நகுலன் அவர் வாழ்நாள் காலத்தில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் இவை. நகுலன் நூற்றாண்டையொட்டி ஷங்கர்ராமசுப்ரமணியன் தொகுத்து வெளிவந்திருக்கும் அருவம் உருவம் நகுலன் 100 புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. நகுலனின் ஆங்கிலக் கவிதைகள் பெருந்தொகையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள தருணத்தை ‘திணைகள்’ இணையத்தளம் பகிர்ந்துகொண்டு, நகுலனது நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இணைகிறது
அறிமுகக் கட்டுரை : யுவன் சந்திரசேகர் அறிமுகம்
(அருவம் உருவம் நகுலன் 100 தொகுப்பிலிருந்து)
தமிழ்த்தனியனின் ஆங்கிலக்கவிதை
– யுவன்சந்திரசேகர்
நகுலனின்புனைகதைகள், குறிப்பாக நாவல்கள், சுழற்சியும் திகைப்பும் மண்டியவை. மாறாக, அவரது கவிதைகள், உரைநடைத்தன்மை கொண்டவையாய் இருந்தாலும், புனைகதைகளுக்கு நேர் எதிரானவை. மிகமிக எளிமையான தோற்றம் கொண்டவை. அலங்காரமற்ற நேரடிக்கவிதைகளுக்கு (plain poetry) அசலானதமிழ் எடுத்துக்காட்டுகள். நகுலனின் ஆங்கிலக்கவிதைகள் மொழிபெயர்ப்பில் பங்கேற்றபோது, இன்னோர் உண்மை தெரியவந்தது. நகுலனின் கவிதைகள் சாதாரணமான, அன்றாடப் புழக்கத்திலான சொற்களால் எழுதப்பட்டவை என்றபோதும், அவற்றில் செயல்படும் சொல்தேர்வு பிரத்யேகமானது; தனித்துவமானது. சாதாரணமாய் ஒலித்துக்கொண்டே அசாதாரண எல்லைகளுக்கு நகரக்கூடியது.
ஆக, அவருடைய ஆங்கிலக்கவிதைகளைத் தமிழுக்குப்பெயர்ப்பதில் இருக்கும் முக்கிய சவால், அவரது தமிழ்க் கவிதைகளில் பயன்படும் சொற்களை, தொனியைப் பின்பற்றுவதே. பரவலாக வாசிக்கக்கிடைக்கும் ஆங்கிலக் கவிதைகள்; ஆங்கிலம் வாயிலாகத் தெரியவரும் பிறமொழிக்கவிதைகளிலிருந்து நகுலனின் ஆங்கிலக்கவிதைகள் வேறுபட்டுத் துலங்குகிறவை. வழக்கமான ஆங்கிலக்கவிதை மொழியிலிருந்து விலகியவை. சிலகவிதைகள், சமத்காரத்துணுக்குகள். ஆங்கிலச் சொற்களை வைத்து விளையாட முனைபவை. நகுலனின் தமிழ்க்கவிதைகளில் வெளிப்படும் தீவிரத்தன்மையைக் கைக்கொள்ளாதவை என்றபோதிலும், அவை நகுலனின் தனிஉலகத்தைச் சார்ந்தவை என்பதில் மாற்று அபிப்பிராயமே கிடையாது. கவிஞனின் தன்னனுபவத்தை, மனக்குறளிகளைத் தடையின்றி, தணிக்கையின்றி, பதிவு செய்திருப்பவை.
தமிழில் அவருடைய ‘எழுத்து’ கால, ஆரம்பக்கவிதைகள் தொன்மங்களை முன்னிருத்தி, மரபான அவதானங்களின் வழிநகர்பவை. பின்னாள்களில் நிலைபெற்றுவிட்ட பிரத்தியேகச்சொல்முறை கொண்ட, முழுக்க விட்டேற்றியான நவீனயுகக்கவிதைகள் ‘கோட்ஸ்டாண்ட்கவிதைகள்’. இந்த வேறுபாடு, ஆங்கிலத்திலும் காணக்கிடைப்பதையும் குறிப்பிட்டுச்சொல்லலாம்.
