முன்னுரை
“கவிதை அதன் எல்லா அலங்காரங்களையும் கலைந்த பின் அதன் சொற்கள் உருவாக்கும் ஆதாரமான உணர்வெழுச்சியையும் அபோதத்தையுமே குறைந்தபட்ச அழகியலாகக் கொண்டவை நவீனக் கவிதைகள்” என்று கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். சிங்கப்பூரில் எழுதப்படும் நவீனக் கவிதைகள் மேற்சொன்ன குறைந்தபட்ச அழகியலைக் கொண்டுள்ளனவா என்ற கேள்வியோடு கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள நவீனக் கவிதைகளின் போக்கையும் அவற்றின் மீதான விமர்சனங்களையும் இக்கட்டுரை முன்வைக்கிறது.
புதுக் கவிதை வரலாறு (1979 முதல் 2015 வரை)
“1979 முதல் 1999 வரை வெளியாகிய புதுக்கவிதைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை எட்டு. இதில் ஐந்து நூல்கள் 1990லும் அதன் பிறகும் வெளியானவை” என்று முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். க.இளங்கோவன், க.து.மு.இக்பால், ஞானப்பிரகாசம் மொனிக்கா, பிச்சினிக்காடு இளங்கோ, ரவி, சுகுமாறன், அமீரூத்தின், v.s.தாஜூதீன், முகமுது அலி, ராஜசேகர், அழகிய பாண்டியன் ஆகியோர் இக்காலத்தைய புதுக்கவிஞர்கள். இருபது வருடத்தில் எட்டு நூல்கள் என்ற குறைவான எண்ணிக்கைக்குச் சிற்றிதழ்கள் இல்லாத சூழல், மரபுக்கவிஞர்களிடமிருந்து வந்த எதிர்ப்பு, புதுக்கவிதை மீது ஒவ்வாமை கொண்ட வாசகர்கள் எனப் பல காரணிகளைச் சுட்டலாம்.
இரண்டாயிரத்திற்குப் பிறகு புதிய குடியேறிகளின் வருகையால் புதுக்கவிதையின் போக்கில் பெரும் மாற்றமும் வளர்ச்சியும் நிகழ்ந்தன. லதா, நெப்போலியன், பாலு மணிமாறன், எம்.கே.குமார், பிச்சினிக்காடு இளங்கோ, விசயபாரதி, கருணாகரசு, ரமேஷ் சுப்பிரமணியன், சத்தியமூர்த்தி, ரஜித், கி.கோவிந்தாசு, இராம வயிரவன், ஜமீலா, நா,ஆண்டியப்பன், அன்பழகன், சுப்ரா, தமிழ்ச்செல்வம், இனியதாசன், சித.அருணாசலம், மலர்விழி இளங்கோவன், நூர்ஜஹான் சுலைமான், அகிலமணி ஶ்ரீ வித்யா, மாதங்கி, எம் சேகர், சுபாஷிணி கலைக்கண்ணன், டி.என்.இமாஜான், தவமணி, தியாக ரமேஷ், சக்திகண்ணன் போன்றோர் 2000 முதல் 2015 ஆம் ஆண்டு வரை தங்களது கவிதை நூல்களை வெளியிட்டவர்கள்.
1979ஆம் ஆண்டு ‘விழிச்சன்னல்களின் பின்னாலிருந்து’ என்ற கவிதை நூலை வெளியிட்ட க.இளங்கோவன் புதுக்கவிதையின் முன்னோடி எனக் கருதப்படுகிறார். புதுக்கவிதை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மற்றொருவர் க.து.மு.இக்பால். தமிழகத்தில் மகாகவி பாரதி ஊன்றிய நவீனக் கவிதை எனும் விதை எழுத்து மரபு, வானம்பாடி மரபு என்ற இரண்டு கிளைகளோடு விருட்சமானது. வாசகனே கவிதையின் உட்பொருளைத் தன் கற்பனையில் உணர்ந்துகொள்ள இடம்விட்ட எழுத்து மரபின் கிளையாக க.இளங்கோவனையும் எளிமையான நேரடியான மொழிநடையில் பூடகங்களோ உட்குறிப்புகளோ இல்லாமல் கவிதையை முன்வைத்த வானம்பாடி மரபின் கிளையாக க.து.மு இக்பாலையும் கருத இடமுள்ளது.
இதன் அடிப்படையில் எனது வாசிப்பில் க.இளங்கோவனின் தொடர்ச்சியாக நவீன மொழியைக் கையாண்டதில் லதா, ரமேஷ் சுப்பிரமணியன், எம்.கே.குமார், மாதங்கி, பாலு மணிமாறன் ஆகியோரை நவீனக்கவிஞர்கள் என்றும் க.து.மு.இக்பாலின் தொடர்ச்சியாக நேரடி மொழியில் எழுதியதில் நெப்போலியன், பிச்சினிக்காடு இளங்கோ, விசயபாரதி, கருணாகரசு, சத்தியமூர்த்தி, ரஜித், கி.கோவிந்தாசு, எம்.சேகர் மற்றும் பிற கவிமாலைக் கவிஞர்களைப் புதுக்கவிஞர்கள் என்றும் சொல்லலாம்.
நவீனக் கவிதைகள் (2015 முதல் 2025 வரை)
இந்தக் கட்டுரைக்கான சொல் எண்ணிக்கை வரையறையைக் கருத்தில் கொண்டு கவிதையின் பாடுபொருளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கடந்த பத்து வருடங்களில் எழுத்து மரபை ஒட்டி அதிகக் கவிஞர்கள் நவீனக் கவிதைகளை எழுதத் தொடங்கியிருப்பதும் நூல்களை வெளியிட்டிருப்பதும் நவீனக் கவிதைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைப் பலப்படுத்தியுள்ளது.
தற்காலக் கவிதைகளை அழகியல் நோக்கில் அணுகினால், ‘தாய்ப்பூரான் கடித்ததால் உருவான தடிப்புகளை அன்று அப்பாவின் கால்களில் திண்டு திண்டாய்ச் சிவந்த இதழ்களோடு அம்மாதான் பூத்திருந்தாள்’ என்ற சுபா செந்தில்குமாரின் வரியும், ‘காதலியின் பாதங்களின் தரை தொடாத பள்ளம் ஆதி இதயமிருந்த வெற்றிடம்’ என்ற யாழிசை மணிவண்ணனின் வரியும், ‘14 ஆவது மாடிக் குடியிருப்பென்பது பறந்து செல்லும் பறவைகளின் பேச்சை ஒருமுறையாவது ஒட்டுக் கேட்கும் வாய்ப்பு’ என்ற பாலு மணிமாறனின் வரியும் வாசகனின் மனத்தை விட்டு ஒருபோதும் அகலாத அழகியல் சித்திரிப்புகளாக நிலைபெறுகின்றன.
‘சேறு படிந்த மழை ஈரப் பிசுபிசுப்பில் நிலத்தைத் தோண்டினால் என் கம்பத்து வீட்டின் கூரைகள் கிடைக்கக்கூடும்’ என்ற சித்ரா ரமேஷின் கவிதை வரி போலச் சிங்கப்பூரின் வரலாறு, நிலப்பரப்பு குறித்த பதிவுகள் லதா, இன்பா ஆகியோரின் கவிதைகளிலும் இடம்பெற்றுள்ளன.
ஒரு பரபரப்பான வேலை நாளின் மிருகத்தனமான காலை நேரத்தில் ஊளையிடும் காமத்தைச் செந்நாய் என்கிறது சித்துராஜின் கவிதை. கணவனுடன் கூடுவதற்காகவே சிங்கப்பூர் வந்து திரும்புபவளின் துயரைப் பேசி ‘தன்னிலிருந்து தன்னைத்தானே பிடுங்கி எறிந்து கொள்கின்றன இரண்டு உடல்கள்’ என்று முடிகிறது மதிக்குமாரின் கவிதை. காமத்தைப் பேசுபொருளாகக் கொண்டிருந்தாலும் இந்த இரண்டு கவிதைகளும் சிங்கப்பூர் வாழ்வின் இரு வேறு முகங்களை மிகத்துல்லியமாகக் காட்சிப்படுத்துகின்றன.
