சிறுமி வீட்டின் முன் இருக்கும் மரத்தினடியில் அமர்ந்து, நாய்குட்டி, பூனை, எலி, அணில், பன்றி குட்டி, எருமைக் கன்று என இவைகளை முன்னால் அமரச் செய்து, விளையாட தொடங்குகிறாள்.
சிறுமி ஆசிரியராகவும், மற்றவைகள் மாணவர்களாகவும் மாற்றம் கொள்கின்றனர். ஆனால் இங்கு மாணவர்கள் பாடம் நடத்தவும், ஆசிரியர் சந்தேகம் கேட்பவராகவும் இருந்தார். வேடிக்கைப் பார்த்த பெரியவர்கள் பைத்தியக்காரத்தனமென தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தனர். காலகாலமாக பின்பற்றும் மரபை மீறியதற்காக அந்தச் சிறுமியைக் கடிந்தும் கொள்கிறார்கள். சிலபேர் இது புதிதாக இருப்பதால் ஆர்வத்தோடு ரசித்து சிறுமியைப் பாராட்டுகின்றனர். சிறுமி ஒருசேர தன் மாணவர்களின் வேறு வேறான வாழ்வியலை அறிந்து கொண்டதால் ஆனந்தம் கொள்கிறாள். மாறுபட்டவைகளை முயற்சி செய்யும் போதுதான் புதியன பிறக்கும் என்பதில் நம்பிக்கை கொள்கிறாள்.
இச் சிறுமியின் மனப்போக்கை ஒத்தவர்தான் றாம் சந்தோஷ். தன் கவிதைகளில் மரபான சொல்லல் முறைமைகளைக் கலைத்து புதிதான முயற்சியை மேற்கொண்டுள்ளார். சமூகவியலை, அரசியலை, வாழ்வியலை எளிய பகடிகள் மூலம் வேறொன்றாக காட்சிபடுத்துகிறார். மொழியால் வசிப்பவரின் நெஞ்சை நக்காமல், சொம்பு சொம்பாக கண்ணீரை வரவழைக்காமல், பனியில்லாமலே உருகிப்போகாது, அறம் பிறழ்ந்து வாழ்கிறோமென குற்ற உணர்வுக்கு ஆளாகாமல், மொழியைக் கொண்டு நிறைய விளையாட்டுகளை நிகழ்த்தியுள்ளார். அது எரிச்சல் ஏற்படுத்தாது இயல்பாக உண்மையைப் பேசுவதால் கவிதைகளோடு நெருக்கம் கொள்ள செய்கிறார்.
சொல்வெளித் தவளைகள் தொகுப்பில் மொழி விளையாட்டும், இரண்டாம் பருவம் தொகுப்பில் உடல் விளையாட்டும், சட்டை வண்ண யானைகள் தொகுப்பில் சமூகவியல் விளையாட்டென பகுத்துப் பார்க்கலாம்.
ஒரு சொல்லின் பொருள்; மாயத்தோற்றம் – அந்த சொல்லின் உட்பொருள் அல்லது நோக்கம்; மற்றும் கூச்சலிடுதல் – கேட்பவரின் மீது சொற்களின் விளைவுகள் – இது ஒரு மனக் குறிப்பை உருவாக்குவது முதல் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படுவது வரை இருக்கலாம் என லியோடார்ட் மொழியின் விளையாட்டு குறித்து குறிப்பிடுவதை இத்தொகுப்பில் பொருத்திப் பார்க்கலாம்.
தனிமையில் இருத்தல் என்பது உண்மையில் தனித்திருத்தல் அல்ல. நம் அந்தரங்கத்தின் மூலம் நாம் விரும்புவர்களோடு இருக்கிறோம். தனித்த அறை, தனி இடம் எல்லோருக்கும் வாய்த்திடாது. அதற்கான ஒரே போக்கிடம் கழிவறைகளே.