இந்தக்கவிதைகளில் காணக்கிடைத்த இன்னொருஅம்சம், எமிலிடிக்கின்ஸன் ஷேக்ஸ்பியர் என்றபெயர்களுக்கு நிகராக, ரமணர், பாரதி, மௌனி என்ற தமிழ்ப்பெயர்களை அவர் ஈடுபடுத்தியிருக்கும் விதம். பிரதேச எல்லைகளுக்குள் அடங்காத பெருமனங்களை வெகு இயல்பாக, அடிக்குறிப்புகள்கூடஇன்றி, ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் மற்றொரு பெருமனம் என்றே நகுலனைச் சொல்லவேண்டும்.
ஆனால், முன்னுதாரணமான தமிழ்மனமேஇந்தக்கவிதைகளை யாத்திருக்கிறது என்பதும்வெளிப்படை. நகுலனின் தமிழ்க்கவிதைகளில் நிரம்பியிருக்கும் கைப்பு இல்லாத வெறுமை, புகார் இல்லாத பாழ் இந்த ஆங்கிலக்கவிதைகளிலும் மண்டியிருக்கிறது. தாம் காட்டுவதைவிட அதிகமாகக் காட்ட முற்படும் காட்சிச்சிதறல்கள், உணர்ச்சி வறண்டகுரல், யாருக்கோ நடந்ததைச் சொல்கிறபாவனை கொண்டஎதிர்வினைகள் என்று அடுக்கிக்கொண்டேபோகலாம்.
நகுலனின் கவிதைகள் பொதுவாசகரை எட்டமுடியாதவை. தமிழ்க் கவிதை மரபில்; அல்லது, பாரதியின் வசன கவிதை, நபிச்சமூர்த்தியின்‘புதுக்கவிதை’ உள்ளிட்டதமிழ்நவீனக் கவிதை மரபில்தோய்ந்த வாசகமனத்துக்கு அதிர்ச்சிதருபவை. தமக்குப் பழக்கமான கவிதை வாசிப்பிலிருந்து விலகி, மெனக்கெட்டுத் தேடிவருகிறவருக்கு மட்டுமே பொருள்படும் சூத்திரத்தன்மை கொண்டவை. இந்தஅம்சங்கள், தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டுமொழிகளிலுமே ஒரேவிதமான வீச்சுடன் இயங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
என்ன, ஆங்கிலத்தில்வெளிப்படும் ‘தனியன்’ தமிழில்காணக்கிடைப்பவனைவிடஇன்னும் தனியானவனாய்த் தெரியவாய்ப்புண்டு – ஆங்கிலம் அனைத்துலகமொழி என்ற பிம்பம் வாசகமனத்தில் பதிந்திருக்கும்பட்சத்தில்.
*
Non – Being தொகுப்பிலிருந்து
தமிழில்: யுவன் சந்திரசேகர், ஷங்கர்ராமசுப்ரமணியன்
1.
ஒருவன் சொன்னான்:
பூனைக்கு நகங்கள்
எலிக்கு அதன் பல்
பறவைக்குக்கூட அலகு உண்டு.
உன்னிடம் என்ன?
– மற்றவன் சொன்னான்:
வாதை மற்றும்
உயிர்தரிக்கும் போராட்டத்தின்
போதனைக் கூடத்தில்
மனதுடன் குடித்தனம் வைத்த
சதை.
2.
நான் எங்கே
இறங்க விரும்புகிறேனோ
அங்கே
ரயில் நிற்கிறது
முன்னரே ஏற்பாடான
முக்கியமான
இடைநிறுத்தங்கள்.
3.
மழை
இலைகளைச் சிதறடிக்கிறது
இலைகள்
என்ன செய்யும்?
4.
64 வயதில்
என்னிடம் எதுவும்
இல்லை
என்னைத் தவிர
இதை
நான் விரும்புகிறேன்
நஷ்டமொன்றும்
பெரிதாக இல்லை
என்றுதான்
சொல்ல வேண்டும்.
5.
கிழிக்கப்பட்ட
நாட்காட்டி:
நாள்களைக்
குவியலாக்கி
அதில் தீ வை.
கதை முடிந்தது.
6.
வார்த்தைகளைப்
போகவிடு
அவை விட்டுச்சென்றதைத்
தக்க வை.
இந்த விதத்தில்
வார்த்தைகளைத்
தோற்கடிப்பாய்.
