முன்னுரை:
கலைப்படைப்புகளில் அழகியல் (Aesthetics) என்பதை “இரசனை” என்று கூறலாம். கவிதைகளின் இயக்கமானது ஓடு
கின்ற ஒரு நதியைப் போல இருப்பதால் வாசக அனுபவத்தின் மீதான தாக்கமும் பலவிதங்களில் அமைகிறது. கலைப்படைப்புகளைப் பொறுத்தவரை படைப்பும் அதை நுகர்பவனின் மனமும் இணைந்து அவன் வாழ்வின் சொந்த அனுபவங்களில் இருந்து குழைத்தெடுத்த வர்ணங்களிலிருந்து ஒரு ஓவியத்தையோ, திரவியங்களிலிருந்து ஒரு நறுமணத்தையோ அவனுக்கு வழங்குகின்றன. அதிலிருந்து அவன் அடையும் மகிழ்ச்சியோ கிறக்கமோ அல்லது விலகலோ அவனுக்கு அந்தப் படைப்பின் அழகியலை அடையாளம் காட்டுகிறது. அந்த வகையில் இக்கட்டுரையில் வைக்கப்பட்டுள்ள கருத்துகள் ஒரு வாசகனாக என் அனுபவத்தில் விளைந்தவையே. அதே கவிதைகளை வாசித்த அனைவருக்கும் அதே அனுபவங்கள் கிடைத்திருக்கும்; அவர்களும் அவ்வாறே இரசித்திருப்பார்கள் என்று கூறுவது மிகவும் கடினம். எனவே இந்தக் கட்டுரையை வழக்கமான ‘திறனாய்வு’ என்ற கோணத்தில் பார்க்காமல் ஒரு வாசகனின் அகப் பார்வையில், அவன் ஒரு படைப்பை எப்படி இரசிக்கிறான் என்ற கோணத்தில் வாசிக்கவேண்டியது அவசியம்.
எல்லை:
இந்தக் கட்டுரைக்காகச் சிங்கப்பூர் என்ற புவியியல் வரையறை எல்லையாகக் கொள்ளப்படுகிறது. இவை அனைத்துமே 2000க்கும் 2023க்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் வசிக்கும், வசித்த நபர்களால் எழுதப்பட்டு வெளியீடு கண்டவை. இவர்கள் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள், குடியேறியவர்கள், பணி அனுமதியில் இருப்பவர்கள், இருந்தவர்கள் என பலதரப்பட்டவர்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த பல்வேறு நபர்களால் எழுதப்பட்டுத் தொகுப்பாசிரியர் ஒருவரால் தொகுக்கப்பட்ட சில நூல்களும் உண்டு. அனைத்து நூல்களுமே சிங்கப்பூர் நூலகக் கழகத்தின் சேகரிப்பில் உள்ளவை. அவற்றிலும் “சிங்கப்பூர்க் கவிதைகள்”, “Singapore Tamil Poetry” என்ற தேடுசொற்கள் (tags) இணைக்கப்பட்டவையே எடுத்துக்கொள்ளப்பட்டன. இதே தேடுசொற்களின் கீழ் வந்த பல கவிதை அல்லாத நூல்கள், தனிப்பட்ட முறையில் வெளியிடப்பட்டவை, நூலகத்தில்
இல்லாதவை, “தமிழ் முரசு” நாளிதழில் வெளியாகும் கவிதைகள் போன்றவை எடுத்துக்கொள்ளப்படவில்லை. வேறு சில கவிதை நூல்களும் விடுபட்டிருக்குமானால் அது என் எல்லையைச் சுருக்கிக்கொண்டதாலோ அல்லது என் தேடுதலில் உள்ள குறைபாடாகவே இருக்குமேயன்றி வேறு எந்தக் காரணமும் இல்லை.
அழகியல் நோக்கு:
இதற்கு முன்பும் சிங்கப்பூர் கவிதைகளை முனைவர் கோட்டி திருமுருகானந்தம், முனைவர் எம்.எஸ்.ஶ்ரீலட்சுமி, ஆ.இரா.சிவகுமாரன் போன்றோர் திறனாய்வு செய்துள்ளனர். கவிதைகளின் வகை (மரபு, புதுக்கவிதை) அவற்றின் பாடுபொருள், காலம், திணை, உத்தி எனப் பல பரிமாணங்களில் ஆராய்ந்து நூல்கள் வெளியிட்டுள்ளனர். சிங்கப்பூரில் உள்ள கவிதைச்சூழலில் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த கவிஞர்களை விடவும் பொருளாதார உயர்வுக்காகப் பிறநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களும், பணி அனுமதியில் சில வருடங்கள் இருந்துவிட்டுப் பின்னர் தாயகம் திரும்பியவர்களும் அடங்குவர். எனவே படைப்புகளில் அவர்களின் விழுதுகள் விழுந்த இடங்களைவிட மூல வேரின் வாசமே மிகுந்து நிற்கும். கவிமாலை போன்ற பல்வேறு அமைப்புகளிலும் தொடர்ந்து பல்வேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டு அதற்கேற்றவாறு கவிதைகள் எழுதப்பட்டுப் பின்னர் அவை கவிஞரின் சொந்தத் தொகுப்பிலோ அமைப்பு வெளியீட்டிலோ வெளிவருகின்றன. அவற்றிலும் தத்தமது தாயக எண்ணங்களின் வெளிப்பாடே மிகுந்து காணப்படுவது இயல்பு.
ஆனால் இந்தக் கட்டுரை கவிதைகளை அப்படிப் பல்வேறு வகைகளில் பகுத்து ஆராயாமல், மேற்கூறியபடி அதில் உள்ள அழகியலையும் அதன் மூலம் அவற்றை வாசிப்பதில் கிடைக்கும் அனுபவத்தையும் மட்டுமே முன்வைக்கிறது.
இலக்கியத்தில் அழகியல் என்பது வடிவம், கருத்து, மொழி, சொற்கட்டு என்று புறவயமாக இருக்கும்போது அவை பலருக்கும் பொதுவானதாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் வாசிக்கும்போது வெளிப்படும் காட்சிகள், வாசகனின் மனத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கம், அனுபவம் என்று அகவயமாகச் செல்லும்போது அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதற்கு முன்னால் அழகியல் என்பது பற்றிப் பலர் பல வரையறைகளைச் சொல்ல முற்பட்டிருந்தாலும் அது அவரவருடைய அழகியல் நோக்கு என்றே கொள்ளமுடியும்.
இதே கவிதைகளை வாசித்து அனுபவித்த இன்னொருவர் இதே கட்டுரையை எழுத நேர்ந்தால் அது முற்றிலும் வேறுவிதமாகவே இருக்கும். புனைவு, அபுனைவு போன்றவைகளில் உள்ள கருத்தையோ, கதை மாந்தரையோ கொண்டு ஆராய்ந்து ஒரு பொதுவான கருத்தைக் கூறிவிட முடியும். ஆனால் கவிதைகளைப் பொறுத்தவரை அவை ஏதோ ஒரு கணத்தின் ஏதோ ஒரு நிகழ்வையும் குறிப்பிடலாம். அல்லது ஒரு பெரும் கால இடைவெளியை ஒரிரு வரிகளில் சுருக்கியும் சொல்லலாம். எனவே பொது ஆய்வு அல்லது அழகியல் பார்வை என்பது வாசகருக்கு வாசகர் மாறுபடவே செய்யும்.
தொல்காப்பியம் தொட்டும் பல வகையான இலக்கியப் படைப்புகளில் அழகியல் என்பது மனிதகுலத்தின் ஒரு மெய்ப்பாடாக, ஒரு உணர்வு வெளிப்பாடாக வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு பார்வைகளில் வெளிப்படுகிறது. அது அந்தந்த வாசகனின் மிகக் குறுகிய அல்லது பரந்துபட்ட வாசிப்பு அனுபவம், வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த வெற்றி தோல்விகள், கூடப் பயணித்த மாந்தர் எனப் பல்வேறு காரணிகளின் பிரதிபலிப்பு. எனவே ஒரே படைப்பில் அழகியல் என்பது உலகத்தில் எத்தனை மக்கள் உள்ளனரோ அத்தனை விதமாகத் தோன்றும் வாய்ப்பே அதிகம். போலவே பலமுறை வாசித்தபின்னரும் எதுவுமே தோன்றாத படைப்புகளும் உண்டு என்பதும் அதே அளவுக்கு நிஜம்.
“பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்
மொர மொரவென மரங்கள் எங்கோ சரிய”
என்று கல்யாண்ஜி சொல்லும்போது சில மரங்கள் வெட்டப்பட்டோ அல்லது தானாகவோ சரியும் காட்சி கண்முன் வந்து பென்சிலைச் சீவுவதில் உள்ள குற்ற உணர்ச்சியைக் கூட்டலாம் அல்லது நாம் இங்கே சில நல்ல கவிதைகளை எழுதச் சில மரங்கள் செய்த தியாகத்திற்கு நன்றி கூறிவிட்டு மேலே செல்லலாம்.
“காற்றில் வினோத நடனம் புரியும்
இலைகளைக் கைவிரலால் பற்றினேன்.
ஒவ்வொரு முறையும் இலைதான் சிக்குகிறது
நடனம் எங்கோ மறைந்துவிடுகிறது..!”
என்ற தேவதச்சனின் கவிதையை வாசிக்கும்போது கையில் சிக்கிய இலையை மட்டுமே பார்த்தவர் சிலரும் உண்டு. இலைக்குள் மறைந்த நடனத்தையே வியந்தவரும் உண்டு. இரண்டும் தவிர்த்து ஒரு நடனக் கலைஞர் குறைந்த நடன மேடையாக அந்த மரம் அல்லது செடியைப் பார்த்து வருந்துவோரும் உண்டு. கவிதையை வாசிக்கும் அந்தக் கணத்தில் மின்னல் போலத் தோன்றி மறையும் ஒரு அழகியலும் உண்டு. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மனநிலைகளில் வாசிக்குந்தோறும் வெவ்வேறு அழகியல் அனுபவங்கள் கிடைப்பதும் உண்டு.
எனவே அழகியல் என்பது இன்னது என்று பொதுவாக வரையறுத்துக் கூறுவதைவிட ‘எனக்கான அழகியல் இது; நான் கண்ட அழகியல் இது’ என்பதே சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது சரி அல்லது சரியில்லை என்பதற்கு விளக்கங்களும் இருக்கலாம்; விவாதங்கள் இருக்கலாம். அவையெல்லாம் தேவையா என்பதற்கு அப்பாலும் அழகியல் என்பது நம்மை ஒரு ஓரக்கண்ணால் பார்த்தபடி ஒரு முறுவலுடன் அருகேயே நிற்கும்.
2000க்கு முன்பான கவிதைகள்:
பொதுவாகத் தமிழ்க் கவிதைகளுக்கே உரித்தான முதன்மைக் கருப்பொருள்களாகக் காதல், பிரிவு, தாய் போன்றவையும், சிங்கைக் கவிதைகளில் காணக்கிடைக்கும் சிங்கப்பூரின் செழுமை, வளர்ச்சி, லீ குவான் யூ, பணியாளர்களின் அன்றாட வாழ்வு, ஊர் நினைவுகள், உறவு இழப்புகள், வலசை போதல் போன்றவை விரவியுள்ளன. மரபுக் கவிதைகளும் புதுக்கவிதைகளும் ஏறத்தாழ சம அளவில் எழுதப்பட்டுள்ளன. இதைப் பழமை மீதான காதல் என்றோ, தத்தமது மொழி ஆளுமையைக் காட்சிப்படுத்தவோ அல்லது ஒரு சவாலாக எடுத்துக்கொண்டோ படைத்துள்ளனர். ஆனால் பெரும்பாலானவற்றை இன்றைய நிலையில் நின்று நாம் வாசிக்கும்போது மிகச்சில கவிதைகளே நம் கவனத்தை ஈர்த்து உள்ளத்தில் நிறைகின்றன. நாம் கடந்து வந்த காலம், பாதை, தமிழ் தவிர மற்ற மொழி இலக்கியங்களில் கிடைத்த வாசிப்பனுபவங்கள் என்று பல காரணிகள் இந்தப் பரிணாம வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றன.
2000க்கு பின்பான கவிதைகள்:
முன்னணி நாளிதழான தமிழ் முரசில் தொடர்ந்து கவிதைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த பல வருடங்களாகச் சிங்கையில் இயங்கிவரும் கவிமாலை அமைப்பு மாதந்தோறும் கவிதைகள் வாசித்தல், கவிதைகள் குறித்த உரையாடல், கவிதை நூல்கள் அறிமுகம், கொடுக்கப்பட்ட கருப்பொருள் மீதான கவிதை படைத்தலுக்குப் பரிசுகள் என்று பலவகைகளில் உள்ளூர்ப் படைப்பாளர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால், புதுமைத்தேனீ மா.அன்பழகன், பிச்சினிக்காடு இளங்கோ போன்றோரும் மாதாந்திர கவிமாலை நிகழ்வுகளில் கலந்துகொண்டு புதிய படைப்பாளிகளுக்கு ஊக்கமும் ஆதரவும் வழிகாட்டுதலும் அளித்துவருகின்றனர்.
சில வருடங்கள் இயங்கிவந்த தங்கமீன் வாசகர் வட்டம் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் புதிய படைப்புகளைக் கொணர்ந்தது. தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழ் போன்றவற்றிலும் புதிய / பழைய எழுத்தாளர்களின் கவிதைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. பள்ளி மாணவர்கள், இளையர்கள் எனப் பலருக்கும் இவற்றில் இடமளிக்கப்பட்டன. பல புதிய படைப்பாளர்களும் அடையாளங்காணப்பட்டு அவர்களும் தேசியக் கலை மன்றம் அளிக்கும் தங்கமுனை விருது, புத்தக மன்றம் அளிக்கும் இலக்கியப் பரிசு போன்றவற்றைப் பெறுகின்றனர். அந்த வகையில் சிங்கையில் கவிதைக்கான சூழல் வளமாகவே காணப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் பரிசுகளுக்காகவோ, வெளிச்சத்துக்காகவோ, ஆத்மதிருப்திக்காகவோ தொடர்ந்து எழுதிவருகின்றனர்.
சிங்கைக் கவிதைகளில் அழகியல் தன்மை மிகுந்த கவிதைகளும் உண்டு. மிகத் தட்டையான கவிதைகளும் உண்டு. சிங்கையில் மட்டுமல்ல; உலகின் எந்த நாட்டிலுமே அது தவிர்க்கமுடியாத ஒரு அம்சமாகவே இருக்கிறது. ஆனால் ஒரு நல்ல வாசகன் சரியாக அடையாளம் கண்டு வேண்டுவன கொண்டு வேண்டாதவன தள்ளுகிறான். என் வாசிப்பில் கண்ட சிலவற்றைக் கீழே தொகுத்துள்ளேன்.
கவிதைத்தன்மையுடைய கவிதைகள்:
தமிழ் இலக்கியத்தில் திணைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. பண்டைய தமிழ்க் கவிதைகளில் உரிப்பொருள், கருப்பொருள், உணர்ச்சி போன்றவை அது பாடப்படும் திணையை ஒட்டி அமைந்தவையாக இருக்கவேண்டும் என்று தூய்மையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பின்னர் நவீனக் கவிதைகள் அறிமுகமானபின் திணையை நாம் குறிப்புகளால் உணர்ந்துகொண்டாலும் திணைக்கான இலட்சணங்கள் இருக்கவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கவில்லை. மேலும் திணை என்பது படைப்பாக்கத்திற்கு ஒரு இடையூறாகவும் பார்க்கப்பட்டபோது அதன் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் கரைந்து இல்லாமல் போயின.
ஆனாலும், நவீனக் கவிதைகளிலும் திணை என்ற அம்சத்தைப் புகுத்தி அதன் அழகியலுக்கு மெருகூட்ட முடியும் என்று சொல்லவந்த கவிதைகளையும் சிங்கைக் கவிஞர்கள் படைத்துள்ளனர். உதாரணத்திற்குக் கவிஞர் இன்பா வெளியிட்ட ‘லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்’ தொகுப்பில் சிங்கைக்கென ஒரு சிறப்புத் திணைகளை வகுத்துக் காண்பித்திருக்கிறார். தூய்மையாளர்களிடம் கேட்டால் வேறுபட்ட கருத்துகள் வருமென்றாலும் இது போன்ற முயற்சிகள் கவிதையுலகத்தைத் துடிப்புடனும் உயிர்ப்புடனும் வைத்துள்ளன என்றே சொல்லவேண்டும்.
