அவள்
இன்றைய பொழுதின்
துன்பத்தைக் கடந்துவந்தது
கொடும் சாபம் என்பேன் மித்ரா…
பணி நெடுக அவளின் காட்சியே
மீண்டும்.. மீண்டும்… மீண்டெழுந்தன
இதற்கு முன்னர்
ஏதோவொரு பேரங்காடியின்
திருப்பத்தில் அவள் என்னைக்
கடந்து போயிருக்கக் கூடும்.
அவள் தொட்டுணர்ந்து
விட்டுச்சென்ற பொருட்களை
நான் வாங்கி வந்திருக்கலாம்
கூட்ட நெரிசலில் திடீரென
எதிர்ப்பட்ட முகங்களில்
தனித்த முகம்
அவளுடையதாக இருந்திருக்கலாம்.
விழிகளின் திடீர் பரிச்சயத்தில்
அவளுடன் நானும் கொஞ்சம்
புன்னகையை பரிமாறி கொண்டிருக்கலாம்
அவள் உயிரற்று கிடந்த சாலையில்
முன்பொரு முறை
எங்கள் வாகனங்கள்
ஒருசேர பயணித்திருக்கக் கூடும்.
ஏதோவொரு கணத்தில்
என் வாகனமும் அவளின் வாகனமும்
ஒருவரை ஒருவர் முந்திச் சென்றிருக்கலாம்
விபத்து நடப்பதற்கு முன்னதான
சில வினாடிகளில்
அவள் என்னைப் போலவே
தனது வாகனத்தின் கண்ணாடியில்
முகத்தினை திருத்தியிருக்கலாம்
நகம் கடித்து வாகன நெரிசலை
சபித்திருக்கலாம்
நெருங்கி விட்ட மரணத்தை அறியாது
மதிய சமையல் குறித்தும்
கைப்பையில் கரைந்துகொண்டிருக்கும்
பணத்தைக் குறித்தும்
பெண்களுக்கே உரிய ஏக்கங்கள்
குறித்தும் அவளுக்கு
சிந்தனைகள் எழுந்திருக்கக் கூடும்
கணநேரத்தில் அடித்து வீழ்த்திய
மரணத்தை அறியாது அவளின்
முகம் அப்போதும்
ஏதோ சிந்தனை வாயப்பட்டிருந்தது
போன்றே பாவம் கொண்டிருந்தது
மரணத்தின் நிறம்
சிவப்பாக வழிந்து
முகம் நிறைத்து
தரையில் நதியாய் பெருக்கெடுத்தது
குறுதியின் நடுவில் கிடந்தவளை
தொட்டுணர்ந்தபோது
வெப்பம் தணியாதிருந்தது
என் அருகாமை வேண்டி
அவள் அப்போதுதான்
உயிர் மரித்தது போல
அனைத்தும் கடந்து
ஏதும் நடவாது போல் எவ்வாறு
சிரித்த முகத்துடன்
பணிமனைக்குள் நுழைவது?
மறைவிலிருந்து எழும் மின்மினிகள்
கறுப்பு வைரமாக
ஒளிபெற்று
ததும்புகின்றது இரவு…
இரவின் புதுவாசத்தில்
உயிர்கொண்டெழுந்து
எந்த உருவமும்
நிறமும்
அற்றவளாகிறேன்
இந்த இரவு
என்னை நேசிக்கின்றது
என்னை நான் நேசிப்பது போலவே…
இரவு அருவமற்று
என்னையே
கவனித்துக்
கொண்டிருக்கிறது மின்மினிகளின்
கண் கொண்டு
நீ
என்னை
கவனிப்பது போலவே..
புள்ளி. . .
ஏட்டின் பரப்பில்
தனித்திருகிறது
ஒரு புள்ளி..
யாரேனும் கவனித்திராதப் பொழுதொன்றில்
ஏதோவொரு சொல்லிலிருந்து
அஃது உதிரப்பட்டிருக்கலாம்
தனித்தேயிருக்கும்
அதன் தரிசனம் மௌனம்
கசிய ஏதோ பேசுவது கேட்கிறது எனக்கு.
ஒரு வட்டத்தினை வரைந்து அதனை
ஒழுங்குப் படுத்தினால்
மேலும் மௌனம் கூடிப்போகக்கூடும்
சில புள்ளிகளுடன்
சில கோடுகள் இணைத்து கோலமாக மெருகெற்றலாம்.
தனித்தே இருக்கும் அதன்
தரிசனம் சோகத்தை
பிரவாகிக்காமல் இருக்க எதாகினும்
செய்வது நல்லது.
காதுகள் பெருங்கைகளாக
விரல் உதிர்த்த சொற்கள்
விழிமலர்ந்து
பூக்களாகியிருந்தன
ஏடுகள் மட்டும் எட்டாத் தூத்தில்
திரும்பாத வசந்தத்திற்காகக்
கண்ணீர் சிந்தலாம்
எதிர்காலம்
முகக்கவரிக்குள்
கன்னங்கள்
வெளிச்சம் தீண்டா
செழிப்பில்..
நாசிக்குப்
போராட்ட வாழ்வு..
ஆடைக்கு மேல் இன்னொரு ஆடை
அதற்கும் மேல் பிறிதொரு கவசம்
வெப்பநீரில்
நிதம் குளிக்கும் தேகம்..
முகக்கவரி அகற்றும்
சிறுநொடி இடைவேளையில்
தோழிக்கும்
என் முகம்
அந்நியமாய்..
அதன் நிறம் சிவப்போ?
ஆழ்ந்த இருளில்
முகந்திருத்திக் கொண்டிருந்தது
அது.
அடர் சிவப்பு நிறத்தில் அதன் விழிகள் இருந்திருக்கலாம்.
வெளிச்சம் படாத அதன் தேகம்
இருளில் எழுந்தசைவது தெரிகிறது.
அதனுடைய வெப்பமூச்சில்
நான் தொப்பமாகிப் போயிருந்தேன்.
இருள் நீள நீள..
அது நெஞ்சின் மீது
வந்தமர்ந்திருந்தது.
நிற்பதும் கட்டற்ற தன்மையுமாய்
என் இதயம் துடிப்பதும்
நிற்பதுமாகயிருந்தது.
சொற்களைக் கூர்மையாக்கி
நகங்களால் என்னைக் கொன்றது..
தேடியறிய விரும்பாத அவ்வுருவம்
இப்படி
முழு முற்றான இருளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
முடிவாக அத்துணை
பிரயாத்தங்களுடன்
உதைத்தேன்.
எட்டி விழுந்து
திரும்பிப்பாராமல் ஓடியது.
இன்று…
அறியமுடிந்தது
‘கோபம்’
கல்யெறிந்தால் ஓடிவிடும் நாயென்று.
-மீராவாணி
1987 இல் புதுக்கவிதையில் முகம் பதித்து வந்தவர். கவிதை பித்து அதிகம் இருந்தாலும் உணர்வுகளைப் பகிர மட்டும் அதில் வலம் வருவதாகச் சொல்கிறார். இவரது கவனம் சிறுகதை இலக்கியத்தில்.அதிகமென்றாலும் கவிதைகளும் எழுதி வருகிறார். இவர் நாவல் ஒன்றும், ஈரம் – கவிஞர்களுடன் நேர்காணல் தொகுப்பு நூலும் வெளியிட்டிருக்கிறார்.