தற்போது சிங்கையில் ஆண்களை விடப் பெண்கள் அதிகளவில் எழுதுவதால் கவிதையில் அவர்கள் எதைப் பேச விழைகிறார்களென்று பார்க்க முற்படுகையில் தாய்க்கும் மகளுக்குமான உறவை மூன்று பெண் கவிஞர்கள் சித்திரிக்கும் விதம் சுவாரஸ்யமானதாக இருந்தது. ‘யாவுமானவள்’ என்ற மோகனப்ரியாவின் கவிதையும் ‘இதுவரை சொன்னதே இல்லை’ என்ற சுபா செந்தில்குமாரின் கவிதையும் முறையே பூரிப்பு அடையும் தாயையும் இயலாமையை வெளிப்படுத்தும் தாயையும் காட்சிப்படுத்துகையில் இந்த வழமைகளுக்கு மாறாக ‘என் மகளிடம் என் சாயல் இல்லையென்பதே ஆசுவாசமாக இருக்கிறது’ என்று தொடங்கி ‘என்னிலிருந்து நெடுந்தூரம் சென்றவளின் பாதச்சுவடுகளில் நானில்லை என்பதே வாழ்வு’ என்று முடியும் கங்கா பாஸ்கரனின் கவிதை காட்டும் நவீனத் தாய் நமக்குப் புதியவள்.
‘மொட்டைத் தலை எமோஜிகள் பாவனையாய் சிரிக்கின்றன’ என்று முடியும் இன்பாவின் கவிதையும் ‘நீலநிற இருகோடுகளைவிட நிறமில்லா இருகோடுகள் சுதந்திரமாக உலவுகின்றன வாட்ஸ் ஆப் உலகில்’ என்று முடியும் கங்கா பாஸ்கரனின் கவிதையும் தற்கால வாழ்வின் அம்சங்களைப் பேசுவதன் மூலம் முக்கியத்துவம் அடைகின்றன. நவீனக் கவிதையின் வலுவான உத்தியாகக் கருதப்படும் தொன்மங்களை லதா, சித்துராஜ் பொன்ராஜ், இன்பா ஆகியோரின் கவிதைகளில் காணமுடிகிறது.
முந்தைய காலகட்டத்து (2000 முதல் 2015 வரை) நவீனக் கவிஞர்கள் எழுதிய காதல், காமம், தினசரிகள், பெருநகர் வாழ்வு அளிக்கும் தனிமை, இருப்பு குறித்தான கேள்விகள், அன்னியமாதலின் துக்கம், இயற்கை, பெண்ணாக இருப்பதன் சுகம் துயரம், சுய அனுபவம், குடும்பம், உறவு, நட்பு, ஊரைக் குறித்த ஏக்கம், அடையாளச் சிக்கல் போன்ற பாடுபொருட்களில்தான் பெரும்பான்மையான தற்காலக் கவிதைகள் எழுதப்பட்டிருந்தாலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. தொழில் சார்ந்த கவிதைகளைக் கொண்ட ஷாநவாஸின் ‘சுவை பொருட்டன்று’, குழந்தைக் கவிதைகளைக் கொண்ட நீதிப்பாண்டியின் ‘அவநிதாவின் சொல்’, இனவரைவியல் கவிதைகளைக் கொண்ட வெற்றிச்செல்வனின் ‘கீதாரியின் உப்புக்கண்டம்’, சிங்கப்பூரியன் கவிதைகளைக் கொண்ட தி.துரைராஜூவின் ‘கலாசார மரபணுக்கள்’ ஆகிய தொகுப்புகள் மிக முக்கியதான வரவுகளாகும்.
