எங்கும் வியாபித்திருக்கும் தூசு
நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில்
படிந்திருக்கும்போது அதில் நீ
உன் ஆட்காட்டி விரலால்
உன் காதலியின் பெயரை எழுதுகிறாய்
தூசில் தொடங்கி தூசில் முடியுமென்ற
விவிலிய வாசகத்தில்
தூசில் எல்லாம் முடிவதை நீ அறிவாய்
ஆனால்
தூசில் எது எப்படித் தொடங்கியது என்பதை
எவ்வாறு நீ அறிவாய்
எங்கோ ஒரு இடத்தில்
மேகம் வடிகட்டிய
ஒற்றைக் கிரணத்தில்
ஒளித்தூசுக் கற்றையுனுள்
ஆங்காங்கேயுள்ள வெற்றிடத்தில்
அவள் உன் பெயரை எழுதி
எல்லாவற்றையும் ஆரம்பித்திருக்கக்கூடும்
இல்லை நிறைமதியின் நள்ளிரவில்
ஜன்னல் திரைச்சீலைத் தாண்டி
சன்னமாய் பிரகாசிக்கும்
சந்திரத் தூசின் கதிரில் கனவின்
அம்மணத்துடன் படுக்கையில்
அவள் புரண்டு உன் மேல்
படுத்திருக்கக்கூடும்
ஏன் நீ அடிக்கடி எண்ணப் புணர்ச்சியில்
ஈடுகிறாய்? அந்தகாரம் இதற்கு மேலும்
அடர்த்தியுறாது என்ற
உன் பெருமூச்சில்
உயிர்பெற்றெழுகிறது ஒரு தூசுப்படலம்
வனாந்திரமோ அது?
குட்டியானைகளின் கால்களில்
மிதிபட்டு மாதுளம்பழங்கள் நசுங்க
நாணும் பெண்ணின் முகத்தை போல
சிவந்திருக்கிறது காட்டு நிலம்
உதிர்ந்த இலவங்க இலைகளின்
ஈரப்பதத்தில் எழும் நறுமணம்
காற்றெங்கும் நிறைக்கையில்
இருட்டால் ஒக்கிட முடியாத
சதையின் காலத்தை
மகரந்த ஒளியின் தூசு
இறுக்கிக் கட்டிய ஆபரணமாக்குகிறது
எழுக எழுக
மகரந்தங்களின் தூசு
பொலிக பொலிக
மகரந்தங்களின் தூசு
என்ற உன் வாழ்த்து ஒலிகளில்
படைப்பின் ஆயத்தமாக
அதிர விரிகிறது விளிம்பற்ற வெளி
மலையுச்சியிலிருந்து வீழும்
காட்டாறு
ஐந்து முகக் கூர்முனையுடைய
மேப்பிள் இலைகளை அடித்துக்கொண்டு
வரங்களை அள்ளி வீசும் வனதேவதையென
இறங்கி வருகிறாள்
உன் புலன்கள் விழிக்க
மகரந்தக் கூடுகைகள் தூலமாக
அறிந்தாயோ
நீ தூசுக்களின் ஈர்ப்பினை
உன் செவிகள் நாடும் லயத்தினை
வனதேவதையின் இளம் மார்புகள்
பொங்கி பூரிக்கையில்
கனவிலிருந்து விடுபடுகிறாய்
மேப்பிள் இலைகளில் செந்நிறமாய்
ஒளிரும் நீர்த்திவலைகள்
தாமரை மொட்டுக்களில் ஏன்
கண்ணீர்த்துளிகளாய் வெளிறிவிடுகின்றன
நீ எதற்காக
கனவுக்கும் நனவுக்குமிடையில்
கானகத்துக்கும் நகரத்துக்குமிடையில்
பிறப்புக்கும் அழிவுக்குமிடையில்
சதா ஊடாடுகிறாய்
வீட்டு வாசல்களில், மேஜைகளில்,
ஜன்னல்களில், பால்கனிகளில்
தெரு முனைகளில், அடிவானில்
என தூசு கவியுமிடமெல்லாம் அதை
பெருக்கி, கூட்டி சுத்தப்படுத்துகிறார்கள்
ஒரு அடுக்கு கலைய
ஒரு அடுக்கு கவிய
இது எங்களூர்,
எங்களூருக்கு மட்டுமேயானது தூசு
அது எங்கள்
முகவிலாசமென முணுமுணுக்கிறாய்
நெடுஞ்சாலைக் காட்சியினை
கலைத்து அடுக்குவதாக
பழுப்பு நிற மாடுகள் கூட்டம்
புழுதிப்படலம் கிளப்பி
புழுதிப்படலம் கிழித்து எதிர்வருகிறது
காளைகளின் பசுக்களின்
கண்களில் மிரட்சியை
காளைகள் குறி விரைத்து
ஒன்றன் மேல் ஒன்று
ஏறுவதை விட்டேத்தியாய் கவனிக்கிறாய்
நிறமற்ற பறவையொன்று
வினோத ஒலி எழுப்ப
நீ அதன் உடந்தையென எண்ணுகிறாய்
என்ன ஆயிற்று உன் செவிகள் நாடிய லயத்திற்கு
புழுதிப்படலம் போர் சமிக்ஞை அல்லவா
சாக்கு முக்காடிட்ட இடையனொருவன்
கோலூன்றி உனைக் கடந்து செல்கிறான்
அவன் மேய்ப்பது எந்த ஆநிரைக் கூட்டத்தை
என வியக்கிறாய்
சந்திர தூசு, மகரந்தத் தூசு, மேகத்துணுக்கு,
ஒளிக்கற்றை, காதலர் பெயரெழுதும் விரல்கள்
என எவற்றை மேய்க்கிறான்
முக்காடிட்ட இடையன்
வீடொன்று தூரத்தில் தெரிந்து
மீண்டும் தூசுப் படலத்தில் மறைகிறது
அதனருகே மேப்பிள் மரம்
தன் ஐந்து கூர்முனை கொண்ட
இலையொன்றை
உதிர்க்கிறது