ஒவ்வொரு ஆண்டும் தேசியளவில் நடைபெறும் கவிதை விழாவில் நான்கு மொழிகளிலும் கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்ப் பிரிவிற்கான பொதுப்பிரிவில் Un-Bound என்ற கருப்பொருளில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசினை விஷ்ணுவர்திணி மற்றும் நீதிப்பாண்டியும் மூன்றாம் பரிசினை க.சங்கீதாவும் பெற்றார்கள். இப்போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகள்.
சிகை அலங்கார பேதை
- விஷ்ணுவர்தினி
கட்டவிழ்ந்த கூந்தலோடு
உச்சி மாடியில் பித்துப்பிடித்து நிற்கிறாள்
முழுநேர காத்திருப்பாளி ரெப்பன்சல்
கீழே தம் கேசத்தை நனைக்க
ஆண் ரத்தம் தேடி அலைகிறாள் திரௌபதி
அவளின் கதறல்கள்
கண்ணாடி கூரையோடு போராடுகின்றன
பூட்ஸ் கால்களை அன்னாந்து பார்க்கும்போது
வெட்டி எறிய இயலாத முடியில்
ஏணிகள் கட்டுவது எப்படி – அதில்
தூக்கிலிட்டுப் பார்ப்போமா என தோன்றுகிறது
என்ன சிறுபிள்ளைத்தனம்
குடும்பப்பெண்ணுக்கு அழகல்லவே இது?
மழைபோல் கூந்தல் தரைக்கு விழும்போது
மேகத்தின் அழகோடு செல்கள் பூரிக்கின்றனவா
அல்லது பெண்ணின் ஈனங்களை
சபையில் கைகொட்டி சிரிக்கின்றனவா?
கடவுள்களாக ஒவ்வொரு தலைமுடியும்
மாராப்பாகி மானத்தின் பேரில்
உதிர்ந்தவிழும் வேளையில்
“முடிய கட்டுடி எரும”
எனும் பெண் சொற்களில்
கண்ணாடி தகடுகளாகி காட்சிப்பொருளாவது
பெண்ணும் அதன் கட்டவிழ்ந்த முடியும்
பெருவெளி தேடாதவர்கள்
நீதிப்பாண்டி
எதற்காகவோ தயங்கிநிற்பவர்களைக்
கொஞ்சம் கவனித்திருக்கலாம்
அருகில் வருபவர்கள்
உண்மையற்ற பார்வையோடு
கடந்துவிடுகிறார்கள்.
நிறைய பொய்யாகவே இருக்கட்டும்
கொஞ்சம் உண்மையை
உணரும் மனம் பெறுவதற்கு
ஓடுவதிலிருந்து விலகி
நாம் நிற்கவேண்டும்.
கதையைச் சொல்பவர் முன்
மண்டியிட்டு அமர்ந்திருங்கள்
ஒன்றும் செய்யவேண்டியதில்லை
மௌனமாகக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
யாரோ ஒருவரின் தடமறிவதில்
நீர்த்தாரையோடு பிசிறும் குரல்
புன்னகையாய் மலர்கிறது
கைகளை இறுகப் பற்றிக்கொள்வார்கள்.
தூங்கி எழுந்துவிட்டால்
கனவுகளின் வரைபடத்தை
மாற்றுவது எளிது
அதற்கு முன்பு ஓர் உரையாடல்.
யாருமில்லையென்றால் என்ன
சத்தமாகப் பேசிப்பாருங்கள்
சுவருக்குக் கேட்கட்டும் .
இவ்வெளியெங்கும்
ஓடிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள்
பெருவெளி தேடாதவர்கள் பாதங்களை
யாரும் பற்றுவதில்லை .
தொடும் அலைகளுக்காகக் காத்திருக்காமல்
கடல் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்
எழுந்து போகலாம்
போகும் தூரமெல்லாம்
அன்பின் எல்லையற்ற பாதைதான்.
சிறகற்ற இரவு
- க. சங்கீதா
இரவிற்குத் தூண்டிலிடுகின்றன
கூட்டுப்புழுவாய் உறங்கிப்போன நினைவுகள்
மெல்ல அசைபோட அசைபோட
சிறகு விரிக்கும் இரவின் பூங்காவிற்கு
எல்லைக்கோடு போடுகிறது வானம்
படபடத்துக்கொண்டே இருக்கும்
அதன் சிறகிலிருந்து உதிரும் வண்ணங்களால்
ஆகச் சிறந்த மகிழ் தருணங்களை மலர்களாகவும்
பிரிவின் ஆற்றாமைகளை முட்களாகவும்
மலரச் செய்கிறது
மலர்களின் வாசமறிந்த காதலும் காமமும்
முன்னொரு நாளில் ருசித்தத் தேனிற்காகக்
கோப்பையை ஏந்தியபடி நிற்கின்றன
திடுக்கிடுகிறது இரவு
அமரும் பலகைகள் எப்போதும் ஓய்வற்றுக் கிடக்கின்றன
இரவின் அந்தரங்கத்தைக் குலைக்கும் காற்று
வேட்டை நாய்களாகத் துரத்துகிறது
மரங்களைச் சுற்றி ஓடிக் களைக்கும் இரவுத்
தன் கனவு நிலத்தை நோக்கிப் பயணப்படுகிறது
வழித்துணைக்கு வரும் நிலவொளியைப்
பருகி
ஒவ்வொரு நாளும் தாகம் தீர்த்துக்கொள்கிறது
இதையறியாத குளக்கரையில்
இரவை விழுங்கக் காத்திருக்கிறது விடியல்
சிறகுகள் நீங்கிய இரவு
தன் சுயத்தை மறந்து நீந்திக் களிக்கிறது குளத்தில்
படங்கள் : இணையம்