விமர்சன நோக்கில் நவீனக் கவிதைகள்
இந்தப் பத்து வருடக் கவிதைகளின் முதன்மையான பேசுபொருள் அக உணர்வுகளாகத்தான் உள்ளது. நவீனக் கவிதை அடிப்படையில் தனி மனிதனின் அகத்தைப் பிரதானப்படுத்தக்கூடியது என்றாலும் கூட இவற்றில் பலவற்றைச் சமூகக் கவிதைகளாக நீட்சியடையச் செய்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நவீனக் கவிதைகள் பாரமற்று இலகுவாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் சில கவிதைத் தொகுப்புகளிலோ சொற்களும், சொற்சேர்க்கைகளுமே வாசிப்பதற்கு ஆயாசத்தை ஏற்படுத்துகின்றன. தனது அனுபவத்திற்கு உட்படாத பேசுபொருளையும் போலியான உணர்வையும் ஆழ் மன உந்துதலற்று ‘செய்யப்படும்’ கவிதைகள் எந்தவித உணர்வெழுச்சியையும் அளிக்காமல் தட்டையாகித் தோற்கின்றன.
சிங்கப்பூர்ச் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் வாசித்து அவற்றைக் கவிதையாக எழுதிப் பார்க்கும் தன்மையைக் காணமுடிகிறது. இது புதுச் சிந்தனை மற்றும் கற்பனையின் தேக்க நிலையைக் காட்டுகிறது. தமிழ்நாட்டுக் கவிஞர்களை வாசித்து அவர்களது பாணியில் கவிதைகள் எழுதுவதில் தவறில்லை. கவிதைப் பாணிக்குப் பதிலாக அவர்களது கற்பனையையும் ‘டிரேட் மார்க்’ சொற்களையும் கவிதைக்குள் கொண்டு வருவது கவிதைகளைக் கீழிறக்குகிறது. படிமங்களையும், குறியீடுகளையும் கைவிட்டதால் நுட்பமான அழகியலோடு சுருங்கச் சொல்லிவிடக்கூடிய கவிதைகளைக் கூட நீட்டி முழக்கி இரண்டு பக்கங்களுக்கு நீள் கவிதைகளாக எழுதுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. கவிதை முடிந்த பிறகும் கவிஞர் பேசிக்கொண்டிருப்பது பல கவிதைகளில் நிகழ்ந்துள்ளது.
வாசகனைச் சாதாரணத் தளத்திலிருந்து வேறொரு தளத்துக்கு மேலெழும்பச் செய்து ஆன்மீக வாசிப்பனுபவம் அளிக்கும் கவிதைகள் அரிதாகவே கிடைக்கின்றன.
நவீனக் கவிதைக்குள் விமர்சனக் குரல் மிக அவசியம். அது சுய விமர்சனமாகவோ அல்லது சமூக விமர்சனமாகவோ வெளிப்படலாம், லதாவின் ‘குடி உரிமை’ என்ற கவிதை ‘எல்லா உரிமைகளும் உறுதியளிக்கப்பட்டுள்ள பட்சத்தில் என் மொழியில் பாட மறுக்கும் எனது உரிமையைப் பிச்சை கேட்டுப் பெற ஒருபோதும் நான் தயாராய் இல்லை என்பதை மட்டும் அவர்கள் உணரட்டும்’ என முடிகிறது. இது எழுதப்பட்டு இருபத்திரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இத்தனை தீவிரத்துடன் சமூகப் பிரக்ஞை கொண்ட ஒரு குரல் இப்போதுள்ள கவிதைகளில் ஒலிக்காமல் போனது பெரும் இழப்பு.