7.
நான் அவனைப் பற்றி
நினைக்கும்போதெல்லாம்
என் முன்
ராட்சச ஆமையைப்
பார்க்கிறேன்
அதன் உடல்
அகன்று விரிகிறது
அபூர்வமாய்அவன்
தலையை வெளியே
நீட்டுகிறான்
உடனே
அவசர அவசரமாய்
உள்ளிழுத்துக்
கொள்கிறான்
8.
வீட்டின் வெற்றுக்கூட்டில்
தனிமை
என்னை இரையெடுக்கிறது
அத்தனை மௌனம்
பூச்சியின் சிமிட்டல் கூடத்
தூக்கிவாரிப் போடுகிறது
எனக்கு
ஆள்கள் வேண்டும்
நல்லவரோ கெட்டவரோ
அதைவிட
ஒரு கிளாஸ் மது
இன்னும் விசேஷம். அது
மனநிலையை மாற்றிப் போடும்
அப்போது/ அங்கே
எதுவும்
உன்னை அச்சுறுத்தாது. அது
இல்லாமல் போவதன்
முற்சுவை.
9.
வீட்டின் இடப்பக்கம்
சிறிய தோட்டம்.
அங்கே அந்தப் புளியமரம்.
கிளைகளைப் பரப்பி
கொத்துக் கொத்தாய்ப்
பழங்களால் கனத்திருக்கும்.
கிளைகளைக் கீழிறக்கிப்
பழம் பறிப்பார்கள்.
மரத்தைப்
பார்க்கும்போதெல்லாம்
தாழ்வாய்த்
தரையைத்
தொடுவதுபோலவே
கிளைகள் தெரியும்
அந்தக் காட்சி
இம்சை செய்யும்.
10.
ஆசையின் வளைவு
இருட்டின் குகைகள்
இளைப்பாறுதலின் கோணம்
அதற்குப் பிறகு
திரும்ப
தினசரிக்குள் சரிதல்.
11
வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு
மீனவர்கள் கடலுக்குப்
போகமாட்டார்கள்
மக்கள் இடம்பெயர்ந்தனர்
பெரும் ஏரிகளின் நீர்மட்டம்
இறங்கிவிட்டது
எல்லாரும் வீட்டுக்குள் இருந்தனர்
ஹெலிகாப்டர்கள் பாய்ந்து உயர்கின்றன
ஆனாலும் கடல்
பலிகளை வாங்கிக் கொண்டது
வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு.
12
கடந்த ஒரு வாரமாக
அந்த வெண்மஞ்சள் பூனை
வரவில்லை
ஒருவேளை
வேறெங்காவது
இரை கிடைத்திருக்கும்
ஆனாலும்
இரண்டு நாள்களில்
அது வரும்.
எனக்குத் தெரியும்.
13.
வாசிக்கப்படுவது
வாசிப்படுவதில்லை
அப்படியா என்ன?
14.
பள்ளத்தாக்கிடம் மலை
சொன்னது
நீ மேலே வா
அல்லது
நான் கீழே வருகிறேன்
இரண்டும்
நடக்கவில்லை.
15.
பக்கங்களைத் திருப்பு
புத்தகம்
தானே
வாசித்துக் கொள்ளும்.
16.
வானத்து நீலம்
அல்லது
கடல் பச்சை
அது அவனுக்கு
முக்கியமில்லை.
17.
என்னிலிருந்து
வெளியேறிவிட்டேன்
எனக்குப் பின்னால்
கதவை மூடாமல்.
18.
உள்ளே
மூளை
வெளியே
காலி இடம்.
19.
சாவும்
காத்திருக்கிறது
அநாதிப் பொறுமை
அதற்கு.
*
A Tamil Writers Journal – 1 தொகுப்பிலிருந்து
தமிழில்: ந.ஜயபாஸ்கரன், யுவன் சந்திரசேகர், ஷங்கர்ராமசுப்ரமணியன்
1.
அம்மா
சமையல்கட்டில் இருப்பாள்.
அல்லது எங்களுடன்.
எங்களைப் போலவே
அப்பாவுடன்
எப்போதாவது பேசுவாள்.
