மே-சொல்லிகள்
பாதையை மறித்தபடி மந்தமாகச் செல்லும்
மே-சொல்லிகள்
தாமாகவே விலகி வழிவிடட்டும் எனக் காத்திருந்தேன்.
அதற்குள் அவை என்னையும்
தங்களில் ஒருவராக நினைத்துக்கொண்டன போலும்.
எல்லாவற்றுக்கும் மே-சொல்வதென்பது
எளிமையானது மட்டுமல்ல சௌகர்யமானதும்கூட
எல்லா பொதிகளையும் ஒரே வண்டியில் ஏற்றலாம்.
எல்லா பூக்களுக்கும் ஒரே வண்ணமிடலாம்
யாராவது வந்து மீட்டெடுக்கும்வரை
வழிமொழியப் பழகாதொரு பள்ளத்தாக்கினை
செப்பனிட்டுக் கொண்டிருக்கலாம்.
இப்போது
மொத்த கூட்டமும் வலப்புறம் திரும்புகிறது
எதையும் கண்டுகொள்ளாமல் நிற்கும் நான்
அங்கிருந்து நழுவி நேராகச் செல்கிறேன்
எந்தவித சலனமுமில்லை மேய்ப்பனிடம்
கண்ணெதிரிலே தன் மந்தையில் ஒன்று
தொலைவதைக் கண்டபின்பும்.
ஜென் குளம்
தவளையொன்று நீரில் குதித்தது
பின்வந்த தவளை
ஒரு ப்ளக் என்ற சத்தத்தில் குதித்தது
அடுத்து வந்த தவளை
ஒரு தளும்பும் வட்டத்தில் குதித்தது
அதற்கடுத்த தவளையோ
நீரைத் திறந்துமூடும் மையத்தில் குதித்தது
இலக்கற்று
துவங்கிய பயணம்
அலையலையாய் விரிந்தபடி
எங்கெங்கோ சென்றாலும்
எல்லாம் ஓரெல்லைவரைதான்
சற்றுநேரத்தில் குளமெங்கும் மீண்டும் நிச்சலனம்
பாருங்களேன்,
இவ்வளவு நடக்கின்றன
ஆனால் எந்தவித தடயங்களுமில்லை.
பெரு.விஷ்ணுகுமார் கவிதைகள்