ஆங்கிலம் பேசி, உடைகளை மாற்றி, கப்புச்சினோ பிடிக்கும் என்று சொல்லும் மரி, தான் இருக்கும் திணைக்கு ஏற்ப மாரியம்மா என்ற தன் இயற்பெயரை மாற்றிக்கொண்டவள் என்று கூறுகையில், அது போலித்தனமா அல்லது தகவமைத்துக்கொள்ளும் திறமையா என்ற கேள்வி எழுகிறது.1
ஜப்பானின் செர்ரிப்பூக்கள் அபரிமிதமாகப் பூத்துக் குலுங்கும் பருவம் போலச் சிங்கைக்கும் ஒரு டிரம்பெட் பூக்கள் சொரியும் பருவம் உண்டு. தீவு முழுதும் பாதையெங்கும் சொரிந்து மிதிபட்டு நசுங்கும் பூக்களைப் பார்த்து2,
அத்தனை பூக்களும்
ஒவ்வொன்றாக மரித்தால்
எந்தப் பூவின் மரணத்துக்காக
நான் அழுவது இப்போது?
என்று கேட்கும்போது வாசிக்கும் அவரவரும் அவரவது ஊரிலோ நாட்டிலோ நிகழும் ஒன்றைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது.
தமது கவிதைகளில் தனிப்பட்ட ஒரு பாணி வெளிப்படுகிறது; பார்க்கும் எல்லாவற்றையும் கவிதைகளாகக் காட்சிப்படுத்திவிடமுடியும் என்ற திறமையையும் தாண்டி அதை அழகுறவும் வாசகருக்கு ஈர்ப்புடனும் கொண்டுசேர்க்கவேண்டும் என்பதில் மெனக்கெடும் கவிஞர்களும் உள்ளனர்.
பதினாலாம் மாடிக் குடியிருப்பென்பது…
பறந்து செல்லும் பறவைகளின் பேச்சை
ஒருமுறையாவது ஒட்டுக் கேட்கும்
ஒரு வாய்ப்பு.
திரும்பிய பக்கமெல்லாம் உயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட சிங்கை போன்ற நாட்டில் காங்கிரீட் காடு என்று அலுத்துக்கொள்வோரிடையே அந்தக் காடு புகலளித்துள்ள பறவைகளிடமும் கவனத்தைச் செலுத்துவதும், அதை ஒரு அழகோடு கவிதையில் சொன்னதும் சிறப்பு.3
குடித்தகாபியின் மிச்சக் கசப்பை
மெல்ல மெல்ல விழுங்கத் தவிக்கிறோம்
என்ற கவிதையில் சொல்லப்படும் காபி நாம் குடிக்கும் காபி மட்டுமல்ல என்பதை மிக எளிமையாகச் சொல்கிறது. அதற்கு முந்தைய வரியான எளிதில் நகர்ந்துவிடும் உலகம் அதை உறுதி செய்கிறது.4
அதைப்போலவே பாலு மணிமாறனின் கவிதைகள் பலவும் ஒரு சிறுகதை போல இறுதி வரிகளில் கவிதையின் முழுமையை வெளிப்படுத்தினாலும் வாசகவெளியை ஓரளவுக்குக் கொடுப்பதில் தவறுவதில்லை. கவிதைகளின் நீட்சியாகக் கற்பனையில் மேலும் சில வரிகளுக்கான சாத்தியங்களையும் கொடுக்கின்றன.
ஒரு சிறுவனுக்குக்கூட நம்பிக்கையளிக்க முடியாத ஒருவர்
எப்படிக் கடவுளாக இருக்க முடியும்?
என்று கேட்கும்போது5 இதுபோல நாம் பல கவிதைகள் படித்திருக்கிறோமே என்று தோன்றினாலும் கவிதையிலுள்ள மற்ற வரிகள் கேள்விக்கு அர்த்தத்தையும் அழுத்தத்தையும் கொடுக்கின்றன. இதுபோன்ற சில வாசிப்பனுபவங்களையும் வழங்குகின்றன சில சிங்கைக் கவிதைகள்.
வாசிக்கும்போது முரண்களை வெளிப்படுத்தும் சில கவிதைகளும் காணக் கிடைக்கின்றன. ‘என்றேனும் ஒரு நாள்’6 என்ற கவிதை, சில நிமிடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு மரணச்செய்தியைத் தொலைபேசியில் கேட்ட பின் பல்வேறு காட்சிகள் இறந்தவரின் இருப்பை உணர்த்துவதாகச் சொல்கிறது. ஆனால் இப்படி ஒரு செய்தியைக் கேட்டபின் அதிர்ச்சி ஆட்கொள்ளும்போது காட்சிகள் வரிசைகட்டி நிற்குமா என்ற முரண் கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற முரண்களையும் ஒரு விதமான அழகியலாகவே பார்க்கலாம்.
பயணிகள் யாருமற்ற இருக்கைகளில்
இப்போதும் நடந்துகொண்டேயிருக்கிறது
ஒர் உரையாடல்
எப்போதும் போலவே !
‘நிசப்தத்தின் சப்தம்’7 கவிதையின் இந்தக் கடைசி நான்குவரிகள் வாசகனின் கற்பனைக்குச் சிறகுகள் பூட்டுகின்றன. அதே சமயம் அழகியலைக் கலைப்பது போல ‘இந்தக் கவிதைக்கு இந்த நான்கு வரிகளே போதும்; மேலே உள்ள 40 வரிகளும் தேவையில்லையே’ என்ற எண்ணமும் மேலெழுகிறது.
உனக்காக
நான் காத்திருந்த
தூசு படிந்த
தெருக்கள் தெரிவித்தன
உன் செருப்புகள்
இங்குச் சிறிதுநேரம்
திகைத்து நின்ற கதை.
காதல் என்ற உணர்வு மட்டும் இல்லையென்றால் கவிகளும் கவிதைகளும் இருக்க வாய்ப்பில்லை. முதலில் அகம். பின்பே புறம். காத்திருத்தலும் பின்னர்க் காத்திருந்த பாதையை மீள்வாழ்தலும் இங்கே8 மிளிர்கிறது.
தேன் தேவையென்றால் தடவிக்கொள்ளலாம்
கொஞ்சம் வெப்பகாலம்
அகலமாய் ஆறப்போட்ட
சாயங்காலங்கள்
ஒரு கோடைக்கால மாலையில் பாடாங் போன்ற பரந்தவெளியில் வெயில் தேனாக வழியும்போது, காயவைக்க விரித்துப் போட்ட தங்க கம்பளமாகவும் தெரியும்போது மெல்ல எழும் காதலை வேறெப்படிச் சொல்வது?
“என் முகம்”9 என்ற கவிதையில் கவிஞர் முகச்சவரம் செய்ய எத்தனிக்கும்போதெல்லாம் தன்னுணர்வு மிகுந்து தன் முகத்தில் தெரியும் முன்னோர்களின் குணாதிசயங்களைப் பட்டியல் போட்டுத் தன்னில் தெரிவது யார் என்று வியக்கும் அதே சமயம் அவர்கள் கடனாகக் கொடுத்த இந்த வாழ்வைச் சரியாக வழிநடத்துகிறேனா என்ற கேள்வியையும் எழுப்பிக்கொள்கிறார்.
தினசரி பயணிக்கும்
மேகங்கள்
எங்கே தொடங்கி எங்கே முடிகின்றன?
அவதானிக்க ஆவல்தான்
எங்கே இதற்கு
நேரம் காலம்?10
நகர வாழ்வின் அவசரத்தையும், உள்ளே கிளர்ந்தெழும் கவித்துவத்தைச் சட்டென உணர்ந்தாலும் அதைக் கூட நிதானமாக அனுபவித்துச் செல்ல இயலாத நேர நெருக்கடியும் விரக்தியுடன் வழிந்தோடுகின்றன. அந்த மேகங்கள் பெருவிரைவு இரயில் தரையின் மேல் பயணிக்கையில் வான் மேகங்களாகவும், தரையடியில் பயணிக்கையில் சக அவசர மனிதர்களாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
சத்தியமா அவளுக்கு
வள்ளலாரையும் தெரியாது
வள்ளலார் சொன்னதை
வாய்கூசாமல் என்னைப் போல்
சொல்லவும் தெரியாது
மகனோடு வாழ நாடு விட்டு நாடு வந்திருக்கும் தாயோ, மணமாகி இடம் பெயர்ந்து வந்திருக்கும் மனைவியோ… தங்கள் தாய்மண்ணின்
சிறு, பெரு விவசாய இழப்பு அனுபவங்களைச் சிங்கையில் வீட்டுக்கு வெளியில் பூச்செடிகள் வாடுவதில் கூடக் கண்டு, பதைக்கும் மனத்தை அழகாகப் படம் பிடித்திருக்கின்றன இந்த வரிகள்.11
ஓயாது நடந்த
அவநியின் பாதங்களைத்
தொட்டுப் பார்க்கிறேன்.
