1)
குளத்தின் மேற்பரப்பில் சொற்களைப் பரப்பி வைத்து
கரையில் அமர்ந்து கல்லெறிகிறேன்
அழகழகாய்த் தெறிக்கின்றன
சொற்கள்
2)
பூமி ஓர் இடத்தில் துக்கத்தில் கசிந்தது
மரங்களின் எல்லா இலைகளும் துக்கமாக இருந்தன
வானம் லேசாகத் தூரலிட்டு
அழத் தொடங்கியது
ஏனின்று உலகம் துக்கமயமாக இருக்கிறது என்று கேட்டேன்
சந்தோஷங்கள் அனைத்தும் இன்று துக்கத்தின் வேடம் தரித்து
நடித்துக் கொண்டிருக்கின்றன என்றார்கள்
சந்தோஷங்களுக்கு
இப்படி ஓர் ஆசையா
3)
அ)
புயல் காற்றையும் இளங்காற்றையும் அந்த மரம்
ஒரே மாதிரி வரவேற்கிறது
எனக்குத் தெரிந்து நிச்சயமாக
அந்த மரம் புத்தனாகிவிட்டது
ஆ)
ஒரு பட்டாம்பூச்சி
என் வீட்டு வாயில் படிக்கு
உள்ளேயும் வெளியேயும் பறந்து கொண்டிருக்கிறது
நான் வெகு நேரமாக வாசலிலேயே காத்திருக்கிறேன்
இ)
பறவையின் வயிற்றில் அமர்ந்து
விதைகளாகப் பறந்து செல்கிறது மரத்தின் கனவு
ஈ)
உறவுக்கு முன்பான கணங்கள்
உறவுறும் கணத்தை விட மகத்தானவை
உ) இந்தத் தோட்டத்து மலர்கள் ஒவ்வொன்றும்
தண்னொளி வீசி தனிமையில் மூழ்கி இருக்கிறது
பூப்பதை விட ஒரு நற்செயலை செடியால் செய்ய முடியாது
4) வெறிச்சோடி கிடக்கும்
மதியத்தின் வீதியில்
சொர்க்கத்தில் இருந்து தப்பி வந்த
பொன்னிற நிழல்கள் நடந்து செல்கின்றன
அதன் பாத சுவடுகளை உருகி உருகி
காதலிக்கிறது மஞ்சள் வெயில்
5)
நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது
திடீரென நான் காணாமல் ஆகிவிட்டேன்
வெட்டவெளியில் இருந்து ஓர் உருவத்தை
அழிப்பான் கொண்டு அழிக்க முடியும்
என்பதை அவரால் நம்ப முடியவில்லை
மாய உலகத்தின் புதிர் பாதையில்
என்னை உடைத்து உடைத்து
வழியெல்லாம் போட்டுக் கொண்டே செல்கிறேன்
காத்திரு நண்பனே
சரியாக வழி கண்டுபிடித்து
உன்னிடம்
திரும்ப வந்து விடுகிறேன்
6)
புல் நுனி ஒரு பனித்துளியின்
மதிப்பை உயர்த்திப் பிடிப்பதைப்போல
நானுன்னை
உயர்த்திப் பிடிக்கிறேன்
சிந்தி விடாதே கண்ணே
வெறும் நீர் தீற்றலாக
7)
நான் விழித்திருக்கும் போது
கனவு தோன்றுகிறது உறங்கும்போது
நினைவு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது
நான் கனவிழந்து
மருத்துவ மனையில்
அனுமதிக்கப் பட்டிருந்தேன்
என்னைப் பரிசோதித்து
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள்
மனநிலையிலும்
நல்ல முன்னேற்றம் இருக்கிறது விரைவில் இவருக்கு
கனவு திரும்பி விடும் என்று
8)
அவ்வளவு கோபமாகச் சொல்ல
வேண்டிய விஷயத்தை
இவ்வளவு செல்லமாக உன்னால்
எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்கிறாய்
ஒன்று உனக்குச் சொல்லட்டுமா
என் மனக்காட்டின்
சொல் விலங்குகள் அத்தனையும்
அவ்வளவு இளங்குட்டிகள்
அவற்றை அப்படியெல்லாம்
அழுத்தி உச்சரிக்க முடியாது
9)
என் உயிர்ப்பும் துடிப்பும் கண்டு
ஒரு படகுக்குரிய மரியாதையை
நீர் எனக்கு வழங்குகிறது
நான் மிதக்கிறேன்
நீரில் ஏற்றப்பட்ட
திருவிளக்கை நோக்கி
கிழக்கு முகமாக நீந்துகிறேன்
எதையும் நனைக்கும் நீரால்
எனக்குள் மிதக்கும் எண்ணங்களை
நனைக்க முடியவில்லை
10)
இளம் காலை நேரம் படுக்கையை
விட்டு எழுந்து அமர்கிறாள்
பௌர்னிகா
அருகில்
ஆடை கலைந்து
குழந்தையைப் போல
படுத்திருக்கும்
கணவனைப் பார்த்து
புன்னகைத்தாள்
அவன் மார்பில்
ஒட்டி இருந்த
ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில்
வைத்துக் கொள்கிறாள்.