இயற்கைப் படிமங்களில் துலங்கும் மீமெய்மையியலும்; பண்பாட்டு வேர்களில் கருக்கொள்ளும் சர்வதேசமும்…
பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ கவிதை நூலை முன் வைத்து…
– றியாஸ் குரானா
தேர்வு என்பது எப்போதும் சிலவற்றைத் தவிர்ப்பதிலிருந்தே உருவாகிறது. எதை எழுத வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது எல்லாம், குறித்த ஒரு நோக்கத்தின் தற்காலிகமான அவசியத்தின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன ஒன்று. ஆனால், திட்டமிட்டு தவிர்ப்பது என்பதுதான் தணிக்கையாகவும் புறமொதுக்கலாகவும் மாறிவிடுகிறது. தணிக்கை என்ற சொல் அநேகமாக தேர்வு என்பதில் பதிங்கியிருக்கும் மென்மையான வடிவம் என்பதில் இரண்டு கருத்தில்லாதபோதும், அதை அதன் மென்மையான அளவில் வைத்துக்கொண்டு தவிர்க்க முடியாத அவசியங்களின் அடியாக மிகக் கவனமாக தேர்வுச் செயலில் இறங்குவது இலக்கிய வெளியில் அறம்சார்ந்த ஒன்று. அந்த அறத்தை எப்போதும் தன்வசம் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் என்பதனால், விருதுக் தேர்வுக்காக என் கைவசம் கிடைத்த அனைத்து நூல்களையும் 20 முழுமையான நாட்களுக்கும் மேலாக நுணுக்கமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட முறையும், பல கோணங்களில் அணுகியும்தான் திணைகள் விருதுக்கான இறுதித் தேர்வை செய்திருக்கிறேன். அந்த வகையில், எனது இறுதித் தேர்வு என்பது ‘பூவிதழ் உமேஷ்‘ அவர்களின் ‘துரிஞ்சி’ கவிதை நூலாக இருக்கிறது. ஆனால், இந்தத் தேர்வின் போது சவாலாக இருந்த பல நூல்கள் இருந்தன. குறிப்பாக ஐந்து நூல்களைச் சொல்ல முடியும். அவற்றைக் குறித்து இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை. எனக்கு இந்த வாய்பைத் தந்த திணைகள் விருதுக் குழவினருக்கு மிகுந்த நன்றிகளும் அன்பும். கடந்த இரண்டாண்டுகளில் தமிழின் விரிந்த பரப்பிற்குள் வெளிவந்த அநேக கவிதை நூல்களை ஒரே மூச்சில் வாசிக்கக் கிடைத்ததென்பது, சமகால தமிழ்க் கவிதைகளையும் அவற்றின் இயங்குவெளியையும் அறிந்துகொள்ள பெருவாய்ப்பாகவும் இருந்தது.
சமகாலத் தமிழ்க் கவிதையின் பன்முகப்பட்ட நிலப்பரப்பில், பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ (2023) ஒரு குறிப்பிடத்தக்க அதே சமயம் ஒரு சவாலான பிரசன்னத்தை நிகழ்த்துகிறது. இதுவரையிலான தமிழ்க் கவிதையின் சில பிரதான வழக்குகளிலிருந்து தன்னைத் தனித்துக் காட்டும் ஓர் அழகியல் வேட்கையையும், புனைவின் புதிய சாத்தியங்களைத் தேடும் ஒரு முனைப்பையும் இத்தொகுப்பு வெளிப்படுத்துகிறது. தருமபுரி நிலத்தின் பிரத்தியேக மணத்தையும், அங்கு வாழும் மனிதர்களின் அகவுலகச் சிடுக்குகளையும் வெறும் யதார்த்தப் பதிவுகளாக அல்லாமல் மீமெய்மை மற்றும் மாய யதார்த்தப் புனைவுக் கூறுகளின் ஊடாக அணுகும் உமேஷின் கவிதைகள், தமிழ்க் கவிதை சார்ந்த சில மனநிலைகளை ஊடறுத்து, தனித்துவமான ஒரு திசைவழியை அக்கறைகொள்கின்றன. நவீனத்துவத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதையின் சில இயல்புகளான பதற்றமான அகவயத்தன்மை, கட்டமைப்புச் சிதறல், அசையும் படிமப் பெருக்கம் போன்றவற்றை நோக்கி நகரும் முனைப்பை கவனத்திற்கொள்ளும் அதே வேளையில், அவற்றைத் தனது பிராந்திய அடையாளத்தோடும் புனைவின் அதீத சாத்தியங்களோடும் இணைத்து, சமகாலத் தமிழ்க் கவிதையின் சில அடிப்படைகளைத் தகர்த்து வெளியேற வேண்டுமென்ற ஒரு தீவிரமான அவாவையும் இக்கவிதைகள் கொண்டிருக்கின்றன. இந்த அவாவின் வெற்றி, அதன் முழுமை, மற்றும் அது எதிர்கொள்ளும் விமர்சனக் கேள்விகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பார்வை, இத்தொகுப்பின் முக்கியத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள இன்றியமையாதது.
