நேற்றுத்தான் ஒன்று வந்தது போலிருந்தது
அதற்குள் முகத்தை மாற்றிக்கொண்டுவிட்டது
ஒரு திரிபுருவுக்கும் இன்னொன்றுக்குமிடையே
காலம் குறையக் குறைய
எனக்கும் உனக்குமிடையே
தூரம் அதிகமாகி மேலதிகமாகிறது
இப்போதெல்லாம் உன் முகபாவனைகள் மாறிவிடவில்லையே
பேசும்போது இப்போதும் உன் வலது புருவத்தை உயர்த்துகிறாயா
உன் விரலசைவில் இப்போதும் சிறு குருவிகள்
உன் நாற்காலியின் கைப்பிடியில் வந்தமர்கின்றனவா
நான் ஒப்பனை செய்துகொண்டு
பல மாலைகளாகிவிட்டன
களைப்புற்றிருக்கிறேன்
ஒரு நினைவிலிருந்து
இன்னொரு நினைவுக்குக் கூட
இப்போதெல்லாம் ஊர்ந்து செல்கிறேன்
ஊர்ந்து ஊர்ந்து
எப்போதாவது பழைய இடத்துக்கு
பாழ்காலமாகிவிட்டதற்கு
முன்னாலான இடத்துக்கு
நீயும் நானும் முத்தமிட்டுக்கொண்டிருக்கையில்
முழுநிலா ஒரு நொடி நம்மேல் கவிந்து
அணைத்துக்கொண்ட பொழுதுக்கு
எத்தனை வட்டமாக
பிசிறற்ற ஒழுங்காக
அன்று வரைந்தோம் பிரியத்தின் எதிர்காலத்தை?
Leave a comment