பொதுவெளியே கழிப்பிடமாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு முதன்முதலில் தனித்து தன் அந்தரங்கத்தோடு இருக்கும் கழிப்பறை வியப்பும் அதிசயமுமே. பேருந்து நிலையங்களில் இருக்கும் கழிவறைகளே எல்லோருக்குமானதாக இருந்தது. பின் கழிவறைகள் அழகியலின் வெளிப்பாடுகளோடு சந்தைக்கு வந்துகொண்டுள்ளன. பொதுவெளி கழிவறைக்குள் கலவி சார்ந்த சொல்லாடல்களும், உருவப் படங்களும் விதவிதமாக வரையப்பட்டிருக்கும். வரைந்தவன் மனப்போக்கும், ரசிப்பவன் மனப்போக்குள் ஒரே கோட்டில் இருக்கும் கழிவறைகள் உண்டு. வெகு நேரம் காத்திருந்து அந்த அறைக்கு போவோரும் உண்டு. நீண்ட நேரம் அடைத்து வைக்கப்பட்ட சிறுநீர் கழித்தலில் வரும் இன்பம், வயிற்றின் வலி குறைக்கும் மலம் வெளியேறுதல், உடலில் இருந்து குடல்வழி காற்று வெளியேறுதல், குறிகளில் இருந்து விந்து, குரோனிதம் வெளியேறுதல் என உடல் வெளியேற்றத்தின் மூலமாக இன்பத்தைச் சுகிக்கிறது. மனம் குதூகலமடைகிறது. றாம் சந்தோஷின் இக்கவிதை இப்படியான பயணிப்புகளை உருவாக்கியது.
கழிவறைக் கோடுகள்
*
ஒரு தற்செயல் விபத்தென
அந்தக் கழிவறை அடைந்த போது
நான் வெகுவாக பாதிக்கப்பட்டேன்.
நான்கு திசைகளும் அடைக்கப்பட்ட
அதன் அறைச் சுவர்கள்
வட்டங்களும் கோடுகளுமாய்…
புணர்ச்சியை போதித்தன.
வெறியூட்டப்பட்ட நாய்களைப் போல
முடக்கி விடப்பட்ட நினைவுகளுக்கு
மத்தியில்
அங்குமிங்கும் தாவும்
இரு கண் தவளைகள்.
அன்றிலிருந்துதான் நானும்
போகத் தொடங்கினேன்
அதே கழிவறைக்கு வாடிக்கையாய்.
*
தென்னாடுடைய சிவனே போற்றி என சிவனே சர்வமயமென இருத்தல், அல்லது தாங்கள் விரும்புபவற்றுள் தன்னை ஒடுக்கிக் கொள்ளுதல் போன்று ஒரே உடலை ஆணாகவும், பெண்ணாகவும் பாவித்து தன் உடலுள் தானே ஒடுங்கி, தன் உடல் சர்வமயமென இருப்பதை றாம் சந்தோஷின் இக்கவிதை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.
தன் ஒரு பக்கத்து மீசையை அவன் சிறைத்தபோது
இன்னொரு பக்கத்து மீசை வளர வளர்ந்தது.
தன் முலையொன்று திரண்டு சதையுற்றிருக்கையில்
இன்னொரு முலையோ
மார்பொடு சமமாய்த் தோலாய் இருந்தது.
தன் இடுப்பின் கீழே நடந்தது இன்னதென
இதுவரையிலும் அவன் எனக்குத் தெரிவிக்கவில்லை.
தன்கையால் தன் கை பிடித்து
காதலுற்று மருகுகையில்
கொசு கடிக்கும் அவன் தொடை தூக்கி
அவற்றைக் கொன்று, தாண்டவம் ஆடுவான்.
அச்சமயம் காற்று, மெல்லப் பிரிந்தது
சப்தம்; நாற்றம்; சர்வமயம்.
கவிதைகளின் மையத்தைப் பூதாகரப்படுத்தாமல், சொற்களின் நிழலாகப் படியச் செய்து வாசிப்பில் நாம் கண்டடையும் மையம் அவர் எழுத நினைத்த மையமாக இல்லாதுகூட போகலாம், ஆனால் அங்கு இரண்டுவிதமான அல்லது ஒரே மையம் செயல்படுவது கவிதைகளில் வடிவாக இருக்கிறது. இதை அவரின் சொல் வெளித் தவளைகள் தொகுப்பிலிருக்கும் கவிதை ஒன்றின் மூலம் காணலாம்.
குழந்தை சில கிறுக்கல்களால்
தன் அப்பாவை வரைய
அவனுக்கு வேறொருவன் முகம் முளைத்தது.
அவன் தன் புதிய முகத்தின் வாயை
தன் பழைய கையால் பத்த
வார்த்தைகள் அவனுடலுள் மீண்டன.
