கரையொதுங்கும் கதை
சாங்கிக் கடற்கரைக்குச் செல்கையில்
தன்னந்தனியாகக் கரையொதுங்கும்
கிளிஞ்சல்களைப் பார்த்திருக்கிறீர்களா?
அது பேசிக் கேட்டிருக்கிறீர்களா?
கடலுக்குள் இருப்பவைகளிடம் சாத்தியமில்லையெனினும்
வானம் பார்த்துக் கிடப்பவைகளிடம்
கொஞ்ச நேரம் மட்டும்
உங்கள் காதைக் கொடுங்களேன்.
புணரும் நத்தைகளைப் பிரித்து
வேறொரு மாகாணத்தில் வீசுவதைப் போல
கொடூர அலையொன்று
கடலிடமிருந்து அதை வீசியெறிந்த
கதையைச் சொல்லும்.
அதன் பாசத்தையெல்லாம்
சூரியன் மென்று தின்று முடிப்பதற்குள்
உங்கள் கண்ணில் தென்பட்டால்
சூரியனிடமிருந்து பறித்து
கடலிடமே கொடுத்து விடுங்கள்.
பச்சைப் பசேலென பாசி படர
அது காதல் கொண்டிருக்கட்டும்.
மேகக் காட்டில் மழை
பல்லவிக்கும் சரணத்திற்கும் இடைப்பட்ட
ஓயாத இசைதான்
இந்த மழைப் பொழுதுகள்.
இடையிடையே
ஆண் அல்லது பெண்
ஹம்மிங் பறவைகளும் பறப்பதுண்டு.
மழை நின்ற பின்னாலும்
மனம் அதன் பாட்டிற்குத்
தாளம் போட்டுக் கொண்டுதானிருக்கும்
மகுடிக்கு மயங்கிய பாம்பாய்.
மழையின் வாசம் மழைக்கு முன்னும்
மழையின் நேசம் மழைக்குப் பின்னும்
அயராது பொழிந்து கொண்டேதானிருக்கும்.
மழையின் இசையும்
இசையின் மழையுமில்லாது
புலரும் மௌனப் பொழுதில்
வெந்து தணிய விருப்பமே இல்லாமல்தான்
வானாந்திர அவதார்கள் அவதரித்தனவோ
சிங்கைக் கரையோரப் பூந்தோட்டத்தில்
விளைந்திருக்கும் மேகக் காட்டில்!
டோனட் வளையங்கள்
இடம் மாறிக் கடை போட்ட பின்பும்
அவள் மனத்தில்
அழியாமல் இழையோடுகிறது
பசார் மலாம்களின் தடங்கள்.
வாடிக்கையாய்ச் சென்றுவரும் சாலையில்
விரலைப் பிடிக்க
யாருமற்று செல்கிறாள் அவள்.
பலூன் கடையின்
மீச்சிறு முடிச்சுகளாலான
கண்கவர் வண்ணத்துப்பூச்சியொன்றும்
பொம்மைக் கடையின்
விசித்திர விழிகளையுடைய பார்பியொன்றும்
பனிக்கூழ் கடையின்
கூம்பிற்குள் அடைக்கப்பட்ட
குளிர்ந்த வானவில்லொன்றும்
சின்னஞ்சிறு கடலுக்குள்
வளைந்து நெளிந்து திரியும்
குட்டிக்குட்டி மீன்களும்
சில குமிழித் திரவக் குப்பிகளும்
விசும்பி விசும்பி அழுதுகொண்டே
இன்னும் சில கடைகளிலுள்ள
டோனட் வளையங்கள் வழி நுழைந்து
அவள் விரல்களைப் பற்றிக் கொள்கின்றன!