குட்டிப் பதங்களில்
வீட்டின் நீள அகலங்கள்
சுருண்டு கிடக்கின்றன.
தவழ்ந்து, அமர்ந்து, நடை பழக ஆரம்பிக்கும் தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் இரசித்து மகிழ்ந்து அதைத் தன் கவிதையில் வழிய விட்டிருக்கும் ஒரு தகப்பனின் மை சிதறிய வரிகள்12 இவை.
வலி சுமந்திருக்குமோ?
பனிநீர் கசிந்திருக்குமோ?
யாரேனும் வாங்களேன் என
ஈனக் குரலில் அழைத்திருக்குமோ?
அம்மா முடியலையே என
அர்த்த ராத்திரியில் அழுதிருக்குமோ?
பின்னிரவில் பழம் உதிர்த்த
தனித்த பனை.
இரவில் தூக்கம் வராமல் விழித்திருக்கும் ஒருவனின் ஊர்ப் பனைக்கான இரக்கமா? அல்லது பிரசவத்திற்காகத் துணை சொந்த மண்ணில் இருக்க, அவளை விட்டுவிட்டுத் திரவியம் தேடத் திரைகடல்
தாண்டியவனின் மழலை பிறந்த செய்தி கேட்ட மன ஓட்டமா?13
ஆதங்கக் கவிதைகள்:
சிங்கப்பூர் போன்றதொரு நகர நாடு காலந்தோறும் மாறிக்கொண்டேயிருக்கும் இயல்புடையது. நிலவியல், கட்டடங்கள், மக்களின் மனப்போக்கு என்று ஒவ்வொரு அம்சமும் மாறிக்கொண்டேயிருப்பதால் முந்தைய தலைமுறையின் நினைவுகளில் உள்ள பிம்பங்கள் பிம்பங்களாகவே இருந்துவிடுகின்றன. அந்த மாற்றத்தில் மூச்சுத் திணறுவதையும், அதிவேக மாற்றத்தின் மீதான ஆதங்கமும் வெளிப்படும் கவிதைகள் வந்துகொண்டே இருக்கின்றன.
சரித்து வைத்த
சீன ஓட்டு வீடுகளின்
சாத்திய மரப்பலகை
கதவுகளிலிருந்து
சன்னமாய்ப் புறப்பட்டது
அஞ்சடிப் பாதைகளில்
புரச மர வாசம்.
இங்கேயே பிறந்து வளர்ந்து, கூடவே நகரின் அசுர வளர்ச்சிக்கும் சாட்சியாய் இருக்கும் ஒருவனுக்குக் காலங்களுக்கு இடையில் பயணிக்கும்போது எழும் ஏக்கப் பெருமூச்சாக இருக்கலாம். அல்லது, எதேச்சையாக இன்னமும் மாறிவிடாத ஒரு சிறுதெருவில் செல்லும்போது ஒரு நிமிடம் நின்று கண்மூடிச் சுவாசித்த புரச மர வாசமாகவும்14 இருக்கலாம்.
ஓடியாடி விளையாடிய மைதானத்தைக்
காணாமல் தேடி அலைகிறது கிழட்டுச் சிங்கம்
என்ற கவிதையில்15 பால்யத்தில் ஒட்டியிருந்த அடையாளங்களைத் தொலைத்த வயோதிகனின் வருத்தம் காட்டப்பட்டுகிறது.
காணாத கண்ணிமைகளில்
நரை கூடியிருந்தது ஒன்றுக்கு.
கன்னங்களில் துயரத்தை ஒதுக்கிப்
பற்களுக்கிடையே மறைத்திருந்தது
மற்றொன்று
எனச் சொல்லும் ‘நினைவுத் துளிகள்’16 கவிதையில் இழையோடும் சோகம் அல்லது அனுபவத்தின் முதிர்ச்சி உண்மையானது.
பூடகக் கவிதைகள்:
கற்பனை எல்லை மீறும்போது கருத்தின் அடர்த்தியைக் கொண்டுவர இருக்கும் சொற்களைக் கொண்டு புனையும்போது படைப்பாளி சொல்லவருவது வாசகனுக்கு வெகுதூரத்தில் புள்ளியாய்த் தெரிந்து, கானல் நீரோ என ஐயப்படவைக்கிறது. இத்தகைய பூடகக் கவிதைகளில் இருக்கும் பல்வேறு படிமங்களை ஒவ்வொன்றாக உரித்தோ மொத்தமாகவோ உள்வாங்கி இரசிக்க கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. ஆனால் சில சமயங்களில் அதுவே வாசகனிடமிருந்து பெருமுயற்சியைக் கேட்டு வாங்கி அவனைக் கவிதையினின்று விலக்கியும் வைத்துவிடுகிறது. கீழே உள்ள கவிதைகள் அப்படிப்பட்டவையே.
உன் விளம்பரங்களை விற்றுவிடலாம்
ஆனால் இந்த வெயிலை விற்காதே
அது மட்டும் இன்றுவரை
உன் எழுதும் கரமோரம்17
அவரவர் தத்தமது பொய்மைகளை அலங்காரப்படுத்தி எப்படியேனும் மற்றவர்களிடம் தள்ளிவிடலாம். ஆனால் உண்மை அகம் வெயிலைப் போல… மறைக்க முயலும் கரங்களின் மீதே படரும். இதுதான் கவிஞனின் எண்ணமா என்றால் தெரியாது. என்னைப் போன்ற ஒரு வாசகனுக்குச் சில மறுவாசிப்புகளுக்குப் பின்னர்க் கிடைக்கும் உணர்வு இது.
கோடைகளையும்
குறுக்குப் பாதைகளையும்
கடந்துவிட்டால்
பலிதமாகலாம்
உன்
பக்கத்தில் படுத்திருக்கும்
பழக்க தோஷங்கள்18
மரபுச் சார்பு:
பாரதியின் வருகைக்குப் பின் புதுமை, நவீனம், பின்நவீனம் என்று பல வகைகளில் மரபிலிருந்து விலகிப் பல்வேறு வகைமைகள் வந்துவிட்டாலும், மரபுக்கவிதைகளுக்கான கவிஞர்களும் வாசகர்களும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். கவிஞர் க.து.மு.இக்பால், கி.கோவிந்தராசு, ந.வீ.விசயபாரதி, ந.வீ.சத்தியமூர்த்தி போன்றோர் தொடர்ந்து மரபுக்கவிதைகளைப் படைத்து வருகின்றனர். கவிமாலை மாதாந்திர நிகழ்வுகளில் கொடுக்கப்படும் கருப்பொருள்களுக்கான கவிதைகளில் குறைந்தது மூன்று கவிதைகளாவது மரபு சார்ந்தவையாக உள்ளன. இன்றைய காலத்துக்கான தேவைகளையும் செய்திகளையும் மரபுக்கவிதைகள் வழியே கடத்தமுடியும் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிசெய்தபடி இருக்கின்றனர்.
அந்த வகையில் பல சிங்கைக் கவிதைகள் தற்காலத்துக்குரிய கருப்பொருள்களுடன் படைக்கப்பட்டுள்ளன. ‘இடைவெளி’, ‘இல்லாதிருப்பவள்’ போன்ற எதுகை மோனையுடன் அழகிய சொற்கட்டுடன் கூடிய பொதுக்கவிதைகள், ‘பூமாலை’, ‘தேனினும் இனிய..’ போன்ற சந்தத்துடன் கூடிய நல்ல மெட்டமைந்த பாடல்களும் காணப்படுகின்றன.19 ஒருபடி மேலே போய்த் தமிழவேள் கோ.சாரங்கபாணி20, லீ குவான் யூ21 ஆகியோருக்குப் பிள்ளைத்தமிழும் பாடப்பட்டுள்ளன.
