1.மதமரபின் அந்தங்களின் அரசியலும், எதிர்மரபினரின் சிறப்பியல்பு அறியொணாத் ‘தாரை வார்ப்பும்’!
எங்கே சமயம் முடிவடைகின்றதோ அங்கே ஆரம்பிக்கும் ஆன்மிகமான சமயத்தன்மையே சித்தரியமாம்.
சமயஞ் சார் பக்தியியக்கம் இறைஞானத்தின் (Theology)
பாற்பட்டதெனில், சமயஞ்சாரா சித்தநெறியோ மறைஞானம் (Mysticism) சார் மனிதாயச் சிந்தனைப்பள்ளி எனலாம். அவ்வச் சமயிகள் போல் அல்லாமல் சித்தர்
யாவரும் ஒரே படித்தானோர் அல்லர். ஒரே படித்தானவை அல்லாமல் விதந்தோதிக் காணவேண்டியஅடிப்படை முரண்பாடுகள் மூவகைத்தாம்:
1.மத அத்துக்கள் × இறையியல்,
2.முன்னைச்சிவசித்தர் திருமூலர் ×
பின்னை சமயஞ்சாரா சிவவாக்கியர்.
3.வெவ்வேறு சித்தர் நோக்கு நிலைப்பாடுகள்
அத்துக்களை வரையறுப்பதே மத அதிகாரங்களின் செயற்பாடாக இருக்க, அத்தகு அதிகாரங்களைக்
கட்டவிழ்ப்பதே பின்னைச்சித்தர் மரபின் அத்துமீறலின் செல்நெறி ஆகும்.
வேதாந்தத்திலிருந்தும் சித்தாந்தத்திலிருந்தும் வழிவிலகிய தத்துவப்பிரிவுகளை மீட்டெடுத்து
மீளவும் அந்தங்களின் அரசியலில் கரைத்துவிடப் பாடாய்ப்படுவோர் அவ்வச் சமயிகள் மட்டுமே அல்லர்.
இவற்றை அறவே மறுதலிக்கும் எதிர்மரபினர் சிலரும் சிறப்பியல்பு இன்னதென இனங்காணமாட்டாமல்
மதமரபிற்கே அவ்வழிவிலகல்களையும் ‘தாரை வார்த்திடும் கைங்கர்யம்’ புரிதலுங் கண்கூடே.
இவ்வாறான சித்தர்மரபின் அத்துமீறல்களை அறியொணாமல் அவை யாவற்றையும் சித்தர்மரபின்
எல்லைக்குள்ளேயே நிகழ்ந்தனவாகச் சித்திரிக்கும் பிறழ்திரிபான காட்சிப்பிழைகளைத் தொகுத்துக்
காண்போம்:
1. சித்தர்மரபு ராஜ்கௌதமனுக்கும் சைவத்தின் ஞானக்கிளையாகவே காட்சியளிக்கின்றது.
(‘புதுமைப்பித்தன் என்னும் பிரம்ம ராசஷஸ்’)
2 . “சிவன் விஷ்ணு முதலானவர்களை வழிபட்டு வந்தனர். சைவசமய எல்லைக்குள் இருந்தே மரபுமீறல்கள் நிகழ்த்தப்பட்டன” – ஆ.சிவசுப்பிரமணியன்
( சித்தர்கள்: மரபே மீறலாய்’ கட்டுரையில் – ‘சாளரம்
இலக்கியமலர்)
3.” சிவனையே ஏகதெய்வமாகக் கருதினர். அவனின் உருவகமாகக் கோயில்களில் வழிபடுவதை
எதிர்த்தார்கள்” – நா.வானமாமலை (‘திரட்டு’ ஜூன்-1995)
4.”சித்தர்கள் சாத்திரங்களை எதிர்ப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் சிந்தனை
அதில் ஈடுபட்டேயிருக்கிறது. சமயநிலையில் அவர்கள்
ஈடுபாட்டுடன் கூடிய புரட்சியாளர்களாகவே (Pious rebels
inside the field of religion) விளங்குகிறார்கள்”
“சித்தர்களை வேதங்களை மறுப்பவர்கள் என்று கூறினால் அது, ஓர் ஒழுங்கற்ற குறுகிய நோக்குடைய
பொருள் வரையறையாகும் (illogical narrow definition)”
“தந்திரங்கள் வேதத்திற்குப் புறம்பானவை என்பது தப்பெண்ணம். எந்தத் தந்திரமும் வேதத்தின் தலைமை அதிகாரத்த மறுக்கவில்லை”- த.ந.கணபதி (‘சித்தர்களின் குறியீட்டுமொழியும் சூனியசம்பாஷனையும்’)
5.” சித்தர்களின் சிந்தனைப்புலம் இந்துசமய மரபின் எதிர்நிலை சார்ந்தது போன்ற தோற்றம் தருவது
உண்மை. ஆம் அது ஒரு தோற்றம்தான். ஆழ்ந்து நோக்கினால் அத்தோற்றம் உண்மையல்ல என்பது
தெளிவாகவே புலப்படும்”- ந.சுப்பிரமணியன்
(‘அரிமா நோக்கு’, ஜூலை – 2007)
6.” லலிதா சகஸ்ரநாமம் சொல்லும் குலம் பற்றிய விளக்கத்தோடு சித்தர்களின் குண்டலினி பற்றிய
பாடல்கள் ஒத்திசைவு கொள்வதால் தான் சித்தர்மரபு வேத எதிர்மரபு அல்ல என்று நம்மால் தீர்மானிக்க
முடிகிறது. வேத மரபிலிருந்து சித்தர் மரபில் ஈடுபட்ட பேராசிரியர் தான் இத்தகைய செய்திகளை
எழுதமுடியும்”- சுகி சிவம்.