தன் உறுப்புகளிலிருந்து உதிர்ந்த
பணத்தை பொறுக்கி எடுக்க முயற்சிக்கிறான்
அவை அவன் முகம் பதிந்த சில்லறைகளாகிச்
சிதறி ஓடுகின்றன.
இக்கவிதையில் உருவச் சிதைவும், உருவ உருவாக்கலும் நிகழ்கிறது. வரைதலில் வேறு அப்பா வந்ததால், அப்பா இல்லாது போக, வந்த அப்பாவுடன் உரையாட இருந்த அப்பாவை இருக்கச் செய்தல் பொருட்டு அங்கு நிகழ்வது பணம் பொறுக்குதலே. பணம் பிரதானமாகி தொடர்ந்து பொறுக்குதல் எனும் செயலை நிகழ்த்திப் பார்த்துக் கொண்டே இருப்பதால், கிடைத்தவனுக்கு கடவுளாகவும், கிடைக்காதவனுக்கு சாத்தானாகவும் இருக்கிறது.
இரண்டாம் பருவம்.
றாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் தொகுப்பு மொழி விளையாட்டும், பகடியும், வலியும் மிக்கதாக இருந்தது. அவரின் இரண்டாம் பருவம் தொகுப்பை உடல் விளையாட்டு எனக் கொள்ளலாம்.
“பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”
இயற்கைப் புணரச்சியின் போது மென்மையான பற்களிடையே ஊறும் நீர் சுவை குறித்து கூறும் இக்குறள் உடலின்பத்தைக் கொண்டாடுவது…
காம நோயை அறிந்துகொள்ளாது இருக்கும் ஊரார் மீது கோபம் கொள்ளும் ” முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல்” எனும் ஔவையார் பாடல்..
அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுதேன்
அம்முலைகள் வளர்வது கூட அவருக்கு என்றுதானாம்
ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்…
என ஆண்டாள் தன்னை கண்ணன்தான் தீண்ட வேண்டுமென கூறும் பாடல்களில் தன்னை விரும்புபவர்களுக்காக தன் உடலை கொண்டாட்டமாக வைத்திருப்பதை உணர முடிகிறது.
இன்றைய காலத்தில் உடல் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை அறிய இத்தொகுப்பின் கவிதைகளில் உணர முடியும்.
உடலில் இருந்து உடலைப் பிரித்து நீராக்கி நீந்துதல், பனியாக்கி குளிர்மையடைதல், வெய்யிலாக்கி கதகதப்படைதல் உடலை உடலால் காபந்து செய்தல் என கவிதைகள் நம்முள் ஒருவித பாய்ச்சலை நிகழ்த்துகின்றன.
ஆண் பெண் உறவு எனும் மரபைக் கலைத்து ஆண் ஆண் உடல், பெண் பெண் உடல், ஆண் பெண் உடல் என கவிதைகளுக்குள் மரபற்ற சுயவிருப்பங்களின் உணர்வை ஏற்றுக்கொள்ளச் செய்யும் தன்மை உள்ளன.
சர்ப்பம் தன்னுள் நஞ்சை கொண்டிருந்தபோதும் அதன் உடல் வளவளப்பும் வசீகரமும் மிக்கது. தீண்டுதலில் சாகுதல் என்பது காமத்தில் சாக துடித்தல். உடலை சுவாசிக்க செய்தல், புடலங்காயாக பந்தலில் தொங்க விடுதல், அத்தர் மணக்கும் உடலுள் கரைதல், உப்புச் சுவையை கொண்டாடுதல், பற்களின் வனப்பை ரசித்தல், காதுகளை கூச செய்தல், உதடுகளை அடைகாத்து வைத்திருத்தல், எச்சில் உரசலில் உரு கலைதல், அடிக்கரும்பின் சாரத்தோடிருப்பதை உணர்த்தல், துள்ளித், துவண்டு போதலின் முடிவில்லா இன்பத்திற்கு ஏங்குதல் என கவிதைகளுள் உடல் பல வண்ணங்களிலும், வனப்புகளிலும் மிளிர்கின்றன.
மீச்சிறு இளம் வெப்பத்தைச் சுகித்தல்
*
நான் அமர்ந்தும் அவள் நின்றுமாய் உப்புநீர் கழித்தோம்
மீச்சிறு துளிகளை உதறும் கிளர்ச்சிபோல்
அவளுக்கும் ஒன்று இருந்தாக வேண்டும்
நான் பாய்ந்தோடி யாசித்து ஒரு மீச்சிறு துளியை சுகிக்கிறேன்
கரிக்கும் அதன் உப்பு காதலின் சுரணையாகிறது
தீவிரம் பெருக அது பாய்ந்தோடும் இப்பாழ்நிலம்
ஏன் என் உடலாக இருந்துவிடக் கூடாது
நான் படர்ந்து தரையாகிறேன்
அவள் என் மீதூரும் நீர்மையாய்
சகதி யாகுதல் கலவு.