சோழர்களின் வருகை முதல் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் வரையிலான சிங்கப்பூரின் வரலாற்றில் தொடங்கி, இன்றைய சிங்கையின் கல்வி, கலாசாரம், பொருளாதாரம், மத நல்லிணக்கம், நான்கு மொழிக் கொள்கை, தொழில்துறை, சுற்றுலாத்தலங்கள் என்று முழுக்க முழுக்கச் சிங்கப்பூரின் அனைத்து அம்சங்களையும் முழுவதும் விருத்தப்பாக்களாலேயே அமைந்த “சிங்கப்பூர் விருத்தம்”22 என்ற நூலும் உண்டு.
மரபு பாணியில் சிங்கை சாப்பாட்டுக் கடைகளைப் பற்றித் தமிழ் முரசில் வெளிவந்த23 ஒரு பாடலில்,
பிரபல கோழிச் சோறுமுண்டு – நமக்குப்
பிடித்த லக்சா மீகொரெங்
நிறைந்த மீன்கறி தலையுடனே – ரொம்ப
நல்ல சார்கேவ் தியோவுமுண்டு
கார நண்டும் ருசித்திடலாம் – கடையில்
காயா டோஸ்டும் சுவைத்திடலாம்
தீரா விருந்தும் தித்திக்கும் – சீன
திம்சாம் பரிமாறும்போது
இலக்கணங்கள் சிறிது வழுவி, ஒற்றுப் பிழைகள் சில இருந்தாலும், அன்றாட வாழ்வைக் கூட ஒரு சிறுவர் பாடலைப் போல எளிதாக வாசித்து இன்புறும் வகையில் மரபில் வடிக்கமுடியும் என்ற கவிஞரின் திறமை மெச்சத்தகுந்தது.
“ஏற்றம் அளித்த இருநூறு”24 என்ற சிங்கையின் கல்வியிலும் விமானத்துறையிலும் சிங்கை பெற்ற வளர்ச்சியைப் போற்றும் வகையில் வெண்பாக்களினாலேயே ஆன ஒரு செய்யுள் தொகுப்பும் உண்டு. ஓசை நயம், யாப்பிலக்கண சுத்தமாகப் படைக்கப்பட்டிருந்தாலும் வெகுவாகச் செய்திகளையே உள்ளடக்கியதால் மனதிற்குள் ஒரு நல்ல கவிதை எழுப்பும் சித்திரங்கள் கிடைக்கவில்லை. இது போன்ற தொகுப்புகள் கவிதை என்ற வகையில் வருமா என்ற ஐயமும் எழுகிறது. எனினும் படைப்பாளரின் தமிழ்ப் புலமையும், படைப்புத் திறனும் பளிச்சிடுகின்றன.
ஆனால், தமிழ்ப் புழக்கமும் குறைந்து, மரபுக் கவிதைகளின்பால் அவ்வளவு ஈர்ப்போ பழக்கமோ இல்லாத பெரும்பாலானோர்க்கு இவற்றில் உள்ள வடிவழகையோ ஓசை நயத்தையோ சொற்செறிவையோ கவிஞனின் கைவண்ணத்தையோ அனுபவிக்கவோ பாராட்டவோ முடிவதில்லை என்பது ஒரு பெரும் சோகமே. முந்தைய தலைமுறையும் சரி, இன்றைய தலைமுறையும் சரி, இதில் எவரும் விதிலக்கல்ல. இந்த நிலைமையைச் சீர் செய்யும் முயற்சியாகக் கவிமாலை அமைப்பு மரபுப் பயிற்சிப் பட்டறைகள், யாப்பிலக்கண வகுப்புகள் போன்றவற்றையும் முன்னெடுத்துத் தொடர்ந்து நடத்திவருகிறது.
குறுங்கவிதைகள்:
பல்வேறு படைப்பாளிகளும் தங்கள் கவிதைத் தொகுப்புகளில் ‘ஹைக்கூ’ கவிதைகள் என்ற பிரிவில் கவிதைகள் படைத்துள்ளனர். எனினும் ஹைக்கூவின் பிறப்பிடமான ஜப்பானில் கொடுக்கப்பட்டுள்ள அதற்கான இலக்கணங்கள் வெகு அபூர்வமாகவே – அதுவும் சில சமரசங்களுடன் – சில கவிதைகளில் மட்டுமே காணக்கிடைக்கின்றன. ஆனால் பொதுவாக அனைத்துமே மூன்று வரிகள் என்ற வடிவத்தை மட்டுமே வைத்துள்ளன என்பதால் இவற்றை ‘ஹைக்கூ’ என்று வகைப்படுத்துவதில் தயக்கம் உள்ளது. அதே சமயம் கருத்திலும் காட்சியிலும் இவை நம்மை ஈர்க்கின்றன என்பதும் உண்மை.
நிலவில் நனைந்த சுனை25
அல்லி இதழ்களில்
நிலாத் துளிகள்!
ஒரு விமர்சனக் கோணத்திலோ கலைத் தூய்மை பேணும் நோக்கிலோ பார்க்கும்போது, படைப்புச் சுதந்திரம் என்பது ஒரு படைப்பாளிக்கு மிக மிக முக்கியமானது என்றாலும், ஒரு படைப்பை வகைப்படுத்தித் தனது கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைத்துக் வைத்திருக்கும் ஒரு சமூகத்திற்கு அதன் தன்மையையையும் தொன்மையையும் கட்டிக்காக்கவேண்டிய பொறுப்பும் உள்ளது. அந்தச் சமூகத்தின் உணர்வுகளையும், பொதுவாகக் கலையையும் மதிக்கும் வகையில் ஹைக்கூவின் இலக்கணங்களைப் பின்பற்ற முடியாமல் போகும்போது குறைந்தபட்சம் அவற்றை நாம் ‘ஹைக்கூ’ என்று சொல்லாமலாவது இருக்கலாம்.
வெண்பா என்ற வகைப்படுத்தலுடன் ஒரு பாடலைப் படிக்க நேர்ந்தால் உடனே சீர், தளைகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அது வெண்பா அல்ல என்று நிரூபிக்க நாம் தவறுவதே இல்லை. அப்படியிருக்கத் தமிழ் மரபிற்கு அன்னியமான ஹைக்கூவில் மட்டும் படைப்புச் சுதந்திரம் எடுத்துக்கொள்வது எவ்வாறு சரி ஆகும் என்பது புரியவில்லை.
வாழ்வைக் காட்சிப்படுத்துதல்:
கட்டுமானம் போன்ற கடும் உழைப்பைக் கோரும் பணி நிமித்தம் சிங்கை வரும் பணியாளர்களின் வாழ்வைச் சொல்லும் கவிதைகள் மிக அதிகம். ஆனால், அவற்றையும் நேரடியாகச் சொல்லாமல் வேறு வகையில் காட்சிப்படுத்தும்போது அதிலும் அழகியல் வெளிப்படுகிறது.
திங்கள் – சனி திரௌபதியின் சேலை
பசித்துக் கிடக்கிறது ஞாயிறு
வாரம் முழுதும் வேலை செய்து களைத்த ஒரு பணியாளனின் வாழ்க்கை மனதுக்குள் விரிகிறது.
அழகியல் குன்றுதல்:
அழகியல் குன்றும் இடங்கள் என்று இங்கே சொல்லப்படுவது கட்டுரையாளர் பார்வையில் என்று கொள்ளவேண்டும். ஏனெனில் எந்தப் படைப்பாளியும் தனக்குச் சிறந்தது என்று தோன்றுவதையே பெருமையுடன் பொதுவில் வைக்கிறான். இருப்பினும், மேலே குறிப்பிட்டதுபோல வாசகவெளி எனும் முப்பட்டகத்தின் வழியே வெளிப்படும்போது வாசகனின் நிறக்குருடு காரணமாகச் சில வண்ணங்கள் புலனாகாமற் போகும் வாய்ப்புகள் உண்டு.
கவிஞர்களில் மூத்தவர்களும் சரி இளையர்களும் சரி, சிங்கைக் கவிதைகளில் பொதுவாக அழகியல் வெளிப்பட்டாலும் அழகியல் குன்றும் இடங்களும் பலவுண்டு. Minimalism எனப்படும் எளிமையும் கச்சிதத்தன்மையும் கவிதைக்கு மிக முக்கியம் என்ற பார்வைப்படி பார்க்கும்போது பல கவிதைகள் தேவைக்கதிகமாகவே நீண்டோ அல்லது வலிந்து சொல்லப்பட்ட செய்திகளுடனோ அமைந்துள்ளன.