காமத்தைப் பேசுபொருளாக எடுத்துக் கொள்கையில் பெண்ணைப் போகப் பொருளாகப் பார்க்கும் மனநிலை மாறவேண்டி உள்ளது. “நவீனத் தமிழ்க்கவிதைக்குத் தேவைப்படுவது செக்ஸுவாலிட்டியின் அழகியல் (Aesthetics of Sexuality), வெறும் செக்ஸுவாலிட்டி அல்ல. அதாவது செக்ஸுவாலிட்டி கவிதையாக உயர்த்தப்பட வேண்டும் என்பதே முக்கியம்” என்று கவிஞர் பிரம்மராஜன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இறுக்கமான மனநிலையிலிருந்து வெளியேறிச் சுய பகடி, எள்ளல், அங்கதம் ஆகிய கூறுகளோடு கவிதை படைப்பது பற்றிக் கவிஞர்கள் சற்று யோசிக்கலாம்.
முடிவுரை
சிங்கையின் இந்தப் பத்தாண்டுகளில் நவீனக் கவிதைச் சூழலில் நிகழ்ந்துள்ள முயற்சிகளும் முன் நகர்வுகளும் பாராட்டுக்குரியவை. ஆனால் அதே சமயம் இரு திணைகளில் வாழ நேரிடும் பொழுது ஏற்படும் அனுபவங்கள், அவலங்கள், அபத்தங்கள் ஆகியவற்றைச் சமூகப் பிரக்ஞையோடும் விமர்சனப் பார்வையோடும் இன்னும் ஆழமாகவும் தீவிரமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் எழுத வேண்டிய கடப்பாடு சிங்கை நவீனக் கவிஞர்களுக்கு உள்ளது. நவீனக் கவிதையின் தோற்றுவாயான பாரதியின் “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, சோதி மிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை” என்ற வரியைக் கவிஞர்கள் ஒரு மந்திரம் போல் கைக்கொள்ள வேண்டும்.
***
கட்டுரை எழுத உதவிய நூல்களும் தளங்களும்
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஓர் அறிமுகம் 1872 – 2010, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும் – முனைவர் எம் எஸ் ஶ்ரீலக்ஷ்மி
சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதை வரலாறு – முனைவர் கோட்டி திருமுருகானந்தம்
பன்முக நோக்கில் சிங்கப்பூர்க் கவிதைகள் – முனைவர் கோட்டி திருமுருகானந்தம்
சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் – ஆ.கார்த்திகேயன், சா.உதயசூரியன், தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 – சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
சிங்கப்பூர்ப் புதுக்கவிதை ஒரு திறனாய்வு – மா தியாகராசன்
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் (சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும்) – டாக்டர் ஏ.ஆர்ஏ.சிவகுமாரன், திருமதி சீதாலட்சுமி, டாக்டர் சுப.திண்ணப்பன்
விழி சன்னல்களின் பின்னாலிருந்து – க.இளங்கோவன்
திணைகள் இணைய இதழ்
தமிழ் விக்கி (www.tamil.wiki)
கவிஞர் பிரம்மராஜன் இணைய தளம்
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை – ந.முருகேசபாண்டியன்
2015 முதல் 2025 வரை சிங்கப்பூரில் வெளிவந்த கவிதை நூல்கள் (மரபுக்கவிதை நூல்கள், தொகுப்பு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் நீங்கலாக)
அழகுநிலா
இரு முறை சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றுள்ள எழுத்தாளர் (2022, 2024). இவரது படைப்பு சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்குத் 2020 ஆம் ஆண்டில் தகுதித் சுற்றில் தேர்வாகியது. சிறார்களுக்காக நான்கு படப் புத்தகங்களையும் ஒரு குறுநாவலையும் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் ‘Beyond Words’ போட்டியில் வென்றுள்ளார். தேசிய கலைகள் மன்றம் – சங்கம் இல்ல உறைவிடத் திட்டத்திற்கு (2022-23) உடனுறை எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் எழுதிய பத்து சிறுவர் பாடல்கள் இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவில் உயிரோவிய வடிவில் மாற்றப்பட்டுள்ளன.
கவிமாலை ஏற்பாடு செய்திருந்த சிங்கப்பூர்-மலேசியா கவிதை ஆய்வரங்கத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை.

