1. சூரியனோடு உதித்து பூக்களோடு மலர்ந்தவர்
அவர் உங்களுக்கு முதுகு சொரிந்துவிடுவதில்லை
சுடும் உண்மையால் முகத்தில் அறைகிறார்
கடும்பாறை மண்டையில் சம்மட்டி அடி அடிக்கிறார்
விழிப்புற்றால் அவரது தீவிர அபிமானி ஆகிவிடுவீர்கள்
வலித்து அஞ்சி ஓடினால்
பெரும் கூட்டத்தின் மைய நீரோட்டத்தில் ஒருவராக
உங்களைத் தக்கவைத்துக்கொள்வீர்கள்
நான் ஒரு தவறு செய்துவிட்டேன்
அந்த தாடிப்பயலின் அறைகளையும் அடிகளையும்
பேருவுகையோடு தாங்கிக்கொண்டு
அவரது சீடன் ஆகி உண்மையின் பக்கம் சேர்ந்துவிட்டேன்
இல்லாவிட்டால்
அறியாமை, மூடநம்பிக்கை, ஆன்மீக அடிமைத்தனம்,
பொய், புரட்டு, ஏய்ப்பு, ஆதிக்கம், மதவெறி, தீவிரவாதம்,
ஜாதி, மதம், இனம், மொழி, கட்சி, குழு, கோட்பாடு
என்று கூட்டம் சேர்ந்துள்ள
உங்களுக்குள் ஒருவனாகச் சங்கமித்துக்கொள்வதில்
எனக்கென்ன ஆட்சேபணை இருக்கப்போகிறது.
கடவுளின் மண்டையோடு – ஃப்ரெட்டிக் நீட்ஷேவுக்கு சமர்ப்பணம்.
ஓவியம்: ஷாராஜ்
2. கடவுள் இருக்கிறார்
மனிதமற்ற செயல்கள், மனித உரிமை மீறல்கள், மானுட விரோதம்
நிகழும் இடங்களில்
வேடிக்கை மனிதராக
அதர்மம், அநீதி, கொடுங்கோன்மை, பயங்கரவாதம்
கோலோச்சும் ஆட்சியில்
அரச உருவாக்குநராக
பாவங்கள், வன்கொடுமைகள், அவலங்கள்
தலைவிரித்தாடும் இடங்களில்
ஆட்டோக்ராப் வாங்கும் ரசிகராக
ஐந்தறிவு, மூடப் புனிதம், ஆன்மிக அடிமைத்தனம் கொண்ட
இறையியல் வியாபாரத்தில்
உறக்கப் பங்கீட்டாளராக
மதவெறி, மத அடிப்படைவாதம்,
மதத் தீவிரவாதம் முதலானவற்றில்
மூல முதற்பொருளாக
3. கடவுளின் தளபதி
இடி அமீன்,
உனது பெயரைக் கேட்டாலே இன்னமும் நடுங்குகிறது உலகம்
கொடுங்கோலர்களின் பேரரசன் நீ
ரத்த ஆற்றில் குளித்து நரமாமிசம் புசித்த காட்டேரி மனிதன்
முப்பது அந்தப்புரங்களில் காமக் களியாட்டம்
ஐந்து லட்சம் மக்களின் பெருங்கூட்டப் படுகொலைகள்
எதிரிகளின் பிணங்களோடு பிணவறைத் தனிமை வாசம்
நர மாமிச விருந்து
உனது வரலாறு மத வரலாறுகளை ஞாபகப்படுத்துகிறது
உனது கொடூரங்கள் மதவெறியாட்டக் கொடூரங்களையும்
சிறு பிழை செய்துவிட்டாய்
இல்லையேல் நீ புனிதனாகியிருக்கலாம்
உனது மாபாதகங்கள் அனைத்தும் உன்னதப்படுத்தப்பட்டு
இறைவனுக்கு அடுத்தபடியாக உயர்த்தப்படுத்தப்பட்டிருப்பாய்
எண்பதாயிரம் ஆசியர்களை நாட்டை விட்டு வெளியேற்றக் காரணம்
ஆண்டவன் கட்டளை எனக் கூறிய தந்திரசாலியான நீ
கடவுளின் தளபதி நான் என்றும் அறிவித்து
உலக மக்களை நம்ப வைத்திருந்தால்
4. இறைவனுக்கு இரங்கற்பா
இறைவன் கொல்லப்பட்டுவிட்டான்
அவனைக் கூட்டப் படுகொலை செய்தவர்கள்
தந்திரக்கார தீர்க்கதரிசிகள் முதல்
அறிவிலி பக்தர்கள் வரையிலான இறையியலாளர்கள்
இனி நீட்ஷேவின் அதிமானுடனோடு
புதிய கடவுளும் பிறக்க வேண்டும்
இதயத்துக்குப் புனிதப் பயணம் செய்
மூளையோடு புனிதப் போர் நடத்து
கடவுள் பற்றிய உளவியல் பகுப்பாய்வு – ஃப்ரெட்ரிக் நீட்ஷேவுக்கு சமர்ப்பணம்.
ஓவியம்: ஷாராஜ்
5. அகவயத் தனிமொழி
கடவுள்கள் மனிதப் பெண்களைப் புணரலாமா
பிள்ளைக் கறி தின்னலாமா
கொலைவெறி, காமவெறி, மனவக்கிரம் கொண்ட
கொடும்பாவிகளைப் புனிதர்களாக்கி
அடிமைச் சேவகம் புரிவதா இறைவனின் வேலை
அவதார புருஷர்களும் தீர்க்கதரிசிகளும்
ஏன் சதி, அநீதி, கொடுங்கோன்மைகள், ரத்த வெறியாட்டம் புரிந்தனர்
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை,
சித்ரவதை, குழந்தைப் பாலுறவு ஆகியவை
புனிதர்கள், மகான்கள், இறைமனிதர்கள், பக்தர்கள் செய்யத் தக்கதா
நேசம், கருணை, அமைதி, இனிமை, பாவ புண்ணியம், நியாயத் தீர்ப்பு
என்னும் சொற்களின் மதப் பொருள்
அகராதிப் பொருளுக்கு நேர் மாறானதுதானா
அன்பே தெய்வம், அறிவே ஆண்டவன்
இறைவன் கருணையாளன் என்கிற நம்பிக்கையாளர்கள்
அதே கடவுள்கள் பெயரால்
கொடூர பயங்கரவாதங்கள் செய்வது எப்படி
செய்தவர்களின் கடவுள்கள் அதைத் தடுக்காதது எதனால்
பலியானவர்களின் கடவுள்கள் ஏன் காப்பாற்றவில்லை
அதற்கு முன்பே அனைத்துக் கடவுள்களும் செத்துவிட்டார்களா
அல்லது எந்தக் கடவுளும் இன்னும் பிறக்கவே இல்லையா
*******
ஷாராஜ்
நவீன தாந்த்ரீக ஓவியர் மற்றும் இலக்கியவாதி. 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும்; 2023-ல் நாவலுக்காக எழுத்து அமைப்பின் திருமதி சௌந்தரா கைலாசம் நினைவுப் பரிசு; 2017-ல் நுண்கலை ஓவியத்துக்காக கே.எம். கோபால் நினைவு விருது ஆகியவற்றைப் பெற்றவர். அமேஸான் கிண்டிலில் சில மின்நூல்களையும் வெளியிட்டுள்ளார்.