‘துரிஞ்சி‘ கவிதை நூலின் மைய உத்தி, யதார்த்தத்திற்கும் புனைவிற்குமான எல்லையைத் தொடர்ந்து கலைத்துப் போடுவதில் தங்கியிருக்கிறது. இது வெறும் அழகியல் உத்தியாக மட்டுமின்றி இருப்பையும் அறிதலையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு கருத்தியல் நிலைப்பாடாகவும் விரிகிறது. தமிழ்க் கவிதையின் சில நீரோட்டங்களில் காணப்படும் நேரடிப் பதிவுமுறை அல்லது சமூக யதார்த்தவாதச் சித்தரிப்பு முறைகளிலிருந்து இது குறிப்பிடத்தக்க அளவு விலகி நிற்கிறது. தருமபுரி நிலத்தின் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள் ஆகியவை மீமெய்மைப் பார்வையின் வழியே புதுப்பிக்கப்பட்டு, அந்நியமாக்கப்படுகின்றன. ‘எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன்‘ (பக்கம்:13) ‘பாறையின் கண்கள் போல இருக்கும் வெள்ளாட்டுக் குட்டிகள்‘ (பக்கம்:13) இந்தப் பரீட்சயநீக்கம் (Defamiliarization), பழகிப்போன பார்வைகளிலிருந்து வாசகனை விடுவித்து அனுபவத்தின் புதிய பரிமாணங்களைத் திறந்து பயணிக்கச் செய்கிறது. ‘விதைப் புத்தகம் (பக்கம்:19-22) போன்ற கவிதைகள், ‘விதை’ எனும் ஒரு எளிய கருத்தை எடுத்துக்கொண்டு அதனைத் தத்துவார்த்தமான, சில சமயங்களில் விளையாட்டுத்தனமான, பல அடுக்குகளில் விரித்தெடுக்கும் விதம், நேரடியான அர்த்த உற்பத்திக்குப் பதிலாக பன்முகப்பட்ட வாசிப்புச் சாத்தியங்களை உருவாக்குகிறது. இந்தப் போக்கு, தமிழ்க் கவிதையில் பொதுவாக நிலவிவரும் சில சித்தரிப்பு முறைகளின் வரம்புகளை மீறிச் செல்ல விழையும் ஒரு முயற்சியாகவேபடுகிறது. இத்தகைய மீறல் முயற்சி என்பது தவிர்க்கவியலாமல் சில அர்த்த உருவாக்குதலின் சிக்கல்களையும் (Hermeneutic challenges) தோற்றுவிக்கும் என்பதும் உண்மையே. படிமங்களின் அடுக்குகளும், புனைவின் தாவல்களும் சில சமயங்களில் தெளிவின்மையை நோக்கி நகர்ந்து வாசகனுக்கும் பிரதியின் உள்ளடக்கத்திற்குமான இடைவெளியை அதிகரிக்கக்கூடும். இந்த விமர்சனங்கள் தமிழில் மட்டுமல்ல உலகளவிலும் பல விமர்சகர்களால் முன்வைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பானதும் சிக்கலானதுமான நியாயங்கள் உண்டு என்றபோதும், அர்தத்தைக் கண்டுபிடிப்பதில் பங்களிப்புச் செய்வது என்பது தேவையுடன் கூடிய சவாலான வினையாற்றும் செயல் என்பதை கவிதையை முன்வைத்து வாதிடும் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.