இதையெல்லாம்
நான் கற்பனைதான் செய்கிறேன்:
ஆனாலும்
அத்தனையும்
எனக்கு
உண்மையானதாகவே இருக்கிறது.
அம்மா
1979-ல் இறந்துபோனாள்.
2.
திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில்
ஒரு நகரம்
சொல்லப் போனால்
அதன் தலைநகரம்
இங்கேதான்
சுசீலாவை
முதல் முறையாக
சந்தித்தேன்
ஒருவேளை
அவளுக்கு என்னை
ஞாபகமில்லாமல்கூட
போயிருக்கலாம்.
அது ஒரு விஷயமா
இப்போது.
60 வயதில்
இதையெல்லாம்
யோசித்துப் பார்க்கிறேன்.
3.
நாம் இருக்கிறோம்
என்னவாய் இருக்கிறோம்
எனக்கு
தெரியவில்லை
உனக்கு?
4.
கருப்பை – இருள் உலகு
மது – இருள் கடல்
அதுதான்
உள் நிலப்பரப்பு
இங்கே
எங்கே
ந-வை ந சந்திக்கிறார்.
5.
தபால்காரர்
வீட்டைத் தாண்டி
போனார்.
கைதட்டிக் கூப்பிட்டேன்
‘இன்று இல்லை’
என்று சொல்லிவிட்டு
போய்விட்டார்.
6.
நான் அவளை விரும்புவதால்
அவள் என்னை விரும்புகிறாள்
அவள் என்னை விரும்புவதால்
அல்ல.
7.
பணத்தை மட்டும் இல்லை
புத்தகங்களையும்
இரவல் வாங்க முடியும்.
வாங்கப்படுகின்றன
திரும்பி வருவதில்லை
பெரும்பாலான விஷயங்கள்
அப்படித்தான்
சிலபேர்
அப்படித்தான்
உங்களிடம் இருப்பது
அவர்களிடம் இருக்க வேண்டும்
நீங்களாக அவர்கள்
இருக்கமுடியாது
என்றபோதும்.
8.
உனது தேவை
மாமன் வழங்கும் இடம்
சகோதர வாஞ்சையின் அரட்டை
ஒரு பெண்ணின் தேகக் கதகதப்பு
மேலும்
அறிந்ததிடமிருந்து
அவ்வப்போது
பறந்துபோவது
9.
ஏ வி வி சொல்கிறார்
குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்
மனிதக் கூட்டத்திலிருந்து
பின்வாங்கினார்
கிறிஸ்து
தனிமை தியானத்துக்காக
பாலைவனம் சென்றார்;
ரமணர்
பள்ளிக்குப் போகும் வழியில்
திரும்பி
குகைக்குள்
மறைந்துபோனார்
ஒருநாள்.
அரவிந்தரும்
அரசியலை நீங்கி
தெற்கே
பாண்டிச்சேரி
வந்து சேர்ந்தார்
அதனால் என்ன?
அறியாத ஒன்றின் ஈர்ப்பு
தேர்ந்தெடுத்த ஆன்மாக்களின்
வாழ்க்கையை வடிவமைத்தது
சாம்பமூர்த்தி ராயர் சொல்வதுபோல
அது மட்டும் தான்
முக்கியம்.
10.
அவனது மனம்
அவனை இடிக்கிறது
சாக்குபோக்கு தேடி
பேச்சை
நிறுத்துகிறான்
‘சிரமப்படாதே’
என்று சொல்லி
அவனைவிட்டு நீங்குகிறேன்
பெருமூச்சுடன்.
11.
ஐஸ் துண்டுகளால்
கிளாஸை நிரப்புகிறேன்
அதன் பாதி வரை
குப்பியைச் சரித்து
விளிம்புவரை
பிராந்தியை நிரப்புகிறேன்
தீப்பெட்டி
சிகரெட் பாக்கெட் ஒன்று
சில துண்டு ரொட்டி
சன்னமாய் வெட்டிய
தக்காளித் துண்டுகள்
அதன்மேல் ஒட்டிய
சில துளி உப்பு
இப்போது
உன் பேச்சை ஆரம்பி
கவனிக்கிறேன்.
12.
இப்படி
எல்லாம்
நடந்தும்
கணக்குப்படி
உயிரோடுதான் இருக்கிறான்.
