கடல் நாகங்கள் பொன்னி என்ற தலைப்பிட்டு இன்பா தனது கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். பொதுவாக கதைகள் அதன் காட்சி நகர்விலும் கதாப்பாத்திரங்களின் அடையாளங்களிலும் வாசகர்களை ஈர்த்துக்கொள்ளும். கவிதையில் பார்த்தோமேயானால் அதில் வரும் அழகிய வருணனைகள், கற்பனைகள், உபயோகிக்கும் சொற்கள், ஒரு புதிய பொருளைக் கண்டடைவது, புதுமையான படிமங்கள, குறியீடுகள் என்று பலவற்றைத் தேவையான அளவு மட்டுமே எடுத்து ஒரு கவிதையைக் கட்டமைக்க வேண்டும். அப்படிப்பட்ட கவிதைகள்தான் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்துக்கொள்ளும்.கடல் நாகங்கள் பொன்னி எனும் இன்பாவின் கவிதைத் தொகுப்பில் அது நிகழ்ந்திருக்கிறது .சிங்கப்பூரில் வாழும் இவர் அவருடைய அன்றாடங்களை மிக நுணுக்கமாகக்க் கவனித்திருக்கிறார். அவற்றை அழகான கவிதைகளாக நமக்குத் தந்துள்ளார்.கருப்பொருள் தேர்விலிருந்து தலைப்புகள் தேர்வு வரை அனைத்தும் செறிவானதாக இருக்கிறது.மேலும் கவிதைகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தியிருப்பது வாசகர்களுக்கு எளிய வகையில் இருக்கும்.
முதலில்
1) மந்தாரை மணக்கும் நிலம்
பொதுவாக இன்பாவின் கவிதைகளில் ஓசை நயம் மிகுந்திருக்கும் அதற்குச் சான்றாக இந்தப் பிரிவிலுள்ள “மீன்களின் முணுமுணுப்புகள்”என்ற கவிதையைச் சொல்லலாம். அப்படியே அந்தக் கற்பனையை விரித்துப் பார்த்தால் கடலுக்குள் சென்ற உணர்வைப் பெறலாம்.
ஓசை நயம் ஒரு பக்கமிருக்கட்டும் சொற்களின் தேர்வுகளை எடுத்துக்கொண்டால் அதுவும் ஜொலிக்கிறது அதுவும் இருட்டிலும் ஜொலிக்கிறது.கவிதையின் முதல் பாதி அழகான ஒரு கனவைக் காட்டுகிறது.அக்கனவு சிறு குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்திருக்கிறது. கடலின் அடியாழத்தில் கிடந்து கண்களைத் திறந்து பார்க்கும் மீன்களின் இருட்டும் மனம் கண்ட இருட்டுமாகத் தொடர்கிறது இக்கவிதை,
“கடற்பாறைகளின் வெளிச்சத்தில்
மிதந்தபடி செல்கிறேன் அடியாழம் காணா இருட்டு
அதன் கருப்பைக்குள் நுழைகிறேன்
மனம் கண்ட முதல் இருட்டு
புவிகண்ட ஆதி இருட்டு
பிரபஞ்சம் பர இருட்டு
திறந்த கண்கள் மூடும்போதும்
மூடும் கண்கள் திறக்கும்போதும்
எங்கும் இருட்டு
மீன்களின் முணுமுணுப்புகள் நீரலைகளில்
ஊமையாய் மோதுகின்றன
ஆங்காங்கே தலைப்புகள் என்னை வியக்க வைக்கின்றன. இதோ “பணடால் சக்கரங்கள் பூட்டிய சாரட்டுகள்” என்றொரு தலைப்பில் பணடால் மாத்திரைகளுக்கான கவிதையாய்த் தொடங்கி அது முடியும் வரிகளில்
“வான்தொடும் கட்டிடங்கள் நிறைந்த சாலைகளில்
பணடால் சக்கரங்கள் பூட்டிய சாரட்டுகளில் ஏறி
விரைந்து கொண்டிருக்கிறது நகரம்”
இப்படி நகரை இழுத்துக்கொண்டு நகர்கின்றன மாத்திரைகள்.
