1
சாணி மொழுகப்பட்ட சொளகின்
மேடு பள்ளங்களாக
முடையப்பட்டுள்ளது
உயிர்.
2.
மட்டைகளை உரித்து உரித்து
கைரேகைகளை
இழந்த
மகத்தான தேங்காய் உரியாளன்
தன்னுடைய
ஒரு கோடியாவது தேங்காயை
கடப்பாறையின் தாயான
கழுமரத்திலேறி
உரிக்கிறான்.
3.
நிலா மங்கிய நாளில்
வெள்ளரிப்பிஞ்சுகள் களவாங்க
சும்மா கொடிகளுக்குள்
சாக்கோடு நெளிந்தேன்.
தப்பிக்கையில்
இடத்துப்பெரியாம்பளையிடம்
ஆம்பட்டேன்
எனது எளுறுக்கு
புகையிலை கொடுத்து
தனது களவுச்சரிதங்களை
நடுக்கமெடுத்து வாசித்தார்
விடிந்து வழியனுப்புகையில்
வெடித்த வெள்ளரிப்பழத்தை
கோரை படுக்கையிலிட்டு
கைக்குழந்தையாகத் தந்தவர்
விதைகளை மட்டும்
வழித்துக் கொண்டார்
4. கெளுத்தி
பரப்பெங்கும் குவிந்துள்ளன
மண்ட வெல்லம் போன்ற பாறைகள்.
பாறையொன்றின் தலைப்பள்ளத்தில்
அலம்புகிறது மழை நீர்.
பள்ளத்தில் நீந்தும்
பூனை மீசைக் கெளுத்திக் குஞ்சை
மலையேறி வந்து யார் விட்டது
எங்கிருந்து விழுந்தது.
கெளுத்தி
பாறைகள்
நான்
உலகு… எல்லாம்
பிள்ளைகள் மீன் பிடித்துப் போடும்
பாட்டிலுக்குள் இருக்கிறோம்.
5. SMART CITY
தன்மேல் படியும்
புழுதி தூசிகளின் குடலைச் சரிக்கிறது
விரிக்கொம்புக் காளை
துண்டாக்குகிறது கத்திக்கட்டு சேவல்
வாலால் விரட்டுகிறது குதிரை
விழுங்குகிறது வாத்து
கொத்துகிறது பொச்சாட்டிக் குருவி
புழுத்துகிறது கெடா
உலுப்புகிறது மரம்
தொல் சிற்பங்களால் எதுவும்
செய்ய முடியவில்லை.
அரைவளவிப் பாலத்தில்
புழுதிகளின் எடையோடு
ட்ரை சைக்கிளேத்தும் லோடுமேன் நான்.
கடுக்கும் கால்கறியை மிருதுவாக்க
அந்தி ரம்’முடன் தரைப்பாலத்தில் அமர்ந்து
மருதயை ஊதித் துடைத்து
பாட்டிலிலுள்ள
OLD CHEF-விடம் காட்டுவேன்
முத்துராசா குமார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலுள்ள தென் கரையைச் சேர்ந்தவர். விகடன் மாணவப்பத்திரிகையாளராக பணிபுரிந்துள்ளார். பிடிமண், நீர்ச்சுழி, கழுமரம் என மூன்று கவிதைத் தொகுதிகள், ஈத்து எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். தஞ்சைப் பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது, தோழர் சுப்புராயலு நினைவு விருது, சௌமா இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது மற்றும் திணைகள் கவிதை விருதும் பெற்றுள்ளார்.