மௌன நாற்காலிகள்
ஏதோ
ஒரு குழந்தைதான்
கடைசியாய் அமர்ந்திருக்கவேண்டும்
அதன் பின்
யாருமே சீண்டாத
ஒரு நாற்காலியின் கதை
என்னிடம் உண்டு
மஞ்சளாய்க் கரை படிந்து
கைப்பிடிகளின் நிறம் மங்கி
அமர்ந்து அமர்ந்து
வழுக்கிய இருக்கை
கொஞ்சமாய் உள்வாங்கி
பள்ளமாகிவிட்டது
சாப்பாட்டு மேஜையின்
கால்களுக்கு இணையாக
வளர்ந்து நிற்கும் கால்கள் அதற்குண்டு
அதில் உணவுக்கான
தட்டை வைக்கலாம்
தண்ணீர் குவளை வைக்கலாம்
பால் போத்தலை வைக்கலாம்
சத்தமிட்டு விளையாடும் பொம்மையை
அங்கே ஒட்டி வைக்கலாம்
அப்போதும் கூட
அமர்ந்திருக்கும் குழந்தை
ஒருபோதும் திருப்திகொள்ளாது
அருகிலுள்ள
மேசைக்கே தாவ முயலுகிறது
துயர் போக்குபவள்
பயம் காட்டிவிட்டேன்
நீ சொல்லிவிட்டதால்
எத்தனையோ ரகசியங்களை
உள்ளுக்குள் புதைத்துவிட்டவனை
மண்ணுக்குள் புதைக்க
ஏன் நினைக்கிறார்கள்
உழைப்பையும் அன்பையும் தவிர
என்னால் ஏதும் கொடுக்க
முடியாதபோது
அத்தனையையும் மொத்தமாக
பெற்றுக்கொண்ட பின்
இந்தச் சக்கையை ஏன்
சாகடிக்கப் பார்க்கிறார்கள்
நீ சொல்வது எப்போதும்
சரியாகவே இருக்கிறது
அன்பே
நான் பேசிவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் பிரசுரித்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் உண்மை முகத்தை ஊருக்குக்
காட்டிவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் புகாரளித்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
மொத்தத்தில்
நான் வளர்ந்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
வளர்தல் அத்தனை ஆபத்தா சொல்
ஒருவேளை அவர்கள் கண்டுகொண்டிருக்கலாம்
இழப்புகளை சந்தித்தவனிடம்
யார் குறித்தும் அச்சமிருக்காது
அன்பே
என் நம்பிக்கைப்போல
உனக்காகத் தொடங்கிய இந்த
வரிகள் கூட
எங்கெங்கோ சென்றுவிட்டன
எல்லாவற்றுக்கும் மேலாக
நீயும் வருந்துகிறாய் என்பதில்
என் சாத்தானில் கொஞ்சம்
கொம்புகள் முளைவிடும்
அடையாளக்குறி தென்படுகிறது