இக்கவிதைகளில் வெளிப்படும் கவிதைசொல்லியின் குரலும் ஆழமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அந்தக் குரலின் அழுத்தம் கிராமிய வேர்களைக் கொண்டிருந்தாலும் வெறும் மண் சார்ந்த பதிவுகளாகச் சுருங்கிவிடாமல், உலகளாவிய இருப்பியல் கேள்விகளுடனும், தத்துவார்த்தமான சிந்தனைகளுடனும் உரையாடுகிறது. இந்தப் பதற்றம் ஏறிய அகவயநிலையும், அதேசமயம் புனைவின் அதீத சாத்தியங்களுக்குள் சஞ்சரிக்கும் கவிதைசொல்லியின் குரலும் தமிழ்க் கவிதைகளில் பொதுவாகக் காணப்படும் நேரடியான சமூக விமர்சனக் குரல்களிலிருந்தோ அல்லது தீவிரமான உணர்ச்சி வெளிப்பாடுகளை முதன்மைப்படுத்தும் (பாடல் மரபின் தொடர்சியை உள்ளெடுத்த நவீன கவிதை) தன்மையிலான குரல்களிலிருந்து வேறுபடுகிறது. ‘நுணா‘ (பக்கம்:14) மற்றும் ‘அமைதியின் மீது சாய்ந்துகொள்ளுதல்‘ (பக்கம்:11-12) போன்ற கவிதைகளில் வெளிப்படும் நினைவுகள்கூட, நேரடியான கடந்தகாலப் பதிவுகளாக அல்லாமல் புனைவின் புதிர்ப்பாதை வழியே வெளிப்படுகின்றன. இந்தக் குரலின் தனித்தன்மை சில சமயங்களில் ஒருவித இருண்மைக்கு வழிவகுக்கலாம் என்றாலும் அதுவே தமிழ்க் கவிதைச் சூழலில் புதிய சாத்தியங்களுக்கான தேடலாகவும் அமைகிறது. இந்தத் தேடலின் சிக்கலான பயணத்தில் உருவாக்க வேண்டிய புனைவுகள் வாசகப் பரீட்சயத்தை எட்டும்போது மென்மைப்படுத்தும் ஒன்றாகவோ அல்லது தவிர்க்க வேண்டிய ஒன்றாகவோ மாற்றமடையலாம். அதற்கான கால எல்லை என்பது தமிழ்க் கவிதை வெளிக்கு அவசியமானது.
கருப்பொருள்களை அணுகும் விதத்திலும் ‘துரிஞ்சி‘ ஒரு விலகலை நிகழ்த்துகிறது. இயற்கை, நிலம், காதல், காமம், நினைவுகள், அரசியல், மரணம் போன்ற பொதுவான கருப்பொருள்களை இத்தொகுப்பு கையாண்டாலும், அவற்றை அணுகும் பார்வை மரபானதல்ல. இயற்கை, வெறும் அழகியல் பின்புலமாகவோ, மனித உணர்வுகளின் உவமையாகவோ பயன்படுத்தப்படாமல் அதுவே ஒரு விசித்திரமான, தன்னுணர்வு கொண்ட பாத்திரமாகப் பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. ‘எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன்‘, ‘பாறைகளின் கண்கள்‘ காதல் மற்றும் காமம் சார்ந்த சித்தரிப்புகள் ‘கொள்ளுக் கொடியில் ஆடும் காமம்‘ (பக்கம்:15) ‘அழிஞ்சி பழம்‘ (பக்கம்:81-82) ‘இரண்டாவது நாளில் சந்தித்தல்‘ (பக்கம்:78) நேரடியான உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தவிர்த்து வினோதமான படிமங்கள், விளையாட்டுத்தனம், சில சமயங்களில் ஒருவித அந்நியமாதல் ஆகியவற்றினூடாக வெளிப்படுகின்றன.