7.”எவ்வுயிர்க்கும் அன்புசெய்தல் பசிப்பிணி அகற்றுதல் ஆகியவற்றை வலியுறுத்திய வள்ளல் இராமலிங்கரும் இந்து சமய எல்லைக்குள் நின்றவர்தான். திருமூலர், தாயுமானவர் என்கிற மரபிலேயே அவர் வருகிறார்.
சோதிவடிவில் இறைவனை வணங்குதல் சைவமரபுதான்”
“சிவனை முழுமுதல் கடவுளாக ஏற்கும் வள்ளல் பெருமான் சைவசித்தாந்த மரபில் நின்றே பிரபஞ்ச லீலைகளை
விளக்குகிறார்”- அ.மார்க்ஸ் (‘புதிய காற்று’ மார்ச்- 2004)
8.”சித்தர் பாடல்களின் முதல் தொகுதியாக ‘பெரிய ஞானக்கோவை’ (1899) கருதப்படுகிறது. இதில் இடம்
பெற்றுள்ள பாடல்களின் தலைப்புகளில் சரியைவிளக்கம்,
யோகநிலை, ஞானநிலை எனும் உட்தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. சிவபூசை தொடர்பான பாடல்களும்
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. எனவே சித்தர் பாடல்கள் என அறியப்படுபவை சைவசமயிகளின் ஒருசாரார் பாடல்கள் என்றே கருதமுடியும்.”- வீ.அரசு
மேலும் சமயத்தைச் சரிசெய்து அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்ற கருத்துநிலை உரையாடலில்
வள்ளலாரைச் சித்தர் மரபில் இணைப்பதும் ஆபத்தானது. நவீன காலனிய மரபில் உருவான கருத்துநிலைகளுக்கும் பாரம்பரியக் கருத்துநிலைகளுக்கும் இடைப்பட்ட
முரண்பாட்டில் அலைந்து உழன்று வாழ்ந்தவர் அவர். இராமலிங்கரின் இறுதிக்காலச் செயல்பாடுகள் தன்னை மறுக்கும் நிலைக்கு அவரை இட்டுச் சென்றது. மனிதநேயம் சார்ந்த மனநிலையில் இன்னொரு நிலை இதுவாகும் என்பார்”(‘பக்தி : அனுபவம், அரசியல்’)
9.”சித்தர்களின் கலகமரபு சைவத்திற்கு உள்ளிருந்தே தொடங்கியது. சோழப்பேரரசு சைவத்தையே தன்னுடைய அரசமதமாகக் கொண்டிருந்தது. எனவே, அரசதிகார எதிர்ப்பு என்பது சித்தர்களின் மரபில் சைவத்திற்கு உள்ளிருந்தே தோன்றியது. இது தவிர்க்க இயலாத ஒரு முரண்பாடாகும்”- தொ.பரமசிவன். (‘சமயங்களின் அரசியல்’)
இத்தரப்புகள் யாவுமே சித்தர்மரபின் அத்துமீறல்கள் யாவுமே சைவசமய எல்லைக்குள் நின்றே நிகழ்த்தப்பட்டன என்பதில் ஒன்றுபட்டாலும், இவற்றுள் தொப தரப்பு நுட்பமானது. சித்தர்மரபென்னும் சிந்தனைப்பள்ளியினரை ஒரே படித்தானோராய்க் காணாமல் அவர் விதந்தோதியே காண்பார்:
“தமிழ்நாட்டுச் சித்தர்நெறியில் பலவகைப்பாடுகள் உண்டு. சீர்திருத்தவாதிகள், யோகநிலையில் இருந்தவர்கள்,மருத்துவர்கள், ரசவாதிகள் இவர்களில் எதுவுமற்றோர் என அவர்களைப் பலவகையாகப் பிரிக்கலாம்.தத்துவரீதியாகக் காபாலிகம்