*
கிராமங்களின் ஏதேனும் சண்டையின் போது ஆண் பெண்ணை அடிக்கத் தொடங்குவான். வேறு வழியற்று அவனிடமிருந்து தப்பிக்க அவளது சொற்களே ஆயுதமாகும், சட்டென சாண்டைய குடிச்சவனே, தூமையை கடிச்சவனே எனத் திட்டுவர். இது சொல்லப்பட்ட சூழல் வேறாக இருந்தாலும் இதன் உள் பொதிந்திருக்கும் உண்மை காமக் கொண்டாட்ட நிகழ்வு. இந்நிகழ்விலிருக்கும் சாரத்தை அதன் சுவை குறையாது இக்கவிதை வெளிப்படுத்துகிறது.
அடர் வனம்
அவ் வெட்ட வெளி
கார் தாங்கிய முகில் கூட்டம்
வாட்டும் அம்மதிய வேளை
சிறு சிறு மணலின் குவியல்
ஈரக் களிமண் சமைந்த ஏரி
யாரும் உலவும் அக்கடற்கரை
அலைகள் மட்டும் சத்தமிட்டபடி இருக்கும்
அதே கடலின் நித்திய இரவு
யாவும் எனக்குச் சம்மதமே
உன்னைச் சுட, உன்னை உரச,
உன்னோடு பேச, உன்னை தூர இருந்து பார்க்க
உன் நினைவோடு மட்டும் சாக…
இக்கவிதை என்றைக்கும் பச்சையத்தோடும், குன்றாத ஆர்வத்தோடும் இருந்துகொண்டே இருப்பதைக் கூறுவதாக கொள்ளலாம்.
சட்டென தீர்ந்து போகாது விதையும் விருட்சமுமாய் துளிர்த்து துளிர்த்து கொண்டாடுவதை காட்சிப்படுத்தி இருப்பது அழகு.
*
அன்றாடங்களின் சமூகவியல் சிக்கல்களை தீவிரத்தோடு உண்மையின் பக்கம் நின்று பேசுகின்றன றாம் சந்தோஷ் வடார்க்காடின் “சட்டை வண்ண யானைகள்”
ஒரு விளையாட்டை நிகழ்த்தி வெற்றி கண்டவன் களிப்பையும், தோல்வி கண்டவன் வலியையும் வேடிக்கையில் இருப்பவர்களின் சுயநலத்தையும் காட்சிப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளன கவிதைகள்.
தொகுப்பின் கவிதைகள் நம் அந்தரங்கத்தையும், அசிங்கத்தையும், விருப்பு வெறுப்புகள், பிரச்சினைகளிடையே நம்மின் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதை உணரவும் செய்கின்றன கவிதைகள்.
…………
ஒரு தலைவன் வாதை கொண்டவனாய் இருப்பது
வாதையருள் வாதையுணர்ந்த தலைவனே
அவ்வாதைகளின் காரணமும் அறிந்தவனாகிறான்
எனவே, நாம் அவரைத் தோணியாக்கி
இக் கொடுந் துயரைக் கடக்க முயற்சிக்கிறோம்.
என முடிவுறும் ‘ தலைவர் வாழ்த்து’ கவிதை தொல். திருமாவிற்காக எழுதப்பட்டிருப்பது உவப்பானதாக இருந்தது. தற்காலத்தில் மிகுந்த கூறுணர்வோடு செயல்படுதலும், பிரச்சினைகளை ஒட்டி எழும் அவரது அறிக்கைகள் ஏனோதானோ என்றில்லாமல் பிரச்சினையின் முடிச்சை அவிழ்ப்பதாவும் இருக்கும். சிறிதான விசயங்களைக் கூட சுயலாபத்திற்காக அரசியல் செய்பவர்கள் இருக்க, இவரோ எளிதில் உணர்ச்சிவசப்படாது அதன் பின்விளைவுகளையும் கருத்தில் கொண்டு வெகு பக்குவமாக அணுகும் தன்மை நம்மை ஆச்சரியம் கொள்ளச் செய்யும்.
