பொம்மி
என்ன பெயர் அது
யாரின் பெயர் அது
என எப்போதுமான கேள்வி
ஒன்று
என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது
இனிமேலும் ஓட முடியாது
ஓடுவதற்கு தூரமும் கிடையாது
ஒரு குழந்தையை நீங்கள்
எப்போது தூக்கிக் கொஞ்சினீர்கள்
எப்போது கண்டித்தீர்கள்
எப்போது குதிரை ஏறி விளையாட்டு காட்டினீர்கள்
எப்போது சிரிக்க வைத்தீர்கள்
உங்கள் உள்ளங்கை குழந்தையின்
சூட்டை எவ்வளவு நேரம் சேமித்தது
எனக்கு இன்றுவரை அது
சேமிப்பிலேயே இருக்கிறது
கூடவும் இல்லை
குறையவும் இல்லை
கொஞ்சமும் மாறாத இளஞ்சூட்டு
கதகதப்பை இன்றுவரை உணர்கிறேன்
எப்போது கூட உணரவே செய்கிறேன்
சில ஆண்டுகளுக்கு முன்பாக
அப்பா ஆவதற்கான
அடையாளத்தை கண்டதும்
கைகால்கள் நிற்கவில்லை
பூமி காலில் படவில்லை
தயாரானோம்
எல்லாவற்றையும் சேகரிக்க
செய்தோம்
ஆடைகள் சேர்த்தோம்
ஆரோக்கிய அறிவுரைகளைத்
தேடிக்கொண்டோம்
மாதங்கள் மறைந்தன
திடீரென இரவில்
நீ வருவதற்கான வெளிச்சம்
ஒரே பரவசம்
ஒரே குதூகலம்
ஆனால் அதற்கு
இன்னும் மாதங்கள் உண்டு
இத்தனை ஆவேச அவசரம் கூடாதே பொம்மி
அப்போதுதான் உன்னை
முதன் முதலில் பார்த்தேன்
உன் வாசம் உணர்ந்தேன்
அம்மாவின் அலறலில்
அவள் அடிக்காலில்
இருந்து நீ
வழிந்து கொண்டிருந்தாய்
அள்ளி எடுத்து அணைக்க
காத்திருந்தவனுக்கு
அள்ளி எடுக்க மட்டுமே முடிந்தது
அணைக்க வாய்க்கவில்லை
என் விரல்களில் இடுக்கிலிருந்தும்
நீ வழிகிறாய்
என்னால் உன்னை நிறுத்த முடியவில்லை
தடுக்க முடியவில்லை
உனக்கோ எதுவுமே தெரியவில்லை
துள்ளிக் குதித்து வழிந்தோடிக் கொண்டிருந்தாய்
உன் கறுஞ்சிவப்பு வண்ணத்தையும்
இளஞ்சூட்டு ஸ்பரிசத்தையும்
இறக்கி வைக்க திராணி இருக்கவில்லை
அப்படியே என் மார்பில் பூசிக்கொண்டேன்
நீ உறங்க வேண்டும் என்பதற்காய்
நான் சத்தமாகக்கூட அழவில்லையடி பொம்மி
அன்று தொடங்கி
என்றைக்குமான
நித்திய குழந்தையாய் நீ
நிரந்தரமான பொம்மியாக
எனக்குள்ளே நுழைந்து விட்டாய்
தயாஜி.
முன்னாள் வானொலி அறிவிப்பாளர். புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை எனும் இணைய அங்காடி வைத்துள்ளார். இதுவரையில் ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ என்ற பத்திகள் தொகுப்பும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல – 101 குறுங்கதைகள்’ தொகுப்பும் , ‘பொம்மி’ கவிதைகள் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ எனும் பதிப்பகத்தையும் தொடங்கியுள்ளார்