1. தோதற்ற தோது
என்னிடம்
நூலுமில்லை பட்டமுமில்லை
விடத் தோதான
வெளி மட்டுமே இருக்கிறது
எனக்கும் வெளிக்கும் அப்பால்
ரொம்ப காலமாகக் காத்திருக்கிறது
வானம்
வழக்கம்போல
இம்முறையும்
அண்ணாந்து
தவணை சொல்கிறேன்.
2. தானிய ஒளி
நம்பிக்கையின்
பத்தாவது தலையும்
துண்டிக்கப்பட்டபோது
கண்ணாடிக் குடுவையைத்
தாரூற்றி நிரப்புவதுபோல
எனதுடலை
எதுவோ
இருளூற்றி நிரப்பியது
முடிவின் உஷ்ண மூச்சுப் பட்டு
முகமெல்லாம் வெந்துகொண்டிருந்தது
நான் கடைசி ஆசையாக
ஒளியைக் கற்பனை செய்தேன்
கண் விழிக்கையில் எதிரே
இறக்கைகளை அடித்துக்கொண்டு கத்திய பறவை
வானெங்கும் பறந்தலைந்து
கொத்தி வந்தது
ஒளிரும் தானியமான நட்சத்திரத்தை
அதன் பிறகு விளைந்ததுதான்
எனக்குள்
கண்ணுக்கெட்டும் தூரம் வரை தெரிகிற
வெளிச்சத்தின் வயல்.
3. வெறுமையின் யானை
நமது சிறிய வீட்டிலிருந்து
நீ வெளியேறியதும்
அதுவரை
ஒரு பீரோவைக்கூட
உள்நுழைய விடாத
நமது வாசற்படியை
உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டது
வெறுமையின் யானை
அது தன் உடலால்
வீட்டையே நிறைத்துவிட்டது
இப்போதெல்லாம்
யாரோவொரு வழிப்போக்கனைப் போல்
வாசற்படியிலேயே
அமர்ந்து உண்டு உறங்கி
எழுந்து செல்கிறேன்
உனது செல்கை
இவ்வீட்டின் சதுர அமைப்பை
ரொம்பவும் நசுக்கி
கோடாக மாற்றிவிட்டது.
4. இருவேறு உலகங்கள்
தவறுதலாகக் காருக்குள் அடைபட்ட
வண்ணத்துப் பூச்சி
கண்ணாடியில் அமர்ந்து
அதிவேகமாய் நகரும் உலகை
பயமூறும் கண்களால் வெறித்தது
அதனுலகம்
அதன் இறகுகளைப் போன்றே
மிருதுவானது
பறத்தலைப் போன்றே நிதானமானது
அங்கிருந்து
தப்ப முயல்கையில்
கருணையின் கையொன்று
கண்ணாடியை இறக்கிவிட்டு உதவியது
எப்போதும்
இலேசான தீண்டலில்
சுகம் காணும் காற்று
அன்று
இறகுகள் வேறாக
உடல் வேறாக
பிய்த்து வீசியது.
5.
அப்பா என்றெழுதி
கண்ணீரால் கிரீடம் வரைந்த மகளுக்கு
எனது பற்களைக் கோத்துப்
பாசி மாலையெனத் தந்து
ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறேன்
மகளுக்குப் பிடிக்காதென்றாலும்
வாழ்க்கைக்குப் பிடிக்கும்
என்னைப்
பொக்கை வாயோடு பார்ப்பது.
வெளியீடு : நீலம் பதிப்பகம்.