சரஸ்வதி
நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் உரசுகின்றன
ஒரு நதி
மின்னலென நெளிகிறது
உன் நாதம்
ஒரு கவிதையாகிறது.
#
பெரும் கலவரம்
நடந்த குளம்
ரத்த சிவப்பு
கரையில் இருக்கிறது
வீணை கரையில்
இருக்கிறது
கரை கரையில் இருக்கிறது
குளம் எங்கே போனது
மரம் எங்கே போனது
யானை எங்கே போனது
செருப்புகள்
மிதந்துகொண்டிருக்கின்றன
கட்டைகள்
துணிகள்
மிதக்கின்றன
ஆழத்தில் கிடக்கிறது
ரத்தக்கறை நீங்காத அரிவாள்
அதனை நீர் மீட்டுகிறது
வெள்ளைத்தாமரை செஞ்சிவப்பு ஆகிறது
#
நதி சுழித்தோடுகிறது
சூரியன் எழுந்து வந்து பார்க்கிறது
ரதி சிரிக்கிறது
தீர்த்தங்கரன் சிரிக்கிறான்
வாக்தேவி சிரிக்கிறாள்.
மறை
எடையிலிருந்து
வானத்தைப் பிரிக்க முடியாதது போல்
உன் நீலம்
நகரமே ஒரு தீப்பெட்டியாய் இருக்கிறது
விடுதலையின் நெருப்பு
உரசுகிறது ஒரு குப்பைக்கும்
இன்னொரு குப்பைக்கும் இடையே
தொலை தூர
வான் முகடுகள்
மலைகள்
ஒரு தைல வண்ண ஓவியம்
உன் காய்ச்சல்
எச்சில் துப்பும்போது
எரிமலை கரிக்கிறது
மீன்குஞ்சுகள் நீந்துகின்றன
அறை எங்கும்
இரு மாத்திரைகள்
சிறகு விரிக்காது
பறக்கின்றன
பணியிடங்களில் புகை பிடிக்காதீர்
ஒரு பாம்பை இன்னொரு
பாம்பு
எப்படி விழுங்கும்
திறக்கும் கதவு
சேர்ந்தே மறையும்
திறத்தல் மறையும்
திறவாமை மறையும்
திறவின் பெருஞ்சுடர்
சேர்ந்தே மறையும்
மறையும் மறையும்