அகாலம்
செத்தவன் கால்களை மடக்க
மீண்டும் உயிர்த்தது போல
அந்த கரப்பான் பூச்சி
மல்லாந்தபடிக் கணுக்கால்களை அசைக்கிறது
ஒவ்வொரு முறை கதவு திறக்கும் போதும்
எங்கிருந்தோ முகம் காட்டிவிடுகிறது
கழிவறை பீங்கான் வழவழப்பில்
ஒலியேயின்றி நடக்கிறது
சில நேரங்களில் நடப்பதும்
சில நேரங்களில் ஓடுவதும்
சிலநேரங்களில் மல்லாந்து படுத்துச்
சிரிப்பதுமே வழக்கமாகிவிட்ட வேளையில்
பறப்பதற்குச் சிறகிருந்தும்
பறக்காமல் இங்கேயே சுற்றிச் சுற்றி
அப்படி
என்னதான் கண்டுவிட்டதோ
இந்தக் கழிவறையில்?
நானல்லாத நேரங்களில்
என்னதான்
செய்யுமோ துணையற்ற அது
ஓய்வறைக்குள் நான் நுழையும்போதெல்லாம்
ஒருவருக்கொருவர் உற்ற துணையாகிறோம்
இத்தனைக்கும் எதுவும் பேசிக்கொள்வதில்லை நாங்கள்
ஓய்வாகப் படுத்துக்கிடக்கிறது இப்பொழுது
அசைவின்மை வெகுநேரம்
அல்லது
வெகுநேர அசைவின்மை
எப்பொழுதும் போலான
நடிப்பென்று நெருங்கி உற்றுப்பார்க்கிறேன்
அகாலத்தின் எறும்புக்கோடு நீட்சியடைகிறது.
தண்டுக்கீரை உண்பவன் சந்தர்ப்பங்கள்
1.
அதிகாலையில் கீரை விற்பவர் மூலமாக
வாய்ப்புகள் கதவைத் தட்டுகின்றன
வேண்டாத பொழுதும்
உருகி ஓடும் பனியாறுகளாகச்
சிவப்பு நிற வெல்வெட் பூக்களை
குருதி ஒழுகுவதுபோல மலர்த்தும்
தண்டுக் கீரையைப் போல்தான்
சந்தர்ப்பங்கள் குவிகின்றன
எளிதான செரிமானத்தில் மீளும்
பண்புகளைப் பட்டியலிடுகிறீர்கள்
அவை அமைதிப்பள்ளத்தாக்கின்
மோன வசீகரமாகத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன
ஒடிந்த தண்டு துண்டுகளையும்
பச்சையம் பிரகாசிக்கும் சிற்றிலைகளையும்
வேகவைக்கும் அடுப்பும் உங்களிடம்தான் உள்ளதே
சூழலில் நல் வாசமிக்க பொரியல்
அல்லது
பருப்பு கலந்த கூட்டு
அல்லது
கரும்புளி கலந்த கடைசல்
காரத்திற்குத் தூக்கலாய்
நான்கு மிளகாய்கள்
நால்வகை மிளகு சந்தர்ப்பங்கள்
உங்கள் மகிழ்ச்சிக்காக
ஒரு கட்டு தண்டுக்கீரை
வாய்க்கும் சந்தர்ப்பத்தில்
எவ்வித குற்ற உணர்வுமின்றி
பயன்படுத்த முடியுமென்றால்
உங்களை விட யோக்கியர்
யாருமில்லைதான் .
2.
உங்களை
நீங்களே பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள்
நிலைக் கண்ணாடிகளில் வாய்க்கும் போது
நீங்களல்லாத ஒரே ஒருவர்தான்
நிலைக்கண்ணாடிகளில் இருந்து
அதி யோக்யதையுடன்
உங்களைப் பார்த்து விடுகிறார்
நிர்வாணத்தைச் சகியாதவர்
அங்கிருந்து நகர்வது நல்லது
அதனினும் நல்லது
வெகு யோக்யமாக
கண்ணாடியைச் சுக்குநூறாக
உடைப்பது.
3.
உங்களை நீங்களே
நேசிக்க இயலாத சந்தர்ப்பங்களில்
பிறரையும் நேசிக்க இயலாததுதான்
யோக்யத்தனத்தின் சுவாரஸ்யம்.
மழைவீழ் துளியைத் தடுக்க முடியாதது
ஒரு துக்கத்தைத் எற்படுத்துகிறது
ஒரு போதும் உங்கள் மரணத்தை நிறுத்தி வைக்க முடியாதது
மேலும் துக்கத்தை வரவழைக்கிறது.
ஒருபோதும் பின்னோக்கித் திரும்பாத
காலம் போல
கண்ணாடியில் தெரிகிற
உங்கள் கன்னங்களில் உங்களால்
யோக்யதையோடு
ஒருபோதும்
முத்தமிட முடியாமல் போவதும்
நிகழ்ந்து விடுகிறது.
4.
கேதச் சடங்குக்குச் சென்று
வேட்டியைக் காவிரியில்
மிதக்கவிட்டு
கோவணத்தோடே வீடு வருகிறேன்
நீர்மாலை கொணர்ந்த பெண்கள்
அடிபம்பில் பிடித்த நீரைச்
செத்தவன் பயன்படுத்திய சொம்பில் ஊற்றி
பின் கொசுவத்தை நனைத்தபோது
கடிக்கவந்த நாய்களுக்கு
யோக்யதை என்பதே கிடையாது
விவஸ்தை கெட்ட நாய்கள்
யோக்யதை இருந்திருந்தால்
அய்யோக்கியனான என்னைக் கடித்திருக்குமா
கெட்டதுக்கும் நல்லதுக்குத்தான்
என் அய்யோக்கியத்தனமெல்லாம்
அந்தச் சதையோடு.