‘ஊசி போடாத ஊர்’ என்ற கவிதியில் இதே பணடால் மாத்திரைக்கான வரிகள் இவ்வாறாக வருகின்றன.
“உள்ளங்கையில் வைத்து மாத்திரையைத்
தண்ணீரோடு சேர்த்து விழுங்குகிறேன்
மாத்திரைகள் நெஞ்சைத்தொட்டு உருண்டு செல்கின்றன
சுகமாக்குதலின் வெளிர் நீளச் சிறகுகளோடு”
சிங்கப்பூர் தேசியக்கொடியிலுள்ள ஐந்து நட்சத்திரங்களோடு ஆறாவது நட்சத்திரமாய் வரும் லீ கவிதையில்
“ஐந்து நட்சத்திரங்களும் இறங்கிவந்து
ஆறாவது நட்சத்திரத்தை
கைபிடித்து அழைத்துச்செல்கின்றன”
என்னும்போது ஒரு நிமிடம் லீ நம் கண்முன் வந்து போகிறார்.
எதிர்காலத்தின் கோடாலித் தைலங்கள்,ஊர் திரும்பும் பறவைகள் போன்ற இன்னும்பிற கவிதைகளில் நாங்கள் ஊர்க்காரர்கள் என்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் எழுதியுள்ளார்.
அதோடு ‘நான் புலம்பெயர்ந்தவன்’ என்ற கவிதையில் சொந்த ஊர்க்காரர்கள் அறியாத வெளிநாட்டு வாழ்க்கையைச் சித்திரமாக்கியுள்ளார்.விமானத்தில் பயணிக்கும் அப்பாவைத்தான் பிள்ளைகளுக்குத் தெரியும் .சாப்பிட்ட தட்டைக் கழுவாத மகனைத்தான் பெற்றோருக்குத் தெரியும். காலர் கசங்காத அண்ணனைத்தான் உடன்பிறந்தோருக்குத் தெரியும். சட்டைப் பொத்தானைப் போடாமல் பைக்கில் சுற்றித் திரிந்தவனைத்தான் நண்பர்களுக்குத் தெரியும். தலை நிமிர்ந்து பேசும் தலைவனைத்தான் தலைவிக்குத் தெரியும்.அவர்களுக்குத் தெரியாதவற்றை அதற்கு நேர்மாறான உண்மையை அறிய இந்தக் கவிதை உதவும். அதிலுள்ள ஒரு பத்தி மட்டும்.
“புலம்பெயர்ந்தவன் நான்
நேர்த்தியாக உடுத்திக்கொள்ளாதவன்
வெறுந்தரையிலமர்ந்து காக்கித் தாளில் உண்டு
புல் தரையிலமர்ந்து மதுவை அருந்துபவன்
வாசனைத் திரவியம் பூசி
வியர்வையை மறைக்கத் தெரியாதவன்
வானலையைக் கேட்டு காலத்தைக் கடப்பவன்
கூச்சமின்றிப் பேருந்தில் தமிழைப் படிப்பவன்”
மீதிப் பத்திகள் அவனின் மீதிக் கதையை சொல்லும்.
‘தேசம் தாண்டிய பொன்னியில் ‘ ஓர் அந்தாதி பாடலாக நீள் கவிதையாக விரிந்துள்ளது .