அரசியல் தலைவரைக் கொண்டாடும் றாமின் கவிதைகள் அரசு அலுவல்களைப் பகடி செய்யவும் தவறுவதில்லை. தாய் மகள் உரையாடலின் தன்மையில் இருக்கும் ” பொதுக் கழிப்பறைகளின் தேவ பாதைகள் அடைக்கப்படும்போது…’ கவிதை
உன் உடம்பில் மிளிரும் அந்த நிஜ மஞ்சள்களில் மட்டும்
துர் மலத்தின் நாற்றம் மாறாது மணக்கும்
அதையும் நீ பழகுவாயாக.
என் துயரின் மகளே
வருங்காலப் பறவையே.
இவ்வாறாக முடியும். வீடுகளில் கழிப்பறை இல்லாத வாழ்வியலின் துயரை வாசிப்பில் பகடி போல் காணப்பட்டாலும் இக்கவிதை காட்சிபடுத்தும் வாழ்வு வலி மிக்கது.
பரம சல்லிசு எம் பெருஞ்சோதியே
எத்தனை சல்லிசு எம் பெருஞ்சோதியே
இவ்வளவு சல்லிச ஆனந்தம்
தொகுப்பிலிருக்கும் சல்லிச எனும் சொல் கிளர்த்தும் உணர்வு ரசிக்கத்தக்கது. வாழ்வு ஆயிரம் அபத்தங்களைக் கொண்டிருந்தபோதும் நம்மை இயல்போடு இருக்கவைக்கும் கூறுகளையும் கொண்டிருக்கிறது. சல்லிச எனும் புழங்கு மொழி கவிமொழியாகி இருப்பதும் கூட நமக்கு சல்லிச கிடைத்த ஆனந்தம்தான். நாம் எதில் நிறைவு கொள்கிறோம் எனும் மனப்போக்கே நமக்கான குதூகலத்தை கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்துகின்றன.
ஒற்றைத் தன்மையான அனுபவத்தைப் பருவங்கள் நமக்குத் தந்திடாது. அவரவருக்கு வாய்ப்பதைப் பொருத்து மாறுபாடு கொள்ளும். பால்யகாலத்தின் நினைவுகள் எல்லோருக்கும் ஒத்ததாக இருக்காது. ‘ ஒரு பால்யத்தின் கதை’ எனும் கவிதையிலிருக்கும் பால்ய வாழ்வு நமக்கு இல்லை என ஆறுதல் கொள்ளும்படியானதாக இருக்கிறது. ‘ குழந்தைமைகள்’ கவிதை அப்பருவத்திற்கு உண்டான பொதுத்தன்மையை காட்சிபடுத்துகிறது.
“எனது ஒரு நாள்” கவிதையை வாசித்ததும் மிகுந்த பொறாமை எழுந்தது நமக்கு இப்படியான நாள் அமையவில்லையென ஏக்கம் பெருக்கெடுத்தது. அக்கவிதை தனக்குள் மூழ்கச் செய்திட அக்கணம் நாளொன்றாக விரிந்து நிறைவை தந்த அனுபவம் அலாதியானது. கவிக்கு எனதன்பு.
சட்டை வண்ண யானைகள் தொகுப்பின் கவிதைகளில் எளிமை வெகுவாக கைகூடி வந்துள்ளது. ஆத்மநாம், சுயம்புலிங்கம் கவிதைகளை நினைவுகொள்ளச் செய்தன.
நிறைவாக இப்படி சொல்லலாம்…
மனித வாழ்வு குறித்த புரிதல்கள், வாழ்தலில் இடையீடு செய்யும் இன்னல்கள், எதிர்கொள்ள வேண்டியதன் தேவைகளை தனிமனிதனுக்கானதாக சுருக்கிவிடாமல் சமூகத்தின் பொதுத்தன்மைக்கு இடப்பெயர்வை உருவாக்கும் தன்மையைக் கொண்டவை றாம் சந்தோஷ் வடார்க்காடின் கவிதைகள்.
‘உன் துயருக்கும் ஒரு பலன் உண்டா கவியே
நாலு கவிதை கிடைக்கும் ப்ரோ’
கவிதை மட்டுமல்ல, வேறுவேறு சிந்தனைக்கும் வழி கிடைக்கிறது.
(17-08-25 திணைகள் இணைய வழி நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)