இது, காமம் குறித்த தமிழ் மனத்தின் சில தயக்கங்களையும் மரபான சித்தரிப்பு முறைகளையும் மீற விழையும் முயற்சியாகத் மேலோட்டமாகத் தோன்றுகிறது. ஆயினும், இந்த மீமெய்மை அடர்த்தி என்பது சில சமயங்களில் உணர்ச்சிகளின் ஆழத்தைத் தட்டையாக்கிவிடுகிறதா அல்லது வெறும் அழகியல் சாகசமாக நின்றுவிடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. சமூக யதார்த்தங்கள் குறிப்பாக வறுமை, ஒடுக்குமுறை, இடப்பெயர்வு போன்றவை நேரடிப் பதிவுகளாக அல்லாமல் மீமெய்மைப் படிமங்களின் ஊடாகவே சித்தரிக்கப்படுகின்றன. ‘உங்களுக்கு ஏன் உப்புக் கரிப்பதில்லை‘ (பக்கம்:67-68) ‘தடினிக்காய் உனக்கல்‘ (பக்கம்:35-36). இந்த மறைமுகத்தன்மை அரசியல் கவிதைகள் மீதான தமிழ்ச் சூழலின் சில எதிர்பார்ப்புகளிலிருந்து விலகிச் செல்கிறது. ‘மீனவன்‘ (பக்கம்:45-46) ‘எங்கள் பிரதமர் மிக நல்லவர்‘ (பக்கம்:76) போன்ற கவிதைகளில் உள்ள அரசியல் விமர்சனம், குறியீடுகளின் வழியே செயல்படுவதால் அது நேரடியான தாக்கத்தை இழந்துவிட்டது என்று சிலருக்கு நீர்த்துப்போனதாகவும் தோன்றலாம். இது அரசியல் கவிதையின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் குறித்த ஒரு புதிய விவாதத்தைத் தூண்டக்கூடியதாக தமிழச் சூழலில் இருக்க முடியுமே தவிர, உலகளவில் அரசியல் கவிதைகளோடு நெருக்கமுள்ளவர்களுக்கு அப்படியிருக்காது என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.
மொழியும் படிமங்களும் இத்தொகுப்பின் தனித்துவத்திற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன. வட்டார வழக்குகளை இயல்பாகப் புழங்கும்படி பாவிக்கும் அதே வேளையில் தத்துவார்த்தமான, சில சமயங்களில் அறிவார்ந்த ஒரு மொழியையும் கவிதைகள் பயன்படுத்துகின்றன. இந்த மொழி, பெரும்பாலும் உரைநடைக்கு நெருக்கமாக அதீத அலங்காரங்களைத் தவிர்த்து, அசையும் படிமங்களின் வழியாகவே தனது கவித்துவத்தை அடைகிறது. இங்கு பயன்படுத்தப்படும் அசையும் படிமங்கள், வெறுமனே காட்சிகளை விவரிப்பவையாக அல்லாமல் அறிந்துகொள்ளுதலின், அர்த்தம் உருவாக்குதலின் சவால்களையும், உணர்வுநிலைகளையும் கடத்துபவையாக பல சமயங்களில் பொருள்கோடல் சிக்கல்களைக் கொண்டவையாகவும் உள்ளன. தமிழ் மரபின் செழுமையான படிமவியல் வழக்கத்திலிருந்து (சங்க இலக்கியம் தொடங்கி) உமேஷின் படிமங்கள் வேறுபடும் இடம் எதுவென்றால், அவை பெரும்பாலும் தர்க்க ஒழுங்கைக் கலைத்துப் போடும் மீமெய்ம்மைத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இது கடந்தகால தமிழ் நவீன கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அறிவோம். அதே நேரம் இவற்றை கவிதைகள் முழுமையிலும் பயன்படுத்திய ஈழத்துக் கவிஞர் சோலைக்கிளியும் இருக்கிறார். ஆயினும், உமேஷ், தனது கவிதையை நகர்த்திச் செல்லும் வசன நடையின் எதிர்பாராத தருணங்களில் இந்த அசையும் படிமங்களை பாவிப்பதோடு, அது தேவையான இடமாகவும் கவிதையின் இயங்கும் போக்கில் அமைந்துவிடுவதுதான் குறிப்பிட்டுக் காட்டவேண்டியது. இந்தக் கவிதை சொல்லும் முறையை மேலும் செழுமைப்படுத்தும்போது தீர்க்கமான தனித்தன்மையை முழுமையாகக் கண்டடைந்துவிடலாம் என்பது எனது கணிப்பீடு. இந்த அணுகுமுறை, சங்கப் படிமங்களின் நேரடித்தன்மை இயற்கை சார்ந்த இயல்புநிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மாறுபடக்கூடியது. கவிதைகள் நகர்ந்து செலலும்போது ஏற்படும் உரைநடைத் தாளம் என்பது இடைக்கிடை மரபின் தொடர்ச்சியை சில நேரங்களில் மனதில் ஏதாவதொரு மூலையில் தட்டி எழுப்பிவிடுகிறது.