அடுத்ததாக,
ஈஸ்ட்ரோஜனைத் தின்னும் நாகங்கள்
இந்தப் பிரிவின் முதல் கவிதை பெண்களுக்கே உரிய பிரச்சினைகளில் ஒவ்வொரு மாதமும் அனுபவிக்கும் பிரச்சினையான மாதவிடாய் அல்லல்களைப் பற்றி பேசுகிறது. அதையும் ஒரு பெண்ணே எழுதியிருப்பதால்
அத்தனை வரிகளும் உண்மைத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“எவ்வளவு திரவியம் பூசினாலும்
குருதியின் ஆதிவாசனையை மறைக்கமுடியவில்லை”
என்று மன்றாடுபவர் மகள்கள் பத்து,பதினொரு வயதில் சுமக்கும் நாப்கின்களை மட்டும் மகிழ்ந்து ஏந்துவாரா?அதன் வலியைச் சொல்லும் கவிதை என்பதால் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.
‘நெஞ்சின் அடிமுறத்தில் தங்கிய மொழி’ கவிதையில் அகத்தையும் புறத்தையும் மிக அழகாகக் காட்டியுள்ளார். சங்க காலப் புலவரோடு கணினியில் கவிதை எழுதுகிறார்.ஆக சங்க காலம் தொட்ட ஆளுமைகளிலிருந்து சமகால லீ வரை கவிதையில் நடமாடுகின்றனர். தொன்மை வாய்ந்த இடங்களும் மனிதர்களும் நீங்காமல் அவர் வரிகளிலும் மனதிலும் இருக்கிறது என்பது தெளிவாகிறது.கவிஞர் இன்பாவின் கவிதைகளில் எள்ளல் கவிதைகள் இல்லையென்றால் அதை யாராலும் நம்ப முடியுமா? இந்தத் தொகுப்பிலும் ஏராளமான எள்ளல் தன்மையுடைய கவிதைகள் இருக்கின்றன.அதற்குச் சான்றாக ‘வாழ்த்தெனும் நாய்க்குட்டி’ யை சொல்லலாம் .அதில் ஓரிரு கவிதைகள் ஆமாம் ஆமாம் என்று குரைத்தபடி வாலாட்டி நிற்கும்.
“முகநூலில் தெரிவிக்கும் வாழ்த்துகள்
உப்பே போடாமல் சமைத்த
உணவைப் போலிருக்கின்றன”
“புலனக் குழுக்களில்
கல்யாணவீட்டுப் பந்தியில் வைக்கும்
பூந்தி போல் வாழ்த்துகள்
அள்ளித்தெளிக்கப்படுகின்றன”
இந்த இருபத்து நான்கு மணி நேரம் கவிஞரிடம் எப்படி சிக்கிக்கொண்டிருக்கிறது என்று ‘வட்டமிடும் நீர்குமிழிகள்’ கவிதையில் சொல்கிறார்
“தூண்டிலில் மாட்டிக்கொண்ட எனது நேரத்தை
இருபத்து நான்கு துண்டுகளாக நறுக்கி
சுருக்குப் பையில் போட்டு
இடுப்பில் முடிந்துகொண்டேன்” என்கிறார்
இதைத்தான் அந்தரங்கமென ‘கைப்பையை யாரும் தொடுவதை விரும்புவதில்லை’ என்ற கவிதையில் சொல்லியிருப்பதாக நான் நினைத்துக்கொள்கிறேன் என சொல்லவில்லை.அந்த வரிகளையும் இந்த வரிகளையும் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது.
“புதிதாக வாங்கிய Gucci பை வீட்டிற்குள் புகுந்ததும்
பழைய கைப்பை என்னைப் பிரிந்து சென்றது
பழைய கைப்பையிலிருந்த
ஒவ்வொரு பொருளாக
எடுத்து புதியதில் வைக்கிறேன்
ரகசியமாய் அதில் நுழைந்துகொண்டது
எவரும் காணாத
எவரிடமும் பகிராத
கைப்பையின் அந்தரங்கம்
‘வீடு திரும்பும் சொற்கள்’ எனும் தலைப்பிலான கவிதைகளில் பிரியத்திற்குரிய பிரத்யேகமான சில முகங்களைக் காண வாய்ப்பளித்திருக்கிறார்.
