மாத்ரி மகாபாரதத்தில் பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையருக்குத் தாய். குந்தியின் தேவர்களை வரவழைக்கும் மந்திரத்தைக் கடன்பெற்று அஸ்வினிதேவர்களாகிய இரட்டையர்களை அழைத்து நகுலன், சகாதேவனைப் பெற்றெடுத்தாள். மாத்ரி பேரழகி. பாண்டுவுக்கு மனைவியோடு உறவு கொண்டால் மரணம் சித்திக்கும் என முனிவர் சாபம் இருந்தது.
மாத்ரியின் அழகில் பித்தமேறிய பாண்டு அவளோடு உறவு கொண்டு மரணமடைந்தான். மாத்ரி தன் குழந்தைகளை குந்தியிடம் ஒப்படைத்துவிட்டு பாண்டுவோடு உடன்கட்டை ஏறினாள்.
மாத்ரி
உன்னிடமில்லாமால் வேறு
யாரிடம் சொல்வது
என் குறும்பலாவே
வேரிலும், நடுமரத்திலும்,
கிளையிலுமெனெ
எங்கும் பூத்து
எங்கும் கனியும்
தாய்மையின் உருவே
ஆகிய நீ அல்லால்
யார் கேட்பார்
மாத்ரியாகிய என் கதையை
ஒரு குழந்தையின் பிஞ்சு பாதம்
மெதுவே நெஞ்சில் உதைத்து போல
உன்னை முத்தமிட விரும்புகிறேன்
கனிவாக, பரிவாக, மெதுவாக,
என் கதை கேளாய்
நிலவொளியில் வன
விருட்சங்கள் மெதுவே
வெளிப்போந்தன தங்கள்
ஒளிரும் இலைகள் மினுக்கி
நான் குந்தி தந்த மந்திரத்தை
அனாகத சக்கரத்தில்
வைத்து கனவின் சுடரெனவே தியானித்தேன்
உன் பலா மரக் கிளைகளில்
மனதைக் குழப்பும் எத்தனை
வளைவு நெளிவுகள்
வான் நிறைக்கின்றன
சிறிய ஆசை இலைகளின் கிளைகள்
மேலும் அதிகமாய் திருகி முறுகியிருக்கின்றன
அவற்றில் தூங்கும் பறவைகளை
நான் எழுப்ப விரும்பவில்லை
பிடரி மயிர் சிலிர்க்க
ஓடி வரும் வெண்புரவிகள்
ஒன்றல்ல பலவல்ல இரண்டு புரவிகள்
கோடி சூர்ய பிரகாசத்துடன்
வானிறங்கி வருகின்றன
புரவிகளின் குளம்படிகள்
என்றுமே நிகழ்காலத்தில்
என்றுனக்குத் தெரியுமா
ஊடுருவும் விசையின்
இரு ஜோடிக் கண்கள்
கடிவாளங்கள் ஏதுமற்ற
கன்னி வாய்கள்
அவற்றை அஸ்வினி தேவர்கள்
என்றழைத்தேன்
நழுவும் நிகழ் கணம் நிகழென நிலைக்க
எது முன் எது பின் எது முன் எது பின்
அந்தக் குதிரைகள் நம் விசையுறும்
எண்ணங்கள் போல மின்னலடிக்கின்றன
ஓவென வாய்விட்டு அலறுகிறேன்
மகிழ்வுண்ட சூறாவளியாய் ஓலமிடுகிறேன்
வனங்களின் ஆழத்திலிருந்து முனகுகிறேன்
எதிர்பாரா மரணத்திற்கிணையான
இன்பத்தின் உச்சமோ இதுவென
மயங்குகிறேன் குறும்பலாவே
ரசம் ததும்பும் மதுக்குடத்தைத் திறந்தது யார்
பெண்களின் முலைகளிடையே இறக்காத
கடவுளரும்தான் யார்?
பெண்ணின் கனவுகளுக்கு
ஈடு கொடுக்க
பிரேமைக்கும் கற்பனைக்கும்
செயல் கொடுக்க
மட்டும்தானே நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன?
