பல்லூழிக் காலப் பெரும் பூ
என் அன்னை கிளம்பும் போது
அவள் கைகளில் இருந்த
பழம்பெரும் பூங்கொத்தை
எனக்குக் கொடுத்துச் சென்றாள்
நான் அதிலிருந்த பூ ஒன்றின்
சிறு விதையை
என் வீட்டுத் தொட்டியில் பதியமிட்டேன்
மெல்ல கண் விழித்தது
ஆயிரமாண்டு தாவரம்.
பின்பு ஒரு நாள்
நான் கிளம்பும் முன்பு
அதில் பறித்த மலர்கொண்டு
ஒரு பூங்கொத்து தயாரித்து
உன் கைகளுக்குத் தருவேன்
அதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
மகளே
என் கோடி நூற்றாண்டுப் பூவே!
என் வனம்
நான்கு மணி நேரப்பறத்தலில்
மூவாயிரம் கிலோமீட்டர் கடந்து
இந்நிலத்திற்குள் இறங்கிவிட்டேன்
இங்கு வந்தவுடன்
முதலில் எனக்கான
பூவைத்தான் தேடினேன்
பெரும் வனமே கிடைத்தது
சீன லட்டு
அடுக்குமாடிக் கூடாரங்களைப் பெருக்கும்
சீனப் பாட்டியிடம் முந்தைய தீபாவளிக்கு
இரண்டு லட்டுகளைக் கொடுத்தேன்
அவருக்கு வயது
அறுபதோ எழுபதோ இருக்கலாம்
இனிப்பே பிடிக்காதவள்
ரசித்துச் சாப்பிட்டேன், என்றாள்
பிறகு அவளைப் பார்க்கவேயில்லை
நேற்று
திடீரென எதிரில் நடந்து வந்தவள்
யார் நீ? என்பதுபோல்
பார்த்தும் பார்க்காமல்
கடந்து செல்கிறாள்
லட்டு… லட்டு… என அலறுகிறேன்.
லட்டு இப்போது கசக்கிறது