– பௌத்த தாந்திரீகம், நாதசித்த வழிபாட்டுநெறி ஆகியவற்றின் கலவையாகத் தமிழ்நாட்டுச் சித்தர் மரபினைக் காணுகின்றார் ஆர்.வெங்கட்ராமன்.”- தொ.பரமசிவன் (‘வழித்தடங்கள்’)
மருத்துவச்சித்தர்கள் வடநாட்டில் பிறந்து வளர்ந்த, நாதசித்தமரபினை ஏற்று ஒரு வகையான யோகநெறியினைக் கோரக்கநாத சித்தரைச் சம்பிரதாய
முதல்வராக முன்நிறுத்தினர் எனவும்;அரசதிகாரத்திற்கு எதிராகத் துறவுச்சித்தர்களின் பள்ளிப்படையினை
(சமாதியை) கோயில் வழிபாட்டிற்கு எதிராக வழிபடலாயினர் எனவும் எழுதிச் செல்வார் தொப (‘சமயங்களின் அரசியல்’)
“ஞானார்த்தக் கலாச்சாரத்தின் மீது ஒட்டுண்ணி வியாபாரம் செய்கிற சூழ்ச்சிக்காரர்கள், அவர்களைத்
தாக்கும் போது ஞானார்த்தக் கலாச்சாரத்தையும் சேர்த்துத்
தாக்கும் அரசியல் மனோபாவக்காரர்கள் என்ற இரண்டு
அணிகளையும் கலைஞன் அம்பலப்படுத்தியாக வேண்டிய நிலை இன்று.”- பிரமிள்
இத்தகு இருமுனைத் தவறுகளையும் ஊடறுத்து நோக்கியே உண்மைகளை இனங்கண்டாக வேண்டியுள்ளது.
*
2. சைவசித்தாந்த இறையியல்× சித்தர்மரபு மெய்யியல்
இரண்டனுக்குமான அடிப்படை முரண்பாடுகளை அட்டவணைப்படுத்தலாம்:
அ.> சைவசித்தாந்தம் × ஆ> சித்தர்மரபு
1.அ. பதி,பசு,பாசம் என மூன்றாக
1.ஆ.உடல்,உயிர்,பூரணம் மூன்றும் ஒன்றாக
2.அ. சிவத்தில் ஒடுங்கும் சக்தி
2.ஆ. சக்திக்குள் ஒடுங்கும் சிவம்
3.அ.பலவாகத் தோன்றும் தூலங்கள்
3.ஆ. தூலமுடன் இரண்டற ஒன்றித் துலங்கும் சூக்குமம்
4.அ. உயிர் அநாதி. கன்மவினைக்கேற்ப மறுபிறவி.
4.ஆ. ஐம்பூதச் சேர்க்கையாகவே உயிரின் தோற்றம்
5.அ.மூர்த்தி,தீர்த்தம்,தல வழிபாடு
5.ஆ. காயமே கோயிலாக
6.அ. நால்வகை மார்க்கமும்
6.ஆ. சன்மார்க்கம் மட்டுமே
7.அ. ஆகம வழிப்பட்டது
7.ஆ. முன்னூலற்றது.
8.அ. நாயக நாயகி பாவம்
8.ஆ. ‘தானெனும் மாதர் அனுபோகக் காமம்’
9.அ. சைவசித்தாந்தம்
9.ஆ. தத்துவாதீத வெட்டவெளி.
“தோணுமயில் முட்டையின்மேல் வண்ணம் போலும்/ தூலமதில் சூக்குமந்தான் துலங்கிநிற்கும்” எனக்
காகபுசுண்டரும்; ‘எள்ளில் தைலம் போலும்’, ‘ பாலில் சுவை போலும்’, என இடைக்காடரும்; ‘பழத்தில் இரதம் (ரசம்)
போல் பரந்தெங்கும் நிற்குமே’ என ஔவையின் ஞானக்குறளும்; தூல சூக்குமக் கோலங்களைப் பாடிச்செல்லக் காணலாம்.
