சலோமியின் மீன் பருவக் கண்கள்
1
யேசுவின் மூன்று சீடத்திகளில் ஒருவள்
சலோமி.
யேசு உயிர்த்துவிட்ட பிற்பாடும்
‘கல்லறையில் யேசுவைக் காணவில்லையே’ எனக்
கலங்கிய மூவருள் ஒருவள் சலோமி.
இல்லையில்லை
யேசுவின் காதலிகளில் ஒருத்தியே சலோமி.
அவையெல்லாம் கிடையாது,
சலோமி என்பவள் யேசுவின் பன்னிரு சீடர்களில்
இருவருக்கு அம்மா.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
யேசுவின் தாய் அருள்நிறைக் கன்னி மரிக்கு
நேரிளையத் தங்கையவள்.
ஆக, அவள் யேசுவுக்கு அருள்நிறைச் சித்தி.
இவையெதுவும் உண்மையல்ல
கன்னி மரிக்குப் பிரசவத் தொண்டுசெய்த
மருத்துவத் தாதி சலோமி.
ஆண் வாசம் அறியாமால் பிள்ளையீன்ற கன்னி மரிக்கு
இரண்டாம் சாட்சியானவள் சலோமி.
யேசுவை முதன்முதலில் கிறிஸ்துராஜா என
மனத்தில் கண்டுகொண்டவள் சலோமி.
கொதியெண்ணெய்க் கொப்பரைக்குள் விழுந்து
எரிக் காயங்களின்றி மீண்ட
புனித யோவானைப் பெற்றவள் சலோமி.
மேக்தலீனாவின் பரிமளத் தைலத்துக்குத்
தன்னிரு பாதங்களைக் கொடுத்தார் யேசு.
வெரோனிக்காவுக்குத் தன் பாடுகளின் ரத்தமுகத்தை
ரோஜாவாக்கிக் கொடுத்தார்.
சலோமிக்கு ஏன் ஒன்றும் தரவில்லை?
இவற்றையெல்லாம்விட முக்கியம்
எங்களூரிலும் ஒரு சலோமி வாழ்ந்தாள்.
அகலக் கால் எட்டவைத்து நடக்கும் ஆண்மூச்சுக்காரி.
அவளின் மீன் பருவக் கண்களில் மூழ்கி
எதிர்மீன்கள் பிடித்து மண்ணுக்குள் போனார்
ஜான் கார்ல் மாக்ஸ் மாமா.
அவர் கல்லறைக்கு மாதா சாம்பிராணி தூபமிடத்தான்
நான் இப்போது போய்க்கொண்டிருக்கிறேன்.
சலோமியின் மீன்பருவக் கண்கள்
2.
சலோமியிடம் ஒரு மனக் கடிகாரம் உண்டு.
உலைக்கால் விண்மீன்கள் வானில் பூக்கும்
‘மீ’அதிகாலையில் கண் விழிப்பாள்.
அவித்த நெல்லை தலைச்சுமைந்து அரிசியாக்க
கால் மணிக் காலத்தில் அரைக் கி.மீ. கடப்பாள்.
இரு வருடங்களுக்கு ஒரு பிள்ளை கணக்கில்
நான்கு வருடங்களில் மூன்று பிள்ளைகள்.
ஆம்… அதொலொன்று ரெட்டைப் பிரசவம்.
எப்போதும்
புயல் வேகம் புயல் வேகம்.
மரணத்தையும் தாண்டிப் பாய்ந்துவிட்டாள்.
ஆனால், அவள் பனியீர நத்தை.
அவளின் மீன்கள்
கண்ணீரை உண்டு தண்ணீரைச் சுவைத்த கதை
உங்களுக்குத் தெரியாமல் இருக்கட்டும்.
சலோமியின் மீன்பருவக் கண்கள்
3
சலோமியின் கண்களில்
மீன் பருவம் துள்ளிய தொடக்கத்தில்
தூண்டில்களை வெறுத்தாள் இல்லை.
அவற்றைத் தாண்டிப் போய் நீந்தினாள்.
நீந்தினாள் எனவும் சொல்வதற்கில்லை.
பொறிகளுக்கு ஒதுங்கினாள்.
ஒதுங்கினாள் என வரையறுக்க முடியாது
அவள் நீரிலேயே இல்லை.
‘சலோமி இல்லை’ என்று சொல்லிவிட முடியாது
இருக்கிறாள் ஒரு விரியனுக்கு இணைவியாக.
சலோமியின் மீன்பருவக் கண்கள்
4
சலோமி பிறந்தபோது
அவள் வீட்டுக் கூரையில்
இரு எரிவிண்மீன்கள் இறங்கின.
அவ்விண்மீன்களே
பருவத்தில் கண்களிலும் ரவிக்கைக்குள்ளும்
ஒளிரும் தனிமமாக அவளை மாற்றின
இரவில்.
சலோமியின் மீன்பருவக் கண்கள்
5
சலோமியும் மலர்க்கொடியும்
மனம் நெருங்கிய தோழிகள்.
இருவரும்
சிறுபாவாடை கட்டிய பொன்வண்டுகளாகப்
பறந்து பறந்து சுற்றிவந்தார்கள்
பால்ய வனத்தில்.
ஒரே ஊர்தான் என்றாலும்
பதின்பருவத்தில் இருவரும்
தனித்தனியே பிரிந்திருக்கப் பழகினார்கள்.
அவர்கள் இருந்த இடம்
அவரவர் வீடுகளாய் இருந்தன.
வாசல் தாண்டி வெளிவருவதற்குள்
பொன்வண்டுகளை ஈசல்பூச்சிகளென
நம்பவைத்தனர்.
பிறகுதான்
கல்யாணத் தீப்பெட்டியில்
பொன்வண்டுகள் தனித்தனியே அடைந்தன
வெவ்வேறு ஊர்களில்.
பொன்வண்டுகளுக்கு
மரக்கிளையில் வாழ்வதைவிட
தீப்பெட்டிக்குள் வாழ்வது சலித்தபோது
சலோமிக்கு இரண்டு குட்டிப்பொன்வண்டுகள்.
மலர்க்கொடிக்கு
மூன்றாமாண்டு நினைவு அஞ்சலி நாள்