அதுதான்
எலும்பை உறையச் செய்கிறது.
*
A TamilWriters journal – 2தொகுப்பிலிருந்து
தமிழில்: ந.ஜயபாஸ்கரன், யுவன் சந்திரசேகர், ஷங்கர்ராமசுப்ரமணியன்
1
அவன்
தணித்துக்கொள்ள வேண்டும்
தாகத்தை
பிராந்தியோ
காமமோ
எல்லாம் ஒன்றுதான்.
2
சொற்கள் பிடிபடும்போது
மின்னல் தெறிக்கிறது
நான் சொல்வது
புரிகிறது
இல்லையா.
3.
அந்த அறை
காற்றோட்டமும் விசாலமும் கொண்டது
புத்தகங்கள் சித்திரங்கள் சிற்பங்கள்
இவற்றின் தேர்ந்த திரட்டும் உண்டு
அது ஒரு கோயில்
அது ஒரு தேவாலயம்
அது ஒரு மசூதி
அங்கே யாரும் வருவதில்லை
வெளியே போவதுமில்லை
அது ஒரு
இருப்பு
தான்
எதுவாக வேண்டுமோ
அதுவாக
ஆனது
ஒரு தனிக்கட்டை
அங்கே
வசிக்கிறான்.
4.
அரங்கம் காலி
ஆட்டம் முடிந்தது
அப்படித்தான் படுகிறது.
5.
ஒரு தமிழ் எழுத்தாளர் சொன்னார்:
எறும்பைப் பார்
தனக்குத் தேவையான இடம்
அதற்கு இருக்கிறது
தனக்கு வேண்டியதைச்
செய்வதற்கு.
6.
பிரம்மாண்டமான புத்தரைப் போல
அறைக்குள்
அமர்ந்திருக்கிறான்
முணுமுணுக்கிறான்
புத்தகங்கள்
ஆமாம்,
புத்தகங்கள்
அவை எழுதியாக வேண்டியவை
அசாத்தியப் போராட்டம்
எந்நேரமும்.
செத்து விழும்வரை.
பிறகு பேனாவை எடுக்கிறான்
அன்றாடப் பங்கீட்டளவை
எழுதித்
தீர்க்கிறான்.
7.
மௌனியின் ஒரு கதையில்
எல்லாம் வேறெங்கோ இருக்கிறது.
உன்னையே கேட்டுக் கொள்கிறாய்
வேறு எவ்விதமாய்
அவை இருக்கமுடியும்?
8.
நான்
எனது அறையில் இருந்தேன்
என் கதாபாத்திரங்கள்
உள்ளே வந்தனர்.
அமர்ந்தனர்.
பேசிக் கொண்டிருந்தனர்.
நேரம்
ஓடியது
திரும்பிப் பார்த்தேன்
ஒருவருமே இல்லை.
9.
வாழ்க்கை அவனை
அழித்தபோது
சாவு
அமரனாக்கியது.
10.
நாம் எழுத்தாளர்கள்
நாம் அனைவரும்
குடிகாரர்கள்.
ஒருவர் அதிகமாய்
ஒருவர் மிதமாய்
இதுவெல்லாம்
ஒரு விஷயமா?
11.
கவிதையில்
உனக்கு
படிமங்கள் தேவை. எனில்
இவற்றைப் பற்றி
உன் அபிப்ராயம் என்ன:
எலி வளை
பாம்புப் புற்று
புத்தகத் தொகுதி
உற்றுநோக்கும் கண்
அடிவயிற்றினுள்
கருப்பை.
12.
புட்டத்தைத் துடைக்கிறாய்
புட்டியை நிறைக்கிறாய்
தாலாட்டு பாடுகிறாய்
குட்டிப் பாப்பாவோ
உறங்க மறுக்கிறது
குசு விடுகிறது
உன்னைப் பார்த்துச் சிரிக்கிறது.
13.
அறைக்குத் திரும்புகிறேன்
ரோஜாவின் நாற்றம் இல்லை
ஆனால்
பூண்டின் வாசனை
அல்லது
ஏதோ கிருமிநாசினியின்
அடர்ந்த நெடி
இது எல்லாம்
சர்ப்பங்களை வரவிடாமல்
தடுப்பதென்று
சொல்கிறார்கள்.