குற்ற உணர்வின்றி மகிழ்ச்சியாக இருப்பது
கனவுச் சுருளின் மையத்துக்குள் இழுக்கிறது
உறக்கக் கலக்கத்தோடு அறைக்கதவு தாழிடப்படுகிறது
என் உயரத்தை ஒரு கை அளவிடுகிறது
கூரையின் உயரம் சரிசெய்யப்பட்டதும்
மின்விசிறி நிறுத்தப்பட
வாகாக நாற்காலி
சுருக்கை இழுத்துப் பார்க்கும் கைகள்
மூன்று இரண்டு ஒன்று சொல்வதற்குள்
வியர்த்து விழிக்கிறேன்
காலடியில் ஆடிக் கொண்டிருந்த
குழந்தையின் தொட்டில் கயிறு பட்டென அறுகிறது
பதறியெழுந்து தாங்கிக் கொள்ள நீளும் கைகள் தட்டிவிடப்படுகின்றன
மீண்டும் வியர்வை
மீண்டும் விழிப்பு
கனவுக்குள் கனவு கலைகிறது
அசலான விழிப்பில்
கரக் கரக் சத்தத்திலும்
கலையாத உறக்கத்தில்
விரல்சப்பும் குழந்தையின் முகத்தில்
ஆழ்ந்த அமைதி
ஏந்திக் கொள்ள கைகள் நீட்டுகிறேன்
—————————————————————————-
என் குற்றவுணர்வின்
முதல் துளியைக் கனவில்தான் நழுவவிட்டேன்
வெண்ணாறொன்று
கனவுப் பாலையில்
பெருக்கெடுத்து ஓடியது
சப்பாத்திக் கள்ளிகள்
தன் முதுகில் பெயர்களைச் சுமந்தன
நான் ஒரு மேட்டிலிருந்து
கீழ்நோக்கிச் சரிகிறேன்
சரிவின் தூரம் ஒளி ஆண்டுகள் நீடிக்கிறது
காலையில் எழும்
என் புறங்கைகளில்
நட்சத்திர மினுக்குத் துகள்கள்
பளபளக்கின்றன.
—————————————————————————-
எதையும் எண்ணாமல்
உறங்கும் அவனை ஏக்கம் மேலிடப் பார்க்கிறேன்
என் தலைக்கு மேல் வட்டமிடும்
எண்ணங்களை ஒரே நெருப்பில்
பொசுக்கி விட்டாலென்ன!?
நமுத்த தீப்பெட்டியின்
கடைசிக் குச்சியும் கைவிட்டு விட
எண்ணெயைக் கவிழ்த்துக் கொண்டு
காத்திருக்கிறேன்
எரி நட்சத்திரமொன்றிற்காக!
—————————————————————————-
புதிய குற்றவுணர்வைச் சந்திக்கிறேன்
இந்த சந்திப்பிற்காக
ஒருவரை நோக்கி ஒருவர் பயணித்து இருக்கிறோம்
ஏற்கனவே பார்த்தது போலவே உணர்ந்தோம்
விடைபெறும் வேளையில்
மீண்டும் எப்போது சந்திப்பது
என்று கேட்டுக் கொண்டோம்
தூரத்தில் இருந்து முறைத்தன பழைய குற்றங்கள்
காதில் புகை வர.
—————————————————————————-
என் உயிருக்குள் அசையும் வண்டுக்கு
காலாவதியான குற்றங்களின் பட்டியல்களை
மீட்சிக்கும் அமைதிக்குமாக
மீண்டும் மீண்டும் உருட்டுவதே வேலையாகிப் போய்விட்டது.
என் குற்றங்களின் சாட்சிகள் ஒவ்வொருவராக
வீழ்ந்து கொண்டு இருக்கும் வரை
என் வாய்தாக்கள் நீளும்.
கடைசி சாட்சியும் சருகானதும்
வண்டுக்கு இருக்கு கச்சேரி!