மதுரையும் இவர் நடத்திய வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந. ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலக் கவிதைகளில் தேர்ந்த பரிச்சயம் கொண்ட ஜயபாஸ்கரன், அர்த்தநாரி கவிதைத் தொகுதி வழியாக தமிழ் கவிதை வாசகர்களுக்கு அறிமுகமானவர். தமிழ் இலக்கிய, புராணங்களின் நினைவையும் எதிரொலிகளையும் மிகச் சிறிய எதிர்வினைகளையும் கொண்ட கவிதைகள் இவருடையது. எமிலி டிக்கன்ஸன், குருதத், திருப்பூவனத்து பொன்னனையாள், அங்கம் வெட்டுண்ட பாணன், ஆஹா சாகித் அலி என மேற்கும் கிழக்கும் முயங்கி நிறைவேறாமையின் வலியும் சுமையும் நிறைந்த சிலுவையோடும் தொல் தமிழ் மரபின் நினைவோடும் தனது கவிதைப் பாத்திரங்களை மதுரையில் அலையவிட்ட ந. ஜயபாஸ்கரனின் கவிதைச் சிறுபிரபஞ்சம் வான்கோவின் மஞ்சளையும் எடுத்துக் கொண்டு சற்று விரிவடைந்தது. ஜயபாஸ்கரன் உருவகித்து வைத்திருந்த சின்னஞ்சிறு தனிப்பிரபஞ்சம், சமீபத்தில் அவர் எழுதிவரும் உரைநடைக் கவிதைகள் வழியாக நீட்சியையும் நிறையையும் அடைந்திருக்கிறது. தமிழ் இலக்கிய மரபின் சுமையை இறக்க முயன்று, அதன் கர்ப்பப் பாதுகாப்பிலிருந்தும் வெளியேறி ‘நவீன’ கவிஞனாக, நெடுங்காலத்துக்குப் பின்னர் உணர்ந்து, காலை எட்டி வைத்து இன்னொரு பயணம் தொடங்கியவனின் கதையாக அவரது இப்பருவத்துக் கவிதைகள் இருக்கின்றன. சமீபத்தில் இலங்கைக்குச் சென்று சில மாதங்கள் இருந்துவந்த அனுபவத்திலிருந்து இந்தக் கவிதைக்குள் செயல்படும் கண்களை வாசகர்கள் பார்த்தல் வேண்டும்.
இன்னொரு பயணம்
லா.ச.ரா. சொல்கிற
‘ஆழ்ந்த மவுனத்தின் விறுவிறுப்பு’
காற்றில் இருக்கிறது இங்கு
சாலைகளில்
ஒழுங்கைகளில்
வளைவுகளில்
பெயர்களாகி விட்ட இடங்களில்
இதழ் பிரிக்கின்ற கார்த்திகைப் பூக்களில்
பொருளற்றுப் போய்விட்ட
பரித்தியாகங்கள்
வன்மங்கள்
குரூரங்கள்
காணாமல் ஆக்கப்பட்ட
வலிகள்
வற்றாப்பளை கண்ணகை அம்மன்
வலதுகையில் ஒற்றைச் சிலம்புடன்
எதிரே விரியும் நந்திக் கடலின் ஓலம்
படைவீரர்களின் அடர் இருப்பு
வன்னிக்காடுகளின் மவுனம்.
தியானபுத்தரின் இருந்த கோலச் சதுக்கங்கள்.
சிம்சுபா விருட்சத்தின் இலைகளைக் கையில் பரப்பியவாறு
சீடர்களிடம் கேட்கிறார் போதிச்சத்துவர்,
மரத்திலுள்ளதா கரத்திலுள்ளதா எது அதிகம் என்று.
கையிலுள்ளதே அதிகம் என்கிறது இன்றைய யதார்த்தம்.
வனங்களின் நீள்பரப்பில் படைமுகாம்கள்.
சிராவஸ்தி நகரம் தீ, வெள்ளம், போர் – என்ற மூன்று
உற்பாதங்களால் அழிந்து போகும் என்ற ஆரூடம் துணுக்குற வைக்கிறது.
