வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம்
உனக்கும் எனக்குமிடையில்
நீளும் இச்சுவர்களில்
உப்பின் ஈரம் பூத்திருக்கின்றது
உனக்கு எத்தனை முறை சொல்வது.!?
உன் மனம்
மயில் அகவுவதைப்போல
ஒலியெழுப்பிக்கொண்டிருக்கிறது
நீயோ குனிந்த தலை நிமிராது
கூடை முடைந்து கொண்டிருக்கின்றாய்
பூவை தீபத்தில் அழுத்தி
ஒளியின் மூச்சை நிறுத்தி வைத்துவிட்டு
சிறிது கண்ணடை
தூதுக்கு இவ்விடம் பறவையேதுமற்று இருக்கின்றது
வௌவால்களின் வழியே
அனுப்பியிருக்கிறேன்.
வழியில் கனியைக் கண்டு
அவையும் தலைகீழ் பற்றாற்றலாம்
விடியும்முன் வந்தடையும்
அந்தப்பாலூட்டிகளின்
மார்பில் முட்டி என் காதலைப்பருகு தற்சமயம்
🌿
ப்ச்சு..
நீராடிவரும் பெண்ணின்
நுனிக்கூந்தலைப்போல
ஈரமாக இமைகளை வைத்திருக்கிறாய்.
ப்ச்சு
உனக்கு அழுகையைக்கூட
சரியாக மறைக்கவே தெரியவில்லை
🌿
பூக்களை நீரில் ஆழ்த்துதல்
நான் சிறிய தோட்டத்தில்
பூக்களைப் பயிரிடுபவன்
எனக்கு ஆரம்பக் காலத்தில் பூக்கள் நீரில் மிதப்பது
பிடித்திருந்தது.
நன்கு நினைவிலுள்ளது
ஓடிக்கடந்த பழைய நீரின் ஓடையது
பூக்களை இறக்கிவிட்டு
பார்த்துக்கொண்டிருந்தேன்
பின் பூக்களை நிறுத்திவிட்டு
தானியங்களைப் புதைத்து நீர் தெளிக்களானேன்
பூமிக்கு வருகின்ற
முதலிரண்டு மீச்சிறு இலைகளுக்கு
சூரியன் தன் பிள்ளைக் கீற்றை
விளையாடத்தந்தது பிடித்திருந்தது.
முதற்கிளை பிரிகையில்
அங்கமரப்போகும்
பிறவா பறவைக்குப் பிறக்கப்போகும்
பறவாப் பறவையின்
உஷ்ணத்தை உணர்ந்தேன்.
முற்றி ஈரமண்ணில் என் கால்களைப்
புதைத்து அமர்ந்திருக்கிறேன்
இப்போதெல்லாம்
எனக்குப் பாதக் குளிர் பிடித்திருக்கிறது
இனி குளிர் உடலெங்கும் பரவலாம்
நாளை முழுவதும் புதைந்து மழைக்கு ஏங்குவேன்.
பிறகு பிறவா முயலுக்குக் கேரட்டாக முளைப்பேன்
– நிலாகண்ணன்
நெடுஞ்சாலைவாழ் உயிரினம்.
சிங்கையில் டிரைவராகô பணிபுரிகிறார்.
2021 ல் பியானோவின் நறும்புகை கவிதை தொகுப்பினை வெளியிட்டார்.
தமுஎச விருது அந்நூலுக்குì கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.