‘எனும்போது..’ என்னும் கவிதையில்26 கவிஞர் சொல்லவந்த கருத்து மூன்று நான்கு பத்திகளிலேயே புரிந்து இரசிக்க முடிந்தாலும் 12 பத்திகளாக தேவைக்கதிகமாகவே விரிகிறது. ‘கடைசியில்…’ என்னும் கவிதையும்27 இதைப் போன்றதே.
போலவே ‘நாம் பிறக்காமலே போயிருக்கலாம்’ என்று அங்கலாய்க்கும் ‘பிரிவுகள்’28 கவிதையில் உள்ள ஆதுரம் நம்மைத் தீண்டினாலும், பல்வேறு காரணங்களை அடுக்கும்போது ‘இவ்வளவு தேவையா?’ என்ற கேள்வி எழுகிறது.
எதிர் கவிதைகள்:
கவிதைக்கு ஏன் அழகியல் தேவை என்ற கேள்வி எப்போதுமே உண்டு. பொதுவாக நாம் கவிதையில் காணப்படும் அழகியல் தொடர்பான சொற்கள், படிமங்கள், உவமைகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், கடினமான வாக்கிய அமைப்புகள்… இப்படி எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு மிக எளிமையாக, நேரடியாகப் படைத்தால் அது எதிர் கவிதை என்று சில விளக்கங்கள் உண்டு. நிகனோர் பாரா போன்றோர் இதில் முன்னோடி. அவருடைய “இறந்த மனிதன் தன்னைப் பற்றிச் சொன்னது” என்ற கவிதையைச் சொல்லலாம்.
மிகுந்த மனத்திருப்தியுடன்
இந்த அருமையான வாய்ப்பை
சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளவே
பயன்படுத்திக்கொள்கிறேன்
இதை எனக்குக் கொடுத்து மரணம்
மனுஷ்யபுத்திரன் கூட “இறந்து போனவனின் ஆடைகளை என்ன செய்வது?” கவிதையில் மரித்துப் போன நண்பனின் எண்ணை நீக்குவதில் உள்ள மனப்போராட்டத்தை எழுதியிருப்பார்.
அன்றாட சிறு நிகழ்வுகள், அந்தக் கணத்தின் கோபத்தையோ பகடியையோ சேதமில்லாமல் வாசகனுக்குக் கடத்திவிடுவதில் எதிர்கவிதைகள் பங்கு மிக முக்கியமாகவும் இருக்கிறது. கவிதை வாசிக்கவோ எழுதவோ ஆர்வம் உள்ளவர்களை அவ்வுலகிற்குள் இழுத்துவர இந்த வடிவம் எளிதாகவும் இருக்கிறது. கவிதை படைப்பது என்பது கடினமான வேலை அல்ல என்று இந்தத் தலைமுறைக்கு ஒரு நம்பிக்கையூட்டும் பணியையும் இது செவ்வனே செய்கிறது. ‘அடம் செய விரும்பு’29 எனும் கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
சிங்கைக் கவிதைகளில் பார்க்கும்போது பல விதமான மிக நேரடியான, ஒடித்து ஒடித்து எழுதப்பட்ட உரைநடைக் கவிதைகளும் மலிந்திருக்கின்றன. இவைகளில் உள்ள பிரச்சாரத் தொனி, ஆங்கிலச் சொற்கள் கலப்பு30, பரிமாணங்களின் போதாமை, பேச்சுவழக்குச் சொற்களின் கலப்பு (‘வாயால் வடைசுடுகிறவன்’31) போன்ற
அம்சங்கள் கவிதைகளை ஆழ்ந்து வாசிக்கும் சில வாசகர்களுக்கு நல்ல ஒரு வாசிப்பனுபவத்தைக் கொடுக்கத் தவறிவிடுகின்றன. கவிதையின் ‘வடிவத்தில்’ உள்ள ஒரு கவிதைத்’தன்மை’க்காகவே அது ‘கவிதை’ என்று வகைப்படுத்தியுள்ளனர். அந்தத் தன்மையும் சரியாக வெளிப்படாமல் போகும்போது, உரைநடைக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாடு மறையும்போது ‘இது கவிதையா?’ என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகிறது.
ஆனால் அதே சமயம் கவிதை என்பதே நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒரு வடிவம் என்பதாலும், எது கவிதை என்ற விவாதங்கள் இன்னமும் ஓயவில்லை என்பதாலும் இவ்வகை உரைநடைக் கவிதைகள் இருந்துகொண்டேதான் இருக்கும்.
‘காலம்போன கடைசியில்…”32, ‘மாற்று வழி’33 போன்ற கவிதைகள் மடக்கிய வாக்கியங்களால் படைக்கப்பட்டுள்ளது. ‘இளைஞனே விழித்தெழு’, ‘இன்னுமா உறங்குகிறாய்?’34, “துணிந்து நில்; துவண்டு விடாதே”35 போன்ற வழக்கமான பிரச்சாரம் தொனிக்கும் எழுச்சிக் கவிதைகளும் உண்டு.
மேலும் ‘ஒழுக்கம் நிறைந்தால் மனிதனாக வாழலாம்’36 போன்ற அறிவுரை சொல்லும் கவிதைகள், “உடலாக நீயிருந்தால் உயிராக நானிருப்பேன்”37 போன்ற காதலாகிக் கசிந்துருகும் கவிதைகள், “மனிதனை மனிதனாக்குவது அன்புதான்”38 என்று நீதி சொல்லும் கவிதைகளும் மலிந்து காணப்படுகின்றன.
பொதுவாக இத்தகைய கவிதைகள் சமூகத் தளங்களில் பகிரப்படும்போது அதன் பெரும்பாலான பின்னூட்டங்களில் நாம் காணும் ‘அபாரம்’ ‘அருமை’ போன்றவை நம்மை அந்த நேரத்துக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியில் ஆழ்த்தலாமேயொழிய ஆரோக்கியமான விவாதங்களையோ நல்ல விமர்சனங்களை ஏற்பதில் நம்மை பலவீனப்படுத்தவே செய்கின்றன.
இலக்கியம் உட்பட, எந்த ஒரு துறையாக இருந்தாலும் காலத்துடன் அவை முன்னேறியே வரவேண்டும். ஏதோ ஒரு இடத்தில் தேங்க விட்டுவிட்டால், அதன் முன்னேற்றம் தடைபடும். அன்றாடம் புழங்கும் செல்பேசியில் தினந்தோறும் புதியனவற்றை எதிர்பார்க்கும் நாம் இலக்கியத்தை ஏன் தேங்க விடவேண்டும்?
அல்புனைவுக்கு மிக அருகில்:
சிங்கையின் வரலாற்றுத் தடங்களைக் கவிதையில் புகுத்துதல், கடந்த காலச் செய்திகளைக் கூறுதல், மாறிப்போன நிலவியலை நினைவு கூறுதல், பழம்பெருமைகள் பேசுதல், இன்றைய நிலையோடு ஒப்பிடுதல் என்று பல விதங்களில் சிங்கப்பூர் கடந்து வந்துள்ள பாதையைச் சொல்லும் கவிதைகளும் உண்டு.
இத்தகைய கவிதைகளில் செய்திகளைத் தவறின்றிச் சொல்வது முக்கியத்துவம் பெறுவதாலும், சிங்கைக்கே உரித்தான சில சொல்லாடல்களும் புழங்குவதாலும், உரைநடைத்தன்மை மிகுந்து கவிதை என்பது வடிவத்தில் மட்டுமே எஞ்சுகிறது. மேலும், சிங்கைக்கு வெளியே உள்ள வாசகர்களுக்கும் புரியவைக்க வேண்டும் என்ற தேவை எழுவதால், ஒவ்வொரு கவிதைக்கும் விவரமான அடிக்குறிப்புகளும், விளக்கங்களும் கொடுக்கவேண்டியதாகிறது. தீவிர கவிதை வாசிப்பாளர்களுக்கு அவர்களுக்கான வாசக இடைவெளி இல்லாததால் இவை சற்று அந்நியப்பட்டு அல்புனைவுக்கு மிக அருகில் நிற்கின்றன. இவ்வளவு சிரமப்பட்டு இவற்றைக் கவிதை என்ற பெயரில் கொண்டுவருவதன் அவசியமும் கேள்விக்குள்ளாகிறது.
‘கோட்டைச் சிங்கப்பூர்’, ‘வரலாற்று அடையாளங்கள்’, ‘மூன்று மாத சமரசம்’ போன்ற கவிதைகள் இந்த வகையில் அமைந்துள்ளவை. ‘கலாச்சார மரபணுக்கள்’ என்ற தொகுப்பில் பொதுவான கவிதைகள் சில இருந்தாலும் பெரும்பாலானவை மேற்சொன்ன வகையைச் சார்ந்தவை. ‘அலாவுதீனும் ஆலிஸின் உலகமும்’39 கவிதையையும் இதில் வகைப்படுத்தலாம்.
