சக்கை
வெயிற் பொழுதின் தகிப்பிலொரு
காங்கையில்
வெக்கையும் வேர்வையும்
மூச்சிறைப்புக்குமிடையே
பல நாட்களும்….
கடும் மழை கொடுங்குளிர்
நரம்பறுக்கும் நாளைய கனவுகளுடன்
தள்ளாட்ட நடையிலாங்கு
ஒட்டி உலர்ந்த என்பினூடே
சுமைபொதியுடன் நகருமவன்
கழுதையுமல்ல குதிரையுமல்ல
நெய்குடி வண்டியுமல்ல ….
புலர்வேளை தொடங்குமுன்னே
ஆறேழு பசித்த வயிறுகளை…
வயிற்றுக்கப்பால் அழுத்தும்
தவிர்க்கவியலாத் தேவைகளை…
நெஞ்சில் புதைத்தேகும்
நகரோரத் தெருக்களில்
விட்டெறியப்பட்ட சக்கைகளின்
அவலட்சணப் பிரதிகளில்
அவனும் ஒருவன்…
அன்றாடங்காய்ச்சியென
அங்கீகரிக்கப்படாத
பொய்வாக்குகளில் பிசையப்பட்ட
பெயரளவேயான மனிதன்
இருளெனும் ஒளி
இருளாகிக் கிடக்கையில்
தெளிவாகிறது
ஒளித்துளி வரைந்த சிலிர்ப்பு
இருளாகிக் கிடக்கையில்
தெளிவாகிறது
ஒளிப்பிரளயம் கொளுத்திய
அழிச்சாட்டியம்
சில இருட்டடிப்புகளுக்குப் பின்
சட்டென்று தட்டுப்படலாம்
இருள்
சிலருக்குக்
கோள்கள் கடந்த
அண்டசராசர அந்தகாரத்
தேடல் உண்டு
அதுவரை
சின்னச் சின்ன இருளைத்
தாவிச் செல்வர்
இருளென்பது இன்பம்
இருளென்பது திறவு
இருளே பேரொளி
நீங்கள் வாழ்கின்ற
இந்த ஒளியெல்லாம்
இருளெனத் தெரியுங்கால்
நீங்கள் கண்டிராத
அந்த இருளே
ஒளியென உணர்வீர்கள்
எனவே
இருளுக்கு வாருங்கள்
இருளுக்குள் வாழுங்கள்!
மாயத் தோற்றம்
திரள் மேக மோதல்களை
ஆனந்த ஆராதனை
செய்ய முடிவதில்லை
கீழ்வானச் சிவப்புச் சாந்துகள்
முன்பு போல்
அதிசயமாகத் தெரிவதில்லை
காற்றைக்கூட
சுவாசிக்க முடிவதில்லை
திரள்மேகங்கள்
பீரங்கிகளாகவும்
சிவப்புச் சாந்துகள்
மாண்ட உடல்களின்
செந்நீர் நதியாகவும்
மென்காற்றின் அசைவாடல்
போருக்குப் பின்
வெறிச்சோடிய பொழுதாகவும்
இந்தப் பிரபஞ்சமே
கோடி கண்களால்
கொத்துவதாய்
ஒரு தோற்றம்
பயணக்குறிப்பு
அவசியப் பயணமென
வீட்டினின்று
வெளியேறும்
சில தவிர்க்கவியலாத
நகர்வுகளின்போது
யார் யாரோ
நினைவுக்கூடத்தில்
நுழைந்து போகிறார்கள்
இரண்டெட்டுப் பயணத்துக்காய்த்
தெருக்கடை வரை
போனவர்கள் …
கடன் வாங்க
கண்ணீரோடு விரைந்தவர்கள்…
வயிற்றுப் பிழைப்புக்காய்க்
கருக்கலில் நடந்தவர்கள்…
காற்று வாங்க
காற்றில் பறந்த
கனம் கொண்டவர்கள்….
பயணமென்பது
தொலைவிலும்
அமைந்துவிடுவதுண்டு
அலுவல் நிமித்தம்
கடல் பறவையாய்ப்
பிரமாண்டமெடுத்தவர்கள்…
சில பயணங்கள்
ஏக்கங்களைத்
துடிதுடிக்க வைக்கும்
நினைவுச் சின்னமாய்
நெடும்பயணம் போனவர்கள்
அதில்
நினைவின்
நிரந்தரப் பயணிகளாய்ச்
சி….
…..ல…
……….ர்…..
பற்றுதல்
இருக்கிறாரா
இல்லையா என்கிறீர்கள்
இல்லையெனச் சொன்னால்
இருக்கிறார் என்பவனும்
இருக்கிறார் எனச்சொன்னால்
இல்லையென்பவனும்
மோதிக்கொள்கிறீர்கள்
தெரியாதெனச் சொன்னால்
தப்பிப்பதாகச் சொல்கிறீர்கள்
அவர் எப்பொழுதோ இறந்துவிட்டார்
எனச் சொன்னால்
அப்படியானால் அவர்
வாழ்ந்துள்ளார் என்கிறீர்கள்
உங்கள் வேதங்களால்
என் பாதங்கள்
மண்ணில் ஊன்ற
மறுக்கின்றன
உங்கள் கதைகளையெல்லாம்
கேட்கிறேன் என்பதற்காக
என் காதுகளை
அறுத்துத் தர முடியாது
எஞ்சிய எனது பத்து நிமிடங்களை
வீணடித்துவிடாதீர்கள்
செடி கொடி பறவை பூச்சிகளிடம்
சேர்ந்துவிடுகிறேன்.
பலி
காட்டு வேடன்
நாட்டு வேடன்
யார் பக்கமெனக்
கேட்டார்கள்
அதிக நேரம்
பிடிக்கவில்லை
நாங்களே பலிகளென்றேன்.
மலேசியா ஏ.தேவராஜன்
1983-லிருந்து எழுதி வருகிறார். இதுவரை ஏழு நூல்கள். இரு சிறுகதைத் தொகுப்புகள்,நான்கு கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஒரு கட்டுரை நூலும் வெளியாகியுள்ளன. இரு நாவல்கள் வெளி வரக் காத்திருக்கின்றன. மேடைக் கலைஞராகக் கடந்த நாற்பது ஆண்டுகள் பயணிக்கிறார்.
படங்கள் : இணையம்