யான் காப்லின்ஸ்கி கவிதைகள்
தமிழில்: வே.நி.சூர்யா
நானும் என் மகனும் வீட்டுக்குப் புறப்பட்டோம்.
ஏற்கனவே மாலை மருண்டுவிட்டிருந்தது.
மேற்கு வானில் ஓர் இளைய நிலா
அதன் அருகில் ஒரு நட்சத்திரம்.
நான் என் மகனுக்கு அவற்றைக் காண்பித்து
நிலவை எப்படி வரவேற்பது என்றும்
அந்த நட்சத்திரத்தை நிலவின் வேலையாள் என்றும்
விவரித்துச்சொன்னேன்.
வீட்டை நெருங்குகையில் அவன் சொன்னான்
நாம் சென்று வந்த இடத்தின் தொலைவைப் போலவே
நிலாவும் ரொம்பத் தூரத்தில் இருக்கிறது என்று.
நான் அவனிடம்
நிலவு இன்னும் தூரத்தில் உள்ளது என்றும்
நாம் தினமும் பத்து மைல் நடந்தாலும்
நிலவை அடைய நூற்றாண்டுகள் ஆகும் என்றும் சொன்னேன்.
ஆனால் அவனுக்கு இது பிடிக்கவில்லை.
பாதை முழுவதுமாக உலர்ந்து காணப்பட்டது.
சதுப்புநிலங்களில் விரிந்து கிடந்தது நதி:
வாத்துகளும் நீர்ப்பறவைகளும்
இரவின் துவக்கத்தைச் சப்தமெழுப்பி அறிவித்தன.
காலடியில் உடைந்தன பனித்துகள்கள்–
மறுபடியும் குளிர் கூடத் துவங்கியிருக்க வேண்டும்.
எல்லா வீட்டு ஜன்னல்களும் இருண்டிருந்தன.
எங்கள் வீட்டுச் சமையலறையிலிருந்து மாத்திரம்
ஒரு ஒளி தெரிந்தது.
எங்களது புகைபோக்கிக்குப் பக்கத்தில் ஒளிரும் நிலவு
நிலவின் அருகே ஒற்றை நட்சத்திரம்.
– யான் காப்லின்ஸ்கி ( 1941- 2021)
எஸ்டோனியாவின் டார்த்து பகுதியில் பிறந்தவர். அவருடைய தாயார் எஸ்டோனியாவை சேர்ந்தவர். தந்தை போலாந்து நாட்டுக்காரர். அடிப்படையில் காப்லின்ஸ்கியின் ஆளுமை பலகுரல் தன்மை கொண்டது. கவிஞர், தத்துவவாதி , சூழலியலாளர், மஹாயான புத்தத்தின் மாணவர், கலாச்சார விமர்சகர். காப்லின்ஸ்கியின் கவிதைகள் சலிப்பின்றி மையம் கொள்வது இயற்கையிலும் இயற்கையில் சுயம் அடையும் இடம் குறித்த தியானத்திலுமே. தாவோ தே ஜிங்யையும் சீன செவ்வியல் கவிதைகளையும் மொழியாக்கம் செய்துள்ளார். The Wandering Border, Evening brings everything back போன்ற கவிதை தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.