சமகாலத் தமிழ்க் கவிதைகளின் அடிப்படைகளை தகர்த்து வெளியேறும் ஆவல் இக்கவிதைகளில் எந்த அளவிற்கு நிறைவேறியிருக்கிறது என்ற கேள்வி முக்கியமானது. ‘துரிஞ்சி‘ ஒரு முழுமையான உடைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்றால் இல்லை. ஆனால், ஏற்கெனவே இருக்கும் போக்குகளின் (பின்-நவீனத்துவச் சிதறல், அகவய நோக்கு) ஒரு தீவிரமான நீட்சியாக, ஒரு புதிய அழகியல் சேர்க்கையாக அமைகிறதா என்றால் விவாதத்திற்கு இடமின்றி அதை ஏற்க முடிகிறது. மீமெய்ம்மை மற்றும் மாய யதார்த்தப் புனைவுக் கூறுகளைத் தமிழ் நிலத்தின் பிரத்யேக அனுபவங்களுடன் இணைக்கும் முயற்சியில் குறிப்பிடும் அளவு இவரது கவிதைகள் முன்னேறியுள்ளன என்பதுதான் உண்மை. இது, தமிழ்க் கவிதையை உலகளாவிய கவிதைப் பிரதிகளுடன் இணைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படலாம். இந்த பண்பாட்டுக் கலப்பு தமிழ்க் கவிதையின் தனித்துவத்தையும், உலகளாவியத் தன்மையையும் ஒருங்கே சாத்தியமாக்கும் ஒரு வழியாக அமைகிறது. ஆயினும், இந்த அடிப்படைகளைத் தானே தகர்க்கும் படியாக, சில சமயங்களில் கவிதையை வரிவரியாக நகர்திச் செல்லும் போது கவிதைச் சம்பவங்களின் சீரற்ற தன்மை, சில படிமங்களின் செயற்கைத்தன்மை அல்லது மீமெய்ம்மை உத்தியின் பாணி மிகைப்பு போன்ற விமர்சனங்களுக்கும் இடமளிக்கிறது. எந்தவொரு தீவிரமான கவிதை உருவாக்க முயற்சியும் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது இயல்பே. இந்தப் புதிய திசைவழிக்கான தேடலில், சில கவிதைகள் அடையும் வெற்றியை மற்றவை அடையாமல் போகலாம்.
முடிவாக, பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘, சமகாலத் தமிழ்க் கவிதை வெளியில் ஒரு அசாதாரணமான, தவிர்க்கமுடியாத தலையீட்டை நிகழ்த்த முயல்கிறது. அதன் மீமெய்மை அழகியல், மரபான தமிழ்க் கவிதை மனநிலையிலிருந்து விலகிச் செல்ல எத்தனிக்கும் பிரக்ஞை, நிலம் சார்ந்த அனுபவங்களை உலகளாவியப் புனைவு உத்திகளுடன் இணைக்கும் முயற்சி மற்றும் அது எழுப்பும் எண்ணற்ற அர்த்த உருவாக்கச் சாத்தியங்கள் ஆகியவை இத்தொகுப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகின்றன. இது முன்வைக்கும் விமர்சனக் கேள்விகளும் அதன் கலைத்துவச் சவால்களும்கூட அதன் உயிர்ப்பிற்கும், சமகாலத் தமிழ்க் கவிதைச் சூழலில் அது நிகழ்த்தும் உரையாடலின் முக்கியத்துவத்திற்குமே சான்றுகளாக நிற்கின்றன. அடிப்படைகளைத் தகர்க்கும் அதன் ஆவல் முழுமையாக நிறைவேறியதா இல்லையா என்பதைவிட, அத்தகையதொரு தீவிரமான கலைவேட்கையுடன் அது பயணிப்பதே அதன் தனித்துவமாகிறது. எனவே, ‘துரிஞ்சி‘, அதன் அனைத்துச் சிக்கல்களோடும் வெற்றிகளோடும் சமகாலத் தமிழ்க் கவிதையின் போக்கைக் கூர்ந்து அவதானிப்பவர்களால் அவசியம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய, ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒரு செறிவான, சவால்நிறைந்த கவிதை நூலாக நம்முன் நிற்கிறது. இது, தமிழ்க் கவிதை தேங்கிவிடாமல் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டிருப்பதன் அடையாளம்.