“தூலமுடன் சூக்குமம் துளிப்பிரிவும் அறியாமல்/ கோலக்கலவியிலே குழைந்திருக்கிறது” எனப் பாடுவார்
இன்றைய இசைக்கவி ரமணனுமே
ஞானம்பாடியசித்தர்,மருத்துவச்சித்தர் என விதந்தோதி, சாமி. சிதம்பரனார் வழியின் அடுத்த பாய்ச்சலாகச் சித்தர்
பாடல்களில் காணக்கிடக்கும் பொருள்முதல்வாதக் கருத்துக்களைப் புலனாக்குவார் தேவ. பேரின்பன்:
“தமிழ்ச்சமுதாயத்தில் சங்ககாலம் தொட்டு வளர்க்கப்பட்ட முன்னிலை உலகாய்தத்தை (Proto-Materialism)
தமிழ்ச்சித்தர்மரபின் வேராகக் கொள்ளமுடியும். நோய்களுக்கான காரணம் பஞ்சபூதச் சேர்க்கையில் ஏற்படும் குறைகளே தவிர புண்ணியமல்ல. ஆன்மா(உயிர்) தனிப்பொருள் இல்லை. உடலோடு பிறப்பது, உடலோடு அழிவது. உடலும், மனிதனும் பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டதே. இயற்கைப் பொருட்களின் இயல்பறிந்து, அவற்றை நாமே மாற்றியமைக்க முடியும்( ரசவாதம், மருத்துவம்) போன்ற கொள்கைகளினால், பொருள்முதல்வாதத் தத்துவநிலையை எடுத்தனர் (மருத்துவச்) சித்தர்கள்”
என்பதே அவர் கணிப்பாகும்
*
3. பெண்ணைப் பழிக்கும் இழிவுரைகள்’
சித்தர்மரபு நோக்கில்:
பொதுப்புத்தியிலிருந்து மட்டுமன்றி சில புத்திஜீவிகள் மத்தியிலிருந்தும் கூட, ஒட்டுமொத்தச் சித்தர் மரபையே
பட்டினத்தார் குரலே போலப் பெண்மையையும் உடம்பையும் இழிவுபடுத்துவனவாகவே இன்றளவும்
குறுக்கீடுகள் நேர்ந்துவரல் கண்கூடே.
சித்தர்கள் தமக்குள்ளேயே மாறுபடும் நோக்குநிலை.(வைதிக × அவைதிக, காயமே பொய் × காயமே
கோயில்,பெண்ணைப்பழித்தல் × பெண்மையைக் கொண்டாடல் எனவாங்கே காணக்கிடப்பனவே.
வள்ளுவத்தின் பெண்வழிச்சேறல் என்பதனை இத்தொடர்பில் நோக்குவோமே. பெண்வழிச்சேறல்
அர்த்தாபத்தியாய் ஆண்வழிச்சேறலையும் அகப்படுத்தக்
கூடியதே என்பதே என் புரிதலாகும்.அதாவது அதனை நான் காமபோதையில் ஒருபாலார் மறுபாலார்க்கு அடிமைப்படுதல் எனவே பொருட்படுத்திக் கொள்வேன்.
அடுத்துப் பெண்களைச் சித்தர்மரபே ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தக் கூடியதெனும் பிறழ்திரிபாம்
பிழையான புரிதலுக்கொரு மாற்றுத் தரப்பைக் காண்போம்:
“பெண்ணைச் சம்சாரப் பிணிப்பின் மூளைக்கோலாகவும், காமக்கருவி ஆகவும் காண்கிற பார்வைக் கோளாறுதான், புத்தராலும் சித்தர்களாலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என உணரலாம். பெண் என்ற மனித வியக்தியையும் சரி, தத்துவத்தையும்’சரி; மெய்ந்நெறியாளர் நிராகரிக்க
இடமில்லை. சிவவாக்கியர் பாடல் ஒன்றில்,’பெண்ணுடன் கூடியே’உண்மையை அடையமுடியும்’ என்று கூட வலியுறுத்துவார்” – பிரமிள்
பிரமிள் சுட்டிக்காட்டிய அப்பாடலையும், இன்னோரன்ன மற்றொருபாடலையும் தேடிக் கண்டடைந்தேன் நானும்:
“பெண்மையாகி நின்றதொன்றுவிட்டுநின்று தொட்டதை/
உண்மையாய் உரைக்க முக்திஉட்கலந்திருந்ததே”
“மாதர்தோள் புணர்ந்திடார் மாநிலத்தில் இல்லையே/
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ் சிறக்குமே” –
இவை இரண்டுமே சிவவாக்கியர் பாடல்களே.
சித்தமருத்துவத்தில் ஆண்மருந்தைப் பெண்மருந்தே கரைக்கும். பெண்ணாக முயல்வதுவே வாமதந்திரச் சித்தர்மரபாம்.
இவ்வாறு சகட்டுமேனிக்கு அனைத்தையும்
பொதுமைப்படுத்தி விடாமல் அவ்வவற்றிற்கே உரித்தான
சிறப்பியல்புகளை விதந்தோதினாலன்றி உட்கிடையான
மெய்ம்மை புலப்படாது.