சச்சரவு.
வெகு தூரம்
வந்துவிட்டதாக
விசனத்தின் வலியில்
துடித்தழுதபொழுது
அவன்
ஆழ்துயிலில்
இருந்தான்
கிழவி விழித்திருந்தாள்
வீடு
அசைந்தாடியது
காற்றின் போக்கில்.
***
பிரவாகம்.
இறுதி செய்யப்படாத
எல்லா
பிணக்குகளிலும்
அவள்
பூ
முடைகிறாள்.
அவன்
பூக்கொய்கிறான்.
குழந்தை
சலிப்படைகிறது
காத்திருத்தலின்
பொருட்டாக.
***
தோள் நிற துயரம்.
ஒவ்வொரு முறையும்
சிரேஷ்ட குமாரர்களின்
மிருக வதையெனும்
மீட்சிக்கு.
மனிதனுக்குதான்
களிம்பிட வேண்டியதாகிறது
வாளிப்பான
பசுவிற்கு முன்னால்.
***
பாத ரட்சை
நைந்து போயிருக்கிறது
காலணி
இதற்கு மேல்
தைத்துப்பயன்படுத்த
முடியதெனும்படியாக
தைக்கச்சொல்லி
சாலையோரத்தில்.
தைக்கும்
தோழர்
தலை நிமிர்ந்து
பார்த்தார்.
அசௌகரியம்
கொள்ளுமாறு.
கவலைப்படாதே
நண்பா
காலம் மாறும்
காட்சிகளும் மாறும்.
நெய்யும் மகிழ்வில்
வாழ்க்கையும்
நேர்த்தியாக மாறும்.
உன்
காத்திரமான வறுமையின் போராட்டதிலும்
நீயுமொரு
தொழிலாளியை
வாழ
வைத்துக்
கொண்டிருக்கிறாய்
உன்னாலும்
ஒருவரை
வாழ
வைக்க முடியுமென
வாழ்ந்து.
ரவி அல்லது
பட்டுக்கோட்டையைச் சார்ந்த ரவிச்சந்திரன் பி.இ., எம்.பி.ஏ ஆகிய கல்வி பட்டங்கள் பெற்றவர். கம்ப்யூட்டர், கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வருபவர். ரவி அல்லது எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார்