கனவில்
புழுவாய் உறங்கிய நான்
விழித்தபோது
வண்ணத்துப்பூச்சியாக
கனவில் யார்
முத்தமிட்டது
வாழ்வு
உதிர்ந்து போவதில்
வருந்துவது ஏன்?
அடர்வதற்கும்
விழுவதற்கும் இடையிலான
நொடிப்பொழுதில்
ஒரு பறவை
அதன் வாழ்வை
வாழ்வதில்லையா?
கண்டபோது
கனவில் சொன்ன
வார்த்தைகளில்
மனம் பூத்துப் போனது
கண்டபோது சொல்லாத
வார்த்தையில்
இல்லாமல் போகிறேன்
இறந்தவரின் வீடு
தாஜ்மஹால்
ஆவதில்லை
உலகத்தின் எந்த வீடும்
ஆனால் எந்த வீடு தாஜ்மஹால்
ஆகின்ற
ஒரு கண நேரம் உண்டு
நினைக்காமல்
பொறுமை இழந்தோ
அல்லது
வேறு எப்போதாவதோ
ஒருவர் தன் வீட்டைச்
சவக்குடியிருப்பு என்று
சொல்லும்போது
தொட்டுத் தழுவிச் செல்கையில்
ஒன்று
காதலிக்கும் இருவர் தொட்டுத் தழுவி செல்கையில்
சுருட்டி வைத்த பாயை விரித்து எடுக்கிறார் கடவுள்
பாதையின் மென்மையை தெரியாமல் போனாலும் அவர்கள்
பூமியிலிருந்து மிதந்து
நடக்கின்றனர் அந்த நேர நடையென்பதால்
இரண்டு
காதலிக்கும் இருவர் தொட்டி தழுவிச் செல்கையில் வார்த்தைகள் நிறைத்து வரும்
கடவுளின் புகைவண்டி தடம் மாறும்
என்றாலும்
ஒரு வார்த்தை கூட
அதிலிருந்து எடுப்பதில்லை
அவர்களுக்கு இடையில்
மொழியின்றி பேச
அப்போது அவர்கள் கற்றுக் கொண்டதால்
மூன்று
காதலிக்கும் இருவர் தொட்டுத்
தழுவிச் செல்கையில்
அவர்களுக்கு இடையில்
கொடுக்கப்படும்
காலம்
ஒரு நொடியில் மறையும்
என்றாலும்
அதைப் பார்ப்பது இல்லை
யுகங்களுக்கு முன்னால்
புறப்பட்டவர் ஆதலால்
நான்கு
கடைசியில் பொறுமை கெட்டு
ஒருவர் நிற்கும் இடமாகச்
சிறிதாகி விடுகிறது பூமியின்
அளவும்
அன்று முதலாகி
கடவுளின் மனதில்
நிறைவடைவார்கள்
Translated by Dr.Sajan & Dr.Natasha
இருப்பு
ஒன்றாம் வகுப்பில்
கையும் காலும்
மடித்துs சேர்த்து
முதுகு வளைத்து
இருக்கக் கற்றது
நினைவுள்ளது.
தண்டனையாக மட்டுமே
கிடைக்க நேர்ந்த
நிற்பை
பயந்து
அடக்கி வெளியிட்ட
அசைவுகள் மூலம்
சாமர்த்தியம் காட்டி
இருக்கைகளுடன்
இசைந்து
இருந்து
உலகைச் சுற்றி வந்தேன்
பலமுறை
எனினும்
என்னளவு பொறுமை இல்லை
என் இருத்தலுக்கு
இருக்கையிலேயே
இருத்தல் என்பதில் சலித்து
ஒரு நாள் எழுந்து சற்றே
நடந்தது
என் இருத்தல்
அதிக தூரம்
போகவில்லை
பழக்கமில்லையல்லவா
வழி முட்டி
திரும்பி வந்து
மன்னிப்பு கோரி
என் முன் விழுந்தது
இப்போது
எழுதுவதற்கான
எழுச்சிகள் ஏதுமில்லை
இருக்கையே இருத்தலாக
இருந்தேன்.
Translated by Jeyamohan
வீரான் குட்டி – மலையாள கவிஞர். பதினொரு கவிதைத்தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. குழந்தைகளுக்கான மூன்று கவிதைத் தொகுதிகளையும் இரண்டு கதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். பி.குஞ்ஞிராமன்நாயர் விருது, செறுசேரி விருது மற்றும் முக்கியமான கவிதை விருதுகளையும் பெற்றுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மடப்பள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் மலையாளப் பேராசிரியராக பணிபுரிந்தவர்.