அடுத்த பிரிவான
3)முள் கரண்டியில் புரளும் விரல்கள்
இதில் வரும் கவிதைகள் வாசிப்புப் பசியைத் தூண்டுவதோடு வயிற்றுப பசியையும் தூண்டிவிடும். அந்தளவிற்கு சிங்கப்பூரின் உணவுப்பண்டங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார் .கான் பாயும் மகாத்மாவும் ஒரு மேசையில் எதிரெதிரே உட்கார்ந்து சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்பதைக் கவிஞர் எப்படி எழுதியுள்ளார் பாருங்களேன்.
“வெட்டிய செம்மறியாட்டுக் கறி
விற்றுத் தீர்ந்த நிம்மதியில்
ஆட்டுக்கால் பாயாவை
இடியாப்பத்தில் ஊற்றி
மென்பட்டு போன்ற மிருதுவான
சதைகளை உறிஞ்சுகிறார் கான் பாய்
எதிர் மேசையில் அமர்ந்து
ஆட்டுப்பால் அருந்துகிறார் மகாத்மா.”
சிங்கப்பூரில் எந்தவிதமான இனம் மதம் பேதமின்றி வாழும் வாழ்வியலைக் கூறும் கவிதையாகப் பார்க்கிறேன்.
‘நிலவைப் பிடிக்கும் பொன்னி’ என்ற தலைப்பில் வரும் கவிதைகளை வாசிக்கும்போது நாவில் எச்சில் ஊரும். வாசித்த பிறகு பொன்னி ஆங்காங்கே நறுஞ்சுவை பானத்தை ஊற்றுவாள்,மூங்கில் குச்சிகளை இரட்டை வில் போன்று பிடிப்பதில் மும்முரமாக இருப்பாள்,நூடுல்ஸை கடித்துத் துண்டு துண்டாக்குவாள்.
இந்தத் தலைப்பில் வரும் மற்றும் ஓர் அழகான கவிதை
“கேரட் துருவல்போல் கிளறி
வைத்த பீகூன் கொரிங் தட்டை
மேசை மேல் வைக்கிறாள் பொன்னி
வானத்தரையில் சிதறிக்கிடக்கின்றன
நறுக்கிய வெள்ளரிக்காய் நட்சத்திரங்கள்”
நூடுல்ஸ்களால் நிரம்பிக் கிடக்கிறதாம் பொன்னியின் வாழ்க்கை.ஆக பொன்னியுடைய வாழ்க்கையின் இனிப்பும் புளிப்பும் அடங்கிவிடாத ஆவியிலும் ஆறிவிடாத சூட்டிலுமே இருக்கிறது என்கிறார் ஒரு கவிதையில்.
கவிஞர் உயிரினங்களிடம் கருணை மிகுந்தவர் என்பதை சில கவிதைகளிலும் காண முடிகிறது.அப்படியான கவிதைகள்
“பனிக்கட்டிகளுடன்
படுத்திருந்த மீன்கள்
கையைப் பற்றிக்கொண்டு
என்னோடு வீட்டுக்கு வருகின்றன
தோலுரித்துப் படுத்துக்கிடந்த
கோழிகளை மெல்ல எழுப்பி
பறந்து போகச் சொல்கிறேன்
**
“பிரசவித்த பெண்ணுக்கு
சுவரொட்டி வேண்டுமென
மண்ணீரலை வாங்கிச் செல்கிறான் புத்தன்
அருகிலிருக்கும் குட்டி ஆடு சிணுங்குகிறது”
கவிஞர் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் அவரது நினைவுகள் இன்னும் பிறந்த மண்ணில்தான் சுற்றுகிறது என்பதற்குச் சான்றாக பல கவிதைகள் இருக்கின்றன.இந்தப் பிரிவில் ‘தேன் கடுகுச் சுவையூட்’டி எனும் கவிதையில் அப்பாவின் நினைவை நட்டு வைத்திருக்கிறார்.