வெண்புரவிகள் தலை தொங்கிச்
செல்லமாய் தயங்கி நின்றனவென
உனக்குத் தெரியும்தானே
கட்கத்திற்கொன்றாய் குதிரைத்தலையொன்றை
இடுக்கிக்கொள்கிறேன்
குதிரைகளின் நெற்றிகளை வருடுகையில்
அவற்றின் முடிகளை மென்மையாகக் கோதுகையில்
அவை கொஞ்சலாகக் கனைக்கின்றன
ஆ உன் கிளையில் தூங்கும் பட்சியொன்று
உறக்கம் கலைந்து சிறகடித்து மேலெழும்பி
மீண்டும் கூடடைகிறது
என் கைகளில் அடங்கி நிற்கும் குதிரைகள்
குளம்புகளால் மண் பறித்து
தலை அசைத்து வெட்கம் கொள்கின்றன
விடை கொடுத்தாலும் போவதில்லை அவை
ஆத்ம பந்தம் தேடிக் கனிகின்றன
அவற்றின் கண்கள்
தொலைந்து போன புராணக் கதையொன்றில்
பெண்ணறிவின் விகாசம் வனத்தின்
நள்ளிரவாய், புவனத்தின் வைகறையாய்
பரிணமித்ததை அல்லவா
நானுனக்கு சொல்கிறேன்
தாயாகிய குறும்பலாவே
நீ அறிவதாக
ஆடி பிம்பம் ஒன்றில் தன்னை
முதன்முதலாகப் பெண்ணென்று
பிரக்ஞை உடையும்
ஒருவளின் வன மிருகமொன்றின் கட்டற்ற பாடலை
அது தரும் யௌவனத்தின் பூரிப்பைப்
பார்த்துதான் பாண்டு என்னிடத்தில்
மேலும் மோகம் கொண்டான்
முதல் மழை விழுந்த பூமியின்
வெக்கையோடு அவன் காத்திருந்தான்
வெண்புரவிகளோடு கழித்த என் இரவின்
நினைவுகளில் என முகம் சிவக்கையில்
-அது எப்போதுமே எனக்கு நிகழ்காலம்-
என்றுணர்ந்த பாண்டு பித்தேறி நின்றான்
பேரழகனாய் நகுலனும்
பெரும் ஞானியாய் சகாதேவனும்
பிறந்திருப்பதன் ரகசியத்தை
அவன் அறிய விரும்பினான்
என்னிடம் தோற்ற தெய்வங்கள்
என்னைக் கைவிடுமென
தங்கள் அஸ்வினி வைத்தியத்தால்
பாண்டுவை குணப்படுத்தாமல் போகுமென
நான் ஒரு கணம் கூட நினைத்திருக்கவில்லை குறும்பலா
எடை மிகுந்த கனிகளை உன் கிளைகள்
தாங்காதென்றுதானே நீ
அவற்றை நடுமரத்திலும் வேரிலும்
உன் கர்ப்ப பாத்திரங்களில் முகிழ்க்கிறாய்
என் கனிகள் நகுலனோ சகாதேவனோ அல்ல
நான் முழுமையாக உணர்ந்த பெண்ணறிவு
இந்த பிரபஞ்சத்தின் மூல ரகசியம்
அதையே பாண்டு விரும்பினான்
குந்தி அதை என்றும் உணர்ந்தவளில்லை
அவள் பெண்ணல்ல அரசி
அரசதிகாரத்திற்கு என்றில்லை
ஒரு சிற்றதிகாரத்திற்கும் கூட அறிவேது
எல்லாமே கணக்குகள்
லாப நஷ்ட கணக்குகள்
அன்று அதிகாலையில் குளித்து
ஓரிழைத் துண்டணிந்து கூந்தலில் நீர் சொட்ட
மனோரஞ்சித மலரொன்றைப் பறித்து
சூடுகையில் நான் பலவீனமாயிருந்தேன்
பாண்டுவின் கண்கள் குதிரைகளின் கண்கள்
போல என்னிடத்தில் யாசகம் வேண்டின
அவன் தவித்திருந்தான் நான் கனிந்திருந்தேன்
கிழக்கில் உதயத்தின் இதழ்கள்
ஒன்று ஒன்றாய் மெதுவாய் அவிழ்ந்தன
வைகறையில் விழித்த பறவைகளின் கூச்சல்
காட்டின் சங்கீதமாயிருந்தது
கதிரவனின் முதல் கிரணங்கள் பச்சை இலைகளூடே
சன்னமாய் கீழிறங்கின
நான் அவனை ஆக்கிரமித்தேன்
வேகக்குதிரைகளின் குளம்படிகள்
கொண்டுவரும் புயலின் விசையொடு
பூமியின் நறுமணம் பாண்டுவை
சூழ்ந்து அவனைத் தன்னோடு இறுக்கி
ஆவி சேர்த்து அணைத்தது
குறும்பலா குறும்பலா
பாண்டு என் ரகசியம் அறிகையில்
அவன் பேரானந்தம் அடைந்தான்
அவன் கண்களின் பாவைகள்
விரிந்து வெண்படலம் நிறைத்தன
குதிரைகளின் கண்கள் போல
மிருகங்களின் கண்கள் போல
வன மிருகங்களின் கண்கள் போல
அவை என்னை உற்று நோக்கி
ஆத்ம போதம் அடைந்தன
எனக்கு எந்த வருத்தமுமில்லை குறும்பலா
நகுலனையும் சகாதேவனையும்
குந்தியிடம் ஒப்படைத்துவிட்டேன்
அழகும் ஞானமும் உதவாமல் அரசதிகாரம் உண்டா
குந்தி அவர்களை நிச்சயம் நேசிப்பாள்
இதோ மணவலங்காரம் அணிந்து
பாண்டுவின் சிதை நோக்கிச் செல்கிறேன்
அவனுடைய மோட்சத்தின்
கதவுகளைத் திறக்கவேண்டும்
மீண்டுமொருமுறை