1. நீண்ட பலகாரத்தை முன்வைத்து ஓர் உரையாடல்
அடர் காவி நிறத்தில்
கச்சிதமாய்ப்
பிடிக்கப்பட்டதொரு
மோதி லட்டுதான்
இன்றைய இந்தியா
என்கிறாய்
காலங்காலமாய்த்
தட்டில் வைத்து
நீட்டப்படும்
ஒரு குத்து
கலர் பூந்தியல்லவா
இந்த தேசம்
2. பிராதும் மறுமொழியும்
தீவிரங்களைச் சிதைக்கிறது
என்பது தானே
பகடி மீதான
உன் விசனம்
இரண்டு கேள்விகள் உன்னிடம்
ஒரு பகடிக்கே நீர்த்துப் போகுமெனில்
அது என்ன தீவிரம்
தவிர
ஒரு தீவிரத்தைக் கூடத்
தணிக்க துப்பில்லையெனில்
அது என்ன பகடி
3. குணங்கெட்ட யானை
ஒரு பாகனைக்
கவிஞன் என விழிக்கும் போது
பழக்கிய யானையோ
கவிதையென்றாகி விடுகிறது
அது பொருத்தமானதுதான்
பிரச்சனை என்னவென்றால்
அந்த தும்பிக்கையைத் தூக்குவது
ஆசீர்வாதம் பண்ணத்தான் என்று
எல்லா நேரமும்
நம்புவதற்கில்லை
பாகன் உட்பட
ஒப்புக்குத்தான் அந்த அங்குசமும்
4. உரையாடலில் கிளைக்கும் பெருமடி எனதன்பு
சகாக்களோடு ஏறியாடும்
அந்த வாவரக்காச்சி மரம்
உற்சாகத்தாலும்
உரையாடல்களாலும் தான்
நாலா திசையிலும் கிளைத்திருந்தது
கூட்டாளிகள் யாருமற்ற அந்தியில்
நீயங்கு வந்தாய்
மரமேறும் விருப்பத்தைச் சொன்னாய்
பெண்பிள்ளை ஏறிவரச்
சம்மதிக்குமா இப்பெருமரம்
சன்னமான சந்தேகமெனக்கு
உன் அரைடவுசர் நுழைந்தால்
நான் நீயாவேன் என்றாய்
சோதிப் பெருநெல்லி நெஞ்சிலேந்தினால்
நான் நீயாவேன் என்றேன்
வாவரக்காச்சி அப்படி வெடித்து சிரித்து
அன்றுதான் பார்த்தேன்
சேர்ந்து மரமேறச் சித்தமானோம்
பற்றியதெல்லாம் பேசியபடி
விசுவிசுவென உயரம் போனோம்
பரஸ்பரம் உற்சாகந்தான்.
பாதி வழியில் தலை தாழ்த்தித்
தரையை ஏன் பார்த்தாய் சகியே
உயரம் உனக்கு பயமா என்ன
கால்கள் நடுங்கப்
பற்கள் கிட்டிக்க
ஒரு குழந்தையின் பாவத்துடன்
அழத் துவங்கினாய்
நினைத்த மாத்திரத்தில்
அன்பொன்றை இறக்கிவைப்பது
அத்தனை எளிதா என்ன
இறங்கவியலாத் துயரமுனது
இறக்கவியலாத் துயரமெனது
மரத்தைப் பார்த்தேன்
புரிந்து கொண்டது
கணநேரந்தான்
தன்னை நட்ட நாளின்
கன்று உயரத்திற்கு வந்தது
குழந்தையென இறங்கிப் போகிறாய்
ஏறி உச்சம் போய்
நுனிக்கொழுந்திலிருந்து
நிலம் நீங்கி வானேகும்
ஒரு பறவையோடுதான்
இனிப் பேச்சு
எனது புதிய சங்கற்பம்
மரமேறும் துயரமேதும் ஓர்
பறவைக்கில்லை கண்டீர்
அன்றாடத்தின் புழுக்கத்திலிருந்து வெளியேறி மண்ணைப் பரித்து ஆசுவாசங்கொள்ளும் கவிஞன், நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் கண்டிப்பான ஆசிரியராக, அரசியலுக்கும் பகடிக்குமிடையில் மொழியில் ஆற்றாமைகளைத் திரியச்செய்திருக்கிறார். . வேடிக்கையாகவும் குறும்புத்தனமாகவும் வலியைத் திணித்துச் செல்லுகின்றன வாவரக்காச்சிக் கவிதைகள். . சில கவிதைகள் வாழ்க்கையின் புறச்சூழல் மற்றும் நிகழ்வுகளைச் சார்ந்து ஏற்படும் மாறுபட்ட அக உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன, சில கவிதைகள் கறிவேப்பிலை மரத்தில் கட்டிய குருவிக்கூட்டின் கதகதப்பையும் தருகின்றன.
வாவரக்காய்ச்சி
லிபி ஆரண்யா
சால்ட் பதிப்பகம்.
டிசம்பர் 2022