புத்தபிட்சு பிண்டோல பரத்வாஜன், கழிமுனையில்
கட்டி வைத்த சந்தன மரக் கோரகையைத் தன் இத்தி சக்தியால்
அந்தரத்தில் சென்று கவர்ந்து வருகிறான்.
இது அகிரியம் என்று முகம் சுருங்கும் புத்தர், அந்தப் பிட்சைப்
பாத்திரத்தை உடைத்துத் துண்டாக்கிச் சந்தனத் தைலத்திற்காக
உபயோகித்துக் கொள்ளச் சொல்கிறார்.
இரண்டு வாசல்கள் உள்ள வீட்டின் கூரைக் கொம்புகள் உளுத்துப்
போய்விட்டன.
அதன் துலாம் இற்றுவிழப் போகிறது.
உருள்கிறது கதாதரரின் தர்ம சக்கரம்.
பனை ஓலைப் பெட்டிக்குள் இருந்த சொப்புச் சாமான்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து விளையாடிவிட்டுப் பின் அவற்றின் இருப்பிடத்தில் வைத்தது போல் இருக்கிறது எல்லாம். தலைமுறை வியாபார விளையாட்டு முடிந்துவிட்டது. வெண்கலக்கடைத் தெரு பின்னால் நடந்து வந்து கொண்டிருக்கிறது. திரும்பிப் பார்க்காமல் உன் சிறுவழி போ என்று சொல்கிறது. லோத்தின் மனைவி பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூண் ஆன கதை தெரியுமல்லவா என்றும் அதட்டுகிறது. கீழவாசல் தேவாலயத்தின் மணியோசை தேய்ந்து கேட்கிறது. முன்னே பார்க்கையில் கடைத்தெருவின் உயிர் இயக்கம் மூச்சுமுட்டுகிறது. அமில ஆவி எதையும் யாரையும் லட்சியம் செய்யாமல் பரவிக் கொண்டிருக்கிறது. நைந்து போன மெத்தை இருக்கையை நிறைத்து உட்கார்ந்திருக்கும் ஆபரணக்கடை ஆச்சியின் ஓயாத பேச்சைக் கேட்டவாறு சைக்கிள் ரிக்ஷாவை மிதிக்கும் முதிய கால்கள் மவுன ரகசிங்களுடன் முன் ஏறிப் போகத் தவிக்கின்றன. கச்சிதக் குஷன் பெட்டிக்குள் மாற்றுக் குறைந்த ஆபரணங்கள் சிரித்துப் பதுங்குகின்றன. தன் எல்லை முடிந்துவிட்டதாய்ச் சுருண்டு பின்வாங்குகிறது வெண்கலக்கடைத் தெரு.
‘விளையாட்டும் பொழுதுபோக்கும்’ என்ற ஆங்கில வார இதழ்
மிகச்சிலருக்கே இன்று நினைவில் இருக்கக் கூடும்.
அந்தப் பத்திரிகையும் நட்சத்திர அந்தஸ்துடன் வேறு அவதாரம்
எடுத்துவிட்டது.
விளையாட்டையும் பொழுதுபோக்கையும் நடைமுறையில் அறியாத ஒருவன்
அதன் தொடர் வாசகனாக இருந்திருக்கிறான் என்பது விசித்திரமான
விஷயம் தான்.
மைதானத்தில் ஒரு பந்து கூடப் போடாதவன் மனத்தில் ஆஸ்திரேலியாவின்
அந்தக்கால வேகப்பந்து வீச்சாளர் ரே விண்ட்வால்,
இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர் பி. எஸ். சந்திரசேகர்,
இருவரும் ஓடிவந்து கொண்டே இருக்கிறார்கள் ஓய்வின்றி.
விண்ட்வாலின் கட்டுப்படுத்தப்பட்ட வேக லயமும்
சந்திர சேகரின் போலியோ பாதித்த கையின் மாயச்சுழலும்
அந்தப் பத்திரிகையின் வழியே இவ்வளவு ஆண்டுகளாகியும் கவிதையின்
கிளர்ச்சி வட்டங்களாய்ச் சுற்றுகின்றன சுற்றுகின்றன அவன் மனத்தில்.
காகிதப் புணர்ச்சி என்பது விளையாட்டும் இல்லை
பொழுதுபோக்கும் இல்லை
அவனைப் பொறுத்தவரை.