்து விட்டார்கள்.
முட்டையிலிருந்து வெளியேறிய மறுகணமே
கடலுக்குள் கலந்துவிடும் ஆமைகளாகி விட்டார்கள்.
டாலர்களில் சம்பாதித்து
solo date, solo trip என
உலகையே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
போதும் பாபு,
சோர்வாய் இருக்கிறது
ஒரு சிகரெட் கிடைக்குமா?
– தீபிகா நடராஜன்
படங்கள்: AI