தாயகம் சார்ந்த உணர்ச்சிக் கவிதைகள்:
கடல் தாண்டி வாழ்ந்தாலும், தாய்மண்ணின் தொடர்பு அறுந்துபோய்விடாமல் இந்தியா, இலங்கை, தமிழகம் போன்ற இடங்களில் அவ்வப்போது நிகழும் அரசியல் நிகழ்வுகள், சமூக அவலங்கள், விவசாயம் குறித்த அங்கலாய்ப்புகள், பள்ளிக்கால நினைவலைகள், பழைய, புதிய அரசியல் தலைவர்கள், சுதந்திர தினம், சமயம் சார்ந்த முக்கியக் கொண்டாட்டங்கள், விடுதலைப் புரட்சியாளர்கள் (குறிப்பாகப் பாரதியார்) மீதான கவிதைகளும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன.40
இவற்றிலும் சிலவற்றில் இரசிக்கும்படியான வரிகளோ சொற்களோ மின்னலைப் போல வெட்டினாலும் பாடுபொருளின் பழமையின் நிழல் அனைத்தையும் மறைத்துவிடுகிறது.
தத்துவ விசாரக் கவிதைகள்:
கவிதையின் உச்சம் தத்துவம் என்பார்கள். பொதுவாக எல்லாக் கவிதைத் தொகுப்புகளிலுமே சில தத்துவக் கேள்விகள் உள்முகமாகக் கேட்கப்படுவதுபோல ஆங்காங்கே வாசிக்கக் கிடைக்கின்றன.41
வேறொரு தொகுப்பில் உள்ள ஒரு கவிதையில்42 ஆசிரியரின் சுயவிசாரணை வேறொரு விதமாக வெளிப்படுகிறது. கூடவே சில அருவச் சித்திரங்களும் வெளிப்படுகின்றன.
சுழலும் மின்விசிறியின்
விளிம்புகளிலிருந்து
வெட்டுப்பட்ட ஆகாயத்தின் துண்டுகள்
தெறித்து விழுகின்றன.
ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து
ஓரங்களை அவதானித்து
ஒன்றோடொன்று இணைத்து
ஒரு பெரும் சித்திரத்தை
எழுப்ப முயற்சிக்கிறேன்.
யாரோ ஏளனமாகச் சிரிக்கும் ஒலி
கேட்டுக்கொண்டே இருக்கிறது.
கவனத்தை விலக்கிப் பார்க்கிறேன்.
மேசையின் மீதிருக்கும் கழுதை பொம்மையின்
வயிறு குலுங்குகிறது.
மிகநீண்ட கவிதைகள்:
சிங்கையில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களை ஒட்டியோ, வழிபாட்டுத்தலங்கள் சார்ந்த சிறப்பு நிகழ்ச்சிகளிலோ கவியரங்கங்கள் ஏற்பாடு செய்யப்படுவதுண்டு. இக்கவியரங்கங்களில் ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு நீண்ட கவிதைகள் வாசிக்கப்படுகின்றன. இந்த வகைக் கவிதைகள் கூறியது கூறல், விரித்துக்கூறல் என்று மிக விரிவாக எழுதப்பட்டு மேடைகளில் வாசிக்கப்படுவதால், இவற்றில் சொல் விளையாட்டு மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. அந்த சொல்விளையாட்டே அழகியலின் மீது ஒரு கருப்புப் போர்வையைப் போர்த்திச் சுவற்றில் சாய்த்துவைத்துவிடுகிறது. அதேசமயம் வழக்கமான கவிதைகள் போலல்லாமல் சொல்ல வந்த கருத்துக்களை ஆணித்தரமாக, அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் விரிவாகக் கேட்போருக்கு ஐயங்களுக்கு இடமின்றிச் சொல்லமுடிகிறது. படைப்பாளர்களும் பரந்த ஆய்வை மேற்கொண்டு உண்மையான செய்திகளைக் கொண்டுசேர்ப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றனர்.43
ஒரு தளத்திற்கு மேல் சொல் விளையாட்டு, நீதி போதனை, பிரச்சாரம், உணர்ச்சிமிகுதல், தேவைக்கதிகமான புகழாரம், வருணனை, தேய்வழக்கு போன்றவை அரங்கத்தில் கைத்தட்டலுக்காக என்ற எண்ணத்தை ஏற்படுத்திச் சிறிது அயற்சியையே ஏற்படுத்துகின்றன என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இவை ஒரு அரங்கத்தில் வாசித்துக் கேட்பதற்கான கவிதைகளேயன்றி வாசித்து அனுபவிக்க வேண்டிய கவிதைகள் அல்லவே என்ற எண்ணமும் மேலோங்குகிறது. எனினும் தமிழிலக்கிய மரபில் இதுவும் ஒரு பயிற்சி என்ற அளவில் ஏற்புடையதாகவே இருக்கிறது.
காதல் உணர்வைக் கிளர்த்தும் கவிதைகள்:
உயிரினங்களின் அடிப்படை உணர்வான காதலைப் பாடாதவர்கள் கவிஞர்களே இல்லை என்று கூறுகிறார்கள். அந்தக் கூற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் எதிர்பாலினத்தை நோக்கிச் சுரக்கும் அன்பை வெளிப்படுத்தும் கவிதைகள் இயல்பாகவே உணர்வுபூர்வமானவை. பல ஆண்டுகளாகப் பல்வேறு காதல் கவிதைகளை வாசித்தவர்களுக்குத் தெரியும் அவற்றில் பெரும்பான்மையானவை தேய்வழக்குகளைத் தாங்கி வாசகனின் முகத்திலோ அகத்திலோ ஒரு சிறு அசைவைக் கூட ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஆங்காங்கே அழகியலைக் காட்டும் கவிதைகள் இருக்கவே செய்கின்றன.
வணக்கம் திருமணமான பெண்ணே
என்றவளை அழைத்தபோது
தன் சிறகுகளை அசைத்துக்கொண்டாள்.
அது ஒரு பறவை பறப்பதற்கு முன் பார்க்கும்
ஒத்திகை போல இருந்தது.44
நீண்ட காலம் கழிந்தபின் சந்திக்க நேர்ந்த இருவரின் மன உணர்வுகளைப் பேசும்போதுகூடச் சிறகைச் சிலிர்க்கும் ஒரு பறவையின் காட்சி வாசகனுக்கு அனைத்தையும் கடத்திவிடுகிறது.
சிறு சிறு பள்ளங்களில்
சிறுகாலம் தேங்கிவிடும் நீர்போல்
உன் நினைவிருந்தது.45
திருக்குறள் கவிதைகள்:
குறள்களை ஆங்காங்கே மேற்கோள் காட்டுவது, குறளில் உள்ள சொற்றொடர்களைப் பயன்படுத்துவது (உ.ம்: பெய்யெனப் பெய்யும் மழை), ‘அய்யன் வள்ளுவன்’ போன்ற சொற்களைச் செருகுவது மூலம் கவிதைகளில் குறளைத் தொடர்புபடுத்துவது பலகாலமாக நிகழ்கிறது. அதில் ஒரு படி மேலே போய் ஒரு கவிதைத் தொகுப்பில்46 இன்பத்துப் பாலில் 25 அதிகாரங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் பொருளைப் பின்பற்றிக் கவிஞர் தன் கற்பனையைக் கலந்து படைக்கப்பட்ட கவிதைகள் உள்ளன. குறள்களும் அவற்றுக்கான விளக்கங்களும் பரிச்சயம் உள்ள ஒருவருக்கு இவை உரைநடைக் கவிதைகளைப் போலத் தோற்றமளித்தாலும், குறள்களின் உரை வேறொரு வடிவில் காட்சிப்படுத்தப்படும்போது அதிலும் ஒரு விதமான மெல்லிய ஈர்ப்பு – இவர் இதை எப்படிச் சொல்லப்போகிறார் என்ற அளவில் – இருக்கவே செய்கிறது.
