ஓடும் காற்று
குறைந்தது
ஆயிரம் மனிதர்களைச் சந்திக்க வேண்டும்
ஆயிரம் சாலைகளில் நடக்க வேண்டும்
ஆயிரம் மரங்களின் வேர்களில் அமரவேண்டும்
ஆயிரம் முறை சண்டையிட வேண்டும்
ஆயிரம் ஆயுதங்களையும் கவசங்களையும்
உருவாக்கி வைத்திருக்க வேண்டும்
ஆயிரம் ஊர்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்
ஆயிரம் நினைவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்
ஆயிரம் வாழ்க்கையை வாழ வேண்டும்
ஆயிரம் நூல்களை வாசிக்க வேண்டும்
ஒரு நூறு பெண்களை அறிந்துகொள்ள வேண்டும்
சூம்பிப்போய் கிடக்கும் என் வாழ்க்கையில்
எழுந்து நடக்க இப்போது
இந்த முடிவுகள் போதுமானது
சொற்களின் சங்கிலி
ஒரு மௌனம் நம்மைத்
திரும்பிப்பார்த்துக்கொள்ள செய்தது
ஒரு சொல்
நமக்கிடையேயான கதவுகள் திறந்தது
சில சொற்கள் நம்மை இவ்வளவுதூரம் இழுத்து
வந்ததற்கான நம்பிக்கையைத் தந்தது
இன்னும் சில சொற்கள்
நம்மை இந்த நடுவழியில் நிறுத்தியது
ஒரு பெரும்புயலை சுழற்றியது
வேறு சில சொற்கள்
நம்மைத் திரும்பிப்போகச் செய்தது
கதவுகளைத் தாழிட்டுக் கொள்ள செய்தது
சொற்களுக்குள்ளிருந்து நமக்கான
இடம் தேர்ந்து அமர்ந்துகொள்கிறோம்
செல்லும் பாதை மாற்றியமைத்துக்கொள்கிறோம்
உற்ற நபர் தேர்கிறோம்
நாம் எப்பொழுதும் சொற்களுக்குள்ளிருந்து
உயிர்வாழத் தொடங்கிவிட்டோம்
மிக தொலைவில் அல்லது மிக அருகில்
மனத்துணை
எங்கே இருக்கிறாள் அந்தப் பைத்தியக்காரி
ஏன் என்முன் இன்னும் தோன்றவில்லை
அவளுக்கு எப்பொழுது நினைவு திரும்பும்
என் நினைவு எப்பொழுது வரும்
அவளுக்கு என்னைவந்து சேரும்
வழியை யாரும் கூறவில்லையா
அவள் ஏன் அங்கேயே இருக்கிறாள்
அவளை யார்தான் பார்த்துக்கொள்கின்றனர்
என்னைப்பற்றி யாராவது
மீண்டும் மீண்டும் கூறி நினைவுபடுத்துங்கள்
ஏன் என்னைக்கண்டதும் யாரோபோல்
முகம் திருப்பிக்கொள்கிறாள்
ஏன் ஒரு சிறிய சமிக்ஞைகூட தராமல் செல்கிறாள்
எவ்வளவு காலம் காத்திருக்க முடியும்
நான் செல்கிறேன்
எனக்கும் நினைவு இழக்க தொடங்கிவிட்டது
ஓடாத கால்கள்
என் கண்முன்
ஒரு பனைமரம்
ஒரு ஈச்சை மரம்
வேம்பு தேக்கு
புளியம் முருங்கை
சிறிய பாறை
ஒரு வரப்பு
பல அருகம்புல்
ஒரு சாலையும் சில மின்கம்பங்களும்
கிணறும் தொட்டியும்
பசுவும் கன்றும்
அவ்வளவுதான் என் அறிவும் உலகமும்
அவ்வளவுதான் என் பாதையில் இருக்கும் தடங்கள்
மேலும்
இன்னும் சில மைல்கள் தூரம்
அவ்வளவுதான் என் வாழ்க்கை
போருக்குத் தனியாகப் புறப்படல்
அறையில் எனக்கு முன்பக்க
சுவற்றில் இரண்டு யன்னல்களும்
சிறு அலமாரியும்
ஒரு சிறிய குண்டு பல்பு
மாலை நேரத்துச் சூரியனாய் ஒளிர்கிறது
பின்பக்க சுவற்றில் கதவும் பக்கவாட்டில்
ஒரு யன்னலும் நீண்ட அலமாரியும்
வலப்பக்கச் சுவற்றில் ஒரு குழல்விளக்கு
ஒளிரத் தொடங்கும்
ஒவ்வொருமுறையும் தயங்கித் தயங்கி எரிகிறது
இடப்பக்கச்சுவர் ஏதுமற்று மௌனமாய் நிற்கிறது
மேல் சுவற்றில் ஒரு காற்றாடி
அசௌகர்யமான இசை எழுப்பிச் சுழல்கிறது
தரையில் சுவற்றில் பூசிய வண்ணங்கள் கொட்டிக்கிடக்கின்றன
மேலும்
ஒரு மேசை கட்டில் நாற்காலி
ஆறுபக்கமும் சுவர்களாலான அறைக்குள்
என்னோடு யாருமில்லை
நான் மட்டும் இருக்கிறேன்
உடன் என் மனம் இருக்கிறது
இப்பொழுது
நாங்கள் இருவரும் தனியாக
எங்கள் வாழ்க்கையை வாழத்தொடங்கி இருக்கிறோம்
நாங்கள் எங்கும் வரவில்லை விட்டுவிடுங்கள்
இரா. இராகுலன்
மின்னஞ்சல் – rlragulan@gmail.com