‘இரட்டை ரொட்டிகளுக்கிடையே’ என்ற கவிதையில் மெய் நிகர் வேலையில் வாழ்க்கை எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எழுதியிருக்கிறார் .வாசகர்களையும் அட! ஆமாம் என சொல்ல வைக்கும் கவிதையாய் அது அமையும்.
‘பாலைவன ஒட்டகம்’ கவிதை வேலைப் பளுவைச் சுமந்து செல்லும் ஒவ்வொருவரின் கதையையும் பேசும் அதோடு கவிஞரின் கற்பனையை எண்ணி வியக்க வைக்கும்.
இறுதியாக
4)கடல் கடக்கும் சொற்கள் என்ற பிரிவிலுள்ள கவிதைகளை எடுத்துக்கொண்டால், அதன் முதல் கவிதையிலேயே கவிஞர் என்ன செய்கிறார் தெரியுமா? நம்மைப்போலவே புல் தரையில் அடிவைத்து கடலைப் பார்த்து அமர்கிறார்.அங்கு திரியும் நண்டார் நத்தையாரை வேடிக்கை பார்க்கும்போது, கடல் ஒரு சிறு குழந்தையைப்போல கடலும் அவரோடு வீட்டுக்கு வர அடம் பிடித்ததாம்.அந்நேரத்தில் கவிஞர் இன்பா மீனின் வகைகளைக் கூறி சில வருணனைகள் கொடுத்திருப்பார். அந்த வருணனைகள் மூலம் உங்களுக்கும் ஒரு சித்திரம் தோன்றும் என்பது உறுதி. அப்படி கடலை வீட்டுக்கு அழைத்துச் செல்பவர் இறுதி வரிகளில் படிமங்களால் கடலையும் வீட்டையும் ஒப்பிட்டு வீடே கடலாகிவிட்டது என்று முடித்திருப்பார்.
மற்றுமொரு கவிதையில்
“”பூட்டமுடியாத கடல்வீடு திமிறிக்கொண்டு இருக்கிறது ” என்றிருப்பார் .இந்தக் கற்பனையை மெச்சாமல் எப்படி நகர்வது?
டோக்கியோவில் மலரும் சக்குரா மலர்களை நமக்கும் மலர்த்திக் காட்டியிருக்கும் வரிகளில் இயலான அழகியல் வரிகளாக மிளிர்கிறது கவிதை.கவிதையை முடிக்கும்போது “கொஞ்சம் கொஞ்சமாக கனிந்து கொண்டிருக்கிறேன் செர்ரிப்பழமாக “என்றிருப்பர்
தொகுப்பு முழுவதையும் படித்து முடிக்கும்போது கொஞ்சம் அயர்வைக் கொடுக்கக்கூடிய அளவில் கவிதைகள்தான் என்றபோதிலும் அவற்றை மிகத் தந்திரமாக நான்கு பிரிவுகளாய்ப் பிரித்து ஓர் ஆர்வத்தைப் புகுத்தியிருக்கிறார .அந்த நான்கு பிரிவுகளுக்கும் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கக்கூடுமென்று சொன்னால் அது புகழ்ச்சியாகாது. நான்கு பிரிவுகளின் தலைப்புகளும் என்னை வெகுவாய்க் கவர்ந்தன.
கவிதைகளை ஆராய்வதைக் காட்டிலும் அனுபவிப்பது நல்லதென்று எண்ணுவேன்.அப்படி இந்த ஆண்டின் அனுபவித்து வாசித்த புத்தகங்களுள் இதுவும் வரிசையில் வந்து நின்றுகொள்ளும். “கடல் நாகங்கள் பொன்னி” திணைகளின் அடையாளத்தை மனத்தில் விட்டுச் செல்கிறாள், அவளது வாழ்வு நூடுல்ஸ்களால் நிரம்பிக்கிடக்கிறது.
வெளியீடு: சால்ட் பதிப்பகம்