முடிவுரை:
கவிதையைப் பற்றி எழுதுவதென்பது கவிதை எழுதுவதை விடவும் கடினமானது என்று விக்கிரமாதித்யன் குறிப்பிடுவார். கவிதையை இரசிப்பதற்கும் அதன் பொருளை உள்வாங்கி அனுபவிப்பதற்கும் ஒரு தனிப்பட்ட மனநிலை வேண்டியிருக்கிறது. அதற்கான கால அவகாசமும் தேவைப்படுகிறது. யாவற்றுக்கும் மேலாக வாசகனின் பரந்துபட்ட வாசிப்பனுபவமும் தேவையாகிறது. ஒரு சிறுகதையைப் போலவோ நாவலைப் போலவோ ஒரே மூச்சில் படித்து நேரடியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
இந்தச் சிக்கல்கள் இன்று நேற்றல்ல. கவிதைகள் பிறந்தநாள் முதலே இருந்துவருபவை. அந்தந்தத் தலைமுறை வாசகனின் வெளியுலக அனுபவமும், வாசிப்பிற்கான ஊக்கமும் அவர்களின் இரசனையும் வாசக அனுபவத்தையும் நிர்ணயம் செய்கிறது. எனவே, படைப்பும் சரி, விமர்சனமும் சரி, இதில் தலைமுறைகள் தாண்டிய ஒப்பீடு என்பது நிச்சயமாக நியாயமான ஒன்றாக இருக்காது.
கவிஞனும் வாசகனும் ஒரே கவிதையை ஒரே தளத்தில் நின்று அணுகிப் புரிந்து ஒரே அனுபவத்தைப் பெறுவது என்பது முயற்கொம்பை விடவும் அரிதானது. எனவே வாசகப் பார்வையும் விமர்சனப் பார்வையும் கவிஞனின் படைப்பூக்கத்துடன் ஒட்டாமல் விலகிச் செல்லும்போது பல்வேறு மனக்கசப்புகள் வெளிப்படுகின்றன. படைப்பைப் பொதுவில் வைத்தபின் அது அனைத்து விமர்சனங்களுக்கும் உட்பட்டது என்று மேடையில் முழங்கினாலும் தனிப்பட்ட அளவில் அதைப் பேணுவதென்பது கடினமே என்பதைச் சிங்கையில் பலரும் பலவிதமாக ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர்.
படைப்பாளிகளுக்கு இருக்கும் அத்தனை இடர்பாடுகளும், வரையறைகளும் வாசகர்களுக்கும் உண்டு. மேலும் மனம் முதிர்வடைய அடைய எல்லைகள் விரிந்து கட்டுப்பாடுகள் தளர்ந்து இரசிப்புத்தன்மையும் மேம்படவே செய்கிறது. தொடர்ந்து வெளியிடப்படும் கவிதைத் தொகுப்புகளும் வாசகர் கருத்துகளுமே இதற்குச் சான்று.
மரபோ, புதுமையோ, எளிமையோ, ஆழமானதோ… கவிதை எப்போதுமே தனக்கென ஒரு தனித்துவமான சுகந்தத்துடன் நம் மனத்தோடு ஒட்டி உறவாடுகிறது. கவிதையைப் படைப்பவனுக்கும் காட்சிகளைச் சிறந்தபடி வெளிக்கொணரும் ஒரு சவாலை முன்வைக்கிறது. ஆனால் அது எழுதுபவன், வாசகன் இருவரிடமும் அதற்கான ஒரு பயிற்சியைக் கோருகிறது. எழுதுபவனின் படைப்பூக்கத்திலும் வாசகனின் அனுபவங்களோடு குழைந்த பலவிதமான புரிதல்களிலும் அது தனக்கான உரத்தை எடுத்துக்கொண்டு செழிக்கிறது. தனது அனுபவங்களையும் படைப்புத்திறனையும் கொண்டு எழுதுபவன் கண்ணாடியின் ஒருபுறம் பாதரசத்தைப் பூசுகிறான். வாசகன் அதில் தன் மனத்தைப் பிரதிபலிக்கிறான். கவிதை அப்படி ஒரு மாயவிளையாட்டு. அந்த மாயவிளையாட்டில் மூழ்கியிருப்பதில் நம் அனைவருக்கும் ஒரு ஆனந்தமே.
நூல்கள் பட்டியல்:
ல.ல.கு.கீ | லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள் | இன்பா |
ப.மா.கு | பதிநாலாம் மாடிக் குடியிருப்பென்பது | பாலு மணிமாறன் |
அ.வீ.ஆ | அடுத்தவீட்டு ஆலங்கன்று | மா.அன்பழகன் |
லீ.பி.த | லீ குவான் யூ பிள்ளைத்தமிழ் | அ.கி.வரதராசன் |
த.கோ.சா.பி.த | தமிழவேள் கோ.சாரங்கபாணி பிள்ளைத்தமிழ் | இளஞ்செழியன் |
க.ம | கலாச்சார மரபணுக்கள் | தி.துரைராஜு |
ஒ.கோ.நி | ஒரு கோப்பை நிலா | சித்ரா ரமேஷ் |
சி.வி | சிங்கப்பூர் விருத்தம் | எல்ல.கிருஷ்ணமூர்த்தி |
க.பூ | கவிதைப் பூக்கள் | ச.அம்பேத்கார் |
த.த | தனிமைத்தவம் | தியாக.இரமேஷ் |
அ.ச | அரங்கேறிய சலங்கைகள் | சி.கருணாகரசு |
கா.க | காற்றாய் கடந்தாய் | சித்துராஜ் பொன்ராஜ் |
கா.பெ | காலப் பெருவெளி (தொகுப்பு) | பல்வேறு கவிஞர்கள் |
அ.கா.யா | அங்குசம் காணாத யானை | பிச்சினிக்காடு இளங்கோ |
அ.சொ | அவநிதாவின் சொல் | நீதிப்பாண்டி |
கா.சூ | காந்தள் சூடி | சத்ரியன் |
அ.சி | அன்பின் சிறுபொழுதுகள் | பாலு மணிமாறன் |
கா.வ.கா.சொ.வ | காதல் வங்கி: காதலிக்கச் சொல்லும் வள்ளுவர் | பிச்சினிக்காடு இளங்கோ |
ஏ அ இ | ஏற்றம் அளித்த இருநூறு | அ.கி.வரதராசன் |
ஒ பு ம | ஒரு புத்த மதியம் | மஹேஷ் குமார் |
க நா பொ | கடல் நாகங்கள் பொன்னி | இன்பா |
ஞா பெ | ஞாபகப் பெருங்களிறு | மோகனப்பிரியா |
[1] ல.ல.கு.கீ, பக் 43
[2] ல.ல.கு.கீ,பக் 68
[3] ப.மா.கு,பக் 49
[4] ப.மா.கு,பக் 35
[5] ப.மா.கு,பக் 69
[6] ந.ந.கூ,பக் 22
[7] ஒ.கோ.நி பக் 42
[8] கா.க பக் 71
[9] கா.க பக் 74
[10] கா.பெ
[11] அ.கா.யா
[12] அ.சொ
[13] கா.சூ
[14] கா.க பக் 35
[15] க நா பொ பக் 23
[16] ஞா பெ பக் 19
[17] கா.க பக் 15
[18] காக பக் 38
[19] அ.வீ.ஆ
[20] த.கோ.சா.பி.த
[21] லீ.பி.த
[22] சி.வி
[23] சுட்டி
[24] ஏ அ இ
[25] ஒ.கோ.நி பக் 74
[26] ப.மா.கு,பக் 38
[27] ப.மா.கு,பக் 76
[28] ஒ கோ நி பக் 34
[29] த.த பக் 59
[30] க.ம
[31] த.த பக் 83
[32] அ.வீ.ஆ பக் 12
[33] அ.வீ.ஆ பக் 109
[34] அ.வீ.ஆ பக் 101
[35] க.பூ பக் 63
[36] க.பூ பக் 90
[37] க.பூ பக் 78
[38] க.பூ பக் 52
[39] ஒ.கோ.நி பக் 37
[40] த.த
[41] த.த பக் 61
[42] ஒ பு ம பக் 35
[43] அ.ச
[44] அ.சி பக் 25
[45] அ.சி பக் 119
[46] கா.வ.க.சொ.வ
மஹேஷ் குமார்
தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிவருபவர். கவிதைகளை மொழிபெயர்ப்பதில் ஆர்வம். நல்ல கவிதைகள் எழுத முயல்பவர்.
கவிமாலை ஏற்பாடு செய்திருந்த சிங்கப்பூர்-மலேசியா கவிதை ஆய்வரங்கத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை.


